வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 1 ஜூன், 2011

பல்லைப் பிடுங்கிக் கதவில் பதித்தவன்.


தண்டனையளிப்பதால் செய்த தவறு சரியாகிவிடுமா..?
அடுத்த முறை இதே தவறு நிகழக்கூடாது என்ற நோக்கில்தானே காலந்தோறும் தண்டனைகள் விதிக்கப்பட்டு வந்திருக்கின்றன.

தண்டனைகள் எப்படியிருக்கவேண்டும்?

தாம் செய்த தவறை உணரச் செய்வதாக, மீண்டும் அந்தப்பிழை ஏற்படாது தடுப்பதாகவே இருக்கவேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டுதான் காலந்தோறும் நீதிவழங்கும் மரபுகள் வழக்கில் இருந்திருக்கின்றன.

எவ்வளவு காலங்கள் கடந்துவந்திருக்கிறோம்.
பரிணாம வளர்ச்சியில் விலங்கிலிருந்து வந்தவன் மனிதன் என்ற கருத்தை எடுத்துச் சொல்லும் அகப்பாடல் இது.

மனித உருவில் விலங்கைப் போல காட்டுமிராண்டித்தனம் நம்முள் எப்போதும் புதைந்து இருக்கும் அது எப்போது வெளிப்படும் என்பது நமக்கே தெரியாது.

இதோ இந்த அகப்பாடலில் அப்படியொரு விலங்கு வெளிப்படுகிறது பாருங்கள்..

தலைவனைப் பிரிந்த தலைவி சோர்வுடன் இருக்கிறாள். தலைவியின் நிலைக்கு வருந்திய தோழி சொல்வதாக இப்பாடல் அமைகிறது. தலைவன் மீண்டு வருவான் உன்னைச் சேர்வான் எனத் தேற்றும் தோழி அழகான வரலாற்றுக் குறிப்பு ஒன்றையும் தம் கூற்றில் தருகிறாள்.

யானை பிடிக்கும் சங்ககால மரபு

தோழி!
கேட்பாயாக..
சோழமன்னனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து குறுநில மன்னர் தத்தம் பணியாளரைக் கொண்டு பெரிய குழிகளைத் தோண்டி,
பிடி, கன்றுடன் புதிய யானைகளைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நெடுந்தொலைவில் குறுநிலத்தை ஆளும் எழினி என்னும் மன்னன் அடிமைத்தொழிலைப் பயிலாதவன். அதனால் அவன் மட்டும் யானைபிடிக்கும் அப்பணிக்கு வரவில்லை. அதனால் கோபமுற்ற சோழன் மத்தி என்பவனை ஏவி எழினிக்குத் தக்க பாடம் கற்பிக்கச் செய்தான்...

தண்டனையாக பல்லைப் பிடுங்கி கதவில் பதித்தல்

மத்தி என்பவன் சோழனின் ஆணைப்படி எழினியைச் சிறைபிடித்து அவனுடைய பல்லைப் பிடுங்கி வந்து கடற்கரை ஊராகிய வெண்மணியின் வலிமையான கோட்டைக் கதவில் பிறருக்குப் பாடமாக அப்பல்லைப் பதித்து வைத்தான்.

தன் வெற்றிக்கு அடையாளமாக அந்த ஊரின் கடற்கறையில் கல் நாட்டினான்.

இன்றுவரை தீராத புறம் பேசும் மரபு


அத்தகைய கல் விளங்கும் துறைமுகத்தில், அலைகள் கரையை மோதி ஆரவாரிக்கும். அதுபோல இந்த ஊரில் நம்மைப் பற்றிய பழிச்சொல் (அலர்) பெருகிவிட்டது. அதனால் தனக்குத் தொடர்பு இல்லாதது போல நாம் அதைக் கேட்டுத் துடிதுடித்து அழத் தலைவர் பிரிந்தார்.

