வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வியாழன், 18 மார்ச், 2010

24 ஆம் புலிக்கேசி.




குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படனும்னு வழக்கத்தில் சொல்வதுண்டு..

அது மோதிரக் கையில்லை - மோதுகிற கை!!

ஆம், “ குட்டுப்பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும்“ என்பது தான் சரியாக அமையும். மோதுகிற கையென்றால். தமக்கு நிகரான வலிமையுடையவரிடம் ( மோதுகிற மனதிடம் உள்ளவரிடம்) மோதுவது தான் வீரம் என்ற பொருளில் அன்று வழங்கியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் 23 ஆம் புலிகேசி என்றொரு திரைப்படம் வெளிவந்தது. அதில் புலிகேசி என்னும் மன்னன் கோழையாக இருப்பார். தூதாக வந்த புறாவை வறுத்து சாப்பிட்டுவிடுவார். அதனால் தூதனுப்பிய மன்னன் போர்தொடுத்து வந்துவிடுவான். போர் என்றால் அஞ்சும் புலிகேசி வெண்கொடியேந்தி சமாதானம் கேட்பார்.

போரிட வந்த மன்னன் புலிகேசியைப் பார்த்து,
என்ன இவன் மானங்கெட்ட மன்னாக இருப்பான் போல இருக்கிறது என்று சொல்ல..

அருகிலிருப்பவன்.. மன்னா இவ்வளவு தூரம் வந்துவிட்டோம்.. இவன் கண்ணை மட்டுமாவது எடுத்துக்கொண்டு போவோம் என்பான்.

அவ்வளவு தான் புலிகேசி மன்னன் எதிரியின் காலிலேயே வீழ்ந்துவிடுவார்..

அனைவரும் பார்த்துச்சிரித்த இக்காட்சிகள் திரையில் மட்டுமல்ல சங்க கால வாழ்வியலிலும் இருந்திருக்கின்றன.


வலிமையான மன்னன் ஒருவன் இன்னொரு மன்னன் மீது போர்தொடுத்து வந்துவிட்டான். தனது வருகையை எதிரியின் காவல் மரங்களை வெட்டித் தெரிவி்க்கிறான். ஆனால் எதிரியே தன் எதிர்ப்பையே காட்டவில்லை.

போர்தொடுத்து வந்த மன்னனைப் பார்த்து புலவர்,

மன்னா நீ போர்தொடுத்து வந்த மன்னன் உனக்கு நிகரானவன் அல்ல. மானம் இழந்தவனாக இருக்கிறான். இந்த மன்னனை நீ வென்றாலும், கொன்றாலும் உனக்குப் ஏதும் பெருமை இல்லை என்று சொல்கிறார்.


செறிந்த பரல்கள் உடைய சிலம்பில் நீண்ட கோல் தொழிலமைந்த சிறிய வளையல்களும் அணிந்த மகளிர், குளிர்ந்த ஆன்பொருநையாற்று மணல் மேட்டிலேயே பொன்னாலான கழற்சிக் காய்களைக் கொண்டு வீசி விளையாடுவர். அவர்கள் வியைாடும் வெண்மணல் பரப்பு, சிதையுமாறு வலிய கையையுடைய கொல்லனால் அராவிக் கூர்மையாக்கப்பட்ட நெடிய கைப்பிடியை உடைய கோடரி கொண்டு உனது வீரர்கள் காவல் மரங்களை வெட்டுவார்கள்.

அதனால் மலர் மணமுடைய நெடிய கிளைகள் மலர்கள் உதிர்ந்து பொலிவழியும். இவ்வாறு சோலைகள் தோறும் காவல்மரங்களை வெட்டும் ஓசை தனது ஊரில் நெடிய மதில் எல்லையை உடைய காவலமைந்த மாளிகையிடத்துச் சென்றொலிக்கும்,

எனினும் மானமின்றி இனிதாக அங்கே உறையும் வேந்தனுடன் இங்கு வானவில் போன்ற நிறமுடைய மாலையையுடைய முரசு முழங்க நீ போரிட்டாய் என்பது நாணத்தக்கது..

எனவே நீ பகை வேந்தனைக் கொன்றாலும் கொல்லாது விடுத்தாலும் அவற்றால் உனக்கு நேரும் உயர்ச்சியை நாங்கள் சொல்ல வேண்டியதில்லை. நீயே நன்கு எண்ணி அறிவாய். இப்போரைத் தவிர்த்தலும் உண்டு!!



