வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

நிலவுக்கு வந்த சோதனை!


பொதுவாக நம் உறவினர்களைக் காணவில்லை என்றால் காவல் நிலையத்தில் புகாரளிப்போம், நாளிதழ்களில், வானொலியில், தொலைக்காட்சியில், இணையத்தில் விளம்பரம் செய்வோம் அக்கம்பக்கத்திலிருப்பவரிடம் விசாரிப்போம்...

இவையெல்லாவற்றையும் கடந்து சங்ககாலத் தலைவி ஒருத்தி தன் தலைவனைக் காணவில்லை என்று நிலவிடம் தேடச் சொல்கிறாள்.
எல்லோரையும்விட உயரத்தில் நீ இருப்பதால் என் தலைவன் இருக்கும் இடம் உனக்கு நன்றாகத் தெரியும்.
அதனால் மரியாதையாக என் தலைவன் எங்கு இருக்கிறான் என்று என்னிடம் கூறிவிடு. உனக்குத் தெரிந்தும் என்னிடம் அதை மறைத்தால் நீயும் என்போல தேய்ந்து அழிந்து காணமல்ப் போய்விடுவாய் என்று மிரட்டுகிறாள்.

பாடல் இதுதான்..

பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்
மால்பு இடர் அறியா நிறையுறு மதியம்!
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின்
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்!
நற் கவின் இழந்த என்தோள் போல் சாஅய்
சிறுகுபு சிறுகுபு செரீஇ
அறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே?

நற்றிணை-196
வெள்ளைக்குடி நாகனார்.

(நெட்டிடை கழிந்து பொருள் வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகள், திங்கள் மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது.)

தலைவன் தம் காதல் வெளிப்பட்டபின்னரும் திருமணம் செய்துகொள்ளாமல் பொருள் ஈட்டுவதற்காகப் பிரிந்து சென்றான். பிரிவை ஆற்றாத தலைவி நிலவை நோக்கி உரைப்பதாக இப்பாடல் அமைகிறது.

பல பகுதிகள் ஒன்றாக இணைந்தது போன்ற பல கதிர்களின் இடைஇடையே பாலை மொண்டு வைத்தது போலக் குளிர்ச்சியைக் கொண்ட வெண்மையான நிலா ஒளியையுடைய தேனை எடுக்க அமைந்த கண்ணேணியால் இடர்பட்டறியாத பல கலைகளும் நிறைவுற விளங்கும் நிலவே!

நீ சான்றாண்மையும் செம்மைக் குணங்களும் உடையயை ஆகலானும் உனக்குத் தெரியாது உறையும் உலகம் ஒன்றும் இல்லையாகலானும், எனக்குத் தெரியாதவாறு மறைந்து ஒழுகும் என்னுடைய காதலர் இருக்கும் இடத்தை எனக்கு நீ காட்டுவாயாக!

இவ்வாறு கேட்டும் நீ ஒன்றும் கூறாயாகலின் நிலவே!
நீ அறிந்த அளவில் சாட்சி கூறாது பொய் மேற்கொண்டனை! இச்செயல் புரிந்தமையால், நல்ல அழகிழந்த என்தோள் போல நீயும் வாட்டமுற்று நாள்தோறும் சிறுகிச் சிறுகிக் குறைந்து நீ மறைவாய்!
அவ்வாறு நீ ஆனால் உன்னால் காட்டவும் இயலுமா?

பாடல் வழியே!
1. பரிதிக் கதிர்களுக்கிடையே பால் ஊற்றி வைத்தது போலத் தோன்றும் பசுவெண்ணிலவு என்னும் உவமை புதுமையாகவுள்ளது.

2. களவுக்காலத்தில் தலைவன் தன்னைக் காணவருவதற்குத் நிலவு ஒளி தந்து துணை நின்றமை எண்ணிய தலைவி நிலவைப் போற்றினாள்.

3. எங்கோ இருக்கும் தன் காதலனைத் தேடிக் கண்டறிய நிலவின் துணையை நாடும் தலைவியின் மனநிலை காதலின் ஆழத்துக்கும், மனத்தடுமாற்றத்துக்கும் தக்க சான்றாகவுள்ளது.

4. உண்மை அறிந்தும் சொல்லாவிட்டால் அது பொய் சொன்னதற்கு இணையானது என்ற தலைவியின் கூற்று அக்கால நீதி வழங்கும் முறைக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது.

27 கருத்துகள்:

  1. உனக்குத் தெரிந்தும் என்னிடம் அதை மறைத்தால் நீயும் என்போல தேய்ந்து அழிந்து காணமல்ப் போய்விடுவாய் என்று மிரட்டுகிறாள்.

    மிரட்டுவது மட்டுமல்ல ஒரு வகையில் சாபமிடுகிறாள் என்றும் கூறலாமல்லவா!..வித்தியாசம் தான்...
    Vetha.Elangathilakam.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  2. நல் விமர்சனம் வழங்கிய உங்களுக்கு நன்றிகள் பல

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல படைப்பு. . .வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. நல்ல படைப்பு வாழ்த்துக்கள். . .

    பதிலளிநீக்கு
  6. நிலவை உவமிக்க அற்புதமான கற்பனை !

    பதிலளிநீக்கு
  7. தங்கத்தமிழ் ஆய்ந்து
    தம்பீ குணசீல
    சங்கத் தமிழ் தன்னை
    சலிப்பின்றி தருகின்றீர்
    உங்கள் பணிவாழ்க
    உள்ளம் வளம்சூழ்க
    திங்கள் போலானால்
    தேய்வின்றி திகழட்டும்
    புலவர் சா இராமாநுசம்
    கோபமா.. வரக்காணோம்

    பதிலளிநீக்கு
  8. அழகான பாடலுக்கு ரசனையுடன் விளக்கம் நண்பரே!

    பதிலளிநீக்கு
  9. வலையின் மூலமாகச் சங்க இலக்கியப் பாடல்களை அறிமுகம் செய்து வரும் தங்களுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி்.

    பதிலளிநீக்கு
  10. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி முனைவர் சின்னத்துரை.

    பதிலளிநீக்கு