அழகோவியம்

அவர் சென்ற திசையில் வேங்கட மலை உள்ளது. அங்கு வெண்கடம்ப மரங்கள் மிகுதி. அப்பகுதியில் திண்மையான கொம்புடைய யானை, தன் தினவைத் தீர்ப்பதற்காக மரத்தில் உரசும். அப்போது மரத்திலிருந்து மலர்கள், பனிக்கட்டிகள் போல உதிர்ந்துவிடும். அவை உழவர் பாறையின் மீது காயவைக்கும் வெந்நெல் விதைபோல உலர்ந்து கிடக்கும். அத்தகைய வேங்கட மலைக்கு அப்பால் வேற்றுமொழி வழங்கும் நாட்டுக்குத் நம் தலைவர் சென்று செயலாற்றினாலும் விரைந்து வந்து அருள் செய்வார் என்று தலைவியைத் தேற்றுகிறாள் தோழி.

பாடல் இதோ...

கேளாய் எல்ல! தோழி! – வாழிய
சுதைவிரிந்தன்ன பல்பூ மாராம்
பறைகண்டன்ன பாஅடி நோன்தாள்
திண்நிலை மருப்பின் வயக்களிறு உரிஞுதொறும்
தண்மழை ஆலியின் தாஅய் உழவர்
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும்
பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர்
குழியிடைக் கொண்ட கன்றுடைப் பெருநிரை
பிடிபடு பூசலின் எய்தாது ஒழியக்
கடுஞ்சின வேந்தன் ஏவலின் எய்தி
நெடுஞ்சேண் நாட்டில் தலைத்தார்ப்பட்ட
கல்லா எழினி எல் எறிந்து அழுத்திய
வன்கண் கதவின் வெண்மணி வாயில்
மத்தி நாட்டிய கல்கெழு பனித்துறை
நீர் ஒலித்தன்ன பேஎர்
அலர் நமக்கு ஒழிய அழப்பிரிந்தோரே.

மாமூலனார்.
பாலை.
அகநானூறு 211


பிரிவின்கண் வேறுபட்ட தலைவியின் வேறுபாடு கண்டு தோழி சொல்லியது.

பாடலின் வழியே..

1. பல்லைப் பிடுங்கி கதவில் பதிக்கும் சங்ககால போர்வழக்கத்தை அறியமுடிகிறது.
2. அகவாழ்வில் தலைமக்களைப் பற்றி ஊரார் பேசும் பழிச்சொல் (அலர்) பற்றி அறியமுடிகிறது.
3. யானைபிடிக்கும் வழக்கத்தில் அன்றைய பேரரசர்கள் தம் கீழுள்ள குறுநில மன்னர்களைப் பயன்படுத்தியமையை அறியமுடிகிறது.
4. உழவர்கள் வெண்ணெல் விதைகளைப் பாறையில் காயவைத்தமையும் பாடல் வழிப் புலனாகிறது.

10 கருத்துகள்:

  1. பதிவுலகில் தப்பு செய்தால் என்ன தண்டனை நண்பரே

    பதிலளிநீக்கு
  2. @ஷர்புதீன் பதிவுலகம் நமக்குக் கிடைத்த வரம்.

    இதனைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் சிந்திக்கவேண்டும்.

    அவரவர் மனசாட்சி தரும் தண்டனைகளைவிட பெரிய தண்டனைகளை யாரும் கொடுத்துவிடமுடியாது நண்பா.

    பதிலளிநீக்கு
  3. மனித உருவில் விலங்கைப் போல காட்டுமிராண்டித்தனம் நம்முள் எப்போதும் புதைந்து இருக்கும் அது எப்போது வெளிப்படும் என்பது நமக்கே தெரியாது.


    சரியாக சொன்னீங்க குணா...அந்த மிருகத்துக்கு பெயர் கோவமா இருக்குமோ?

    பதிலளிநீக்கு
  4. @தமிழரசி உண்மைதான் தமிழரசி.

    கோபம், பேராசை, சுயநலம், பொறாமை இன்னும் இன்னும்..

    பதிலளிநீக்கு
  5. நல்ல பல தகவல்கள் அறிய முடிந்தது. நன்றி. பதிவுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  6. நாங்கள்தான் எங்களுக்கு முதல் எதிரி !

    பதிலளிநீக்கு
  7. சங்ககால போர்வழக்கம் பற்றி தெரிந்துகொண்டோம்.

    பதிலளிநீக்கு
  8. வருகைக்கு நன்றி ஹேமா.

    நீங்கள் தான் உங்களுக்கு முதல்தோழி.

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மாதேவி.

    பதிலளிநீக்கு