வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 9 டிசம்பர், 2009

கூவன்மைந்தன்




சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல்,

திருடனுக்குத் தேள்கொட்டியது போல

என்றெல்லாம் பேச்சுவழக்கில் நாம் வழங்கிவருகிறோம்.

திருடனுக்குத் தேள் கொட்டினால் அந்த வலியை அவன் வாய்விட்டு அழுது கூட வெளிப்படுத்த முடியாது.

யாரிடமும் சொல்லியும் ஆறுதலடைய முடியாது

வாழ்வில் சில நேரங்களில் இதுபோன்ற சூழல் நமக்கு ஏற்படுவதுண்டு அவ்வேளையி்ல் நம் மனதில் எண்ணுவதை யாரிடமும் சொல்ல இயலாது வருந்துவோம்.

தலைவனின் பிரிவால் வாடும் தலைவி!
தலைவியின் நிலை கண்டு வாடும் தோழி!
தோழியின் வருத்தம் கண்டு பெருந்துயர் கொள்ளும் தலைவி!

இவர்களின் இச்சூழலை அழகான உவமையால் எடுத்தியம்பும் சங்கப்பாடல் இதோ…


224. பாலை
கவலை யாத்த அவல நீள் இடைச்
சென்றோர் கொடுமை எற்றி, துஞ்சா
நோயினும் நோய் ஆகின்றே-கூவற்
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட
உயர்திணை ஊமன் போலத்
துயர் பொறுக்கல்லேன், தோழி நோய்க்கே.


புலவர் - கூவன் மைந்தன்

குறுந்தொகை.


(பிரிவிடை இறந்துபடும் எனக் கவன்ற தோழி கேட்பக் கிழத்தி உரைத்தது)

தலைவனின் பிரிவினை தாங்க இயலாது தலைவி இறந்துவிடுவாளோ என்ற வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது.

தனக்கு இனிய செந்நிறப் பசு ஒன்று இரவில் கிணற்றில் வீழ்ந்த துன்பத்தைப் பார்த்த உயர்குலத்து ஊமனைப் போலத் துயருரும் தோழியின் உள்ளத்தில் ஏற்பட்ட துன்பத்தினால் யான் உயிர் தாங்க இயலாதவளாயினேன். என்னை வெறுத்துச் சென்ற என் தலைவனால் என் மனதில் ஏற்பட்ட துன்பத்தைவிட எனக்காகத் தோழி படும் துன்பம் என்னை மேலும் வருத்துவதாக உள்ளது.


உயர்குலத்து ஊமன் ஆதலால் கிணற்றில் வீழ்ந்த பசுவை வெளியே எடுத்துக்காக்கும் வழி அறியான்.

அதுபோல தலைவியின் துன்பத்தை நீக்கும் வழி அறியாதவளாக தோழி உள்ளாள்.

கிணற்றி்ல் பசு வீழ்தமையை பிறர்க்கு உரைக்க இயலாதவானாக ஊமன் உள்ளான்.

அதுபோலத் தோழி தலைவிக்கு ஏற்பட்ட துன்பத்தைத் தீர்க்க இயலாதவளாகவும், பிறர்க்கு உரைக்க இயலாத தன்மையது தலைவியின் துயர் என்பதால் உயர்குலத்து ஊமனைப் போல வருந்துவதன்றி வேறு வழியறியாதவளாக இருக்கிறாள்.

தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவி, தலைவனால் ஏற்பட்ட துயரைக் கூட ஒருவழியாகத் தாங்கிக்கொள்ளலாம். ஆனால் எனக்காக இந்த தோழி படும் துயர் தாங்க இயலாததாகவுள்ளது என்று வருந்துகிறாள்.

பசு கிணற்றில் வீழ்ந்தது இரவு ஆதலால் யாரும் அறியாத சூழல்
தலைவியின் துன்பம் அகம் சார்ந்தது ஆதலால் தன் தாய்க்குக் கூட தெரியாத சூழல்.


இப்பாடல் வழியாக,

• தலைவனைப் பிரிந்து வருந்தும் தலைவியின் துயர் அழகாக இயம்பப்பட்டுள்ளது.

• தலைவிபடும் துன்பம் கண்டு வருந்தும் தோழியின் நட்பின் ஆழத்தைப் புலவர் உயர்திணை ஊமன் வாயிலாக சிறப்பாகப் புலப்படுத்தியுள்ளார்.

• தனக்காகத் தோழிபடும் துன்பத்தைக் கண்டு வருந்தும் தலைவியன் வாயிலாக தலைவி தன் தோழியின் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்துள்ளாள் என்பதையும் நன்கு எடுத்தியம்பியுள்ளார்

• கூவல் என்ற சொல் கிணற்றைக் குறிக்கும் கிணற்றில் வீழ்ந்த பசு , அதைக் காக்க இயலாத உயர்திணை ஊமன் வாயிலாக அழகாக இப்பாடல் விளக்கம் பெற்றதால் பெயர் தெரியாத இப்புலவர் கூவன் மைந்தன் என்ற பெயர் பெற்றார்.

10 கருத்துகள்:

  1. //கூவல் என்ற சொல் கிணற்றைக் குறிக்கும்//

    எனக்கு இன்றுதான் இந்த விளக்கம் தெரியும்..விளக்கங்கள் அருமை..நன்றிகளும்..

    பதிலளிநீக்கு
  2. தலைவனை பிரிந்த தலைவி,தலைவியின் கவலை குறித்து தோழியின் துயர்---ஒரு சேர நல்ல காதலையும்,நட்பையும் பறை சாற்றுகிறது.
    நல்ல பாடலும்,அதற்கான விளக்கமும் அழகு.

    பதிலளிநீக்கு
  3. அருமை..தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம்

    பதிலளிநீக்கு
  4. 4 Comments
    Close this window Jump to comment form

    Blogger புலவன் புலிகேசி said...

    //கூவல் என்ற சொல் கிணற்றைக் குறிக்கும்//

    எனக்கு இன்றுதான் இந்த விளக்கம் தெரியும்..விளக்கங்கள் அருமை..நன்றிகளும்...


    நன்றி புலவரே..

    பதிலளிநீக்கு
  5. பூங்குன்றன்.வே said...

    தலைவனை பிரிந்த தலைவி,தலைவியின் கவலை குறித்து தோழியின் துயர்---ஒரு சேர நல்ல காதலையும்,நட்பையும் பறை சாற்றுகிறது.
    நல்ல பாடலும்,அதற்கான விளக்கமும் அழகு...//

    சரியான புரிதல் நண்பரே

    பதிலளிநீக்கு
  6. தலைவனை பிரிந்த தலைவி,தலைவியின் கவலை குறித்து தோழியின் துயர்---ஒரு சேர நல்ல காதலையும்,நட்பையும் பறை சாற்றுகிறது.
    நல்ல பாடலும்,அதற்கான விளக்கமும் அழகு.

    8 December 2009 21:28
    Delete
    Blogger T.V.Radhakrishnan said...

    விளக்கங்கள் அருமை..//

    நன்றி ஐயா..

    பதிலளிநீக்கு
  7. எப்பொழுதும் போல் பல அரிய விளக்கங்களைத் தந்தமைக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  8. Ruban. said...
    அருமை..தொடர்ந்து எதிர்பார்க்கின்றோம்


    நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு