வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 11 ஜூன், 2010

சங்கஇலக்கியத்தில் குற்றமும் தண்டனையும்.


கதை ஒன்று,
அரண்மனையில் பணிபுரிந்த வீரர்கள் மூவர் விலையுயர்ந்த அணிகலன்களைத் திருடி மாட்டிக்கொண்டனர்.

மன்னர் வந்து மூவரையும் பார்க்கிறார்.

முதலாமவைனைப் பார்த்தார் - தன் அமைச்சரிடம் இவனை நாடுகடத்துங்கள் என்றார்.

இரண்டாமவனைப் பார்த்து - நீ நல்லவன் என்று நம்பினேன். இப்படிச் செய்வாயென்று நான் நினைக்கவேயில்லை. என் முகத்திலே விழிக்காதே எங்காவது போய்விடு என்றார்.

மூன்றாமவனைப் பார்த்து - இவனைச் சிறையிலடையுங்கள் என்றார்.


இதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு எதுவுமே புரியவி்ல்லை. மூவரும் ஒரே தவறு தான் செய்தார்கள். தண்டனையை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகக் கொடுத்துவிட்டாரே மன்னர் என்று மக்களுக்கு ஒரே மனக்குழப்பம்.

மன்னனின் நெருங்கிய நண்பர் தம் குழப்பத்தை மன்னரிடமே கேட்டார். மன்னரோ, இருநாட்கள் கழித்து எனது தீர்ப்பின் தன்மையை எல்லோரும் தெரிந்துகொள்வீர்கள் என்றார்.

இருநாட்கள் சென்றன.

நாடுகடத்தவேண்டுமென்ற முதலாவது தண்டனை பெற்றவன். தம் தவறை நொந்து துறவியாகிவிட்டான்.

மன்னனின் நம்பிக்கையை இழந்துவிட்டேன். நான் வாழத்தகுதியற்றவன் என்று இரண்டாவது தண்டனை பெற்றவன். தற்கொலை செய்து இறந்துவிட்டான்.

சிறைத் தண்டனை பெற்ற மூன்றாமவன், ஒரே நாளில் சிறையிலிருந்து தப்பிச் சென்றான்.


இக்கதையிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டியது,

தண்டனைகள் தவறுகளைக் குறைப்பதில்லை!

பயத்தால் மட்டும் குற்றங்களை முழுவதும் தடுத்துவிடமுடியாது!

மனம் தரும் தண்டனையைவிட பெரிய தண்டனையை யாரும் கொடுத்துவிடமுடியாது!

தண்டனைகள் எதிர்மறையெண்ணங்களின் பிறப்பிடங்களாக அமைவதுமுண்டு!

தவறு செய்தவனைச் சிந்திக்கவைப்பதாகத் தண்டனைகள் இருத்தல் வேண்டும்.


புறநானூற்றுப் பாடலொன்றில்,

ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் சோழனின் நீதிவழங்கும் தன்மையைப் பாடுகிறார்.

உன்னை வழிபடுவோரை நீ விரைவில் அறிந்துகொள்கிறாய்!

அறிந்து அவர்களின் குறையையும் போக்குகிறாய்!

உன்னிடம் வந்து பிறரைப் பற்றிப் பழிகூறுபவர்களின் சொற்களின் தன்மையை நன்கு அறிந்து தெளிவாய்!

தீமைகளை ஒருவனிடம் கண்ட அளவில் அறநூல்களுக்கு ஒப்ப ஆராய்ந்து அதற்குரிய தண்டனைகளை வழங்குவாய்!

அவர் தாம் வந்து நின்னையடைந்து நின்னடி வணங்கி முன் நின்றால், அவர் தீமைபுரியும் முன் அவரிடம் கொண்ட அருளினும் மிகுதியான அருளால் அவருடைய தண்டனையைக் குறைக்கவும் செய்வாய்!


அமிழ்த்தத்தை சுவையில் வென்று உண்ண உண்ண அடங்காத மணம் நிறைந்த தாளிப்பினையுடைய உணவினை வரும் விருந்தினருக்கு அளவில்லாமல் அளித்து மகிழும் குற்றமற்ற வாழ்க்கையையுடையவர் குலமகளிர். அம்மகளிர் போரிடுவதன்றி வீரர்கள் போரிடமுடியாத, இந்திரவில்லையொத்த மாலையுடையவனே!

ஒரு செயலைச் செய்தபின் ”அது தவறு செய்தனம்“ என்று இரங்கிக் கூறாத திட்பமுடைய செய்கையும், மிகுந்த புகழையும் உடையவனே! நெய்தலங்கானல் என்னும் ஊரினையுடைய நெடியவனே!

இத்தகைய உன்னுடைய புகழைக் கூறுவதற்காக உன்னை வந்தடைந்தோம் என்று பாடுகிறார்.

பாடல் இதோ,



வழிபடு வோரை வல்லறி தீயே!
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்,
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
செய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ்,
நெய்தருங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே!


புறநானூறு -10
பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார்.
பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி.
திணை : பாடாண்.
துறை : இயன்மொழி.


பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.


² பாடப்படும் ஆண்மகனின் கொடை, நீதி உள்ளிட்ட பண்புகள் புகழப்படுவதால் “பாடாண்“ என்னும் புறத்திணை விளக்கப்படுகிறது.
² சோழனின் இயல்பு கூறப்படுவதால் “இயன்மொழி“ என்னும் புறத்துறை விளக்கம் பெறுகிறது.

² தவறு செய்தவன் தன் தவறை உணர்ந்தால் அவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்கும் சோழனின் பண்பு, சங்கத் தமிழர் நீதி வழங்கலில் கடைபிடித்த நீதி நெறிகளுள் குறிப்பிடத்தக்கதாகவும், இன்றைய நீதி வழங்குவோர் கடைபிடிக்க வேண்டிய சிறந்த கொள்கையாகவும் உள்ளது.

15 கருத்துகள்:

  1. ² தவறு செய்தவன் தன் தவறை உணர்ந்தால் அவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்கும் சோழனின் பண்பு, சங்கத் தமிழர் நீதி வழங்கலில் கடைபிடித்த நீதி நெறிகளுள் குறிப்பிடத்தக்கதாகவும், இன்றைய நீதி வழங்குவோர் கடைபிடிக்க வேண்டிய சிறந்த கொள்கையாகவும் உள்ளது.

    ...... நல்ல விதி. :-)

    பதிலளிநீக்கு
  2. எளிமையான விளக்கம். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பக்கம் வந்தால் ஏதோ ஒன்றை அறிந்து-படித்து-எடுத்துப் போவதாய் உணர்வு.நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  4. எப்போதும் போல நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. நிறைய கருத்துகளை தெரிந்துகொள்ள முடிந்தது தோழா... மனதிற்கு பயந்து அனைவரும் நடந்து கொண்டால் இங்கு குற்றங்கள் எவ்வளவோ குறைந்து போகக்கூடும். ஆனால்... ம்...

    பதிலளிநீக்கு
  6. அருமையான கட்டுரை தருவதில் முன்னிலை. .மிக்க மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  7. @niduraliதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு