வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 20 மே, 2011

குளத்தில் மூழ்கிக் குளிச்சா..


o இன்றைய தலைமுறையில் பலருக்கு நீச்சலே தெரிவதில்லை.
o அப்படியே தெரிந்தாலும், அவர்களில் பலர் நீ்ச்சல் பள்ளிகளிலே கற்றவர்களாக உள்ளனர்.

ஏனென்றால் பல ஊர்களில் குளங்களே கிடையாது.
இருந்தாலும் அவை கிரிக்கெட் விளையாடும் களங்களாகவே உள்ளன.

நான் கிராமத்தில் வளர்ந்தவன்..
அதனால குளங்களிலே மூழ்கிக் குளிச்சுத் தண்ணீர் குடிச்சு நீச்சல் கற்றுக் கொண்டேன்.

எனக்கு நீச்சல் தெரியும்னு சொன்னாக் கூட என் நண்பர்கள் நம்ப மாட்டேங்கறாங்க..

தலைமுறை எப்படி மாறிப் போச்சு..!!

ஒரு முறை தமிழகத்தில் பெருமழை பெய்து இரு பேருந்துகள் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாயின. அதில் இறந்தவர்கள் பலர். அவர்களுள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்ற வரிசையில் திருமணம் நிச்சயிக்கப் பெற்ற இளம் வாலிபர் ஒருவரும் இருந்தார். அவரின் உடல் வலிமைக்கு பத்துப் பேரையாவது காப்பாற்றியிருக்கலாம.

நீச்சல் தெரியாததால் அவருக்கு அவரைக் கூடக் காப்பாற்றிக் கொள்ளமுடியவில்லை.

சரி ஊரில் இருந்த குளங்கள் எல்லாம் எங்கே?????? காணோம்....???????

பாலுக்கு இணையாக தண்ணீர் விற்கும் இந்தக் காலத்தில்
குளத்து நீரை விலங்குகள் கூட குடிக்க யோசிக்கின்றன.

பலர் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு விலைகொடுத்து வாங்கும் குடிநீரைத்தான் கொடுக்கின்றனர்.

கிராமங்களில் சென்றால் பலர் குடிநீர்குளங்களில் தண்ணீர் எடுத்து தலையில் சுமந்து செல்வதைக் காணமுடியும்.

இப்போதெல்லாம் விலைக்கு விற்கும் குடிநீர் வண்டிகளைத் தான் அதிகம் பார்க்க முடிகிறது.



குடிநீர்க்குளம் என்று ஒன்று இருந்தது என்று சொன்னால் கூட இனிவரும் தலைமுறையினர் நம்ப மாட்டார்கள்.

சங்ககால வாழ்வியலைப் பாருங்கள்...


தனது பழமையான நகரத்தின் வாயிலில் உள்ள குளிர்ந்த பொய்கையில் நெடுஞ்செழியன் மூழ்கி நீராடினான்.

மன்றத்தில் அமைந்த வேப்ப மரத்தின் ஒளி பொருந்திய தளிரைச் சூடிக்கொண்டான்

தெளிவான ஓசையுடைய பறை முன் ஒலிக்கச் செல்லும் ஆண் யானையைப் போலப்,

பெருமையுடன், வெம்மையான போர் புரியும் நெடுஞ்செழியன் நடந்து வந்தான்.

அவனை எதிர்த்துப் போர் புரிய வந்த பகைவர் மிகப் பலரே..

பகல் பொழுது மிகவும் சிறியது.

இருப்பினும் அவனை எதிர்த்து வென்றவர்கள் யாரும் இல்லை.

பாடல் இதோ..


மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து
தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம் போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த
வம்ப மள்ளரோ பலரே
எஞ்சுவர் கொல்லோ பகல் தவச் சிறிதே.

புறநானூறு 79
திணை - வாகை
துறை - அரச வாகை
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது.
(ஒருவனாக நின்று பலரைப் போரில் வென்றமை பற்றிப் பாடுவது)


பாடல் வழியே..

1.மன்னனின் வீரம் பற்றிக் கூறும் அரசவாகை என்னும் புறத்துறை விளக்கப்படுகிறது.
2.யானை வருவதை அறிவிக்க பறை என்னும் தோற்கருவியை முழக்கியமை அறியமுடிகிறது.
3.பாண்டிய நெடுஞ்செழியனின் வீரமும், இயற்கையோடு இயைந்த சங்ககால வாழ்வியலும் அழகாக உணர்த்தப்படுகிறது.
4.நிகழ்காலத் தலைமுறையினருக்கு

குடிக்கவும், குளிக்கவும் குளங்கள் இருந்தன என்பதை நினைவுபடுத்தவும் எதிர்காலத் தலைமுறையினருக்கு அடையாளப்படுத்தவுமே இவ்விடுகை எழுதப்பட்டது.

