வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 18 மே, 2010

அந்தியிளங்கீரனார்.




இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் அழகு நிறைந்துள்ளது.

நிலம், நீர், தீ, காற்று, வான் என ஐந்து இயற்கைக் கூறுகளில் நாம் வாழ்ந்தாலும், தாமரை இலை மேல் நீர்த்துளி போல இயற்கையை நீங்கி நம்மால் வாழ முடிகிறது?

உண்மையைச் சொல்லுங்க நீங்க வானத்தைப் பார்த்து எத்தனை நாளாகிறது?


நிலவு, நட்சத்திரம், வானவில், மின்னல், மழை இவற்றையெல்லாம் திரைப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் பார்க்கப் பழகிக்கொண்டோம்.

இருந்தாலும் இவையெல்லாம இயற்கையில் அன்றாடம் நம்மைச்சுற்றி நிகழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதை மறந்துபோனது தான் கொடுமை!

மாலைக் காலத்தைப் பாடாத கவிஞர்களே இல்லை. இக்காலக் கவிஞர்களுள் குறிப்பி்டத்தக்கவர் வைரமுத்து அவர்கள். அவரின் “ அந்தி “ என்னும் கவிதை அந்தியின் அழகை காட்சிப்படுத்துவதோடு, இன்றைய இயந்திர மனிதர்களைப் பார்த்து நறுக்கென்னும் கேள்விகளைக் கேட்கிறது.

அந்தி


யாரங்கே?
இராத்திரி வரப்போகும்
இராச குமாரிக்கு
மேற்கு அம்மியிலே
மஞ்சள் அரைப்பது யார்?
இத்தனை வண்ணக் கோலம்
ஏனங்கே?

ஓ!
அது
இரவின் வாசலென்றா
இத்தனை அலங்காரம்?

என்ன அது?
தீயில் அங்கே
தேன்வடிகிறதா?

அங்கே
வழிந்தோடுவதெல்லாம்
வானத்துக்கு
ஒரு
பகலை பலிகொடுத்த
இரத்தமா?

இத்தனை
வர்ணப் புடவைகளைக்
கலைத்துப் போட்டும்.....
கடைசியில்
இரவு
கறுப்பைத்தானே
கட்டிக் கொள்கிறது?

நீலத் திரையில்
யாரோ
வரையக் கொண்டுவந்த
வர்ணக் கிண்ணம் -
சூரியனில் தடுக்கிச்
சிந்தி விட்டது!
ஆனால்.....
சிந்தியதெல்லாம்
சித்திரமானது!

புரிகிறது!
மரணப் படுக்கையில்
பகல்
புன்னகைக்கிறதா?

விடைபெறும் சூரியன்
உள்ளங் கையை
உரக்க அசைக்கையில்..
தங்க மோதி்ரங்கள்
தகதகக்கின்றன்!

என் கிராமத்து சோதரி
ஒரு
கிழிந்த பாவாடைக்காரி
கேட்கிறாள்:

"இந்த வானமும் ஏன்
என்னைப் போல்
ஒட்டுப் போட்டு ஆடை
உடுத்துகிறது?"

வானத்தின்
வர்ண மாநாடு அந்தி

பூமியின் பொன்முலாம் அந்தி

உழைத்தவன் கரமா இந்த அந்தி

முத்தமிட்ட கண்ணமா இந்த அந்தி

வானம் துப்பிய தாம்பூலமா இந்த அந்தி

பழுத்த பகலா இந்த அந்தி

சூரியனின் இரத்த தானமா இந்த அந்தி


பாவி மனிதர்களே
பணம் தேடும் மனிதர்களே

நீங்கள் பாராமல் போல பௌர்னமிகள் எத்தனையோ?

அள்ளிப் பருகாத அந்திகள் தான் எத்தனையோ?

வானத்தை விழுங்கும் வசதி உமக்கு இருந்தும்
பட்டினியால் மரிக்கும் பரிதாபம் எத்தனையோ?

கதிரவன் மரணம் கூட கண்ணுக்கு அழகுதான்

ஓ செத்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

ஒவ்வோர் அந்தியும்
ஓர் சாயங்காலக் கவிதை
இதை மொழிபெயர்க்க வேண்டாம்
எந்த லிபியிலும் வாசிக்கலாம்!

இந்த வண்ணங்கள் குடிக்க
கண்ணிரண்டு போதுமா
அடே கௌதமா
என் உடம்பெல்லாம் கண்ணாகச் சபிக்க மாட்டாயா?

வாழும் மனிதர்களே வயிற்று மனிதர்களே

புதையலை வானத்தில் போட்டுவிட்டு
பூமிக்குள் என்னதான் தேடுவீர்கள்?

நீங்கள் நாளைகளை சேமிக்கும் அவசரத்தில்
இன்றையல்லவா அன்றாடம் தொலைக்கிறீர்கள்.

குனிந்து குனிந்தே கூன் விழுந்த மனிதா

வான் பார்க்க நிமிர்!

வானம் முழுக்க உனக்கு
நீ ஏன் வரப்புக்குப் போராடுகிறாய்?

வானத்தைக் கழித்தவனுக்குப் பூமியில் பங்கு இல்லை

வானம் ஒரு நூலகம்
இன்னும் வாசகர் தேவை!

அந்தி ஒரு பந்தி
இன்னும் விருந்தினர் தேவை!

இரவி வர்மனைக் கூப்பிடுங்கள்
அவன் பயன்படுத்தாத வண்ணங்கள் பாக்கியுள்ளன!

காஞ்சிபுரம் தோளர்களே
எந்த தரியில் நெய்வீர்கள்
இப்படியொரு சித்திரச் சேலையை!

