வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 20 ஆகஸ்ட், 2011

தன்மானம் = உயிர்!



மானம் என்றால் அது ஏதோ மேலே இருப்பது என்று பலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். வானம் வேறு மானம் வேறு.
மானம் என்றால் என்ன?
உயிர் எப்படி தனித்துவமானதோ, மதிப்பிற்குரியதோ! அதுபோலத்தான் மானம்!
மானம் போனா உயிர் வாழக்கூடாது என்றனர் நம் முன்னோர்!
ஆனால் இன்று..

தலைக்கு மேல வெள்ளம் போகும் போது அது சாண் போனா என்ன? முழம் போனா என்ன?
என்று வாழ்ந்துகொண்டிருக்கிறோம்!!

நம் தேவையை நிறைவு செய்துகொள்ள யார் காலை வேண்டுமானாலும் பிடிக்கத் தயங்குவதில்லை.
அதனால் தான்..

கால்கை பிடித்தல்! கால்கை பிடித்தல்!
என்பது காக்கை பிடித்தல்! காக்கை பிடித்தல்! என்று பரவலாகப் பேசப் படுகிறது.
இதுவும் ஒரு வாழ்க்கையா..?


செல்வநிலையில் செம்மையான வாழ்க்கை வாழ்வதற்கும்,
வறுமை நிலையில் செம்மையான வாழ்க்கை வாழ்வதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.


இதோ ஒரு சங்க காலப் புலவர் ஒருவரின் தன்மானமுள்ள வாழ்வியலைப் பாருங்களேன்..

குமணனும் பெருஞ்சித்திரனாரும்.

குமணன் கடையெழு வள்ளல்கட்குக் காலத்தாற் பிற்பட்டவன்;
இவன் முதிர மலையைச் சார்ந்த நாட்டை ஆண்ட குறுநில மன்னன்.
இந்நாடு இயல்பாகவே நல்ல வளம் சிறந்தது. குமணனைப் பாடிப் பரிசில் பெற்றவர்களுள் பெருஞ்சித்திரனார் குறிப்பிடத்தக்கவராவார்.

தன்மானம் = உயிர்!

குமணனைப் பெருஞ்சித்தரனார் பாடிய பாடல் ஒன்று தன்மானத்தின் மதிப்பை உணர்த்துவதாக உள்ளது.பெருஞ்சித்திரனார், இப் பாட்டின்கண்,

வறுமைத் துயரால் தன்னைப்
பெற்ற முதிய தாயும், இனிய மனைவியும், பலராகிய மக்களும் உடல்
தளர்ந்து மேனி வாடிக் கிடப்பதும் அவர் நெஞ்சு மகிழுமாறு தான்
பொருள் பெற்றுச் செல்லவேண்டி யிருப்பதும் எடுத்துரைத்து
“யான் களிறு முதலிய பரிசில் பெறுவேனாயினும் முகமாறித் தரும் பரிசிலைப் பெற
விரும்பேன்;
நீ உவந்து நான் இன்புற பரிசு தந்தால் குன்றிமணி
யளவாயினும் விரும்பி ஏற்றுக் கொள்வேன்;
எனக்கு
அவ் வின்பமுண்டாகும் வகையில் என்னை அருள வேண்டுகின்றேன்”என்று
கூறுகின்றார்.

“வாழு நாளோ டியாண்டுபல வுண்மையிற்
றீர்தல்செல் லாதென் னுயிரெனப் பலபுலந்து
கோல்கா லாகக் குறும்பல வொதுங்கி
நூல்விரித் தன்ன கதுப்பினள் கண்டுயின்று
5 முன்றிற் போகா முதிர்வினள் பாயும்
பசந்த மேனியொடு படரட வருந்தி
மருங்கிற் கொண்ட பல்குறு மாக்கள்
பிசைந்துதின வாடிய முலையள் பெரிதழிந்து
குப்பைக் கீரை கொய்கண் ணகைத்த
10 முற்றா விளந்தளிர் கொய்துகொண் டுப்பின்று
நீருலை யாக வேற்றி மோரின்
றவிழ்ப்பத மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த வுடுக்கைய ளறம்பழியாத்
துவ்வா ளாகிய வென்வெய் யோளும்
15 என்றாங், கிருவர் நெஞ்சமு முவப்பக் கானவர்
கரிபுன மயக்கிய வகன்கட் கொல்லை
ஐவனம் வித்தி மையுறக் கவினி
ஈனல் செல்லா வேனற் கிழுமெனக்
கருவி வானந் தலைஇ யாங்கும்
20 ஈத்த நின்புக ழேத்தித் தொக்கவென்
பசிதினத் திரங்கிய வொக்கலு முவப்ப
உயர்ந்தேந்து மருப்பிற் கொல்களிறு பெறினும்
தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலெ னுவந்துநீ
இன்புற விடுதி யாயிற் சிறிது
25 குன்றியுங் கொள்வல் கூர்வேற் குமண
அதற்பட வருளல் வேண்டுவல் விறற்புகழ்
வசையில் விழுத்திணைப் பிறந்த
இசைமேந் தோன்றனிற் பாடிய யானே.


