வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 31 டிசம்பர், 2009

வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்),

சுட்டி ஒருவர் பெயர்கொள்ளப்பெறாமல் தலைவன், தலைவி செவிலி, நற்றாய் என்று சுட்டப்பெற்ற சங்ககால அகவாழ்வியலின் பதிவுகள் பழந்தமிழரின் வாழ்வியல் இலக்கணங்களாக இன்று நமக்குக் கிடைத்துள்ளன.

அகவாழ்க்கையை அகத்திணைகள் உணர்த்துகின்றன.
அகவாழ்க்கை களவு(காதல்) கற்பு (திருமணத்துக்கு பின்)
என இரு கூறுகளைக் கொண்டது.

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்பன அன்பின் ஐந்திணைகளாகவும் கைக்கிளை பெருந்திணை என்னும் திணைகளும் அகத்திணைகளாகவே கொள்ளப்படும். கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் நிலங்கள் கிடையாது.
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் ஆகிய திணைகளுக்கு மட்டுமே நிலம் உண்டு பாலைத் திணை முல்லையும் குறிஞ்சியும் தன்னிலையில் திரிந்த் நிலையாகும்.

பண்டைக் காலத்தில் கிடைத்த சங்கப்பாடல்கள் எந்த விதமான வகைபாடும் இன்றியே கிடைத்தன.

சங்கப்பாடல்கள் பாடபட்ட காலம் வேறு தொகுக்கப்பட்ட காலம் வேறு.
தொகுக்கப்பட்ட போது முழுமையான நெடும்பாடல்களைத் தொகுத்து பத்துப்பாட்டாக்கினர். எஞ்சிய பாடல்களை அகம், புறம் என்னும் பெரும்பாகுபாட்டுக்குள் எட்டுத்தொகையாக வகுத்தனர். அகப்பாடல்களில் ” முதல் - கரு - உரி என்னும் இலக்கண மரபுகளைக்கொண்டு திணைப்பாகுபாடு செய்தனர்.

முதல் என்பது நிலம் - பொழுது என்பதன் இயல்பு கூறுவதாகும்

கரு
என்பது அந்ததந்த நிலத்துக்கான தெய்வம், உணவு, பறை, யாழ், விலங்கு, பறவை போன்ற கூறுகளைக் கூறுவது

உரிப்பொருள் என்பது அந்த நிலத்துக்கு உரிய மாந்தர்களின் மனதில் தோன்றும் உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு
கூடல்
ஊடல்
பிரிதல்
இருத்தல்
இரங்கல் என்ற வகைப்பாடு பெறுவதாகும்.இதனை,






இந்த அட்டவணைகள் விளக்கும்.



குறிஞ்சியின் கருப்பொருட்கள்:


கடவுள்: முருகக்கடவுள்
மக்கள்: பொருப்பன், வெற்பன், சிலம்பன், குறத்தி, குறவன், கொடிச்சி, வெற்பன், வேம்பன், பொருப்பன்,கானவர்
புள்: கிளி, மயில்
விலங்கு: புலி, கரடி, யானை
ஊர்: சிறுகுடி
நீர்: அருவி நீர், சுனை நீர்
பூ: வேங்கை, குறிஞ்சி, காந்தள், குவளை
மரம்: ஆரம் (சந்தனம்), தேக்கு, அகில்ம் அசோகம், நாகம், மூங்கில்
உணவு: மலைநெல், மூங்கில் அரிசி, தினை
பறை: தொண்டகப்பறை
யாழ்: குறிஞ்சி யாழ்
பண்: குறிஞ்சிப்பண்
தொழில்: வெறியாடல், மலைநெல் விதைத்தல், தினைப்புனம் காத்தல் தேன் அழித்தல், நெல் குற்றுதல், கிழங்கு எடுத்தல், அருவி மற்றும் சுனை நீர் ஆடல்
குறிஞ்சித்திணைக்கு உரித்தான துறையாக ஒரு எடுத்து காட்டு: "பகற்குறிக்கண் செறிப்பு அறிவுறீத் தோழி வரைவு கடாயது"




-oOo-



முல்லையின் கருப்பொருட்கள்:


கடவுள்: மாயோன் (திருமால்)
மக்கள்: குறும்பொறை நாடன், தோன்றல், மனைவி, கிழத்தி, இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர், பொதுவர், பொதுவியர், கோவலர்
புள்: காட்டுக்கோழி
விலங்கு: மான், முயல்
ஊர்: பாடி, சேரி, பள்ளி
நீர்: குறுஞ்சுனை நீர், கான்யாற்று நீர் (காட்டாறு)
பூ: குல்லை, முல்லை, பிடவம், தோன்றிப்பூ
மரம்: கொன்றை, காயா, குருந்தம்
உணவு: வரகு, சாமை, முதிரை
பறை: ஏறுகோட்பறை
யாழ்: முல்லை யாழ்
பண்: முல்லைப்பண்
தொழில்: சாமை விதைத்தல், வரகு விதைத்தல், அவற்றின் களை கட்டல் மற்றும் அரிதல், கடா விடுதல், கொன்றை குழல் ஊதல், ஆவினம் மேய்த்தல், கொல்லேறு தழுவல், குரவை கூத்தாடல், கான்யற்று நீராடல்.