பத்மா இந்த வானம் போல் உங்களால்
பாவம் மாற்ற முடியுமா

மனிதா
ஒவ்வோர் அந்தியும் உயிரின் மருந்து
ஆசை தீர அந்தியை அருந்து

உலகத்தில் பெரிய திரையில் வரையப்பட்ட
அரிய ஓவியம் அந்தி!


- வைரமுத்து




இந்தக் கவிதையையும் கவிஞரையும் தெரிந்த அளவுக்கு, “அந்தியிளங்கீரனார்“ என்னும் சங்கப்புலவரை நாமறிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்தியை அழகுறப் பாடியதாலேயே இப்புலவர் “அந்தி - இளங்கீரனார்“ என்னும் பெயர் பெற்றிருக்க வேண்டும். வைரமுத்துவின் அந்தி பற்றிய இக்கவிதைக்கு அந்தியிளங்கீரனாரின் இக்கவிதையும் ஒரு சிந்தனைத் திறவுகோலாக இருந்திருக்கலாம்.



தலைவன் பொருள் தேடப் பிரிந்தபோது, அவன் பிரிவைத் தாங்காதவளாக தலைவி வருந்தினாள். அப்போது தலைவியிடம் தோழி சொல்லியது.

பாடல் இதோ,
 

நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு, குறைந்தோர் 5
பயன் இன்மையின் பற்று விட்டு, ஒரூஉம்
நயன் இல் மாக்கள் போல, வண்டினம்
சுனைப் பூ நீத்து, சினைப் பூப் படர,
மை இல் மான் இனம் மருள, பையென
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப, 10
ஐயறிவு அகற்றும் கையறு படரோடு
அகல் இரு வானம் அம் மஞ்சு ஈன,
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை,
காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக,
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிக் 15
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது,
எள் அற இயற்றிய நிழல் காண் மண்டிலத்து
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி,
மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து,
இது கொல் வாழி, தோழி! என் உயிர்  
விலங்கு வெங் கடு வளி எடுப்பத்
துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?

அகநானூறு -71 பாலை - அந்தியிளங்கீரனார்.

(பொருள்வயிற் பிரிந்த இடத்து ஆற்றாளாய தலைமகட்குத் தோழி சொல்லியது.)
 

பாடலின் பொருள்.

வண்டுகளின் கூட்டம் சுனையில் மலர்ந்த மலர்களைவிட்டு, மரக்கிளைகளில் உள்ள மலர்களை நாடிச் செல்கின்றன.

வண்டுகளின் செயல், செல்வம் குறைந்தவர்களால் பயனில்லை என்றுணர்ந்தர்வகள் அவர்களின் தொடர்பைவிட்டு செல்வம் நிறைந்தவர்களை நாடிச்செல்லும் அன்பில்லாத மக்களைப் போல உள்ளது.
 
குற்றமற்ற மான் கூட்டம் இருள் படர்ந்த அந்தி வானம் கண்டு அஞ்சுகிறது.

(இது போலத்தானே ஒருகாலத்தில் அந்தியைக் கண்டு ஆதிகால மனிதனும் அஞ்சியிருப்பான்!)

உலையில் செந்நிறமாக வெந்து பிறகு மெல்ல ஆறிவரும் இரும்பு போல அந்திவானம் மலர்கிறது.


பகற்பொழுதை வழியனுப்பி, இரவுப்பொழுதை வரவேற்கும் இம்மாலைக்காலம் காதலரைப் பிரிந்து தனிமையில் வாடுவோரைக் குறிவைத்து கூர்மையான வேலை எறிகிறது.

உருவங்காணும் கண்ணாடியின் அகத்தே ஊதிய ஆவி முன் பரந்து பின் சுருங்கினாற்போல், சிறிது சிறிதாகக் குறைந்து வந்து, என் வலிமை மாய்க்க எண்ணியிருந்தது இவ்வந்திப்பொழுது!

மிக்க கடிய சூறாவளி அலைப்ப, அசையும் மரத்திலுள்ள பறவை
போல, மிகவும் அழிவுற்று என்னுயிர் இவ்வுடலைத் துறந்தேகும் காலம், இதுவோ ?


என்கிறாள் தோழி. இவ்வந்திப் பொழுது காதலரைப் பிரிந்து வாடும் உன்னை மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் துன்பமளிப்பதாகத் தான் இருக்கிறது என்று ஆற்றுவிக்க ஆற்றுப்படாத தலைவியிடம் மாலைக் காலத்தின் தன்மைகளை எடுத்தியம்புகிறாள் தோழி.


இப்பாடல் வழி அந்தியின் அழகும், அழகான அகவாழ்வியலும் எடுத்தியம்பப்படுகிறது.

16 கருத்துகள்:

  1. வழக்கம் போல நல்ல பதிவு முனைவரே ,உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அருமை. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. /////////பகற்பொழுதை வழியனுப்பி, இரவுப்பொழுதை வரவேற்கும் இம்மாலைக்காலம் காதலரைப் பிரிந்து தனிமையில் வாடுவோரைக் குறிவைத்து கூர்மையான வேலை எறிகிறது.
    ///////////////

    ஆஹா வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஒரு கவிதை சொல்கிறது . மிகவும் சிறப்பான பதிவு நண்பரே . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. உங்களைப் பாராட்ட தமிழைப் பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை.
    அவ்வளவு அருமை பதிவு.

    பதிலளிநீக்கு
  5. தேன் இனிக்கிறது என்று சொல்வது
    வீண்வேலை,அதுதானே இயல்பு
    உங்கள் பதிவும் அதுதானே!

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு