வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 30 ஜூன், 2010

குறுந்தொகை-சீனக் கவிதை ஒப்பீடு.


தொன்மையான நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் திராவிடர்கள். திராவிட மொழியின் கூறுகளை உலகமொழிகள் பலவற்றிலும் காணமுடிகிறது.திராவிட மொழிக்குடும்பத்தின் தாய்மைத் தன்மையுள்ள மொழியாகத் தமிழ்மொழி விளங்குகிறது.

மெசபடோமிய நாகரீகம், சீன நாகரீகம், எகிப்திய நாகரீகம், சிந்து சமவெளி நாகரீகம் என்னும் தொன்மையான நாகரீகங்களுள் நமது நாகரீகமும் உள்ளடக்கம் என்பது பெருமிதம் கொள்ளத்தக்கது.

அரப்பா,மொகஞ்சதாரோ நாகரீகங்களை ஏற்படுத்தி சிந்து-பஞ்சாப் பள்ளத்தாக்குகளில் நாகரீகத்துடன் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள் ஆவர். ஆரியர்களின் வருகையால் திராவிடர்கள் தென்னிந்தியப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர் என்பதை வரலாறு சுட்டிச்செல்கின்றது.

கால்டுவெல் வந்து சொல்லும் வரை இந்தியாவின் தனிப்பெரும் தொன்மையான மொழியாக வடமொழியே கருதப்பட்டது.

வழக்கொழிந்த தொன்மையான மொழிகளைப் புறந்தள்ளி இன்னும் தன்னிலை மாறாது நிற்கும் தமிழின் கூறுகளைப் பிற மொழிகளில் காணும் போது மகிழ்ச்சியாகவுள்ளது. சான்றாக,

சீனக்கவிதையொன்று,


“கியாட்டோ பட்டு வியாபாரிக்கு இருமகள்கள்
முத்தவள் இருபது, இளையவள் பதினெட்டு
வீரன் கத்தியால் கொல்லுவான்
ஆனால் இப்பெண்கள் கண்களால்“


முதல் வரி அறிமுக வரியாகவும்,
இரண்டாம் வரி அதன் தொடர்ச்சியாகவும்,
மூன்றாம் வரி முதலிரு வரிகளுக்கும் தொடர்பில்லாத வரியாகவும்,
நான்காம் வரி முதலிரு வரிகளையும் இயைபுபடுத்திச் சொல்லும் தன்மையிலும் அமையும்.இது சீனக் கவிதையின் இலக்கண அமைதியாகும்.

சங்க இலக்கியத்தில்,


காலே பரி தப்பினவே; கண்ணே
நோக்கி நோக்கி வாள் இழந்தனவே;
அகல் இரு விசும்பின் மீனினும்
பலரே மன்ற, இவ் உலகத்துப் பிறரே.

குறுந்தொகை -44. பாலை
வெள்ளிவீதியார்.

செவிலித்தாய் கூற்று
(தலைவி தலைவனுடன் போனபின்பு அவர்களைப் பாலை நிலத்தில் தேடிச் சென்ற செவிலி அவர்களைக் காணாமல் வருந்திக் கூறியது.)

என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன;
இணைந்து எதிர் வருவாரைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளியை இழந்தன;
நிச்சயமாக, இந்த உலகத்தில்,
நம்மகளும் அவள் தலைவனும் அல்லாத பிறர்,
அகன்ற பெரிய வானத்திலுள்ள மீன்களைக் காட்டிலும் பலராவர்.

என்பது பாடலின் பொருளாகும்.

குறுந்தொகை மற்றும் சீனக் கவிதை ஆகியன ஒப்புநோக்கி ஒற்றுமை கண்டு இன்புறத்தக்கனவாகவே உள்ளன..

ஒற்றுமைக் கூறுகள்.

○ இரு பாடல்களும் நான்கு அடிகளைக் கொண்டுள்ளன.
○ இரு பாடல்களிலும் முதல் அடி அறிமுக அடியாகவும்,
○ இரண்டாவது அடி முதலடியின் தொடர்ச்சியாகவும்,
○ மூன்றாவது அடி முதலிரு அடிகளுடன் தொடர்பற்ற அடியாகவும்,
○ நான்காவது அடி முதலிரு அடிகளை இயைபுபடுத்துவதாகவும் உள்ளது.


தொன்மையான இருவேறு நாகரீகங்களில் இருவேறு மொழிக்குடும்பங்களில் தோன்றிய இருமொழிகளின் பாடல் வடிவம், இந்த அளவுக்கு ஒப்புமைத் தன்மையுடனிருப்பது வியப்புக்குரியதாகவுள்ளது.

செவ்வாய், 29 ஜூன், 2010

இவங்களுக்கு வேற வேலையில்ல!



நாலு பேரு ஏதாவது சொல்லுவாங்க?

அப்படின்னு ஏதாவதொரு சூழலில் நாம் நினைத்திருப்போம், யாரிடமாவது சொல்லியிருப்போம். இல்லையென்றால் யாராவது நம்மிடம் சொல்லியிருப்பார்கள்!

யாருங்க அந்த நாலு பேரு?
எதுக்காக அவங்களுக்குப் பயப்படனும்?

○ அடுத்தவங்களைப் பற்றிப் பேசுவதையே வேலையாகவோ, பொழுதுபோக்காகவோ கொண்டிருப்பவர்களைத் தான் நாலுபேர் என்று சொல்லுகிறார்கள்.
○ அந்த நாலு பேர் இன்னொரு நாலு பேருக்கிட்ட நம்மைப் பற்றி உள்ளதையும் இல்லாததையும் பேசி நம் மதிப்பைக் குறைத்துவிடுவார்களோ என்று தான் எல்லோரும் அந்த நாலு பேருக்குப் பயப்படுகிறார்கள். அந்த நாலு பேரில் நாமும் அடக்கம் தான்..

ஆம் நாம் பிறரைப் பற்றிப் பேசாமலோ இருந்திருப்போம்?
ஏதோவொரு சூழலில் ஏதாவது பேசியே இருப்போம்..


தத்துவமேதை சாக்கரடீசிடம் ஒருவன் வந்து….

நான் தங்களிடம் ஒருவனைப் பற்றி ஒரு செய்தி சொல்ல நினைக்கிறேன் என்றானாம். அவனிடம் சாக்கரடீஸ் பின்வரும் கேள்விகளைக் கேட்டாராம்.

சாக்கரடீஸ் - நீ சொல்லும் செய்தி உண்மையானதா?

ஒருவன் - எனக்குத் தெரியாது. என்னிடம் இன்னொருவர் சொல்லியது.

சாக்கரடீஸ் - சரி, நீ சொல்லும் செய்தியால் எனக்கோ, உனக்கோ ஏதாவது பயனுண்டா?

ஒருவன் - நிச்சயமாக இருக்காது.

சாக்கரடீஸ் - உண்மையெனத் தெரியாத, உனக்கும் எனக்கும் பயன்படாதவொரு செய்தியை நாம் ஏன் பேசி நேரத்தைச் செலவழிக்கவேண்டும்?

என்று கேட்டாராம் சாக்கரடீஸ்.


அடுத்தவரைப் பற்றி நாம் ஏன் பேசவேண்டும்?
நமக்கென்ன வேறு வேலையே இல்லையா?

என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.

எங்க ஊருல நான் சிறுவனாக இருந்தபோது,
குடிநீர்க்குழாயில இருபெண்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் ஏதோ பேசியதாக சண்டை வந்து ஒருவர் காதை இன்னொருவர் கடித்துவிட்டார்…

இன்று நினைத்துப்பார்த்தாலும் சிரிப்புத்தான் வருகிறது.

இன்றைய ஊடகங்கள்,

நடிகர்கள், அரசியல்வாதிகள், விளையாட்டுவீரர்கள்….
இன்னும் யார்யாரைப்பற்றியோ பேசிப்பேசியே அவர்களைப் பெரிய மனிதர்களாக்கிவிடுகின்றன..

இவர்களைவிட சிறந்த நடிப்புத்திறனுடையவரோ, மக்களை ஆளும் தன்மைகொண்டவரோ,விளையாட்டுத்திறனுடையவரோ மண்ணில் இல்லையா?

சரி,
சங்க காலத்துக்குச் செல்வோம்….


நற்றிணைப் பாடலொன்று,

சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகின் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுகோல் வலந்தனள் அன்னை அலைப்ப
5 அலந்தனென் வாழி தோழி கானல்
புதுமலர் தீண்டிய பூநாறு குரூஉச்சுவல்
கடுமா பூண்ட நெடுந்தேர் கடைஇ
நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு
செலவயர்ந் திசினால் யானே
10 அலர்சுமந்து ஒழிகவிவ் அழுங்கல் ஊரே.

நற்றிணை -149. உலோச்சனார் நற்றிணை.
திணை : நெய்தல்.
துறை : (1) இது, தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது.
துறை :(2) சிறைப்புறமாகச் சொல்லியதூஉமாம்.

தலைமக்களின் காதல் வாழ்வியலைப் பற்றிப் பேசுவதற்கு அலர் என்றும் அம்பல் என்றும் பெயராகும்.

(அம்பல் - சிலரறிந்த பழிச்சொல்.
அலர் - பலரறிந்த பழிச்சொல்.)

துறைவிளக்கம்.

1.தலைமக்களின் காதலை அறிந்த ஊரார் அலர் தூற்றினர். அதனை எண்ணி வருந்திய அன்னை சினம் கொண்டாள். அதனால் இனி நீ இங்கு இருக்க வேண்டாம். தலைவனுடனேயெ செல்வாயாக என்றாள் தோழி.

அதற்கு அஞ்சிய தலைவியிடம் நீ தலைவனுடன் சென்றபிறகு இந்த ஊர் என்ன செய்துவிடும்?
மிஞ்சி மிஞ்சிப் போனால் அலர் தூற்றும அவளவுதானே!

என்கிறாள் தோழி இதனை - துறை : (1) இது, தோழி தலைவியை உடன்போக்கு வலித்தது என்னும் துறை விளக்குகிறது.

2.தலைவியைச் சந்திக்க வந்த தலைவன் அருகாமையில் மறைந்திருக்க, அவனை அறியாதவள் போலத் தோழி அவனுக்குச் சொல்ல நினைக்கும் கருத்தை இவ்விதம் சொல்கிறாள்.

தலைவி உங்கள் காதலை அறிந்த ஊரார் அலர் தூற்றுகின்றனர்.அதையெண்ணி அன்னையும் வருத்தம் கொண்டாள். இதற்கு ஒரே வழி தலைவனுடன் நீ சென்றுவிடுவதுதான்.
ஊரைப் பற்றிக் கவலைப்படாதே..
எப்போதும் அலர் தூற்றும் ஊர்.. அலர் தூற்றும்…. தூற்றட்டுமே அதனாலென்ன என்கிறாள் இதனையே - துறை :(2) சிறைப்புறமாகச் சொல்லியதூஉமாம். என்னும் அகத்துறை விளக்குகிறது.

◊ தோழி தலைவியிடம் என்ன பேசுகிறாள் என்று கேளுங்கள்…


தோழீ! வாழி!
நம்மூர்த் தெருவிலுள்ள பெண்களுள் ஓரிடத்தில் சிற்சிலரும் ஓரிடத்தில் பற்பலரும் இப்படியாக ஆங்காங்குத் தெருக்களிலே கூடிநின்று கடைக்கண்ணாலே சுட்டி நோக்கி,

தம்தம் மூக்கினுனியிலே சுட்டுவிரலை வைத்துப் பழிச்சொற் கூறித் தூற்றவும்,
அப் பழிமொழியை நம் அன்னை கேட்டறிந்து உண்மையென எண்ணிக் கொண்டு சிறிய கோல் ஒன்றினை ஏந்தி அது சுழலும்படி வீசி அடிப்பவும்; இதனால் நான் மிக்க துன்பமுடையவளாகிவிட்டேன்.

ஆதலின் இத் துன்ப மெல்லாம் தீரும்படி சோலையிலுள்ள புதிய மலர் தீண்டிய பூமணம் வீசுகின்ற நல்ல நிறம் பொருந்திய பிடரிமயிரையுடைய விரைந்து செல்லும் குதிரைபூண்ட நெடிய தேரைச் செலுத்தி, நள்ளிருளில் வருகின்ற தேரையுடைய தலைவனுடன் நீ செல்லவேண்டும் என நான் நினைக்கிறேன். அங்ஙனம் சென்றொழிந்தால் பேரொலியையுடைய இவ்வூர் என்ன செய்யும்? வேண்டுமானால் அலர் தூற்றிக்கொள்ளட்டும்!

( தலைவி எட்டியுஞ்சுட்டியுங் காட்டப்படுங் குலத்தினளல்லளாதலால் வாயினாற்கூறலும் ஏறிட்டுப்பார்த்தலுங் குற்றமாகுமென்றஞ்சிக் கடைக்கண்ணால் நோக்கிக் குறிப்பாகக் கூறுவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பெருங்குடியிலே பிறந்து பெருநாணமும் உடையளாயினாளொரு சிறுமி காமந் தலைக்கொண்டு உடன்போயினாளென்னையென வியப்பெய்தலின் மூக்கினுனியின்கண்ணே சுட்டுவிரல் சேர்த்தினமை கூறியதாம்; இதுவும் வாயினாலேகூற அஞ்சினமை குறிப்பித்ததாயிற்று.
மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - போக்கு உடன்படுத்தல்.
இரண்டாந் துறைக்கும் மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - வரைவு உடன்படுத்தல்.)



பாடல் வழி புலப்படும் கருத்துக்கள்.

○ தலைவியைத் தோழி உடன்போக்குக்குத் தூண்டியது, தலைவியைத் தலைவன் திருமணம் செய்துகொள்ளத் தோழி தூண்டியது என்னும் இரு அகத்துறைகள் விளக்கம் பெறுகின்றன.
○ தலைமக்களின் காதல் பற்றிப் பேசும் ஊராரின் மெய்பாடுகளை,

கடைக்கண் நோக்கல்,
தம் மூக்கின் நுனியில்விரல் வைத்து வியப்புடன் பேசுதல்.

என நுட்பமாகக் கூறிய பாங்கு இப்போது நினைத்தாலும் சங்ககாலக் காட்சியைக் கண்ணில் விரியச் செய்வதாகவுள்ளது.

○ வாழ்ந்தாலும், தாழ்ந்தாலும் பேசிக்கொண்டே இருக்கும் இவ்வுலம். அதனால் ஊரைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் கவலைப்படாதே உன் வாழ்க்கைதான் இப்போது சிந்திக்க வேண்டியது. உன்மகிழ்வு தலைவனுடன் சேர்ந்திருப்பதிலே தான் இருக்கிறது. அதனால் உடன்போக்கில் தலைவனுடன் சென்றுவிடு என்று சொல்லும் தோழியின் கூற்று ஆழ்ந்து நோக்கத்தக்கதாகவுள்ளது.

○ பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொள்வது சரியா? தவறா? என்ற விவாதம் ஒருபுறம் இருக்க..

அன்று முதல் இன்று வரை இவ்வாறு திருமணம் நடந்துவருகிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

இவ்வேளையில் நாலுபேருக்குப் பயப்படாமல் முடிவெடுக்கும் தோழியின் திறன் நம் வாழ்வில் நாம் எடுக்கும் முடிவுகளுக்கு எடுத்துக்காட்டாக அமைவதாவே நான் கருதுகிறேன்.

திங்கள், 28 ஜூன், 2010

அழகான அனுபவம்.




○ மனமகிழ்வுடன், முழு ஈடுபாட்டுடன் செய்யப்படும் வேலை ஒரு அழகான அனுபவமாகும்.

பாடம்


○ பள்ளியில் பாடம் கற்றுக்கொண்ட பிறகு தேர்வு எழுதுகிறோம்!
ஆனால் வாழ்க்கையில்,
தேர்வு எழுதிய பிறகுதான் பாடம் கற்றுக்கொள்கிறோம்!



கடவுள்
○ வழிபாடு செய்யுங்கள்..
கடவுளுக்கு அருகில் நீங்கள் செல்லலாம்.
ஆனால் சேவை செய்யுங்கள்..
கடவுள் உங்கள் அருகில் வருவார்!

-அன்னை தெரசா.


○ கடவுளுக்கும் மரணம் வரும்.
ஒருவனுக்குத் தன்னம்பிக்கை பிறக்கும் போது!

தந்தை பெரியார்.

வேலைக்காக
○ ஊர்சுற்றும் பிள்ளையின் வேலைக்காகக்
கோயில் சுற்றும் அம்மா.


குழந்தை○ குழந்தைகள் உங்களுடன் இருக்கலாம்
ஆனால் அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல!
அவர்களுக்கு உங்கள் அன்பைக் கொடுங்கள்
உங்கள் சிந்னையைத் தரவேண்டாம்!
அவர்களுக்கென்று சிந்தனை இருக்கிறது!

கலீல் ஜிப்ரான்.

வெள்ளி, 25 ஜூன், 2010

யாரணங்குற்றனை கடலே?


