Saturday, April 17, 2010

இயற்கையின் காவலர்கள்.
சிறுவயதில் எங்கெங்கோ தேடியலைந்து சிறு சிறு செடிகளைப் பறித்து வந்து வீட்டில் தோட்டம் வைக்க முயற்சித்திருக்கிறேன்.

நட்டுவைத்த செடிகள் பூ பூக்கும் போது மனதெல்லாம் பூப்பூத்த அனுபவம்!

நான் வளர்த்த தோட்டத்தில் பறவைகள் வந்தமரும் போது நண்பர்கள் வீட்டுக்கு வந்த உற்சாகம்!

இன்றும் நினைத்துப்பார்த்தால் நெஞ்சில் நிற்கிறது.

தினமும் செடிகளுக்குத் தண்ணீர்விட்டு, அரும்போடும், மலரோடும், காயோடும், கனியோடும் பேசி வளர்ந்த நாட்கள் எண்ணி இன்புறத்தக்கன.

அப்படித்தான் சிறுவயதில் வேப்ப மரம் வளர்க்க வேண்டும் என்ற ஆவலில் எங்கிருந்தோ பறித்து வந்த வேப்பஞ்செடியை வீட்டில் வைத்து வளர்த்தேன்.

என்னோடு செடியும் என் உயரத்துக்கு வளர்ந்தது.

இரண்டு ஆண்டுகள் வெளியூரில் தங்க வேண்டிய சூழல்.

திரும்பி வந்து பார்த்தால் என்னை விட உயரமாக கிளைபரப்பி வளர்ந்து என்னைப் பார்த்து சிரித்தது வேப்பமரம். அதற்கு நேரவிருக்கும் ஆபத்தை உணராமல்!


ஆம் அந்த மரத்தோடு ஒருகிளையில் ஒட்டாக இன்னொரு தாவரமும் செடியாக வளர ஆரம்பித்திருந்தது. முதலில் வியந்த நான் எல்லோரிடமும் பெருமையாகச் சொன்னேன். கேட்டவர்களும், பார்த்தவர்களும், உறவினர்களும், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களும் ஆளுக்கொரு யோசனை சொன்னார்கள்!

வேம்போட இப்படி வேற செடி சேர்ந்து வளர்ந்தா குடும்பத்துக்கு ஆகாது என்றார் ஒருவர்.

(மரத்துக்கும் குடும்பத்துக்கும் என்னடா சம்பந்தம் என்று நான் கூறியது யார் காதிலும் விழவில்லை)

வீட்டுக்கு முன்னாடி வேம்பு வளர்ந்தா அதன் வேர் வீட்டை இடித்துவிடும் என்றனர் சிலர்.

கிணற்றுத் தண்ணீர் வற்றிப் போகும் என்றனர் சிலர்.

கம்பளிப் பூச்சி வரும் என்றும், எறும்பு கூடுகட்டும் என்றும் ஆளுக்கொரு யோசனை சொல்ல முடிவாக மரம் வெட்டப்பட்டது.

உணர்வுபூர்வமாக எதையே இழந்த உணர்வு இன்றும் என்னுள் இருக்கிறது.

மரத்தைக் காக்க நான் பட்ட பாடு! அதை வளர்க்கக்கூட பட்டிருக்கமாட்டேன்!

இப்படி என்னைப் போல ஒவ்வொருவருக்கும் மரத்தோடு நெருங்கிய உறவு இருக்கத்தான் செய்யும். தமிழர் மரபைப் பொருத்தவரை மரங்கள் என்பவை தாவரங்களாக மட்டுமல்ல,

நம்பிக்கையின் வடிவங்களாக,

தெய்வங்களாக,

நோய் நீக்கும் மருந்துகளாக,

உணவுப் பொருள்களாக,

இன்னும் ஆயிரம் ஆயிரம் உறவுநிலைகளைக் கொண்டிருக்கின்றன.


ஒரு செடியை வளர்ப்பதும் – குழந்தையை வளர்ப்பதும் ஒன்று.


இரண்டும் எளிதான பணியல்ல என்பது இரண்டையும் வளர்த்தவர்கள் நன்கு அறிவார்கள்.

செடி வளரத் தேவையான கூறுகள் இருந்தால் மட்டும் போதாது. சில காலத்துக்கு அச்செடிக்குப் பாதுகாப்பும் வேண்டும்.

மரத்தையும், மக்கள் நம்பிக்கையையும் காத்த இயற்கையின் காவலர் ஒருவரைப் பற்றி இன்றைய இடுகை அமைகிறது.இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறன்

என்னும் பாண்டிய வேந்தன்,ஒருகாலத்தில் பகைவர்மேற் போர்குறித்துச் சென்றான், அவனைக் காணப் போயிருந்த காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், அவனுடைய போர்வன்மையை நன்குணர்ந்தவராதலால்,

வேந்தே, கல்வியறிவுடையவராயினும், அறிவு குறைவுடையவராயினும் நின்னைப் புகழவே எண்ணுவர் அத்தகைய சிறப்புடையவன் நீ!

