வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சனி, 25 மே, 2013

இந்த உலகம் இன்னும் இயங்கக் காரணம்? - UPSC EXAM TAMIL - புறநானூறு -182



நிலம், நீர், தீ, காற்று, வான் என்னும் இயற்கைக்கூறுகள் இந்த உலகம் இயங்க அடிப்படையானவையாகும் என்று பாடம் படித்தோம். இருந்தாலும், மக்காத குப்பைகளாலும் வேதியியல் உரங்களாலும் மண்ணை மலடாக்கினோம், காடுகளை அழித்தோம், விவசாய நிலங்களைப் பட்டாப்போட்டு விற்றோம், தொழிற்சாலைக் கழிவுகளால் நீர்நிலைகளை விசமாக்கினோம், நச்சுப் புகையால் காற்றை மாசாக்கினோம் இப்படிப் பல வழிகளில் இயற்கையை அழித்தோம் அதனால், ஆறுகளிலும், குளங்களிலும் தண்ணீர் இல்லை! மழையில்லை, வெயில் வாட்டி வதைக்கிறது! எப்போது மழைவரும்? எப்போது புயல்வரும்? எப்போது கடல்சீற்றம் வரும்? என்பது யாருக்கும் தெரியாது வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

இருந்தாலும் உலகம் இன்னும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது!

நம் சமுதாயத்தில் சுயநலம், ஊழல், பொய், ஏமாற்று, திருட்டு, கொள்ளை, கொலை எனக் குற்றங்களே நீக்கமற நிறைந்திருக்கின்றன. தவறுகளைச் சுட்டிக்காட்டித் தீர்வுகளைச்சொல்லவேண்டிய ஊடகங்களோ தேதியை மட்டும் தினமும் மாற்றி பழைய செய்திகளை வெளியிட்டுவருகின்றன.  

இருந்தாலும் உலகம் இன்னும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது!

தவறு செய்யாதவர்கள் எல்லோரும் தவறே செய்யத் தெரியாதவர்களல்ல! இது சரி! இது தவறு! என்று பகுத்து உணர்ந்து பின்பற்றுபவர்கள்.அதன் வழி வாழ முயல்பவர்கள். இவர்களால்தான் உலகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது.

இந்தக் காலத்திலும், நீதி, நேர்மை, உண்மை, நியாயம், தர்மம், பொதுநலம் என்று பேசுவதோடு மட்டுமின்றி தன் வாழ்வில் கடைபிடிக்க முயன்று தம் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு வாழும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

         சங்கஇலக்கியத்தில் ஒரு புறநானூற்றுப் பாடல் இந்த வாழ்வியல் உண்மையை அழகுபட மொழிகிறது.

இந்திரனுக்குரிய அமிழ்தம் கிடைத்தாலும்அது இனிமையானது என்று தனித்து உண்ண மாட்டர்கள்!
யாரையும் வெறுக்க மாட்டார்கள்!
சோம்பலின்றிச் செயல்படுவார்கள்!
பிறர் அஞ்சுவதற்குத் தாமும் அஞ்சுவார்கள்!
புகழ்வரும் என்றால் தம் உயிரையே வேண்டுமானாலும் கொடுப்பர்கள்!
பழிவரும் என்றால் உலகம் முழுவதும் கிடைப்பதானாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்!
மனம் தளர மாட்டார்கள்!
இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல்,
பிறர்க்காக உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்கிறது ஒரு புறானூற்றுப் பாடல்.
பாடல் இதுதான்,

உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும்இனிதுஎனத்
தமியர் உண்டலும் இலரேமுனிவிலர்;
துஞ்சலும் இலர்பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ்எனின் உயிருங் கொடுக்குவர்பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்அயர்விலர்;
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலுநர் உண்மை யானே. 
                       
                                                                                  -   புறநானூறு -182
பாடியவர்: கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி. (சங்க காலத்துத் தமிழ் மன்னர்கள்தங்கள் கடற்படையைக் கொண்டு கடாரம்சாவகம்ஈழம் போற நாடுகளுக்குச் சென்று போர்புரிந்து வெற்றி பெற்றவர்கள். அவர்களின் கடற்படை போருக்குச் செல்லும் பொழுது மன்னர்களும் தம் கடற்படையோடு செல்வது வழக்கம். அவ்வாறு கடற்படையோடு இளம்பெருவழுதி சென்ற பொழுதுஅவன் சென்ற கப்பல் கவிழ்ந்ததால் அவன் கடலில் மூழ்கி இறந்தான். ஆகவே, “கடலுள் மாய்ந்த” என்ற அடைமொழி அவன் பெயரோடு சேர்க்கப்பட்டுள்ளது.)

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.

துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

  
தமிழ்ச்சொல் அறிவோம்

தமியர் = தனித்தவர்;
முனிதல் = வெறுத்தல்.
துஞ்சல் = சோம்பல்.
அயர்வு = சோர்வு.
மாட்சி = பெருமை.
நோன்மை = வலிமை;
தாள் = முயற்சி.

ஒப்பிட்டு நோக்கத்தக்க திருக்குறள்

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. (குறள் - 82)

விருந்தினராக வந்தவர் வீட்டிற்கு வெளியே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

தொடர்புடைய இடுகைகள்

18 கருத்துகள்:

  1. அருமையான பாடல்
    எளிமையான அருமையான விளக்கம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
  2. புறநானூற்றுப் பாடல், திருக்குறளோடு அருமையான விளக்கம்... அறிந்து கொள்ள வேண்டிய தமிழ்ச் சொற்கள்... நன்றி...

    தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. /////////////
    இத்தகைய சிறப்புடையவர்களாகித் தமக்காக உழைக்காமல்,
    பிறர்க்காக உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது//////////

    இப்படிப்பட்டவர்களை இன்னு வலைவீசி தேட வேண்டியிருக்கிறது...

    நல்லதொரு பதிவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பா தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

      நீக்கு
  4. தம் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு வாழும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.உலகம் அவர்களால் இயங்குகிறதோ இல்லையோ ஆனால் அவர்களின் தூய வழியைப் மனசாட்சியுடன் பின்பற்ற வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் அறிவுறுத்தலுக்கும், வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கவிஞரே.

      நீக்கு
  5. // தமக்காக உழைக்காமல், பிறர்க்காக உழைப்பவர்கள் இருப்பதால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது // - இன்னமும் ஒரு சிலர் இப்படி இருப்பதால்தான் உலகம் பிழைத்து கிடக்கிறதோ?

    த.ம-9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி உஷா அன்பரசு.

      நீக்கு
  6. படித்த பாடல் மட்டுமல்ல வகுப்பில் பாடம் எடுத்த பாடல்தான்! என்றாலும், தங்கள் பதிவின் வழி காணும் போது மேலும் இனிக்கிறது! நன்றி முனைவரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகி்ழ்ச்சி புலவரே.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

      நீக்கு
  7. நலம் தானே குணசீலன்? உங்கள் ரசனையின் அழகு பாடல் தெரிவில்... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலம் நலமறிய ஆவல் நண்பரே.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.

      நீக்கு
  8. அருமையான பாடல் ........மனமார்ந்த நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி பாலகிருஷ்ணன்.

      நீக்கு
  9. எளிமையாக அழகாக விளக்கி உள்ளீர்கள்.

    நல்ல படம் போட்டுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் மாதேவி.

      நீக்கு