அடுநை யாயினும், விடுநை யாயினும்,
நீ அளந் தறிதி நின் புரைமை; வார்தோல்,
செயறியரிச் சிலம்பின், குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கின் தெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக்,
கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலின், நிலையழிந்து,
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக், காவுதொறும்
கடிமரம் தடியும் ஓசை தன்ஊர்
நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப,
ஆங்குஇனி திருந்த வேந்தனொடு, ஈங்குநின்
சிலைத்தார் முரசும் கறங்க,
மலைத்தனை எண்பது நாணுத்தகவு உடைத்தே.


புறநானூறு - 36.
பாடியவர்: ஆலத்தூர் கிழார்.
பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.
திணை:வஞ்சி. துறை: துணை வஞ்சி.
குறிப்பு: சோழன் கருவூரை முற்றியிருந்தபோது பாடியது.

(பகைவர் மேல் போர் செய்ய எழும் வஞ்சித்திணையின் ஒரு துறை துணைவஞ்சி. பகைவருடன் போரிட வந்தவனைத் தடுத்து அமைதிப்படுத்திப் போரைத் தவிரச் செய்தல். இருபெரு வேந்தருக்கும் சந்து செய்வித்தல். போரைத் தவிர்த்தமையால் இது துணைவஞ்சியானது.)

பாடல் வழி அறியலாகும் செய்திகள்.

◊ குட்டுப் பட்டாலும் மோதுகிற கையால் குட்டுப்படவேண்டும் என்பதற்கேற்ப தம் வலிமைக்கு நிகரானவனுடன் மோதுவதே சிறந்தது என்ற செய்தி முன்வைக்கப்படுகிறது.
◊ பொன்னாலான காய்களைக் கொண்டு மகளிர் விளையாடிமை அக்காலச் செல்வச் செழிப்பின் குறியீடாகவுள்ளது.
◊ வென்ற மன்னன் தோல்வியுற்ற மன்னனின் காவல் மரத்தை வெட்டும் அக்கால மரபு சுட்டப்படுகிறது.
◊ மானம் அற்றவர் மனிதரே அல்ல. அவருடன் போர் புரிவதும் வெற்றிபெறுவதும், அன்றி அவரேயே கொல்வதும் கூட பெருமையல்ல என்ற சங்ககால மக்களின் உயர்ந்த கொள்கை புலப்படுத்தப்படுகிறது.

35 கருத்துகள்:

  1. அய்யா நான்தான் பர்ஸ்ட் !
    மீண்டும் வருவான் பனித்துளி !

    பதிலளிநீக்கு
  2. அய்யா,

    புறநானூற்றுப்பாடலை மிக அழகாக சமீப கால படம் ஒன்றுடன் ஒப்பிட்டு எளிதாய் எல்லோருக்கும் புரியும்படி அளித்திருக்கிறீர்கள்... மிக நன்றாய் இருக்கிறது...

    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  3. {{{{{{{{{{{{ போரிட வந்த மன்னன் புலிகேசியைப் பார்த்து,
    என்ன இவன் மானங்கெட்ட மன்னாக இருப்பான் போல இருக்கிறது என்று சொல்ல..

    அருகிலிருப்பவன்.. மன்னா இவ்வளவு தூரம் வந்துவிட்டோம்.. இவன் கண்ணை மட்டுமாவது எடுத்துக்கொண்டு போவோம் என்பான். }}}}}}}}}}}}}}}}}}}


    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா கலக்கல் போங்க .

    அரசு இரகசியங்களை ஒட்டுக் கேட்பதே தவறு இதில் சிரிப்புவேரையா என்று கேட்டுவிடாதீர்கள் மன்னா !

    பதிலளிநீக்கு
  4. என்ன ஒரு புறாவுக்கு போரா !
    இது என்ன பெரிய ஆக்கப்போராவுல இருக்கு ?


    மீண்டும் வருவான் பனித்துளி !

    பதிலளிநீக்கு
  5. சங்கப் பாடலுக்குத் திரைப்பட மேற்கோளைச் சுட்டி, ’குட்டுப்பட்டாலும் மோ(தி)துர கையால் குட்டுப் படனும்’ என்ற பழமொழிக்கு அருமையான் விளக்கம் த்ந்து, எளிய நடையில் அமைந்த இக்கட்டுரை மிக அருமை. சங்கத்தமிழ் வளர்க்கு சான்றோனுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.