உனக்கு ஒன்று கூறுவேன் கேட்பாயாக..

போரில் வெற்றிபெறத்தக்கவன் நீயே!

(வென்ற மன்னர் தோற்ற நாட்டின் பொருள்களைக் கொள்வதும், நாட்டுக்கு தீவைத்துக் கொளுத்துவதும், காவல் முரசு, காவல் மரத்தையும் அழிப்பதுமே மரபு!)

நின் வீரர் பகைவர் நாட்டு வயல்களைக் கொள்ளை கொள்ளின் கொள்க!

ஊர்களைத் தீக்கிரை யாக்கினும் ஆக்குக!

நின் வேல் அப் பகைவரை அழிப்பினும் அழிக்க!

அவர் கடிமரங்களை (காவல் மரங்களை) மட்டும் தடியாமல் விடுக!

அவை நின் யானைகட்குக் கட்டுத் தறியாகும் வன்மை யுடையவல்ல” என்று பாடுகின்றார்.வல்லா ராயினும் வல்லுந ராயினும்

புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன

உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற

நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்

5.நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்

டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க

நனந்தலைப் பேரூ ரெரியு நக்க

மின்னுநிமிர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல்

ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்

10.கடிமரந் தடித லோம்புநின்

நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே. (57)திணை: வஞ்சி. துறை: துணைவஞ்சி. அவனைக் காவிரிப்பூம்

பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.

* வென்ற மன்னன் தோற்ற நாட்டின் பொருள்களைக் கொள்வதும், நாட்டுக்கு தீவைப்பதும், காவல் மரம், காவல் முரசு ஆகியவற்றை அழிக்கும் புறவாழ்வியல் மரபு உணர்த்தப்படுகிறது.
* மன்னா மரபின்படி யாவும் செய்க! மரத்தை மட்டும் வெட்டாதே!
என்ற புலவரின் வேண்டுகோள் இயற்கையின் மீதும் மக்கள் மரத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் மீதும் புலவர் கொண்ட பற்றுதலை உரைப்பதாகவுள்ளது.

*இந்தப் புலவர் இயற்கையின் காவலராக, ( காதலராக ) எனக்குத் தோன்றுகிறார்.
இப்படி எத்தனை எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத இயற்கைக் காவலர்களால் தான் நம்மைச்சுற்றி இன்னும் மரங்கள் இருக்கின்றன.

29 comments:

 1. நண்பரே.. அன்று அடுத்த நாட்டு மன்னனுக்கு இருந்த ஒரு நல்லெண்ணம், இன்று சொந்த நாட்டை ஆள்பவர்களுக்கு இல்லையே..

  :-((

  ReplyDelete
 2. மரம வெட்டப பட்டதைப் படித்த போது மனம் கனத்துப் போயிற்று.

  ReplyDelete
 3. @திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்).

  அடுத்த நாட்டு மன்னன் மீதும் மக்கள் மீதும் தாவரங்கள் மீதும் புலவருக்கு இருந்த பற்றுதல் தானே தாங்கள் குறிப்பிடுவது நண்பரே..

  ReplyDelete
 4. நண்பரே இப்போது தான் ஈரோடு கதிரின் பதிவில் இரு மரக் காதலர்கள் பற்றிப் படித்து விட்டு வந்தேன்...நல்ல விளக்கம்

  ReplyDelete
 5. @kggouthaman

  நீண்ட நாள் மனச்சுமை இறக்கிவைத்தது போன்ற மனஉணர்வு எனக்கு இப்போது உள்ளது ஐயா!

  ReplyDelete
 6. ஓ.. நானும் வெட்டப்பட்ட மரத்தைக்கண்டு மனம் துவழ்ந்து போயிற்றேன்.....
  நல்லதொரு இடுகை.பகிர்வுக்கு நன்றி குணா..
  மேலும் மேலும் வாசிக்கத்தூண்டுது உண்மையில் மனதுக்குள் இருக்குது..மனம் மரத்துப்போனவர்களைக் கண்டிக்கிறேன்..
  புலவரை ஆமோதிக்கிறேன்

  ReplyDelete
 7. @புலவன் புலிகேசி மகிழ்ச்சி நண்பா..
  தொடர் வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 8. *இந்தப் புலவர் இயற்கையின் காவலராக, ( காதலராக ) எனக்குத் தோன்றுகிறார்.
  இப்படி எத்தனை எத்தனையோ கண்ணுக்குத் தெரியாத இயற்கைக் காவலர்களால் தான் நம்மைச்சுற்றி இன்னும் மரங்கள் இருக்கின்றன.

  ..... உண்மை....... இன்னும் பலர் உருவாக வேண்டும்.

  ReplyDelete
 9. @றமேஸ்-Ramesh வருகைக்கும் கருத்துரைக்கம் நன்றி றமேஸ்.

