வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 29 அக்டோபர், 2010

மாயமல்ல…



சங்க இலக்கியங்கள் சங்ககால வரலாற்றுக் கருவூலங்களாகவே திகழ்கின்றன. சங்ககால மக்களின் நடைமுறை வாழ்வியலை எடுத்தியம்புவன சங்கப்பாடல்களே. அக, புற வாழ்வியலின் நாட்குறிப்புகளாக இப்பாடல்கள் விளங்குகின்றன.

தலைவன் தலைவியைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று மணந்துகொண்டான். தலைவியைப் பார்த்துவரலாம் என்று தோழியும் அவன் வீட்டுக்குச் சென்றாள். தலைவியின் புதிய அழகினைக் கண்டு வியந்தாள் தோழி. பாடல் இதோ...


“தீயும் வளியும் விசும்பு பயந்தாங்கு
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ
மாயம் அன்று தோழி! வேய் பயின்று
எருவை நீடிய பெரு வரையகம் தொறும்
தொன்று உரை துப்பொடு முரண் மிகச் சினைஇக்
கொன்ற யானை கோடு கண்டன்ன
செம்புடைக் கொழுமுகை அவிழ்ந்த காந்தள்
சிலம்புடன் கமழும் சாரல்
இலங்குமலை நாடன் மலர்ந்த மார்பே!


-புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்க்கிழான்

நற்றிணை -294 (குறிஞ்சி)

மண மனையுள் புக்க தோழி தலைமகளது கவின் கண்டு சொல்லியது.


(தலைவன் தலைவியைக் கொண்டு சென்று தன்னகத்து மணந்தமை அறிந்த தோழி, தலைவனின் வீட்டுக்குச் சென்று தலைவியின் புதிய அழகு கண்டு வியந்து தலைவனின் மார்பு முன்பு நோயும், பின்பு இன்பமும் தந்தது என்று கூறியது.)

(காதலிக்கும்போது (களவுக்காலத்தில்) தலைவியை நீங்கி தலைவிக்கு நோய் தந்த தலைவன் இப்போது சேர்ந்திருப்பதால் இன்பம் தந்தான் இதனையே இத்துறை இயம்புகிறது)


தோழி....
மூங்கில்கள் நெருங்கிக் கொறுக்கச்சி முளைத்துப் பரவியுள்ள பெரிய மலையின் உள்ளிடந்தோறும் பழமையான அறிவுடன் வலிமையுடன் மிகுந்த சினமும் கொண்டு புலியைக் கொன்ற யானையின் தந்தத்தைக் கண்டாற் போல செவ்விய புறப்பகுதியைக் கொண்ட செழுமையான அரும்பவிழ்ந்த காந்தள் மணம் கமழும். அத்தகைய மணம் வீசும் சாரல் விளங்கும் மலைநாடனின் அகன்று விரிந்த மார்பு “தீ, காற்று“ எனும் இரு முரண்பட்ட ஆற்றல்களைக் கொண்டுள்ள ஆகாயம் போன்று நோயும், இன்பமும் தரத்தக்கனவாயிருந்தது. இது மாயமல்ல உண்மையே ஆகும் என்றாள்.


பாடல் வழி..


 வீட்டுக்குத் தெரியாமல் தாம் விரும்பும் பெண்ணைத் தலைவன் தம் ஊருக்கு அழைத்துச் சென்று தம் வீட்டில் மணந்துகொள்ளும் மரபு சங்காலத்தில் இருந்தமை இப்பாடலால் புலனாகிறது
 நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் ஐந்து கூறுகளால் ஆனது நம் உடல் இறுதியில் இக்கூறுகளுடனேயே இரண்டறக் கலந்துபோகிறது. இதனை உணர்ந்தியம்புவதாக இப்பாடல் அமைகிறது.
 தலைவனின் மார்பு தீ, காற்று ஆகிய கூறுகளைத் தம்மகத்தே கொண்ட வானின் பண்புகளைக் கொண்டது என்பதைப் புலவர் சுட்டுகிறார்.


 காந்தள் மலரின் தோற்றத்தைச் சொல்லவந்த புலவர், யானையின் தந்தத்தைப் போன்றது என்று நேரடியாகக் கூறாமல்...

பழமையான அறிவும், வலிமையும், மிகுந்த சினமும் கொண்டது யானை என்றும் அந்த யானை வலிமைமிக்க புலியையும் கொல்லும் தன்மையது என்றும் கூறி அத்தகைய யானையின் தந்தத்தைப் போன்றது காந்தள் என்ற புலவரின் கற்பனைத் திறன் அவரின் அழகுணர்ச்சியைக் காட்டுவதாகவுள்ளது.

யானை புலியைக் கொன்றால் அதன் தந்தத்தில் இரத்தம் தோய்ந்திருக்கும்.இரத்தம் தோய்ந்த யானையின் தந்தம் எப்படியிருக்கும்....?
காந்தள் மலரைப் போல இருக்கும்...!

புலவரின் ஒப்புநோக்கும் திறன்
சங்ககால மக்களுக்கு இருந்த விலங்கியல்
மற்றும் தாவரவியல் அறிவுக்கும்
கற்பனை நயத்துக்கும் சங்ககால பழக்கவழக்கங்களுக்கும் தக்கதொரு சான்றாக இப்பாடல் அமைகிறது.

15 கருத்துகள்:

  1. நீண்டநாட்கள் சங்க இலக்கிய வேர்களைத்தேடி வரவில்லை.

    இன்று தாவரவியல், விலங்கியல் இலகு தமிழில் அறிந்துகொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நீண்டநாட்கள் சங்க இலக்கிய வேர்களைத்தேடி வரவில்லை.

    தாவரவியல், விலங்கியல் இலகு தமிழில் தெளிவான விரிவான அலசல்

    நன்றி
    நட்புடன்
    மாணவன்

    பதிலளிநீக்கு
  3. யானையின் தந்தம் - உவமையுடன் - அருமையான பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. சங்க இலக்கியங்களின் பாடல்களின் விளக்கம் அருமை.. பேராசிரியரே.,!

    பதிலளிநீக்கு
  5. கடும் தமிழை கஷ்டப்பட்டு வாசித்து முடித்தேன் சிறந்த முறையில் விளக்கம் இருந்ததால் தபிதுகொண்டேன் தொடருங்கள் ஆர்வமாக உள்ளேன்

    பதிலளிநீக்கு
  6. முனைவரே...

    உங்கள் இலக்கிய விருந்து வாழ்த்துக்கள்.
    அருமையான இலக்கியப் படைப்பு. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  7. கவிதை வரிகளில் வலி தெரிகிறது நண்பா.

    அருமையான கவிதை...

    கடைசிப் பத்தி 'நச்'

    பதிலளிநீக்கு
  8. பகிர்வுக்கு நன்றிங்க குணா. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. பாடலும் கருத்தும் அழகு. விளக்கிய விதம் அருமை. சங்கப் புலவர்களின் பல்துறை அறிவு வியக்க வைக்கிறது. திறனாய்ந்து தமிழிலக்கிய அமிழ்து சுவைக்க வாய்ப்பது பெருமகிழ்வு. நன்றி தோழரே.

    பதிலளிநீக்கு
  10. @யாதவன் இன்தமிழ் கடுந்தமிழாகிவிட்டதா...

    வருகைக்கும் ஆர்வத்துக்கும் நன்றி அன்பரே

    பதிலளிநீக்கு