வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 12 ஆகஸ்ட், 2009

தேய்புரிப் பழங்கயிற்றினார்

உயிர்களின் படிநிலை வளர்ச்சியில் உயர்நிலை அடைந்தவன் மனிதன். 
மனம் இருப்பதாலேயே மனிதன் என்றழைக்கப்பட்டான். 
இந்த மனம் மனிதனைப் படுத்தும் பாடு கொஞ்சநஞ்சமல்ல. 
எந்த வேலை செய்தாலும் இந்த மனம் இடையில் வந்து பேச ஆரம்பித்துவிடுகிறது. 
மனம் சொல்வதை அறிவு கேட்பதில்லை. 
மனத்துக்கும் அறிவுக்கும் நடக்கும் இந்த விவாதத்தை நாம் ஒவ்வொருவரும் அனுபவித்திருப்போம். 
சில நேரங்களில் அறிவு, மனத்தை வென்றுவிடுகிறது.
சில நேரங்களில் மனது அறிவை வென்றுவிடுகிறது.. 
மனதுக்கும் அறிவுக்கும் இடையே நடைபெறும் இந்தப் போராட்டத்தைத் தள்ளி நின்று பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா....? 

இங்கு ஒரு தலைவன் தன் மனதுக்கும், அறிவுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தைத் தள்ளி நின்று பார்க்கிறான். 

தன்னை ஒரு பழங்கயிறாகவும், 
மனம், அறிவு ஆகிய இரண்டையும் இரு யானைகளாகவும் எண்ணிக்கொள்கிறான்.
பழமையான கயிறாகிய தன்னை இருபுறமும் யானைகள் பற்றி இழுக்கின்றன. 
கயிறாகிய தான் எப்போது வேண்டுமானாலும் அறுந்து போகலாம் என்பதே தலைவனின் நிலையாகவுள்ளது.
இப்படி ஒரு உணர்வை நற்றிணைப் பாடல் பதிவு செய்துள்ளது. 

“புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின்
நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண்டோள்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும்
செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என
உறுதி தூக்காத் தூங்கி அறிவே
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய
தேய்புரிப் பழங் கயிறு போல
வீவதுகொல் என் வருந்திய உடம்பே “

நற்றிணை -284 பாலை - தேய்புரிப் பழங்கயிற்றினார்


பொருள் முடியாநின்ற தலைமகன்
ஆற்றானாகிச் சொல்லியது

தலைவன் தலைவியைப் பிரிந்து பொருள்தேடச் சென்றிருக்கிறான். அவன் மனமோ உடனே சென்று தலைவியைப் பார்...! 
உனது பிரிவை அவள் தாங்கமாட்டாள்..! என்கிறது. 

அறிவோ பொருள் தேடிய பின்தான் செல்ல வேண்டும் என்கிறது.
மனமும் அறிவும் பேசிக்கொள்ளும் உரையாடலை தள்ளிநின்று தலைவன் பார்க்கிறான். 

தாழ்ந்த இருண்ட கூந்தலையும், மையுண்ட கண்களையும் கொண்ட தலைவியின் மீது கொண்ட அன்பால் என் நெஞ்சம் அவளிடம் செல்ல வேண்டும் என்கிறது.! 

அறிவோ தொடங்கிய செயலை முடிக்காமல்ச் செல்வது அறியாமை, இகழ்ச்சி என்கிறது.! 

நெஞ்சம் அறிவு என்னும் இரு யானைகளும் தேய்ந்த பழமையான கயிறான என்னை எப்போது வேண்டுமானாலும் அறுத்துவிடலாம்...! என்று எண்ணிக் கொள்கிறான்.. 
இப்பாடலில் தலைவனின் இருவேறு மனநிலைகளை இரு யானைகளாகவும், அதனால் ஏற்பட்ட தன்னிலையை தேய்ந்த பழங்கயிற்றோடும் ஒப்பிட்டமை எண்ணி இன்புறத்தக்கதாக உள்ளது. இப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில். இவ்வழகிய உவமையே புலவருக்குப் பெயராகிவிட்டது. தொடரால் பெயர் பெற்ற புலவர்களின் வரிசையில் இப்புலவரும் தேய்புரி பழங்கயிற்றினார் என்று அழைக்கப்பட்டு வருகிறார்.

14 கருத்துகள்:

  1. முனைவர் ஐயா,

    உங்கள் தமிழில் சங்கத் தமிழ் இனிக்கிறது..!

    இவ்வகையில் இன்னும் தமிழ் விருந்து பரிமாறுங்கள்!

