வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 6 ஆகஸ்ட், 2011

நாம் ஏன் நிலவை வணங்குவதில்லை?


நிலவு - வானம் எழுதிய கவிதை!
நிலவு - பாட்டி வாழும் வீடு!
நிலவு - கவிஞர்கள் விழும் பள்ளம்!
நிலவு – அழகு விளையும் நிலம்!
நிலவு – இரவு நேர ஒளிவிளக்கு!
நிலவு - மழலையின் குறுஞ் சிரிப்பு!
நிலவு – காதலியின் முதல் முத்தம்!
நிலவு – வானத்தின் ஒற்றைப் புதையல்!
நிலவு – நம்மோடு வரும் நிழல்!
நிலவு – இரவு நேரத்துப் பாடகி!
நிலவு – ஒளி வழங்கும் வள்ளல்!
நிலவு – பசித்தவன் கொண்ட ஏக்கம்!
நிலவு – ருசித்தவன் விடும் ஏப்பம்!
நிலவு – ஏழை சிந்தும் கண்ணீர்!
நிலவு – கிணற்றில் உள்ள தண்ணீர்!
நிலவு – உடலை வருடும் இளந்தென்றல்!
நிலவு – உள்ளத்தை மயக்கும் மெல்லிசை!
நிலவு – இசையின் கால இடைவெளி!
நிலவு – நாவில் சிந்திய தேன்துளி!
நிலவு – கடவுள் காட்டும் முகம்!
நிலவு – அழகான ஓவியத்தின் இதயம்!
நிலவு - சொர்க்கத்தின் முதல் வாசல்!
நிலவு – சிந்தனையைத் தூண்டும் போதிமரம்
நிலவு – குடிசையின் கூரையில் மலரும் நட்சத்திரமலர்!

பொதுவாக நான் கவிதை எழுதுவது கிடையாது. இயற்கையை எடுத்தியம்பும் போதெல்லாம் என் எழுத்துக்களுக்கு கவிச்சிறகு முளைத்துவிடுகிறது.
நிலவைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு மேற்சொன்ன காட்சிகள் நினைவுக்கு வரும்.
சங்கப்புலவர்களுள் ஒருவரான உறையூரைச் சேர்ந்த மருத்துவன் தாமோதரனார் அவர்களும் நிலவைப் பார்க்கிறார் இவருக்கு சோழ மன்னனின் வெண்கொற்றக் குடை நினைவுக்கு வருகிறதாம்.

இயல்பாக நிலவைத் தொழுவது கிடையாது!
நிலவு சோழனின் வெண்கொற்றக்குடை போல இருப்பதால் தொழப்படுகிறது!
என்கிறார் இந்தப் புலவர்.

கடலின் நடுவே படகினில் ஏற்றி வைத்த விளக்கினைப் போல செவ்வாயின் ஒளி திகழும் மாகமாகிய வான் உச்சியில் முழுமதி நின்று தோன்றும். அதனைச் சுரமாகிய அரிய பாலை வழியில் காட்டில் வாழும் மயிலைப் போன்றவளும் சில வளையல்களை அணிந்தவளுமான விறலியுடன் நானும் கண்டேன். கண்டதும் விரைவாகப் பலமுறை தொழுதோம்.
கடற்கரைக் கழி முகத்திலுள்ள நீரால் விளைந்த உப்பினைச் சுமந்து மலைநாடு நோக்கிச் செல்லும் ஆரக்கால் அமைந்த வண்டி. அதனைப் பள்ளத்தில் ஆழ்ந்துவிடாதபடி வலிமையுடையதும் சுமைதாங்குவதுமான காளை இழுத்துச் செல்லும். அந்த வலிய காளையைப் போன்றவன் எம் அரசன். அவன் வெற்றி முழக்கமிடும் முரசும் தப்பாத வாளும் உடையவனாகிய வளவன். அவனுடைய வெயிலை மறைக்கும் பொருட்டு ஏந்தியதும் அச்சம் தருமாறு விளங்குவதும், முத்துக்கள் பொருந்தியதுமான தலைமையான வெண்கொற்றக்குடையைப் போன்றது நிலவு என்பதால் நிலவைப் பலமுறைத் தொழுதோம்.

முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச்
செம்மீ னிமைக்கு மாக விசும்பின்
உச்சி நின்ற வுவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையிற் சுரமுதல் சேர்ந்த
5.சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து
தொழுதன மல்லமோ பலவே கானற்
கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும்
ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட் டன்ன வெங்கோன்
10.வலனிரங்கு முரசின் வாய்வாள் வளவன்
வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை யொக்குமா லெனவே.
புறநானூறு 60
திணை: பாடாண் திணை துறை: குடை மங்கலம்.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

பாடல் வழியே.


1.கடலிற் செல்லும் படகில் இரவுக் காலங்களில்
விளங்கேற்றுவர் என்ற அக்கால வழக்கமும், அவ்விளக்கு வானத்தில் இரவில் விளங்கும் செவ்வாய் மீனுக்கு உவமமானது என்ற கூற்றின் வழி பழந்தமிழர்களின் வானியல் அறிவும் புலனாகிறது.

2.இந்தப் பாடலைப் பாடிய புலவர் மருத்துவன் தாமோதரனார் சங்ககாலத்தில் மருத்துவத் தொழில் செய்தார் என்பதும் பெயர் வழியே அறியமுடிகிறது.
3. நிலவை இயல்பாக வணங்குவதில்லை! சோழனின் வெண்கொற்றக் குடையைப் போல இருப்பதால் வணங்குகிறோம் என்ற மன்னின் ஆட்சிச்சிறப்பு அழகாகச் சொல்லப்படுகிறது.