வீட்டில ஏதாவது பொருள் காணவில்லையென்றால் காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம்.
ஊருல குளமே காணமல் போனால் யாரிடம் புகாரளிப்பது..?

16 கருத்துகள்:

  1. மிக அருமையான பதிவு.. குளம்,குட்டைகள் எல்லாம் இப்போது பரவலாக பிளாட்கள் ஆகி கட்டிடங்களாக மாறிவிட்டது உமக்கு தெரியாதா என்ன?

    பதிலளிநீக்கு
  2. @தங்கம்பழனி எனக்கு நன்றாகவே தெரியும் நண்பா..

    நீரின்றி அமையாது உலகு என்பதுதான் இந்த சுயநலவாதிகளுக்குத்

    (அரசியல்வாதிகள், இடவியாபாரிகள், நிலத்தடி நீரை உறிஞ்சும் மனித யானைகள்) தெரிவதில்லை.

    பதிலளிநீக்கு
  3. தம்பீ வணக்கம்

    பகைச் சுவைக் கொண்டோர்-இதை
    படித்திடக் கண்டோர்
    நகச்சுவை கொள் வார்-மேலும்
    நன்றியே சொல் வார்
    அகச்சுவை தன்னை அறிந்தவர்-நல்
    ஆய்வினை அதிலே புரிபவர்
    வகைச் சுவை ஒன்றே-இங்கே
    வழங்கிய விதமே நன்றே

    பதிலளிநீக்கு
  4. //குடிநீர்க்குளம் என்று ஒன்று இருந்தது என்று சொன்னால் கூட இனிவரும் தலைமுறையினர் நம்ப மாட்டார்கள்.//

    //பாலுக்கு இணையாக தண்ணீர் விற்கும் இந்தக் காலத்தில்
    குளத்து நீரை விலங்குகள் கூட குடிக்க யோசிக்கின்றன.//

    //பலர் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு விலைகொடுத்து வாங்கும் குடிநீரைத்தான் கொடுக்கின்றனர்.//

    மிகவும் நல்லதொரு பதிவு. அனைவரும் அரசாங்கமும் யோசிக்க வேண்டும். ஏதாவது செய்து குளங்களையும், ஏரிகளையும், ஆறுகளையும் மேலும் அழியாமல் காக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டிற்காக அடுத்த உலக யுத்தம் ஏற்படலாம் என்று சொல்லுகிறார்கள். பயமாகத்தான் உள்ளது.

    பதிலளிநீக்கு
  5. இயற்கை அழித்து தன்னை அழகாக்கும் மனிதனை என்ன செய்யப் போகிறீர்கள் !

    பதிலளிநீக்கு
  6. ஆதங்கத்துடன் எழுதப்பட்டு இருக்கும் பதிவுங்க.

    பதிலளிநீக்கு
  7. @வை.கோபாலகிருஷ்ணன் உண்மைதான் ஐயா நாமெலலாம் உணரவேண்டிய நேரமிது.

    பதிலளிநீக்கு
  8. @ஹேமா இயற்கையை அழித்துத் தன்னை அழகாக்குகிறான் மனிதன்..

    ஒருநாள் மனிதனை இயற்கை அழித்துத் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளும்.

    பதிலளிநீக்கு
  9. ஆற்றிலும், குளத்திலும் நீந்தி வளந்தவர்களின் ஆதங்கத்தை அழகாகச்சொல்லி இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  10. சங்க இலக்கியம் படிக்கும் வாய்ப்பு ரெம்ப குறைந்து விட்ட இந்த நாளில் இது போல பதிவு படிக்க மிக்க மகிழ்ச்சி... நீங்கள் தமிழாசிரியர் என அறிகிறேன்... பள்ளி பருவத்தில் தமிழ் படிக்க ஆர்வம் இருந்தது... அதன் பின் சரியான வழிகாட்டுதல் இன்றி வழி மாறி போயாகிவிட்டது... நன்றி இந்த பதிவுக்கு

    பதிலளிநீக்கு
  11. @Lakshmi தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்மா.

    பதிலளிநீக்கு