வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

சங்ககால அறுவை மருத்துவம்




சங்க கால மக்களின் அறிவியல் குறித்த அறிவு வியப்பளிப்பதாகவுள்ளது. சங்கஇலக்கியங்களின் வழியாக, சங்கத் தமிழர்களின் மருத்துவவியல் அறிவை அறிந்து கொள்ளமுடிகிறது. “இசை மருத்துவம்“ உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் துறைகளில் சங்க காலத்தமிழர்கள் நன்கு தேர்ச்சி அடைந்திருந்தனர்.

“பழந்தமிழர் அறிவியல்“ என்னும் தலைப்பில் தமிழர் அறிவியல்ச் சிந்தனைகளைத் தொடர்கட்டுரையாக வழங்கவுள்ளேன். பழந்தமிழர்களின் அறுவை மருத்துவம் குறித்த சிந்தனையை இக்கட்டுரையில்
காண்போம்.

சங்க இலக்கியம் எட்டுத் தொகை நூல்களுள் பதிற்றுப்பத்து குறிப்பிடத்தக்க நூலாகும். புறம் சார்ந்த இந்நூல் சேரமன்னர்களைப் பற்றிய நூலாக விளங்குகிறது. இந்நூலில் பழந்தமிழர்தம் அறுவை மருத்துவம் குறித்த செய்தியை அறிந்துகொள்ள முடிகிறது.

பாடல் இதோ...

42. கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும்
“இரும் பனம்புடையல், ஈகை வான் கழல்,
மீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச்
சிரல் பெயர்ந்தன்ன நெடு வெள◌் ஊசி
நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின்,
அம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது 5
தும்பை சூடாது மலைந்த மாட்சி,


அன்னோர் பெரும! நன்னுதல் கணவ!
அண்ணல் யானை அடுபோர்க் குட்டுவ!
மைந்துடை நல் அமர்க் கடந்து, வலம் தரீஇ;
இஞ்சி வீ விராய பைந் தார் பூட்டி, 10
சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்குஇருக்கை,
தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம்
ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து;
கோடியர் பெருங் கிளை வாழ, ஆடு இயல்
உளை அவிர் கலிமாப் பொழிந்தவை எண்ணின் 15
மன்பதை மருள, அரசு படக் கடந்து,
முந்து வினை எதிர் வரப் பெறுதல் காணியர்,
ஒள◌ிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து
மான மைந்தரொடு மன்னர் ஏத்த, நின்
தேரொடு சுற்றம் உலகு உடன் மூய, 20
மா இருந் தெண் கடல் மலி திரைப் பௌவத்து,
வெண் தலைக் குரூஉப் பிசிர் உடைய,
தண் பல வரூஉம் புணரியின் பலவே.


பாடல் சொல்லும் அறுவை மருத்துவம் குறித்த செய்தி….

சேரமன்னனின் கொடைச் சிறப்பும் வென்றிச் சிறப்பும் கூறவந்த புலவர், சேரனின் வீரர்களின் வீரத்தை
இவ்வாறு குறிப்பிடுகிறார்.
“பனை மாலையும், வீரக்கழலையும் கொண்ட உன் வீரர்கள்,
மீன் கொத்திப்பறவை மீனைப் பிடிக்க குளத்தில் மூழ்கி எழுந்தது போன்ற வெள்ளிய ஊசியினது நீண்ட
கூர்மையால் தைத்ததால் ஏற்பட்ட வடுவினை மார்பில் கொண்டவர்களாக உள்ளனர்.“
மீன்கொத்திப் பறவையின் கூர்மையான மூக்கினைப் போன்ற கூர்மையான ஊசிகளால் போரி◌்ல் கிழிந்த
உடல் பாகங்களை அவர்கள் தைத்தனர் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
சங்கத்தமிழர்கள் அறுவை மருத்துவத்தில் தேர்ச்சியடைந்திருந்தனர் என்பது இவ்வடிகள் வாயிலாகப்
புலனாகிறது.
இத்தகைய வீரம் வாய்ந்த வீரகளுக்கு அரசனான சேரனின் புகழை புலவர் மேலும் இவ்வாறு
குறிப்பிடுகிறார்.
போரில் பகைவரை வஞ்சிக்காமல் எதிர்நின்று கொன்று வெற்றியைத் தந்தாய். நல்ல கள்ளை தனக்கென
ஏதும் வைத்துக்கொள்ளாமல் மகிழ்வோடு வீரர்களுக்கு வழங்குகிறாய்.
கூத்தரது பெரிய சுற்றம் மகிழுமாறு நல்ல குதிரைகளை வழங்கினாய்.
மக்களெல்லாம் வியக்குமாறு பகையரசர் அழியுமாறு வெற்றி பெறுகிறாய் உனது பேராற்றலைக் கண்டு
பிற மன்னர்களும், வீரர்களும் போற்ற உயர்ந் களிற்று யானை மீது வருகிறாய்.
என்று பாடுகிறார்.
இதுவே பாடலின் பொருள்.

வேட்டையாடுதல், போரிடுதல் உள்ளிட்ட பல சூழல்களில் உடல் உறுப்புகளில் காயமும், சிதைவும்
ஏற்பட்டிருக்கக்கூடும். அப்போது அக்காலத்தில் சிதைந்த உடல்பகுதிகளை இன்று அறுவைமருத்துவத்தில் தையலிடுவது போல தையலிட்டிருக்கின்றனர். அவர்கள் அறுவைமருத்துவத்தில் தையலிடப் பயன்படுத்திய
ஊசி மிகவும் கூர்மையாக மீன்கொத்திப் பறவையின் மூக்கினைப் போல இருந்தமை இப்பாடலால் அறிந்துகொள்ள முடிகிறது.

8 கருத்துகள்:

  1. நல்ல செய்தி.

    சங்க இலக்கியங்களில் காணும் அறிவியற் செய்திகளைத் தொகுத்து நீங்கள் எழுதவிருக்கும் கட்டுரைகளுக்காகக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அவசியமான தகவல்கள் மற்றும் ஆச்சரியக் குறிப்புக்கள்.. ரொம்ப நன்றிங்க..

    பதிலளிநீக்கு
  3. ஓஹோ...தகவலைத் தெரியப்படுத்தியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. SUREஷ் (பழனியிலிருந்து) said...
    நல்ல தகவல்கள்

    03 October 2009 22:11/

    நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  5. அ. நம்பி said...
    நல்ல செய்தி.

    சங்க இலக்கியங்களில் காணும் அறிவியற் செய்திகளைத் தொகுத்து நீங்கள் எழுதவிருக்கும் கட்டுரைகளுக்காகக் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  6. கலகலப்ரியா said...
    மிகவும் அவசியமான தகவல்கள் மற்றும் ஆச்சரியக் குறிப்புக்கள்.. ரொம்ப நன்றிங்க..

    கருத்துரைக்கு நன்றி பிரியா..

    பதிலளிநீக்கு
  7. ஊர்சுற்றி said...
    ஓஹோ...தகவலைத் தெரியப்படுத்தியதற்கு நன்றி

    கருத்துரைக்கு நன்றி ஊர்சுற்றி...

    பதிலளிநீக்கு