    என் திருமன்றில் திரட்டியில் உங்கள் பதிவை இணைத்துள்ளேன், காண்க.
    http://thirumandril.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. திருந்தமிழில் எனது வலைப்பதிவை இணைத்தமை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்...
    மிக்க மகிழ்ச்சி நண்பரே.........

    பதிலளிநீக்கு
  3. உங்கள் விளக்கங்கள் அருமை அருமை... தொடருங்கள்...

    பதிலளிநீக்கு
  4. நண்பரே,
    நீங்கள் முன்பு கேட்ட, பனி கொட்டல் தொடர்பான, இடுகை என் வலைப்பூவில் பதிந்திருக்கிறேன். வந்து பார்த்து பயனடையவும்.

    பதிலளிநீக்கு
  5. Hi

    உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

    உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

    நட்புடன்
    செய்திவளையம் குழுவிநர்

    பதிலளிநீக்கு
  6. பாடலின் திரண்ட கருத்தைச் சொல்லிச் செல்வது போலவே பாடலின் ஒவ்வொரு சொல்லுக்கும் உள்ள தற்கால சொற்களைச் சொல்லிச் சென்றால் சங்கத் தமிழின் இனிமையை இன்னும் நன்கு பருகி மகிழ்வேன் நண்பரே.

    புறம் தாழ்பு இருண்ட கூந்தல் என்பதன் பொருள் புரிகிறது. போதின் நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண் என்பதன் முழுப்பொருளும் புரியவில்லை. தீர்கம் செல்வாம் என்ற தொடர் புரியவில்லை. ஆயிடை ஒளிரு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய தேய்புரிப் பழங்கயிறு என்பதின் திரண்ட கருத்து புரிகிறது. ஆனால் எங்கே இரு யானைகளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது; தேய்புரி என்றால் என்ன பொருள் என்பவை புரியவில்லை.

    பதிலளிநீக்கு
  7. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே..
    தங்கள் கருத்திற்கிணங்க இன்னும் எளிமையாக இக்கால வழக்குச் சொற்களோடு சொல்ல் முயற்சிக்கிறேன் நண்பரே....
    தங்கள் ஐயங்களுக்கான விளக்கம்.....

    போதின் நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண் –

    என் நெஞ்சமானது புறத்தே தாழ்ந்து இருண்ட கூந்தலையும், நெய்தல் நிறம் போன்ற நிறம் விளங்கிய ஈரிய இமை பொருந்திய மையுண்ட கண்ணையும் கொண்ட...

    என்பது பொருளாகும் நண்பரே...

    செல்லல் தீர்கம் செல்வாம் – என் உள்ளத்தைப் பிணித்துக் கொண்டவளிடத்து யாம் செல்வோம். சென்று அவளின் இன்னாமையைத் தீர்ப்போம் என் பொருளைத் தருகிறது.

    ஆனால் எங்கே இரு யானைகளைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது –

    களிறு மாறு பற்றிய என்ற சொல்லே இரு யானைகள் மாறிப் பற்றியதைத் தான் குறிப்பதாக அமைகிறது நண்பரே...

    தேய்புரி என்றால் என்ன பொருள் என்பவை புரியவில்லை-

    புரி என்றாலே கயிறு என்பது பொருளாகும்.. தேய்புரி என்பது தேய்ந்த கயிறைக் குறிக்கும்.

    பதிலளிநீக்கு
  8. விளக்கத்திற்கு நன்றி நண்பரே. தேய் புரி என்றாலே தேய்ந்த கயிறு. மீண்டும் ஏன் பழங்கயிறு என்றார் புலவர்?

    பதிலளிநீக்கு
  9. தேய்ந்தாலே அக்கயிறு பழமையான கயிறாகிவிடுகிறது.
    ஆயினும் ஏன் மீண்டும் பழங்கயிறு என்றே குறிப்பிடுகிறார்.
    ஏனென்றால் அந்த அளவுக்குத் தலைவனின் மனநிலையை மிகுவித்துச்சொல்கிறார். கயிறு தேய்ந்ததாகவும்,
    மிகவும் பழமையுடையதாகவும் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அற்றுவிடலாம்.

    அது போல் தலைவனின் மனம் இரு நிலைகளால் வருந்துகிறது.அதனால் அவன் உயிரும் எப்போது வேண்டுமானாலும் அழிந்து விடலாம் என்பதை உணர்த்தவே மீண்டும் தேய்ந்த பழங்கயிறு என்று சுட்டுகிறார்.

    பதிலளிநீக்கு
  10. விளக்கத்திற்கு நன்றி முனைவரே.

    பதிலளிநீக்கு