ஏங்க என்ன ஆச்சு?
ஏன் இப்படிக் கன்னத்துல கைவெச்சுக்கிட்டிருக்கீங்க?
என்ன பிரச்சனை?

என்று கேட்போர் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் தற்கொலையின் விழுக்காடு அதிகமாகிவருகிறது.

“வாழப் பிடிக்கவில்லையென்றால்
தற்கொலை செய்துகொள்!
ஆனால்,
தற்கொலை செய்துகொள்ளும்
துணிவிருந்தால்...

வாழ்ந்துபார்!

என்பது அலெக்சான்டர் வாக்கு.


என வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே போரடிக்கொண்டிருக்கும் வாழ்வில்,

பகிர்தல்
புரிதல்

ஆகியன குறைந்துவிட்டன.

பணம் மட்டுமே வாழ்க்கை என்றாகிவிட்டது.

பணத்தைத் தேடி ஓடும் வாழ்க்கையில் மனஅழுத்தமே எஞ்சிநிற்கிறது.

வாரத்தில் ஆறு நாட்கள் பணத்தின் பின்னே ஓடிச் சென்ற மனித இயந்திரம் கிடைக்கும் ஒரு நாளில் தன்னுடைய உடலையும், உள்ளத்தையும் சீரமைத்து அடுத்தவாரம் ஓடுவதற்குத் தயாரித்துக்கொள்கிறது.


இந்தச்சூழலில் அடுத்தவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்ள இந்த வாழ்க்கையில் ஏது நேரம்..

சரி எனக்கு என்ன பிரச்சனைன்னு கேட்குறீங்களா?

எனக்கு ஒரு பிரச்சனையுமே இல்லைங்க!
இதுதான் பெரிய பிரச்சனை!

என்னைச் சுற்றியிருப்பவர்களிள் பிரச்சனைகளைப் பலவகைப்படுத்தலாம். பல பிரச்சனைகளையும் ஒரே சொல்லில் அடையாளப்படுத்தவேண்டுமென்றால் “பணம்“ என்று சொல்லாம்.

பணத்துக்கு அடுத்தபடியாகக் காலம் காலமாகவே தீராத பிரச்சனைகளுள் ஒன்று காதல்.

சங்க காலம் முதல் இன்றுவரை இந்தப் பிரச்சனை தீரவேயில்லை.

உடன்போக்கு,இற்செறித்தல், அலர் என அந்தப் பிரச்சனைகளின் பெயர் வேண்டுமானால் கால மாற்றத்தால் புரிந்துகொள்ள இயலாததாக இருக்கலாம். ஆனால் இந்த சிக்கல்கள் தீர்ந்தபாடில்லை.


பணம் - காதல் இரண்டின் பின்னும் பலர் ஓடுகிறார்கள்.
பணம் - காதல் இரண்டும் சிலர் பின்னால் ஓடுகின்றன.

காதலுக்குப் பல வழிகளில் பிரச்சனைகள் வரும்.

திருக்குறள் சுட்டும் தலைவியின் நிலை,


தலைவனின் பிரிவால் வாடும் தலைவி,
மாலைப் பொழுதிடம் பேசுகிறாள்….

ஏ மாலைப் பொழுதே உன் துணைவரும் என் துணைவரைப் போல வன்மனம் கொண்டவரோ?
நீயும் என்போலவே ஒளியிழந்து காணப்படுகிறாய்?

என்று கேட்கிறாள்.குறள் இதோ,

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை. (திருக்குறள்)


சங்ககாலத் தலைவியின் நிலை,


தலைவனின் பிரிவால் வருந்தும் தலைவி கடலைப் பார்க்கிறாள்.
மீன்களை உண்ணவந்த கொக்கினங்கள் பரவியிருக்கின்ற கடல் பார்ப்பதற்கு வெள்ளாடுகள் கூட்டமாகப் பரவியிருப்பது போல உள்ளது.
கடல் அலையாக வந்து கரையிலிருக்கும் வெண்மையான மலர்களைக் கொண்ட தாழையை அடித்துச் செல்கிறது. அந்த ஒலி கேட்கும் தலைவி,

ஏ கடலே..
நீ நள்ளிரவிலும் ஒலிக்கின்றாயே?
யாரால் வருத்தமுற்றாய்?
என்று வினவுகிறாள். பாடல் இதோ,


யாரணங் குற்றனை கடலே பூழியர்

சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன

மீனார் குருகின் கானலம் பெருந்துறை

வெள்வீத் தாழை திரையலை

நள்ளென் கங்குலுங் கேட்குநின் குரலே.


தலைவி கூற்று
குறுந்தொகை - 163.
அம்மூவன்.

நள்ளிரவில் தன்னுடன் தூங்காமல் விழித்துப் புலம்பிக்கொண்டிருக்கும் கடல் தன்னைப் போலவே துன்புறுவதாக எண்ணிக்கொள்கிறாள் தலைவி.

ஒப்பீடு.

திருக்குறள் சுட்டும் தலைவிக்கு மாலை - பெண்ணாகத் தெரிகிறது.
குறுந்தொகைத் தலைவிக்குக் கடல் - பெண்ணாகத் தெரிகிறது.

கடல் ஆணா? பெண்ணா?


கடலை ஆண்கடல் என்றும், பெண்கடல் என்றும் அழைப்பார்கள் கேள்விப்பட்டிருக்கிறேன்.

சீற்றம் அதிகமான கடல் ஆண்கடலென்றும்,
சீற்றம் குறைவான கடல் பெண்கடலென்றும் அழைப்பார்கள்.

இதில் எனக்கு நீண்டகாலம் ஐயம் உண்டு.
அன்றுமுதல் இன்றுவரை பெண்கள் தானே அதிகம் பேசுகிறார்கள்..

சீற்றம் அதிகமான கடல் - அதிகமாகப் பேசும் பெண்கள்

இரண்டும் இயைபுபட்டுவருவது சி்ந்திக்கத்தக்கதாகவுள்ளது.

சரி நாம் பாடலுக்கு வருவோம்,

இரு தலைவியரிடமும் என்ன பிரச்சனை என்று கேட்க ஆளில்லை.
அதனால் மனஅழுத்தம் கொண்ட தலைவியரின் நிலை மாலைப்பொழுதிடமும், கடலிடமும் புலம்புவதுவரை சென்றுள்ளது.

ஆனால் இரு தலைவியரும் தன்னிடம் தான் யாரும் என்ன பிரச்சனை என்று கேட்கவில்லை என்றாலும் மாலைப்பொழுதிடமும், கடலிடமும் என்ன பிரச்சனை என்று கேட்கிறார்கள்.

மனஅழுத்தம் அதிகமானால் அது மனப்பிறழ்வாக மாறும்.

இருதலைவியரின் புலம்பலை வெறும் புலம்பலாக மட்டும் கொள்ளாது..

இன்றைய வாழ்வியலுடன் உளவியல் அடிப்படையில் ஒப்புநோக்கினால்….

இந்தத் தலைவியரைவிட நாம் நம்மனதோடு எவ்வளவு சத்தத்துடன் யார்யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதை உணரமுடியும்.

○ வாய்பேசாவிட்டாலும் மனம் பேசாமல் இருப்பதில்லை….
○ வாய்விட்டுப் பேசவும், மனதோடு பேசவும் பகிர்தல் தேவை…..

இவ்வாறு பேசுவதால் மனஅழுத்தம் நீங்கும் இந்த உளவியல் கூறுகளைத் தாங்கி வரும் சங்கப்பாடல்களை நோக்கும் போது, சங்கப்புலவர்களின் உளவியல் அறிவு எண்ணிப்பெருமிதம் கொள்ளத்தக்கதாகவுள்ளது.

செவ்வாய், 22 ஜூன், 2010

மாணவர் புலம்பல்.



வலி மிகும் இடங்கள்.


தமிழ்த்தேர்வில் இலக்கணக்குறிப்பு எழுதுகிறான் மாணவன்.

வலி மிகும் இடங்கள் யாவை?

உடலில் எல்லா இடங்களுமே வலிமிகும்.
நீண்ட தூரம் நடந்தால் காலில் வலிமிகும்.
எல்லோருக்கும் அடிக்கடி தலையில் வலிமிகும்.

வல்லின ஒற்று மிகும் இடங்கள்(தமிழை + கண்டேன்   = தமிழைக் கண்டேன்.)யாவை? என்ற கேள்வியை வகுப்புக்கு வராத, வந்தும் கவனிக்காதவனாக இம்மாணவன் இருந்தாலும் தேர்வு எழுதும் போது இலக்கணம் என்று தயங்காது இப்படியொரு பதிலளிக்கிறான். இப்பதிலை தவறு என்று முற்றிலும் மறுத்துவிடமுடியுமா என்ன?



தமிழில் தோன்றிய முதல் சிறுகதை,

“பாட்டி வடைசுட்ட கதை” யே தமிழில் முதலில்தோன்றிய முதல் சிறுகதை என்று எழுதுகிறான் ஒரு மாணவன்.

எத்தனைமுறை வ.வே.சு ஐயரின் குளத்தங்கரை அரசமரம் சொன்னகதையே தமிழின் முதல் சிறுகதை என்ற சொன்னாலும் தேர்வு அறையில் இம்மாணவர்களின் நினைவில் வருவேதே இல்லை. இருந்தாலும் சிந்தித்து இப்படியொரு பதிலை எழுதி என்னைச் சிரிக்கவைத்துவிட்டான் ஒரு மாணவன்.


மாணவர் புலம்பல்.

◊ ஆண்டு முழுவதும் 24 மணிநேரமும் விழிப்புடனிருக்கும் எனது மூளை, இயங்காமல்ப் போகும் ஒரே இடம் “தேர்வு அறை“

◊ வேதனையோடு இருப்பவர்களுக்கு வெறும் தண்ணீர்!
வேடிக்கை பார்ப்பவர்களுக்கு, தேநீர், வடை.
என்ன கொடுமை இது!

வகுப்பு - தேர்வு


1-3 தினமும் படிக்கிறேன்டா..
3-6 கொஞ்சம் கடினாமாத்தான் இருக்கு..
6-10 தேவையான வினாக்கள் மட்டும் தேர்ந்தெடுத்துப் படிக்கிறேன்டா..
10-12 பார்த்து எழுதீரலம்னு இருக்கேன்டா..
கல்லூரி - என்ன சொல்ற.. இன்றைக்குத் தேர்வா????

வெள்ளி, 18 ஜூன், 2010

திருடிக்குத் தேள் கொட்டியதுபோல…


திருடனுக்குத் தேள் கொட்டினால் என்ன ஆகும்?
திரு திரு என்று விழிக்க வேண்டியது தான்…..

அதே திருடன் வலி தாங்காமல் கத்தி மாட்டிக்கொண்டால் என்ன ஆகும் தலைகவிழ்ந்து நிற்க வேண்டடியது தான்…..

உலகத்தில் தவறு செய்யாதவர்கள் யார்தான் இருக்கிறார்கள்?

எல்லோருமே தவறு செய்தவர்கள்தான். என்றாலும். அதே தவறை மீண்டும் செய்தால் தப்பாகிவிடும் என்று உணர்ந்து திருத்திக்கொள்ளும் போது அவர்கள் மதிப்புக்குரிய மனிதர்களாகிறார்கள்.

தவறிழைத்தோர் யாருமே தம் தவறுக்கு என ஏதாவதொரு காரணம் வைத்திருப்பார்கள்.

தவறு செய்வோர் உருவாக அவர்கள் மட்டுமே காரணமில்லை. அவர்கள் வளர்ந்த சூழலும், வாழும் சூழலும் கூட காரணமாகின்றன.

ஒரு குழந்தை தவறி மீன்தொட்டியை உடைத்துவிட்டது என்றால் அக்குழந்தையின் பெற்றோர் அக்குழந்தையை எப்படி எதிர்கொள்ளவேண்டும்.

பொருளின் இழப்பை அக்குழந்தைக்குப் புரியவைக்க வேண்டும்.
அதைவிட்டு விட்டு அக்குழந்தையை அடித்தால் அடுத்த முறை இதுபோல தவறு நேர்ந்தால் அக்குழந்தை தன் தவறை ஏற்றுக்கொள்ளாது. தான் தவறிழைக்கவில்லை என்று தன் தவறை யார் மீதாவது சுமத்தவே முயலும்.

இவ்வாறு வளரும் சூழலும் ஒரு மனிதனின் பண்புகளுக்குக் காரணியாகிறது.

சங்ககாலம்…………..

மக்கள் தொகை குறைவான காலம், இனக்குழுவிலிருந்து நிலவுடைமைச் சமூகத்துக்கு மனிதன் வளர்ந்த காலம். அதனால் தலைவன் பரத்தையரிடம் (பொருட்பெண்டிர்) செல்வதைத் பெருந்தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. சங்ககாலச் சமூகச் சூழல் அதற்குத் துணையாக இருந்தது. இருப்பினும் தலைவி வாயில் மறுத்து தலைவனின் செயலை எதிர்த்திருக்கிறாள்.


பரத்தையர் சேரியில் தங்கியிருந்த தலைவன் வீடு திரும்பினான். அவன் செயல் எண்ணித் தலைவி ஊடல் கொண்டாள்(சினம்). தன்னிடம் ஊடிய தலைவியிடம் தலைவன், “யான் பரத்தையர் யாரையும் அறியேன்“ என்றான். அதுகேட்ட தலைவி தலைவன் நட்புக் கொண்டுள்ள பரத்தையைத் தான் கண்டமையும் அவள் மீது அன்பு கொண்டமையும் கூறினாள்.

தலைவனே!
நீர்நாய்களையுடைய பழைய நிர்நிலையின்கண் செழித்து வளர்ந்த தாமரையின் அல்லியாகிய இதழினைப் போன்ற குற்றமற்ற உள்ளங்கையினையும்,

பவளம் போன்ற அழகிய வாயினையும்,

நாவால் திருத்தமாகப் பேசப்படாவிட்டாலும், கேட்போர் விரும்பும் மழலை மொழிபேசும், பொற்றொடி அணிந்த நம் புதல்வனைப் பகைவரும் விரும்புவர்.

அத்தகைய நம் புதல்வன் தெருவில் சிறுதேர் உருட்டி விளையாடிக் கொண்டிருந்தான். நீ விரும்பும் பரத்தை அவ்வழியே வந்தாள். நம் புதல்வன் உன் உருவத்துடன் இருப்பது கண்டு வியந்து மகிழ்ந்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்தாள். யாரும் தன்னைக் காணவில்லை என்ற எண்ணத்தில் புதல்வனை தன் மார்போடு சேர்த்து அனைத்துக்கொண்டாள்.

இக்காட்சியைக் கண்ட நான் அவ்விடத்தைவிட்டு நீங்காமல் அங்கேயே நின்றேன். என்னைக் கண்டு உன் பரத்தை திகைத்தபோது நான் சென்று அவளைத் தழுவிக்கொண்டு,

குற்றமற்ற இளமகளே ஏன் மயங்கினாய்?
நீயும் என் புதல்வனுக்குத் தாய்போலத் தானே?

என்று கூறினேன். திருடியவன் மாட்டிக் கொண்டது போல, தவறை உணர்ந்த பரத்தை “ நாணி முகம் கவிழ்ந்து நிலத்தைக் கீறி நின்றாள்.“

அவளுடைய நிலையைக் கண்ட நான் வானில் காண்பதற்கரிய அருந்ததி என்னும் விண்மீனுக்கு ஒப்பான இவள் நம் புதல்வனுக்குத் தாயாகும் தகுதியுடையவள் என்று அவளை விரும்பினேன் என்றாள். பாடல் இதோ,


நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,
மாசு இல் அங்கை, மணி மருள் அவ் வாய்,
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்,
5 யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை,
தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே!
கூர் எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
காணுநர் இன்மையின், செத்தனள் பேணி,
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை,
10 'வருகமாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து,
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன்,
'மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை?
நீயும் தாயை இவற்கு?' என, யான் தற்
கரைய, வந்து விரைவனென் கவைஇ
15 களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா,
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
பேணினென் அல்லெனோ மகிழ்ந! வானத்து
அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின்
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே?

அகநானூறு -16
(மருதம்)சாகலாசனார்

பரத்தையர் சேரியிலிருந்து வந்த தலைமகன் “யாரையும் அறியேன்“ என்றாற்குத் தலைமகள் சொல்லியது.


நகையும் சுவையும்,

l தலைவனின் புதல்வனைத் தெருவில் கண்டு கட்டித்தழுவிய பரத்தையிடம் சினம் கொண்டு சண்டையிடாத தலைவி, “நீயும் எம் புதல்வனுக்குத் தாய்தானே“ என்று எள்ளலாகச் சொல்லுவது நகையேற்படுத்துவதாகவுள்ளது.

l தலைவிக்குத் தெரியாது தவறிழைத்தவர்கள் தலைவனும், பரத்தையும் ஆவர். யாருக்கும் தெரியாது என்று அவர்கள் செய்த தவறு தலைவிக்குத் தெரிந்தபோது,

பரத்தை - நாணி முகம் கவிழ்த்து நிலம் கீறி நிற்கிறாள்.
தலைவன் - பதில் சொல்ல முடியாது தவிக்கிறான்.

இவ்விருவரின் செயல் நகையேற்படுத்துவதாகவும்.

இவர்களின் தவறை அறிந்தும் அவர்கள் தம் தவறை உணர்ந்தார்கள் என்பதால் அதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாத தலைவியின் செயல் அவளின் பெருந்தன்மையை உணர்த்துவதாகவும் உள்ளது.

நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால்.

தலைவனுக்கும், பரத்தைக்கும்,

இதற்கு மேல் என்ன பெரிய தண்டனை கொடுத்துவிடமுடியும்?

செவ்வாய், 15 ஜூன், 2010

இயற்கையின் இசையரங்கு



தண்டலை மயில்கள் ஆட, தாமரை விளக்கம் தாங்க,
கொண்டல்கள் முழவின் ஏங்க, குவளை கண் விழித்து நோக்க,
தெண் திரை எழினி காட்ட, தேம் பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட, -மருதம் வீற்றிருக்கும் மாதோ.

என்ற கம்பனின் கவிநயத்தை வியக்காதவர்களே அரிது.

கம்பனின் இப்பாடலைப் படிக்கும் போது என்மனம் ஏனோ இந்த அகநானூற்றுப் பாடலையே ஒப்புநோக்கிறது.

யானையைத் தேடிவந்த தலைவனை எல்லோரையும் போலத்தான் தலைவியும் பார்க்கிறாள். ஆனால் அவளையும் அறியாமல் அவன் மீது காதல் கொள்கிறாள். தம் காதலைத் தோழியிடம் தெரிவிக்கிறாள். இதுவே இப்பாடலின் சூழல்.

தலைவி தோழியிடம்………


அசைந்தாடும் மூங்கிலில் வண்டுகள் துளைத்த துளையில் காற்று புகுவதால் எழும் இனிய ஒலி இசையாகவும்,

இன்னொலியுடன் வீழும் அருவியின் இனிய ஓசை, கூட்டமான மத்தளங்களின் இசையாகவும்,

கலைமான்களின் கூட்டம் தாழ ஒலிக்கும் கடுங்குரல் பெருவங்கியத்தின் இசையாகவும்,

மலைச்சாரலிடத்தே பூக்களைக் குடைந்தாடும் வண்டின் ஒலி யாழிசையாகவும் காட்டிலே விளங்குகினறது.

இவ்வாறு இனிமையாகவொலிக்கும் பல இசைகளைக் கேட்டு, ஆரவாரமிக்க மந்திக்கூட்டம் வியப்புற்றுக் காண்கிறது.

மூங்கில் வளரும் பக்கமலையில் மயில்கள் உலவி ஆடுகின்ற காட்சி, ஆடுகளத்தில் புகுந்தாடும் விறலி போலத் தோற்றம் தரும்.

அத்தகைய காட்சியுடைய மலைநாட்டையுடையவன் நம் தலைவன். மாலையணிந்த அகன்ற மார்பினன். அவன் அச்சம் தரும் வலிய வில்லினைக் கையில் கொண்டான். சிறந்த போர் அம்பினைத் தேர்ந்தெடுத்துக்கொண்டான். தான் அம்பால் எய்த யானை சென்ற வழியைப் பற்றி எம்மிடம் கேட்டான். கேட்டு முதிர்ந்த கதிர்களையுடைய தினைப்புனத்தின் சிறுவாயிலின் ஒருபக்கத்தே வந்து நின்றான்.

இவ்வாறு நின்றவனைக் கண்டோர் பலராவர். அவருள்ளும்,அரிய இருள் செறிந்த இரவில் படுக்கையிடத்துப் பொருந்திக் கிடந்து, கண்கள் நீர் சொரிய யான் ஒருத்தியே மெலிந்த தோள்களை உடையேன் ஆயினேன். அதற்குக் காரணம் யாதோ?


என்று தோழியிடம் உரைக்கிறாள் தலைவி. பாடல் இதோ,

“ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அவ் வளி குழலிசை ஆக,
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆக,
5 கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக,
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,
மந்தி நல் அவை மருள்வன நோக்க,
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்
10 நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன்
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து,
செருச் செய் யானை செல் நெறி வினாஅய்,
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை,
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர்
15 பலர்தில், வாழி தோழி! அவருள்,
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர் யான் ஆகுவது எவன்கொல்,
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?


அகநானூறு 82
குறிஞ்சி - கபிலர்


தோழிக்குத் தலைவி அறத்தோடு நின்றது.

(களவொழுக்கத்தின்போது தலைவன் வருகையில் தடையேற்பட்டது. அதனால் வருந்திய தலைவி தோழியை அறத்தோடு நிற்குமாறு கூறியது.)

பாடல் வழி..

² தலைவனைக் கண்டோர் பலராயினும், அவருள் அவனைப் பார்த்தவுடன் காதல் கொண்டாள் தலைவி. அதன் காரணம் என்ன என்பதையும் தான் அறியாதவளாகவுள்ளாள். தன்னிலையைத் தலைவி, தோழிக்குச் சொல்வதன் வாயிலாக இங்கு தலைவி தோழிக்கு (அறத்தோடு நின்றாள்) காதலை வெளிப்படுத்தினாள்.

² சங்கத்தமிழர் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தனர் என்பதற்கான சான்றாக இப்பாடல் விளங்குகிறது.


வண்டு துளைத்த மூங்கில் காற்று இட்ட முத்தம் இசையாக!
அருவி வீழும் ஓசை மத்தளங்களின் தாளங்களாக!
கலைமான்களின் தாழ ஒலிக்கும் ஒலி இனிய பெருவங்கிய இசையாக!
மலைச்சாரலில் பூக்களைக் குடைந்து ரீங்காரமிடும் வண்டுகளின் ஒலி யாழிசையாக!


இத்தகைய பல இனிய ஒலிகளைக் கேட்டு வியந்து நோக்குகிறது மந்தி,
மலைப்பகுதிகளில் ஆடும் மயில் ஆடல்மகள் விறலியுடன் ஒப்புநோக்கத்தக்கதாக உள்ளது.

Þ காதலைச் சொல்லவந்த தலைவி இயற்கையை ஏன் இவ்வளவு விவரித்துச் சொல்ல வேண்டும்?

வாழ்க்கை வேறு இயற்கை வேறு என்று பகுத்தறிய இயலாதவாறு சங்கத்தமிழர் வாழ்வில் இயற்கை இயைபுறக் கலந்திருந்ததே காரணமாகும்.

சனி, 12 ஜூன், 2010

குழந்தையான ஒளவை.


குழந்தை என்றவுடன் நினைவுக்குவருவது அக்குழந்தை பேசும் மழலை மொழிதான். குழல்,யாழை விட இனிமையானது மழலை மொழி என்பர் வள்ளுவர். பொருளற்றதாயினும் மழலை மொழி யாவருக்கும் பிடிக்கிறது.
அதிலும் “தம்மக்கள் மழலைச் சொல்“ என்று வள்ளுவர் அழுத்திச் சொல்வது உற்று நோக்கத்தக்கது.

நம் குழந்தைகள் பேசும் மொழி நம்மை ஈர்க்கும் அளவுக்குப் பிறருடைய குழந்தைகள் பேசும் மொழி நம்மை ஈர்த்துவிடுவதில்லை.

இதுபோலவே,

நமக்குப் பிடித்தோர் பேசும் குறைகளும் நிறைகளாகத் தெரிகின்றன.

நமக்குப் பிடிக்காதோர் பேசும் நிறைகளும் குறைகளாகத் தெரிகின்றன.

ஔவைக்கும் அதியனுக்குமான நட்பினைத் தமிழுலகம் நன்கறியும். தான் பெற்ற அரிய நெல்லிக்கனியைத் தான் உண்டு நீண்ட காலம் உயிர் வாழ்வதைவிட ஔவை உண்டால் தமிழ் வாழும் என்று கருதிய அதியன் அக்கனியை ஔவைக்கு அளித்தான்.

மனம் நெகிழ்ந்த ஔவை நாக்குழறித் தாம் எண்ணியவாறெல்லாம் அதியனைப் பாராட்டினாள். இசைத் தன்மையில்லாத, பொருளில்லாத, சொல்லாயினும் புதல்வரின் மழலை மொழி கேட்டு்ப் பெற்றோர் பேரின்பம் கொள்வர்.

உன்னைப் பாராட்டும் ஊக்கத்தால் மழலை போல நான் பேசும் வாய்ச்சொல்கேட்டு இன்புறுகிறாயே என்று அதியனைப் பார்த்து ஔவை பாடுகிறார்,

பாடல் இதோ,


யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள்அறி வாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள்வந் தனவால், புதல்வர்தம் மழலை;
என்வாய்ச் சொல்லும் அன்ன; ஒன்னார்
கடி மதில் அரண்பல கடந்து
நெடுமான் அஞ்சி! நீ அருளல் மாறே.