  ReplyDelete
 10. @Chitra கருத்துரைக்கு நன்றி சித்ரா.

  ReplyDelete
 11. நல்ல உபயோகமுள்ள பதிவு. நன்றி நண்பரே.

  ReplyDelete
 12. காலத்துக்கேற்ற கருத்து. நன்றி குணா.

  ReplyDelete
 13. இயற்கை ஆர்வலவர்கள் உருவாகவேண்டும். வீட்டுக்கு ஒரு மரம் வளர்த்தால்தான் இலவச டிவி என்கின்ற புதிய விதியை கொண்டுவரவேண்டும்.(அப்படியாவது மரங்கள் பெறுகாதா...என்கின்ற நப்பாசையில்) வாழ்க வளமுடன்,வேலன்.

  ReplyDelete
 14. குணா உங்கபதிவான்னு நம்பாமல் இரண்டுமுறை பார்த்தேன்..மரம் வெட்டப்பட்டு இருக்க கூடாது என்ற பதைப்போடு படித்தேன்..வெட்டப்பட்டது என்றதை படித்தவுடன் தொடர்ந்து படிக்கமுடியலை...

  ReplyDelete
 15. @வானம்பாடிகள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

  ReplyDelete
 16. @தமிழரசி ஆழ்மனப் பதிவுகளாக இவ்விடுகை வெளிப்பட்டுள்ளது அதனால் தான் தங்களுக்கு எனது பதிவா என்ற மயக்கம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன்..

  வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தமிழ்.

  ReplyDelete
 17. @வேலன். இயற்கையின் அருமையை மக்கள் உணரும் காலம் வெகு தொலைவில் இல்லை நண்பரே.

  ReplyDelete
 18. //.. அடுத்த நாட்டு மன்னன் மீதும் மக்கள் மீதும் தாவரங்கள் மீதும் புலவருக்கு இருந்த பற்றுதல் தானே ..//

  ஆமாங்க அதைதான் சொன்னேன்..
  புலவர் அவ்வாறு பாடினால், அந்நாட்டு மன்னனும் அவ்வாறு தானே இருந்திருப்பான்..

  ReplyDelete
 19. ..... உண்மை....... இன்னும் பலர் உருவாக வேண்டும்

  ReplyDelete
 20. @திருஞானசம்பத்(பட்டிக்காட்டான்). ஆம் நண்பரே.. மன்னனுக்கு மண்மீதும் பொருள்மீதும் ஆசை மிகுந்திருப்பதால் புலவர் வந்து மன்னனுக்கு அறிவுறுத்தவேண்டிய தேவை ஏற்பட்டது.

  மீள்வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா.

  ReplyDelete
 21. ///////வென்ற மன்னன் தோற்ற நாட்டின் பொருள்களைக் கொள்வதும், நாட்டுக்கு தீவைப்பதும், காவல் மரம், காவல் முரசு ஆகியவற்றை அழிக்கும் புறவாழ்வியல் மரபு உணர்த்தப்படுகிறது.
  * மன்னா மரபின்படி யாவும் செய்க! மரத்தை மட்டும் வெட்டாதே!
  என்ற புலவரின் வேண்டுகோள் இயற்கையின் மீதும் மக்கள் மரத்தின் மீது கொண்ட நம்பிக்கையின் மீதும் புலவர் கொண்ட பற்றுதலை உரைப்பதாகவுள்ளது.////////  உண்மைதான் நண்பரே . இப்பொழுதெல்லாம் அனைத்தும் அறிந்தே மரங்களை வெட்டிக்கொண்டு இருக்கின்றோம் .இனி வரும் காலங்களில் மரங்கள் என்ற ஒன்று இப்படித்தான் இருக்கும் என்று நமது சந்ததிகளிடம் புத்தகங்களிலோ அல்லது புகைப்படங்களிலோ காட்டி கதை சொல்லும் நிலை விரைவில் வரும் .


  தொடருங்கள் மீண்டும் வருவேன் . மரம் வெட்ட அல்ல. மரம் நட

  ReplyDelete
 22. @♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சங்கர்.

  ReplyDelete
 23. சிறுவயதில் எங்கெங்கோ தேடியலைந்து சிறு சிறு செடிகளைப் பறித்து வந்து வீட்டில் தோட்டம் வைக்க முயற்சித்திருக்கிறேன். //நான் நினைத்ததை,
  எண்ணங்களாகப் பிரதிபலித்திருகிறீர்கள்.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 24. @இராஜராஜேஸ்வரி தங்கள் வருகைக்கும் ஆழ்ந்த வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி இராஜராஜேஸ்வரி.

  ReplyDelete
 25. மரங்களை வளர்த்து பார்த்தல் தான் அவைகளுக்கும் நம்மை போன்ற உயிர் இருக்கிறது என்பது தெரியும் ..

  ReplyDelete