4.சுமை இழுக்கும் காளையைப் போலத் திறமையானவன்,வலிமையானவன் சோழன் என்னும் கருத்து உரைக்கப்படுகிறது.
5.வெண்கொற்றக் குடையின் சிறப்பை உரைக்கும் குடைமங்கலம் என்னும் புறத்துறை விளக்கப்படுகிறது.

“இன்றும் நிலவு இருக்கிறது அரசு இருக்கிறது ஆட்சியிருக்கிறது.
ஆனால் யாரும் நிலவை வணங்குவதில்லை!
ஏன் வெண்கொற்றக் குடை இல்லை என்பதாலா?
நல்லாட்சி இல்லை என்பதாலா?

22 கருத்துகள்:

  1. இந்த பதிவில் தமிழ் விளையாடி இருக்கிறது,,

    பாராட்டுகள்..

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான் குணா.சிந்திக்க வைக்கிறீர்கள்.ஏதாவது பதிலும் நிச்சயம் வைத்திருப்பீர்கள்.
    பதிவாக்க்குங்களேன்.
    ஒருவேளை இரவல் ஒளியில் வாழுவதாலோ !

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. ஒரு நாட்டுப் பாடலில் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்--
    “சோளப் பொறி நடுவே
    சுட்டு வச்ச தோசையைப் போல்”
    முழு நிலவு போல் பதிவு!

    பதிலளிநீக்கு
  5. அன்பின் குணா! எனக்கு பிடித்த பாடல்களில் இது ஒன்று! நிலவு பூரணமாய் விகசிக்கும்போது அதிகமாவது
    மனநிலை குன்றியவர்களின் உணர்வுக் கொந்தளிப்பும், மற்றும் காதலும்...

    பதிலளிநீக்கு
  6. அங்கும் கொடி நாட்டி. உலகில் தாங்கள் தான் பெரியவர்கள் என மார்தட்ட நினைக்கின்றது இன்றைய சமூகம். இயற்கையை மறந்து, அதை அழிக்கத் துவங்கிவிட்டது. . .

    பதிலளிநீக்கு
  7. கவித்துவமாகவே சிந்திக்கிறீர்கள் ஹேமா..

    அரசியல் சுயநலத் தன்மையைத் தான் இப்பாடல்வழி உரைத்திருக்கிறேன் ஹேமா.

    பதிலளிநீக்கு
  8. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சென்னைப் பித்தன் ஐயா.

    பதிலளிநீக்கு
  9. நிலவு முழு நிலவாய்...
    அழகான பகிர்வு.
    பாடல் விளக்கம் அருமை.
    நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. தம்பீ!
    சொந்தக் கவி எழுதி-நல்
    செந்தமிழ்க் கடல் தேடி
    திங்கள் தனை நாடி-நெஞ்சத்
    தரைதன்னில் நட மாடி
    சங்கத் தமிழ் ஆய்ந்து-ஓர்
    சான்றையும் உடன் ஈ்ந்து
    எங்கள் மனம் மகிழ-நீர்
    இன்றே வழங்கினீர் இனிது

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  11. தம்பீ!
    சொந்தக் கவி எழுதி-நல்
    செந்தமிழ்க் கடல் தேடி
    திங்கள் தனை நாடி-நெஞ்சத்
    தரைதன்னில் நட மாடி
    சங்கத் தமிழ் ஆய்ந்து-ஓர்
    சான்றையும் உடன் ஈ்ந்து
    எங்கள் மனம் மகிழ-நீர்
    இன்றே வழங்கினீர் இனிது

    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  12. ஆனால் யாரும் நிலவை வணங்குவதில்லை!//

    நிலவை வணங்குகிறோமே.

    சித்ரா பௌர்ணமி அன்று சித்ரான்ன்ங்கள் படைத்து தீபாராதனை காட்டுவார்கள்.

    ரம்ஜான் நோன்பு பிறை தொழுதபின்னே ஆரம்பிக்கிறது.
    மூன்றாம் பிறை வணங்கப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  13. இயற்கையை எடுத்தியம்பும் போதெல்லாம் என் எழுத்துக்களுக்கு கவிச்சிறகு முளைத்துவிடுகிறது.//

    க‌விதையும், பாட‌லும், விள‌க்க‌மும் பூர‌ண‌ நில‌வொளி போல் ... வாழ்க‌!

    பதிலளிநீக்கு
  14. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  15. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கவிஞரே.

    பதிலளிநீக்கு
  16. உண்மைதான் இராஜேஷ்வரி நிலவைச் சமயம் சார்ந்து வழிபடுவது சிறுகூட்டத்தாரின் மரபாகத்தான் இருக்கிறது.

    இப்பாடல் எந்த சமயம் சார்ந்தும் விளக்கப்படவி்ல்லை.

    நல்ல ஆட்சியைத் தரும் வெண்கொற்றக்குடையுடன் நிலவை ஒப்பிட்டு உரைக்கப்பட்டுள்ளது.

    இப்பாடலை நாம் சமயம் கடந்து பார்கக்வேண்டும்.
    பாடலை முதல் முறை படிக்கும் போது.. தலைப்பை முதல் முறை படிக்கும் போது இச்சிந்தனைதான் தோன்றும் மீண்டும் ஒருமுறை படித்தால் பாடலின் உட்பொருள் நன்கு விளங்கும்.

    தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இராஜேஷ்வரி.

    பதிலளிநீக்கு
  17. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நிலாமகள்.

    பதிலளிநீக்கு
  18. கவிச்சிறகு ரெக்கை கட்டிப் பறந்துள்ளது. அருமையான வரிகள் நிலவு பற்றி. மீதி இலக்கியம் சொல்லவே தேவையில்லை சுவையோ சுவை. நன்றி
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு