Wednesday, January 18, 2012

பிடி நாண..எதிரிகளின் கோட்டைச்சுவர்களைத் தாக்கி அழித்த பாண்டியனின் களிற்று யானை போர் முடிவில் தந்தங்களை இழந்து காட்சியளிக்கும்.

ஆண்மையின் அடையாளமல்லவா தந்தம்!
தந்தத்தை இழந்து தம் இனமான பெண் யானையிடம் எந்த முகத்துடன் செல்வது என்று வெட்கப்பட்ட களிற்று யானை தன்னைத் தேடிப் பிடி வந்துவிடுமோ என்று அஞ்சி தன் மானத்தைக் காக்க இறந்துபோன அரசர்களின் குடல்களை வாரி, தன்னுடைய உடைந்த தந்தங்களை மறைத்துக்கொண்டது  என்று 
பள்ளிக் காலத்தில் முத்தொள்ளாயிரம் என்னும் சிற்றிலக்கியத்தில் படித்திருக்கிறேன்...

அடுமதில் பாய அழிந்தன கோட்டைப்
பிடிமுன் பழகஅதுஅழில் நாணி முடியுடை
மன்னர் குடரால் மறைக்குமே செங்கனல்வேல்
தென்னவர் கோமான் களிறு.

(முத்தொள்ளாயிரம் 67)

சுவைமிக்க இப்பாடைலை மீண்டும் நினைவுபடுத்துவது போன்ற புறப்பாடல் ஒன்று.. 


ஒரு சிறிய ஊரைக் குறுநில மன்னன் ஒருவன் ஆண்டு வந்தான். அவனை எதிர்த்து பெருநில மன்னன் ஒருவன் போரிடவந்தான். 
இவனும் அஞ்சாது அவனை எதிர்த்துப் போரிட்டான். 
குறுநில மன்னன் எய்த வேலானது பெருநில மன்னனின் யானையின் முகத்தில் தைத்தது 
அதனால் அவ்வரசன் சினம் (கோபம்) கொண்டு இக்குறுநில மன்னன் மீது வேலெறிந்தான். அவ்வேலானது சந்தனம் பூசிய  குறுநில மன்னனின் மார்பில் தைத்தது.

பெரிய வலிமையுடைய இக்குறுநில மன்னனோ தன் மார்பில் புகுந்த ஒளிபொருந்திய அவ்வேலினை எடுத்து வீசினான். அதனைக் கண்டு அப்பெரு வேந்தனின் களிறுகள் எல்லாம் இளைய பெண் யானைகள் தம்செயலினைக் கண்டு நாணம் கொள்ளுமே என்று கூட எண்ணாமல் புறம்காட்டி ஓடின.

தங்கத்தை உருக்கி ஒழுகவிட்டாற்போன்ற முறுக்கடங்கிய நரம்பினையும், மின்னலைப் போல ஒளிவிடும் நிறமுடைய தோலினையும், மிஞிறு என்னும் வண்டினங்கள் எழுப்பும் குரல் இசைபோன்ற ஒளியையும் உடைய சிறிய யாழினை மீட்ட வல்ல பாணனே இவ்வீரனின் மனவலிமையை உன் யாழில் இசைத்துப் பாடு என்று புலவர் பாணனிடம் கேட்டுக்கொள்வதாக இப்பாடல் அமைகிறது.
பாடல் இதோ..

பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
மின்னேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்
நன்மை நிறைந்த நயவரு பாண
சீறூர் மன்னன் சிறியிலை யெஃகம்
வேந்தூர் யானை யேந்துமுகத் ததுவே;
வேந்துடன் றெறிந்த வேலே யென்னை
சாந்தா ரகல முளங்கழிந் தன்றே
உளங்கழி சுடர்ப்படை யேந்திநம் பெருவிறல்
ஓச்சினன் றுரந்த காலை மற்றவன்
புன்றலை மடப்பிடி நாணக்
குஞ்சர மெல்லாம் புறக்கொடுத் தனவே.

புறநானூறு -308
    
 திணை: வாகை. துறை: முதின்முல்லை. கோவூர்கிழார் பாடியது.

இப்பாடல்களின் யானைகள் வெட்கப்படுவது புலவரின் கற்பனை என்று அவ்வளவு எளிதில் இக்காட்சிகளைப் புறம் தள்ளிச் செல்லமுடியவில்லை. 

மனதில் பதிவது களிற்று யானையின் வீரமும், பிடியானையின் ஆழ்ந்த பார்வையும் மட்டுமல்ல.. 
பாண்டியன், குறுநில மன்னன் ஆகிய இருவரின் 
வீரமும், தன்மானமும் தான். 
வயிற்றுக்காக எதையும் விற்று வாழும் இன்றைய தலைமுறைக்கு இலக்கியச் சுவையோடு தமிழர்தம் மரபுகளையும் நினைவுபடுத்தவே இவ்விடுகை

தொடர்புடைய இடுகை.

20 comments:

 1. இலக்கிய சுவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 2. தமிழ் தேன் விருந்து.

  ReplyDelete
 3. Replies
  1. வருகைக்கு நன்றி இராஜா

   Delete
 4. யானை வெட்கப்படுமா?என்ன ஒரு கற்பனை.நல்ல பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. தமிழ் நயம் பாராட்டியமைக்கு நன்றி தோழி.

   Delete
 5. அருமை முனைவரே!
  இன்றைய நிலையில் நாணம் என்பது
  பெண்களிடம் காண்பதே குறைந்து வருகிறதே!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் புலவரே..

   Delete
 6. தங்களின் ஒவ்வொரு பதிவும் இன்றைய சூழலுக்கு தேவையான ஒன்று. நம் வரலாற்றையும், பண்பாட்டையும் மறந்ததினால் தான் உண்ணும் உணவிலிருந்து உணர்வு வரை மேற்கத்திய ஈர்ப்பால் மெய்மறந்து சீரழிகின்றனர்.

  ReplyDelete
  Replies
  1. மெய்மறந்து சீரழிகின்றனர் என்பது உண்மைதான் நண்பரே

   Delete
 7. Pura 400 arumai. KOVURKIZHAR arumaiyana pulavar thaan pola. Pakirvukku Nanri.

  TM 8.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி அன்பரே

   Delete
 8. அன்பின் குணா - சங்க இலக்கியங்களான முத்தொள்ளாயிரம் மற்றும் புறநானுற்றிலிருந்து பாடல்களை எடுத்து விளக்கத்துடன் பதிவிட்டது நன்று - நல்வாழ்த்துகள் குணா - நட்புடன் சீனா

  ReplyDelete
 9. மறுமொழிகளைப் பின் தொடர்பதற்கு

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா. இயல்பாகவே மறுமொழியிட்டால் உங்கள் மின்னஞ்சலுக்குப் பின்தடமறிந்து அஞ்சல்கள் வரும்.

   Delete