    பதிலளிநீக்கு
  6. சங்க காலத்து சிறப்பும் சிரிப்பும் - அருமை.

    பதிலளிநீக்கு
  7. இதெல்லாம் உண்மையிலேயே நடந்து இருக்கிறதா, தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. nalla rasanaiudan varalaatrai vilakkiya vitahm arumai. paataalum atharkaana vilakkamum nandru.

    பதிலளிநீக்கு
  9. பழமொழிக்கு பொருத்தமான விளக்கம் அறியத்தந்தமைக்கு நன்றி. பாடல் விளக்கம் எளிமை அருமை:)

    பதிலளிநீக்கு
  10. இதுவரை கேள்விப்படாத தகவல்..

    பதிலளிநீக்கு
  11. அருமையான பதிவு. புலிகேசி அதுக்கு என்னங்க அர்த்தம் - புலி முடியன் என்பதா ?

    நீங்கள் நான் எழுதும் தொடர் கதையை என் பதிவில் படிக்க வேண்டுகிறேன். உங்கள் விமர்சனம் என்னை நல்ல முறையில் ஏலத தூண்டும்.

    கார்த்திக்
    http://eluthuvathukarthick.wordpress.com/

    பதிலளிநீக்கு
  12. ரொம்ப நாளா தப்பா நினைச்சிகிட்டு இருந்தத இப்பதான் முழுசா தெரிஞ்சிகிட்டேன்... .நன்றிங்க அன்பரே... ....

    பதிலளிநீக்கு
  13. எளிமையான விளக்கம்.

    //.. மானம் அற்றவர் மனிதரே அல்ல. அவருடன் போர் புரிவதும் வெற்றிபெறுவதும், அன்றி அவரேயே கொல்வதும் கூட பெருமையல்ல ..//

    ரசித்த வரிகள்..

    பதிலளிநீக்கு
  14. அந்தக்காலத்திலும் வீரமற்ற மன்னர்கள் இருந்திருக்கிறர்கள் என்பது எனக்கு செய்தி

    பதிலளிநீக்கு
  15. உங்கள் வலைப்பதிவில் இடம்பெறும் கட்டுரைகள் மூலம் பலநாட்களாக தவறாக புரிந்து கொள்ளாப்பட்ட பழ மொழிகளை நான் சரியாக புரிந்து கொண்டேன். அத்தோடு மட்டுமின்றி நான் ஒரு வலைப்பதிவு உருவாக்கவும் நீங்கள் தான் காரணம்.

    பதிலளிநீக்கு
  16. @ஆதிரா

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஆதிரா..

    பதிலளிநீக்கு
  17. @சசிகுமார்

    ஆம் நண்பரே..
    இதற்கெல்லாம் இலக்கியப்பதிவுகள் உண்டு.

    பதிலளிநீக்கு
  18. @கார்த்திக்

    வருகைக்கு நன்றி நண்பா.
    ஆம்.
    கேசம் என்றால் கூந்தல் என்று பொருள்.
    புலிகேசி என்றவொரு பெயர் புலியைப் போன்ற கூந்தலுடையவன் என்ற பொருளில் கூட வந்திருக்கலாம்.

    தங்கள் பதிவுக்கு வருகிறேன் நண்பா.

    பதிலளிநீக்கு
  19. @thenammailakshmanan

    வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு
  20. மிகவும் எளிமையான விளக்கத்துடனான புறநானூற்றுப்பாடல் அறிமுகத்துக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  21. மோதுகிற கையா...? இப்பத்தான் தெளிவாச்சு..

    பதிலளிநீக்கு
  22. ◊ மானம் அற்றவர் மனிதரே அல்ல. அவருடன் போர் புரிவதும் வெற்றிபெறுவதும், அன்றி அவரேயே கொல்வதும் கூட பெருமையல்ல என்ற சங்ககால மக்களின் உயர்ந்த கொள்கை புலப்படுத்தப்படுகிறது./

    சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  23. நல்ல சங்கப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து வழங்குகிறீர்கள். நன்றியும், பாராட்டுக்களும் முனைவரையா!

    பதிலளிநீக்கு
  24. நன்றி ஜீவராஜ்,
    நன்றி புலிகேசி
    நன்றி இராஜராஜேஸ்வரி
    நன்ற கணேஷ்

    பதிலளிநீக்கு