புறநானூறு -159.
திணை: அது. துறை: பரிசில் கடாநிலை. அவனை அவர்
பாடியது..

ஈன்றாள் கண்ட பசி

"ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை" (குறள் 656)

தன்னைப் பெற்ற தாய் பசியால் வாடுவதைப் பார்த்து மனம் வருந்தி வேதனைப்படும்பொழுதுகூட, சான்றோர்கள் பழிப்பதற்குக்குக் காரணமான இழிந்த செயல்களை செய்யக் கூடாது என்பர் வள்ளுவர்.

இக்குறளின் பொருளை புலவர் பெருஞ்சித்திரனாரின் வாழ்க்கையில் தான் நான் முழுமையாக உணர்ந்து கொண்டேன்.

சென்ற ஆண்டுகள் பல உண்டாதலின், இன்னும் போகின்றதில்லை எனதுயிரென்று சொல்லிக்கொண்டு வாழும் நாளோடு பலவாக வெறுத்துத் தான்பிடித்த தண்டே காலாகக்கொண்டு ஒன்றற்கொன்று அணுகப் பல அடியிட்டு நடந்து நூலை விரித்தாற் போலும் மயிரையுடையவளாய்க் கண்மறைந்து முற்றத்திடத்து மூப்பையுடைய தாயும் பசியுடன் வாடி தாம் உயிர் துறக்கும் நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறாள்!

உடல் மெலிந்த மனைவி

பசப்புற்ற மேனியுடனே நினைவு வருத்த வருந்தி இடையிலே எடுத்த பல சிறுபிள்ளைகள் பிசைந்து மெல்லுதலால் உலர்ந்த முலையினையுடையளாய் மிகவும் வருந்திக் குப்பையின்கண் படுமுதலாக வெழுந்த கீரையினது முன்பு கொய்யப்பட்ட கண்ணிலே கிளைத்த முதிராத இளைய தளிரைப் பறித்துக்கொண்டு உப்பின்றியே நீரை உலையாகக் கொண்டு ஏற்றிக் காய்ச்சி மோரின்றி அவிழாகிய உணவை மறந்து பசிய இலையைத் தின்று மாசோடு கூடித் துணிபட்ட உடையினளாய் அறக்கடவுளைப் பழித்து என் மீது அன்பு குறையாதவளாக வாழும் பெருஞ்சித்திரனாரின் மனைவி!

வாழ்க்கையின் பொருள்!

வேடர் சுடப்பட்டுக் கரிந்த புனத்தை மயங்க உழுத அகன்ற இடத்தையுடைய கொல்லைக்கண் ஐவனநெல்லோடு வித்தி இருட்சியுற அழகுபெற்றுக்கோடைமிகுதியான் ஈன்றலைப்பொருந்தாத தினைக்கு இழுமெனும் அனுகரணவொலியுடனே மின்னும் இடியுமுதலாகிய தொகுதியையுடைய மழை துளியைச் சொரிந்தாற் போலத் தந்த நினது புகழை வாழ்த்திப் பசியால் வருத்தமுற்ற எனது சுற்றமும் மகிழ,

மேம்பட்டு ஏந்திய தந்தங்களைக் கொண்ட கொல்யானையைப் பெறினும் முகமாறித் தரும் பரிசிலைக் கொள்ளேன்;
மகிழ்ந்து நீ யான் இன்புற விரையத் தந்து விடுவையாயிற் சிறிதாகிய குன்றியென்னும் அளவையுடைய பொருளாயினும் கொள்வேன்;

கூரிய வேலையுடைய குமணனே! இசைமேந்தோன்றல்!
நிற்பாடிய யான் கொல்களிறு பெறினும் தவிர்ந்துவிடுபரிசில் கொள்ளேன்; இருவர்நெஞ்சமுமுவப்ப, ஒக்கலுமுவப்ப உவந்து இன்புறவிடுதியாயிற் குன்றியுங்கொள்வேன்; அதற்பட அருளல் வேண்டுவலெனக் கூட்டி வினைமுடிவுசெய்க என்று வள்ளல் குமணனைப் புலவர் பெருஞ்சித்திரனார் பாடுகிறார்.

பாடல்வழியாக உயிருக்கு இணையானது தன்மானம்! அதனை பொருளுக்காக விற்கக் கூடாது என்னும் வாழ்வியல் அறம் உணர்த்தப்படுகிறது


ஒப்பீடு


அன்று பொருளில்லாவிட்டாலும் மதித்த தாய்! மனைவி!குழந்தைகள்!
இன்று பொருளில்லாவிட்டால் மதிக்காத தாய்! மனைவி!குழந்தைகள்!

அன்று வறுமையில் வாழ்ந்தாலும் மானத்தோடு வாழ்ந்தனர்!
இன்று செல்வநிலையில் வாழ்ந்தாலும் மானத்தின் பொருளறியாது வாழ்கின்றனர்!

50 கருத்துகள்:

  1. உண்மைதான்... நம் முன்னேற்றதுக்காக நாம் அடுத்தவரின் கால் கை பிடிக்க தயங்குவதில்லையே..

    பதிலளிநீக்கு
  2. ப‌திவின் த‌க‌வ‌ல்க‌ள் எப்போதும் போல் ப‌ய‌ன் நிறைந்த‌தாய்...!

    பதிலளிநீக்கு
  3. தன்மானம் = உயிர்! என்பதை பெருஞ்சித்தரனார் பாடிய பாடல் மூலம் விளக்கம் தந்ததற்கு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  4. ''..இன்று செல்வநிலையில் வாழ்ந்தாலும் மானத்தின் பொருளறியாது வாழ்கின்றனர்!..''
    உண்மை நிலை இது தானே!..பல தடவை வாசித்து விளங்கவேண்டிய அருமை விளக்கங்கள் நன்றி. வாழ்க!
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  5. வெட்கப் படக்கூடிய விசயம்தான்
    சுட்டிக் காட்டியதற்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  6. அழகு அழகு அழகு
    முனைவரே,
    காக்கை பிடித்தல் னா இதுதானா?!!

    தன்மானம் பற்றியும் பொருளில்லாமை பற்றியும்
    அழகுபட சங்கப் பாடல்கள் மூலம் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள்.

    பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது சத்தியமான உண்மை...
    அதற்காக பொருளீட்ட அடிவருடி ஆகிவிடவேண்டாம் என உரைக்கும்
    உங்கள் பதிவு அருமை.

    பதிலளிநீக்கு
  7. //குப்பைக் கீரை கொய்கண் ணகைத்த
    முற்றா விளந்தளிர் கொய்துகொண் டுப்பின்று
    நீருலை யாக வேற்றி மோரின்
    றவிழ்ப்பத மறந்து பாசடகு மிசைந்து //

    இந்த நிலையிலும் மானம் பெரிதெனச் சொல்லும் ஒரு புலவர்!ஆனால் இன்றோ!ஆள்பவர்க்குக் காவடி தூக்கும் கவிஞர்கள்!

    அருமையான பகிர்வு ஐயா.

    பதிலளிநீக்கு
  8. என்ன தான் காரி துப்பினாலும் திருந்த மாட்டார்கள்......

    பதிலளிநீக்கு
  9. //அன்று வறுமையில் வாழ்ந்தாலும் மானத்தோடு வாழ்ந்தனர்!
    இன்று செல்வநிலையில் வாழ்ந்தாலும் மானத்தின் பொருளறியாது வாழ்கின்றனர்!//
    அருமையான ஒப்பீடு.

    புலவர் பெருஞ்சித்திரனாரின் வாழ்க்கையை பற்றிய விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
  10. தன்மானம் கெட்டு வாழ்வதில் அர்த்தமில்லை....

    பதிலளிநீக்கு
  11. அற்புதமான ஒரு பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி முனைவரே....

    கால்கை பிடித்தல் - காக்கை [காக்காய்] பிடித்தல் - எத்தனை மாற்றம்!

    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  12. நல்ல பகிர்வு..பல புதிய விளக்கங்கள்!!

    பதிலளிநீக்கு
  13. நல்ல பகிர்வு..பல புதிய விளக்கங்கள்!!

    பதிலளிநீக்கு
  14. முனைவரே!