புறநானூறு -92.
பாடியவர்: ஔவையார்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.
திணை : பாடாண். துறை: இயன் மொழி.

இதன் பொருள்,


யாழோசை போல இனிமையாக இருக்காது!
காலத்தோடும் பேசப்படமாட்டாது!
பொருளும் இருக்காது!

ஆயினும் புதல்வரின் மழலை மொழியை தந்தையர் பெரிதும் விரும்புவர்.

என் வாய்ச்சொல்லும் அத்தன்மையதே ஆகும்.

புதல்வர் மீது கொண்ட பற்றால் தந்தையர் மழலைச் சொல்லை மிகவும் விரும்பிக்கேட்பது போல,

தமிழின் மீது கொண்ட பற்றால் மழலை மொழிபோன்ற என் பாராட்டையும் விரும்பிக் கேட்கிறாய் என்று அதியனைப் பார்த்து ஔவை பாடுகிறார்.

பாடல் சுட்டும் கருத்து..

v அதியன் தமிழ் மீது கொண்ட பற்றால் ஔவையைத் தம் உயிரினும் மேலாகக் கருதினான்.

v பொருள் பொதிந்த பாடல் பாடும் திறனுடையவராயினும் அடக்கமாக ஔவையார் தம் பாடலை மழலையின் மொழியோடு ஒப்பிட்டு உரைக்கிறார்.

v குழந்தை பேசினால் பொருளற்ற சொல்கூட இனிமையளிக்கும், அதுபோல, விருப்பமுடையவர் பேசினால் தவறுகள் கண்ணுக்குத் தெரியாது என்னும் உளவியல் கூறும் உணர்த்தப்படுகிறது.

வெள்ளி, 11 ஜூன், 2010

சங்கஇலக்கியத்தில் குற்றமும் தண்டனையும்.


கதை ஒன்று,
அரண்மனையில் பணிபுரிந்த வீரர்கள் மூவர் விலையுயர்ந்த அணிகலன்களைத் திருடி மாட்டிக்கொண்டனர்.

மன்னர் வந்து மூவரையும் பார்க்கிறார்.

முதலாமவைனைப் பார்த்தார் - தன் அமைச்சரிடம் இவனை நாடுகடத்துங்கள் என்றார்.

இரண்டாமவனைப் பார்த்து - நீ நல்லவன் என்று நம்பினேன். இப்படிச் செய்வாயென்று நான் நினைக்கவேயில்லை. என் முகத்திலே விழிக்காதே எங்காவது போய்விடு என்றார்.

மூன்றாமவனைப் பார்த்து - இவனைச் சிறையிலடையுங்கள் என்றார்.


இதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு எதுவுமே புரியவி்ல்லை. மூவரும் ஒரே தவறு தான் செய்தார்கள். தண்டனையை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாகக் கொடுத்துவிட்டாரே மன்னர் என்று மக்களுக்கு ஒரே மனக்குழப்பம்.

மன்னனின் நெருங்கிய நண்பர் தம் குழப்பத்தை மன்னரிடமே கேட்டார். மன்னரோ, இருநாட்கள் கழித்து எனது தீர்ப்பின் தன்மையை எல்லோரும் தெரிந்துகொள்வீர்கள் என்றார்.

இருநாட்கள் சென்றன.

நாடுகடத்தவேண்டுமென்ற முதலாவது தண்டனை பெற்றவன். தம் தவறை நொந்து துறவியாகிவிட்டான்.

மன்னனின் நம்பிக்கையை இழந்துவிட்டேன். நான் வாழத்தகுதியற்றவன் என்று இரண்டாவது தண்டனை பெற்றவன். தற்கொலை செய்து இறந்துவிட்டான்.

சிறைத் தண்டனை பெற்ற மூன்றாமவன், ஒரே நாளில் சிறையிலிருந்து தப்பிச் சென்றான்.


இக்கதையிலிருந்து தெரிந்துகொள்ளவேண்டியது,

தண்டனைகள் தவறுகளைக் குறைப்பதில்லை!

பயத்தால் மட்டும் குற்றங்களை முழுவதும் தடுத்துவிடமுடியாது!

மனம் தரும் தண்டனையைவிட பெரிய தண்டனையை யாரும் கொடுத்துவிடமுடியாது!

தண்டனைகள் எதிர்மறையெண்ணங்களின் பிறப்பிடங்களாக அமைவதுமுண்டு!

தவறு செய்தவனைச் சிந்திக்கவைப்பதாகத் தண்டனைகள் இருத்தல் வேண்டும்.


புறநானூற்றுப் பாடலொன்றில்,

ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் சோழனின் நீதிவழங்கும் தன்மையைப் பாடுகிறார்.

உன்னை வழிபடுவோரை நீ விரைவில் அறிந்துகொள்கிறாய்!

அறிந்து அவர்களின் குறையையும் போக்குகிறாய்!

உன்னிடம் வந்து பிறரைப் பற்றிப் பழிகூறுபவர்களின் சொற்களின் தன்மையை நன்கு அறிந்து தெளிவாய்!

தீமைகளை ஒருவனிடம் கண்ட அளவில் அறநூல்களுக்கு ஒப்ப ஆராய்ந்து அதற்குரிய தண்டனைகளை வழங்குவாய்!

அவர் தாம் வந்து நின்னையடைந்து நின்னடி வணங்கி முன் நின்றால், அவர் தீமைபுரியும் முன் அவரிடம் கொண்ட அருளினும் மிகுதியான அருளால் அவருடைய தண்டனையைக் குறைக்கவும் செய்வாய்!


அமிழ்த்தத்தை சுவையில் வென்று உண்ண உண்ண அடங்காத மணம் நிறைந்த தாளிப்பினையுடைய உணவினை வரும் விருந்தினருக்கு அளவில்லாமல் அளித்து மகிழும் குற்றமற்ற வாழ்க்கையையுடையவர் குலமகளிர். அம்மகளிர் போரிடுவதன்றி வீரர்கள் போரிடமுடியாத, இந்திரவில்லையொத்த மாலையுடையவனே!

ஒரு செயலைச் செய்தபின் ”அது தவறு செய்தனம்“ என்று இரங்கிக் கூறாத திட்பமுடைய செய்கையும், மிகுந்த புகழையும் உடையவனே! நெய்தலங்கானல் என்னும் ஊரினையுடைய நெடியவனே!

இத்தகைய உன்னுடைய புகழைக் கூறுவதற்காக உன்னை வந்தடைந்தோம் என்று பாடுகிறார்.

பாடல் இதோ,



வழிபடு வோரை வல்லறி தீயே!
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே;
நீமெய் கண்ட தீமை காணின்,
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி;
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையிற் பெரிதே;
அமிழ்துஅட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
மலைத்தல் போகிய, சிலைத்தார் மார்ப!
செய்து இரங்காவினைச், சேண்விளங் கும்புகழ்,
நெய்தருங் கானல் நெடியோய்!
எய்த வந்தனம்யாம்; ஏத்துகம் பலவே!


புறநானூறு -10
பாடியோர் : ஊன் பொதி பசுங் குடையார்.
பாடப்பட்டோன் : சோழன் நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி.
திணை : பாடாண்.
துறை : இயன்மொழி.


பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.


² பாடப்படும் ஆண்மகனின் கொடை, நீதி உள்ளிட்ட பண்புகள் புகழப்படுவதால் “பாடாண்“ என்னும் புறத்திணை விளக்கப்படுகிறது.
² சோழனின் இயல்பு கூறப்படுவதால் “இயன்மொழி“ என்னும் புறத்துறை விளக்கம் பெறுகிறது.

² தவறு செய்தவன் தன் தவறை உணர்ந்தால் அவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைக்கும் சோழனின் பண்பு, சங்கத் தமிழர் நீதி வழங்கலில் கடைபிடித்த நீதி நெறிகளுள் குறிப்பிடத்தக்கதாகவும், இன்றைய நீதி வழங்குவோர் கடைபிடிக்க வேண்டிய சிறந்த கொள்கையாகவும் உள்ளது.

புதன், 9 ஜூன், 2010

சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள்



இலக்கு.

யானையை எய்யச் சென்றவன் யானையைப் பிடித்து வெற்றியோடு திரும்புவதும் உண்டு.

சிறுபறவையை வேட்டையாட எண்ணியவன், வெறுங்கையுடன் திரும்புவதும் உண்டு.

அதனால் நமது இலக்குகள் உயர்ந்தனவாக இருத்தல் வேண்டும்.

இலக்கில்லாத வாழ்க்கை முள்ளில்லாத கடிகாரத்தைப் போல அது யாருக்கும் பயன் தருவதில்லை இவ்வரிய கருத்தை உணர்த்தும் சங்க இலக்கியப் பொன்மொழி,



யானை வேட்டுவன் யானையும் பெறுமே
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே


-----------------------------------------------------
கடன்

நாம் ஒவ்வொருவருமே கடன்காரர்கள் தான். நம் கடனைக்கூறும் சங்க இலக்கியப் பொன்மொழி,

² ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்,
களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.


--------------------- --------------------------- -----------------------

தன்னம்பிக்கை.

நம் திறமைக்கு மதிப்பில்லாத இடத்தில் இருக்கக் கூடாது.
யாரை நம்பியும் யாரும் இல்லை.
கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு என்னும் வாழ்வியல் அறத்தை உணர்த்தும் பொன்மொழி,


² எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.“


-------------------------------- ----------------------------------

நீர்வழிப்படும் புணைபோல


தினை விதைத்தால் தினை விளையும்
வினை விதைத்தால் வினை விளையும் என்பதே முறை என்னும் கருத்தை உணர்த்தும் பொன்மொழி,

² யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.


------------------------------------- --------------------------------------
இனிய காண்போர்.

இன்பங்கள் தோன்றுவது நேர்மறை எண்ணங்களால்…
துன்பங்கள் தோன்றுவது எதிர்மறை எண்ணங்களால்…

என்னும் கருத்தைச்சுட்டும் பொன்மொழி.


இன்னாது அம்ம, இவ் வுலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந் தோரே.



-----------------------------------------------------------------------------

திங்கள், 7 ஜூன், 2010

சிரிப்பும் சிந்தனையும்.




Ø ஒருமுறை ஆங்கிலேயப் பத்திரிக்கையாளர் ஒருவர் காந்தியடிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருக்கும்போது …...

“உங்கள் மக்கள் உங்களை எப்படித் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்?“
வேறு தலைவர்களே அவர்களுக்குக் கிடைக்கவில்லையா?

என்று கேட்டார்.

அதற்குக் காந்தியடிகள் சிரித்துக்கொண்டே,

“உங்களைச் சமாளிக்க நானே போதும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்“
என்று சொன்னார்.

----------- ------------- ---------------- -------------- -------------- ---------
Ø கவிஞர் செரிடனை இருவர் காணவந்தனர். அவர்கள் கவிஞரிடம், “எங்களுக்குள் சிறு விவாதம், அதற்று நீங்கள் தான் முடிவு சொல்லவேண்டும் என்றனர்.“

என்ன என்ற கேட்டார் கவிஞர்.

“நீங்கள் ஒரு முட்டாள் என்கிறேன் நான்,
நீங்கள் ஒரு மூடன் என்கிறார் என் நண்பர்“

நாங்கள் சொல்வதில் யார் சொல்வது மிகவும் சரியானது என்ற முடிவைத் தாங்கள் தான் சொல்லவேண்டும்.

கவிஞர் நண்பர்கள் இருவரையும் தம் கையால் பிடித்துக்கொண்டே..


“நான் இப்போது இருவருக்கும் இடையில் இருக்கிறேன்” என்று சொன்னார்.

----------------- ----------------------- ----------------- ---------------- -------


Ø பேராசிரியர் கல்கி ஒரு முறை “தமிழில் சிறுகதை“ என்னும் தலைப்பில் வானொலியில் பேசினார். அதில் அவர் “ ஒரு கதைபற்றிக் கூறும் போது, ஸ்ரீராமகிருஷ்ணர் மாதிரி கேட்பவர்களுக்குப் புரியுமாறு சொல்லவேண்டும் என்றார். சிறுகதை என்பது முதல் வரியைக் கூறும் போதே கேட்பவர் அடுத்தவரி என்ன? என்று கேட்கத் தூண்டுவதாக இருக்கவேண்டும்“ என்றார். உதாரணத்தையும் கூறினார்.

ஒருநாள் காஞ்சிபுரம் உபய வேதாந்த சுவாமிகள் தம் வேலையாளைக் கூப்பிட்டு , “குப்பா நீ ஸ்ரீபெரும்புதூருக்குப் போய், திருவெங்கடாச்சாரியார் ஐயங்கார் சுவாமிகள் திருக்கோவில் ஆராதனைக்கு திருத்துழாய் எடுக்கையில், திருக்கோயிலின் திருக்குளத்தில் திருப்பாசி வழுக்கி திருவடி தவறி விழுந்துவிட்டார் என்று கூறிவா“ என்றார்.

பின்னர், “குப்பா, சொல்வாயா. எங்கே ஒரு முறை கூறிக்காட்டு பார்க்கலாம் என்றார்.

அதற்குக் குப்பன், “ சாமி, கும்பகோணத்து ஆசாமி குட்டையில் விழுந்ததை, ஸ்ரீபெரும்புதூர் ஆசாமிக்குச் சொல்லவேண்டும் அவ்வளவுதானே? என்றான்.

ஒரு செய்தியைப் புரியும்படி சொல்வதில் பண்டிதனை விடப் பாமரன் தேர்ச்சியுடையவனாகவுள்ளான்.


-------------- --------------------- ------------------- ------------------------


Ø நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் ஒருநாள் படப்பிடிப்புக்காகக் காத்திருக்கும் போது ஈ ஒன்று அவரைச் சுற்றிச்சுற்றி வந்துகொண்டே இருந்தது. அவரும் எவ்வளவு விரட்டியும ஈ அவரை விடுவதாக இல்லை.

ஈ அடிக்க ஒரு மட்டையை எடுத்துக்கொண்டு, அதை அடிக்கத் தயாரானார் சாப்ளின்.

ஈ அவரைச் சுற்றிக்கொண்டு அவரெதிரே அமர்ந்தது. அந்த ஈயை அடிக்காமல் சிறிது நேரம் உற்றுப்பார்த்த சாப்ளின் அதை அடிக்காமல் விரட்டிவிட்டார்.

அந்த ஈயை ஏன் அடிக்கவில்லை என்று கேட்ட நண்பரிடம் சாப்ளின்,

என்னைச் சுற்றி வந்த ஈ இது அல்ல, இது வேறு ஈ என்று சொன்னார்.

--------------- ------------------- ---------------- ------------ ------------------

Ø தோல்வியும் வெற்றியும் எப்படி ஏற்படுகிறது என்பதற்கு பெர்னாட்ஷா அளித்த விளக்கம்.

“ நான் இளைஞனாக இருந்தபோது பத்து செயல் செய்தால் ஒன்பது செயல்களில் தோற்றுப் போனேன். என்னுடைய தோல்வியை நான் விரும்பவில்லை. வெற்றிபெற என்ன செய்யவேண்டும் என்று சிந்தித்தேன். எனக்கொரு உண்மை பளிச்சென்று விளங்கியது. தொன்னூறு முறை முயன்றால் ஒன்பது முறை வெற்றிபெறலாம் என்பதை உணர்ந்தேன். முயற்சிகளை அதிகப்படுத்திக்கொண்டேன்.
------------------ ------------------ -------------------

Ø இத்தாலிய தினத்தாளின் ஆசிரியர் கில்மெஸ்ஸக் கெர்ரோ என்பருக்கு அவரது நண்பர் ஒருவரிடமிருந்து கட்டுரை வந்தது. கட்டுரை அவ்வளவு நன்றாக இல்லை.

அந்த நண்பா் “கட்டுரையில் காற்புள்ளி, அரைப்புள்ளி முதலிய குறிகளை மட்டும் தகுநத் இடங்களில் போட்டுக் கட்டுரையைப் பிரசுரிக்கவும்“

என்றுஎழுதியிருந்தார்.

தங்கள் விருப்பப்படியே செய்துள்ளேன். இனிமேல், காற்புள்ளி, அரைப்புள்ளி முதலிய குறிகளை மட்டும் தாங்கள் அனுப்பவும். கட்டுரையை நாங்கள் எழுதிக்கொள்ளுகிறோம் என்று பதிலனுப்பினார் ஆசிரியர்.

----- ----------- ----------- ----------- ------------ -------------- ---------

ஞாயிறு, 6 ஜூன், 2010

சங்க இலக்கியத்தில் நகைச்சுவை.


ஊர்ப் பொதுவிடத்தில் இருந்த பலாமரத்தின் பெரிய கிளையில் வாழும் மந்தி(குரங்கு) அம்மரத்தில் இரவலர் கட்டியிருந்த முழவினை (மத்தளம்) பலாப்பழம் என்று எண்ணித் தட்டியது. அவ்வோசைக்கு மாறாக அமமரத்தில் வாழும் அன்னச் சேவல் பறந்து ஒலியெழுப்பியது.

இத்தகைய வளமுடையது ஆய் அண்டிரனின் பொதிய மலை, இம்மலைக்கு ஆடுமகள் (விறலி) செல்லாமேயன்றி, போரை விரும்பும் பகைவர் செல்லமுடியாது என்று மன்னனின் வீரத்தை இயற்கையோடு இயைபுபடுத்திப் பாடுகிறார் முடமோசியார். பாடல் இதோ,

மன்றப் பலவின் மாச்சினை மந்தி
இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
பாடின் தெண்கண், கனி செத்து, அடிப்பின்,
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்;
ஆடு மகள் குறுகின் அல்லது,
பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே.

புறநானூறு 128.
பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன்.
திணை: பாடாண். துறை: வாழ்த்து; இயன்மொழியும் ஆம்.

பாடலில் தோன்றும் நகை.

² மத்தளத்தை பலாப்பழம் என்று கருதித் தட்டிப்பார்த்த மந்தியின் செயலும், அதற்கு அஞ்சி மாறொலியெழுப்பிய அன்னச் சேவலின் செயலும் பேதமை காரணமாக நகையேற்படுத்துதாகவுள்ளது.

² பரிசிலர் பலா மரத்தில் கட்டியிருந்த மத்தளத்தை பழம் என்று கருதிய மந்தி ஏமாந்துபோனது போல, பகைவரும் ஆய் அண்டிரனுடன் போரிடவந்து அவன் வலிமை கண்டு ஏமாந்து போவார்கள் என்பது உள்ளுறையில் தோன்றும் நகையாகிறது.

² ஆய் அண்டிரனை பரிசிலர்கள் தம் கலைத்திறன் காரணமாக எளிதில் அணுகலாம், போர் எண்ணம் கொண்ட பகைவர் அணுகுவது அரிது என்பதை இயம்புவதாக இப்பாடல் அமைகிறது.

(ஆய் அண்டிரனின் வீரமும், கொடையும் பாடப்பட்டதால், பாடாண் என்னும் புறத்துறையானது. வாழ்த்திப் பாடியதால் வாழ்த்தியல் ஆனது)

புதன், 2 ஜூன், 2010

உன்னைவிட நல்லவன்?


ஒருவர் இறந்த பின்னர் மக்கள் அவரைத் தூக்கிக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். குரு தன் சீடரை அழைத்து,
நீ சென்று இறந்தவர் சொர்கத்துக்குப் போகிறாரா? நரகத்துக்குப் போகிறாரா? என்று பார்த்துவா என்றார்.

திரும்பிய சீடர், குருவிடம் சொன்னார்.

குருவே இறந்தவர் சொர்கத்துக்குத் தான் செல்கிறார் என்று.

குருவைப் பார்க்க வந்த ஒருவர் இதனைப் பார்த்து வியப்படைந்தார்.
ஒருவர் இறந்தபின்னர் சொர்க்த்துக்குப் போகிறாரா? நரகத்துக்குப் போகிறாரா? என்பதைப் பார்க்கமுடியுமா? என்று குருவிடம் கேட்டார்.

குரு சொன்னார்,

ஒருவரின் இறுதி ஊர்வலமே இறந்தவரின் வாழ்க்கைக்கான அடையாளம். அவர் நல்லவரா? தீயவரா? என்பதை அவருக்குப் பின் செல்லும் மக்கள் பேசிச் செல்வர். அவர்கள் இவரைப் பற்றி உயர்வாகப் பேசினால் இறந்தவர் சொர்கத்துக்குப் போகிறார் என்றும், அவரைப் பற்றி இழிவாகப் பேசினால் அவர் நரகத்துக்குப் போகிறார் என்றும் உணர்ந்து கொள்ளலாம் என்றார் குரு.

சொர்க்கம்,நரகம் இரண்டும் மனித நம்பிக்கையின், நெறி்ப்படுத்தும் முயற்சியின் அடையாளங்கள்.

பாரதியார் இறந்த பின்னர் அவர் உடலில் மொய்தத் ஈக்களின் எண்ணிக்கை கூட அவரைப் பார்க்க வந்த மக்களின் எண்ணிக்கை இல்லை!

பாரதியார் நல்லவரா? தீயவரா?

பாரதி சொர்க்கத்துக்குச் செல்வாரா?
நரகத்துக்குச் செல்வாரா?

பாரதி நல்லவர் தான்! அவர் சொர்கத்தில் தான் வாழ்கிறார்.

ஆம் இன்னும் அவரின் சிந்தனைகள் மறையவில்லையே.
மக்களின் மனம் என்னும் சொர்க்கத்தில் தானே அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

இப்படி நல்லவர் தீயவர் என்பதற்கான வரையறை நிலையானதல்ல.

நல்ல பண்புகளைக் கொண்ட ஒருவரை தீயவராக எண்ணுதலும்
தீய பண்புகளைக் கொண்ட ஒருவரை நல்லவராக எண்ணுதலும் இவ்வுலகத்தின் இயல்பு.

ஒருவரின் மரணத்தி்ன் பின்னரே அவர் நல்லவர், தீயவர் என்பதை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்வர்.


கரிகாலன் சேரலாதனைப் போரில் வென்றான்.
சேரலாதன் தன் மார்பில் தைத்த வேல் முதுகு வழியே வந்ததால் புறப்புண் என நாணி வடக்கிருந்தான்.

இருவரில் யார் நல்லவர்?

இதனை உணர்த்துகிறது இப்பாடல்,

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!


66. புறநானூறு.
பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
திணை: வாகை. துறை : அரச வாகை.


நீர் செறிந்த பெரிய கடலில் மரக்கலம் (கப்பல்) செலுத்தியும், அது அசையாதபோது காற்றினை ஏவல் கொண்டு செலுத்தும் வலிமையுடையவனின் வலித்தோன்றலே!

மதங்கொண்ட ஆண்யானையை உடைய கரிகால் வளவனே!

போருக்குச் சென்ற நீ ஆற்றல் தோன்ற வெற்றி கண்டாய்!

புதுவருவாயையுடைய வெண்ணியில் ஊர்ப்புறத்தில் போர்க்களத்தில் மிகப் புகழமைந்த உலகை விரும்பி, புறப்புண்ணுக்கு நாணி வடக்கிருந்தோனுமான பெருஞ்சேரலாதன் உன்னை விட நல்லவன் அல்லவா?


பாடல் உணர்த்தும் கருத்து.


­1. அரசனின் இயல்பு கூறும் அரசவாகை என்னும் புறத்துறை சுட்டப்படுகிறது.

­2.காற்றினை ஏவல் கொண்டு மரக்கலத்தைச் செலுத்தியும், காற்றில்லாதபோது அதனைத் தம் ஆளுகைக்கு உட்படுத்தி மரக்கலத்தைச் செலுத்தும் சோழரின் மாண்பும்,

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!

என்னும் அடிகளால் உணர்த்தப்படுகின்றன. இதனால் பழந்தமிழரின் கடல் வணிகமும், கப்பல் செலுத்தும் அறிவும், ஆற்றலும் புலப்படுகின்றன.

­
3. எல்லா வெற்றியும் வெற்றியல்ல!
எல்லாத் தோல்வியும் தோல்வியல்ல!
ஒவ்வொரு வெற்றிக்குள்ளும் ஒரு தோல்வி உள்ளது!
ஒவ்வொரு தோல்விக்குள்ளும் ஒரு வெற்றியுள்ளது!

என்னும் அறிய வாழ்வியல் தத்துவத்தை இப்பாடல் உணர்த்துகிறது.


4.போரில் வென்ற சோழனின் வெற்றியை விட,

போரில் தோற்றாலும் மானத்துக்கு அஞ்சி உயிரைவிட எண்ணும் சேரலாதன் நல்லவனாகப் புலவர் கண்ணுக்குப்படுகிறான்.

இப்புலவர் சொல்கிறார் கரிகாலனே நீ நல்லவனே!
ஆனால் உன்னைவிட நல்லவன் சேரன்!

என்று.

5.வாழும் போது நம்மை யார்யாரே நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் சொல்வார்வகள்.

நாமும் நம்மைப் புகழும் போது அகமகிழ்ந்தும், இகழும் போது வருந்தியும் வாடுவோம்.

நாம் நல்லவர் என்பதும் தீயவர் என்பதும் அவர்களின் வார்த்தையிலில்லை.
நாம் வாழும் வாழ்க்கையில் தான் இருக்கிறதே என்னும் வாழ்வியல் நுட்பமே இப்பால் உணர்த்தும் கருத்தாக அமைகிறது.