வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 15 டிசம்பர், 2012

ஊடுதல் காமத்துக்கு இன்பம்.


அன்று கோவலன் மாதவியிடம் சென்று மீண்டும் கண்ணகியிடம் வந்தபோது, அன்றைய கண்ணகி காலில் இருந்த சிலம்பைக் கழற்றிக் கொடுத்தாளாம். அதுதான் கற்புடைமை என இன்றும் போற்றப்படுகிறது.

இன்றைய கண்ணகியாகியரும் காலில் உள்ளதைக் கழற்றிக்கொடுப்பார்கள். சிலம்பை அல்ல! செருப்பை!

தலைவன் பரத்தையரிடம் சென்று மீண்டும் தலைவியை நாடி வருகிறான். அவனுடைய தவறை மறந்து, அவனை ஏற்றுக்கொள். அவன் மீது கோபம் கொள்ளாதே என்று தோழி தலைவியிடம் சொல்கிறாள். அப்போது தோழியிடம் தலைவி சொல்வதாக இப்பாடல் அமைகிறது

நன்னலம் தொலைய நலம் மிகச் சாஅய்

இன்னுயிர்க் கழியினும் உரையல் அவர்நமக்கு

அன்னையும் அத்தனும் அல்லரோ தோழி

புலவியது எவனோ அன்பிலங்கடையே

அள்ளூர் நன்முல்லையார்

குறுந்தொகை -93

எனது பெண்மை நலம் கெடவும், உடல் மெலியவும், எல்லாவற்றையும் விட எனது இனிய உயிர் நீங்கினாலும், அவரிடம் கோபமாக நடந்துகொள்ளாதே அவரை ஏற்றுக்கொள் என்கிறாய்?
நீ சொல்வதும் சரிதான்!
தலைவர் நமக்கு தாயும், தந்தையும் அல்லவா?
அவரிடம் நான் எவ்வாறு கோபம் கொள்வேன்!
கோபம் கொள்ள அவர் என்ன என் தலைவரா?
கோபமெல்லாம் அன்புடையாரிடத்தல்லாவா நிகழ்வது?

இப்பாடலை நேரடியாகப் பார்த்தால் தலைவன் பெற்றோருக்கு இணையாக வைத்துப் பாராட்டப்படுகிறான் என்றுதான் தோன்றும். ஆனால் ஆழமாகப் பார்த்தால், தலைவன் மீது தலைவிகொண்ட கோபம் புரியும்.

தலைவன் பெற்றோரைப் போல மதிக்கத்தக்கவன்
ஆனால் என் கணவன்(காதலன்) போல அன்புகொண்டு கூடி மகிழத் தகுதியில்லாதவன்.
என்ற கருத்துதான் தலைவியின் ஆழ்மனவெளிப்பாடாகவுள்ளது.

தலைவன் பரத்தையிடம் சென்றதால், தலைவிக்கு ஏற்பட்ட நயமான ஊடல்(புலவி) நறுக்கென்று தலைவனுக்குத் அவன் தவறை உணர்த்துவதாக உள்ளது.

அன்பு யார் மீதும் காட்டலாம்
ஆனால்
கோபம் உயிருக்கு மேலான உரிமையுடையவரிடம் தான் வெளிப்படத்தமுடியும் 
என் கருத்தை எடுத்தியம்புதாக இப்பாடல் அமைகிறது.



தொடர்புடைய இடுகை.
                                                   





                                 நயமான ஊடல் 

9 கருத்துகள்:

  1. //இன்றைய கண்ணகியாகியரும் காலில் உள்ளதைக் கழற்றிக்கொடுப்பார்கள். சிலம்பை அல்ல! செருப்பை!//
    இதுவே ஒரு புதுக் கவிதையாய் இருக்கிறது.
    புகழ்வது போல பழிக்கும் குறுந்தொகைப் பாடல் விளக்கம் அருமை.

    பதிலளிநீக்கு
  2. சரிதான். கோபத்தை உரிமையுள்ளவரிடம் தானே காட்ட முடியும்.... ஓவியம் கவிதை

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான விளக்கம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. //அன்பு யார் மீதும் காட்டலாம்
    ஆனால்
    கோபம் உயிருக்கு மேலான உரிமையுடையவரிடம் தான் வெளிப்படத்தமுடியும் //

    மிகச் சரி!அருமையான பகிர்வு

    பதிலளிநீக்கு
  5. அன்புள்ளவர்களிடமே கோபத்தை காட்ட முடியும்

    பதிலளிநீக்கு
  6. அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். தமிழ் வகுப்பில் அமர்ந்து கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  7. இன்றைய கண்ணகியாகியரும் காலில் உள்ளதைக் கழற்றிக்கொடுப்பார்கள்.
    சிலம்பை அல்ல! செருப்பை! //

    இலக்கிய நயம் அருமை !

    பதிலளிநீக்கு