    அன்று, தன் மானமுள்ள தமிழன்
    எப்படி வாழ்ந்தான் என்பதைத்
    தெளிவு படுத்தி யுள்ளீர் நன்றி!
    இன்று,ஈழத்தில் தமிழின மங்கையர்
    களின் கொங்கைகளை அறுத்து எறிகிறான். வந்த செய்தி.
    நாம் என்ன எழுதினாலும் அது
    கல்மேல் போட்ட விதையே கடலில்
    பெய்த மழையை காட்டில் காய்ந்த
    நிலவே ஆகும்.

    மேலும் தங்களின் அன்பு
    ஆலோசனையின் படி குறளின்
    கருத்தினை வைத்து சில கவிதைகள் தர முயல்கிறேன்
    புலவர் சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
  15. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி கவிதைக் காதலன்.

    பதிலளிநீக்கு
  16. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இலங்கா திலகம்.

    பதிலளிநீக்கு
  17. உண்மைதான் மகேந்திரன்.

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  18. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி சென்னைப் பித்தன் ஐயா.

    பதிலளிநீக்கு
  19. நாம் யாரையும் மாற்றமுடியாது சசி.
    நம்மை நாமே மாற்றிக் கொள்வதே

    சிலநேரங்களில் சமூக மாற்றமாக உருவாகும் நம்பிக்கையில்தான் இவ்விடுகை.

    பதிலளிநீக்கு
  20. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ராம்வி.

    பதிலளிநீக்கு
  21. தங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சௌந்தர்.

    பதிலளிநீக்கு
  22. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நனறி வெங்கட்.

    பதிலளிநீக்கு
  23. தங்கள் கருத்துரைக்கு நன்றிகள் மைந்தன் சிவா.

    பதிலளிநீக்கு
  24. //
    அன்று பொருளில்லாவிட்டாலும் மதித்த தாய்! மனைவி!குழந்தைகள்!
    இன்று பொருளில்லாவிட்டால் மதிக்காத தாய்! மனைவி!குழந்தைகள்!

    //
    உண்மைதான்

    பதிலளிநீக்கு
  25. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி புலவரே..

    நம்மால் முயன்றவரை எழுத்துக்களையே ஆயுதமாக்குவோம்..

    பதிலளிநீக்கு
  26. தங்கள் வருகைக்கும் வாசிப்புக்கும் நன்றி ஆல்வரோ

    தங்கள் தளத்துக்கு வர இயலவில்லை எழுத்துருச்சிக்கல் உள்ளது.

    குரோம் தங்கள் மொழியை ஏற்கவி்ல்லை வேறு உலவியில் தங்கள் தளத்துக்கு வரமுயல்கிறேன் நண்பா

    பதிலளிநீக்கு
  27. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி இராஜா

    பதிலளிநீக்கு
  28. வெகுநாட்கள் ஆகிவிட்டது இம்மாதிரி படித்து ! நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  29. E=MC 2 போன்ற தலைப்பு...பதிவுலகில் எங்கும் இல்லாத களம்...பேனா உதறி ...தூரிகை வைத்து எழுத்து...

    தொடருங்கள் முனைவரே...தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  30. அருமையான பகிர்வு...
    நல்ல இலக்கிய விளக்கம்...
    வாழ்த்துக்கள் முனைவரே...

    பதிலளிநீக்கு
  31. அருமையான பகிர்வு நண்பரே!அனைத்து தளங்களிலும் உங்களை காண்கிறேன்.என் தளத்திற்கும் ஒரு முறை வந்து போங்கள்!

    பதிலளிநீக்கு
  32. தங்கள் ஒப்பீடு என்னை மேலும் கடமையுடன் எழுதத் தூண்டுகிறது ரேவரி நன்றி.

    பதிலளிநீக்கு
  33. தங்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீதர் இதோ..

    தங்கள் தளத்தில் போட்டோசாப் பற்றி இவ்வளவு தகவல்கள் தந்திருப்பீர்கள் என்று நினைத்தும் பார்க்கவில்லை.

    நல்ல பதிவுலகப் பணி.
    தொடர்க நண்பா.

    பதிலளிநீக்கு
  34. தன்மானம் = உயிர்! என்பதை பெருஞ்சித்தரனார் பாடிய பாடல் மூலம் விளக்கம் தந்ததற்கு நன்றிகள்..நல்ல பகிர்வு..பல புதிய விளக்கங்கள்!!

    பதிலளிநீக்கு