-oOo-

மருதத்தின் கருப்பொருட்கள்:

கடவுள்: வேந்தன் (இந்திரன்)
மக்கள்: ஊரன், மகிழ்நன்,கிழத்தி, மனைவி, உழவர், உழத்தியர், கடையர், கடைசியர்
புள்: வண்டானம், மகன்றில், நாரை, அன்னம், பெருநாரை, கம்புள், குருகு, தாரா.
விலங்கு: எருமை, நீர்நாய்
ஊர்: பேரூர், மூதூர்
நீர்:ஆற்று நீர், கிணற்று நீர்
பூ: தாமரை, கழுனீர்
மரம்: காஞ்சி, வஞ்சி, மருதம்
உணவு: செந்நெல் அரிசி, வெண்ணெல் அரிசி
பறை: நெல்லரிகிணை, மணமுழவு
யாழ்: மருத யாழ்
பண்: மருதப்பண்
தொழில்: விழாச்செய்தல், வயற்களைகட்டல், நெல் அரிதல், கடாவிடுதல், குளம் குடைதல், புது நீராடல்




-oOo-


நெய்தலின் கருப்பொருட்கள்:


கடவுள்: வருணன்
மக்கள்: சேர்ப்பன், புலம்பன், பரத்தி, நுழைச்சி, கொண்கண், துறைவன், நுளையர், நுளைச்சியர், பரதர், பரத்தியர், அளவர், அளத்தியர்
புள்: கடற்காகம், அன்னம், அன்றில்
விலங்கு: சுறா, உமண் பகடு
ஊர்: பாக்கம், பட்டினம்
நீர்:உவர்நீர் கேணி, மணற்கேணி
பூ: நெய்தல், தாழை, முண்டகம், அடம்பம்
மரம்: கண்டல், புன்னை, ஞாழல்
உணவு: மீனும் உப்பும் விற்று பெற்றவை
பறை: மீன்கோட்பறை, நாவாய் பம்பை
யாழ்: விளரி யாழ்
பண்: செவ்வ்வழிப்பண்
தொழில்: மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், மீன் உணக்கல், பறவை ஓட்டுதல், கடலாடுதல்




-oOo-


பாலையின் கருப்பொருட்கள்:


கடவுள்: கொற்றவை (துர்க்கை)
மக்கள்: விடலை, காளை, மீளி, எயினர், எயிற்றியர், மறவர், மறத்தியர்
புள்: புறா, பருந்து, எருவை, கழுகு
விலங்கு: செந்நாயும் வலிமை அழிந்த யானை, புலி
ஊர்: குறும்பு
நீர்: நீரில்லாகுழி, நீரில்லாகிணறு
பூ: குரா, மரா, பாதிரி
மரம்: உழிஞை, பாலை, ஓமை, இருப்பை
உணவு: வழிப்பறி பொருள், பதியில் கவர்ந்த பொருள்
பறை: துடி
யாழ்: பாலை யாழ்
பண்: பாலைப்பண்
தொழில்: போர் செய்தல், வழிப்பறி




இவ்வாறு அகவாழ்வியலில் திணைப்பாகுபாடு செய்து வாழ்ந்து வந்தனர்.
இந்த அடையாளங்கள் வாயிலாக ஒவ்வொரு தமிழனும் இந்த நிலம் சார்ந்தவன் என்று அடையாளம் காணப்பட்டான். இவையெல்லாம் தமிழனின் வாழ்வியல் அடையாளங்கள்..

இன்றைய தமிழனுக்கு தமிழன் என்பதற்கான அடையாளங்கள் இப்படி ஏதாவது காணமுடிகிறதா..?

(படங்கள் யாவும் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டுமலரிலிருந்து எடுக்கப்பட்டவை.நன்றி!)
-oOo- -oOo-

-oOo-

8 கருத்துகள்:

  1. தங்கள் தளம் திறக்க நெடு நேரம் ஆகிறது...எனக்கு மட்டுமா? தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  2. அகத்திணை பற்றி அழகாக விளக்கியுள்ளீர்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  5. ஸ்ரீராம். said...

    தங்கள் தளம் திறக்க நெடு நேரம் ஆகிறது...எனக்கு மட்டுமா? தெரியவில்லை.

    எனது வலைப்பதிவு 68 கேபி தான் உள்ளது நண்பரே..

    கேட்கெட்களும் குறைவாகத்தான் உள்ளன..

    அதனால் தங்கள் இணைய வேகத்தை சரிபாருங்களேன்..

    பதிலளிநீக்கு
  6. தமிழ் வெங்கட் said...

    அகத்திணை பற்றி அழகாக விளக்கியுள்ளீர்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.//

    நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  7. தமிழ் வெங்கட் said...

    அகத்திணை பற்றி அழகாக விளக்கியுள்ளீர்கள் தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.//

    நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு
  8. இந்திரன் இருக்கு வேதத்தில் விவிரிக்கப்படும் ஆரியக்கடவுள் தானே. வேந்தன் என்பதற்கு எப்படி இந்திரன் எனப் பொருள் கொள்ள முடியும்? ஏன் வேந்தன் பூர்வகுடி அரசனாகவோ, சிவனாகவோ, வேறு வழக்கொழிந்து விட்ட தெய்வமாகவோ இருக்கக்கூடாது?

    பதிலளிநீக்கு