வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 14 ஜூன், 2013

உலகின் தலைசிறந்த ஏழு மருத்துவர்கள்


  1. தண்ணீர்
  2. காற்று
  3. அளவான உணவு
  4. பரிதியின் ஒளி (சூரியஒளி)
  5. உடற்பயிற்சி
  6. ஓய்வு
  7. நல்ல நண்பர்கள்

இன்றைய அறிவியல் உலகில், அன்றாட வாழ்வியல் கூறுகள் பல மாறிவிட்ட சூழலில் இந்த ஏழு மருத்துவர்களையும் நாம் இழந்துவிட்டோமோ என்றுதான் தோன்றுகிறது.

தண்ணீர் – நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாலும், பருவமழை தவறியதாலும் இன்றைய சூழலில் தண்ணீரும் தனியார் மருத்துவமனைகளைப் போல விலைமதிப்புமிக்கதாகிவிட்டது.

காற்று காடுகளை அழித்ததாலும், விவசாயத்தை மறந்ததாலும் காற்றும் கூட இன்று மின்விசிறி, குளிரூட்டி என பெயர் மாற்றிக்கொண்டது. எதிர்காலத்தில் குழந்தைகளிடம் காற்று எங்கிருந்து வரும் என்று கேட்டால் குழந்தைகள் கண்களை மூடிக்கொண்டு காற்று மின்விசிறியில் இருந்து வரும் என்றுதான் கூறுவார்கள்.

அளவான உணவு– வேலைக்குச் செல்லும் அவசரத்தில் இன்று என்ன சாப்பிடுகிறோம், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்று கூட பலர் நினைவு வைத்திருப்பதில்லை. இச்சூழலில் அளவான உணவு என்பது அளவில்லாத ஆசை என்றுதான் தோன்றுகிறது.

பரிதியின் ஒளி – ஓசோன் படலம் முழுவதும் இல்லாமல் போய்விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு பரிதியின் ஒளி, உயிர்களை வாட்டி வதைக்கிறது. எதிர்காலத்தில் ஓசோன் படலம் போல செயற்கையாக ஏதாவது படலத்தை உருவாக்கினால்தான் பூமியில் வாழமுடியுமோ என்று தோன்றுகிறது.

உடற்பயிற்சி – வீடு விற்பனைக்கு என்ற பெயரில் விளைநிலங்களைக் கூட பட்டா போட்டு விற்றுவருகிறார்கள். அதனால் விளையாட்டுத் திடல்களெல்லாம், வீடுகளாக மாறிவருகின்றன. எதிர்காலத்தில் பள்ளிக்கூடங்களில் எல்லாம் விளையாட்டுப் பாடவேளை என்பது கணினிக்கூடங்களில் விளையாடும் விளையாட்டுதான் என்று மாறிப்போகலாம்,

ஓய்வு  – ஏறிவரும் விலைவாசி உயர்வுக்குத் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஏழை, நடுத்தர மக்கள் கூடுதலாக உழைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஓய்வு என்பது மரணம் மட்டுமே என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நல்ல நண்பர்கள்  – பகக்கத்தில் இருக்கும் நண்பர்களைவிட முகநூலிலேயே நண்பர்களைத் தேடும் இந்தக் காலத்தில் நல்ல நண்பர் யார் என்பதற்கான இலக்கணமே மாறிவிட்டது. இன்றைய தலைமுறையினர் இன்பதுன்பங்களை அக்கம்பக்கத்து நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதைவிட சமூகதளங்களில் பகிர்ந்துகொள்வதையே பெரிதும் விரும்புகின்றனர்.

இவ்வாறு மாறிப்போன காலச்சூழலில் இந்த தலைசிறந்த ஏழு மருத்துவர்களையும் நம் குழந்தைகளுக்கு நாம் அடையாளம் காட்டவேண்டும்.

ஏனென்றால் இன்றைய சூழலிலில் “ மருத்துவத்துறை நோய்வாய்ப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு மருத்துவம் பார்க்கத்தான் மருத்தவர்கள் இல்லை.”

அதனால்,

  • தண்ணீர் குடித்தால் தலைவலி, வயிற்றுவலி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் தீரும்..
  • நல்ல காற்று நலமான வாழ்வுக்கு அடிப்படையானது
  • அளவான உணவே நோயற்ற வாழ்வு
  • அதிகாலைப் பரிதியின் ஒளி உடலுக்கு நல்லது.
  • நம் மனம் நினைப்பதை உடல் செய்ய உடற்பயிற்சி தேவை!
  • ஓய்வு மனித இயந்திரத்தை புத்துணர்வுடன் செயல்படவைக்கும்.
  • கூகுளில் தேடினாலும் கிடைக்காத நண்பர்கள் நம் அருகே இருக்கிறார்கள்.

என்னும் உண்மைகளை  இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்வோம் நண்பர்களே..

தொடர்புடைய இடுகைகள்

காற்று ஆணா? பெண்ணா?
இயற்கைக்கும் மனிதனுக்குமான 20/20

25 கருத்துகள்:

  1. நிஜம்தான்.., ஆன, இவை அனைத்தும் இப்போ இருக்குற காலகட்டத்துல எல்லாருக்கும் கிடைக்குதா?

    பதிலளிநீக்கு
  2. சரியாகச் சொன்னீர்கள்
    சரியாகச் சொன்னீர்கள்
    கண்ணுக்கு எதிரேயும்
    கைக்கு எட்டும்படியாகவும்
    உள்ள பல விஷயங்கள் மறந்து
    வான் வெளியில் இல்லாத எதை எதையோ
    தேடிச் சோர்க்கிறோம்
    நித்தம் சாகிறோம்
    தெளிவைத் தரும் பதிவினைத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. ரொம்ப நாளாய் உங்கள் பதிவுகளைக் காணவில்லை...

    அருமையான பதிவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி எழில் பணிச்சுமை காரணமாக வரஇயலவில்லை.

      நீக்கு
  4. பல பண்புகளும் குணங்களும் கூட அரிதாகி விட்டது...

    /// ஓய்வு என்பது மரணம் மட்டுமே என்ற நிலை ஏற்பட்டுள்ளது...///

    இது ஒன்றே எல்லாவற்றையும் உணர்த்தி விடுகிறது...

    இளைய தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டியதும் நமது கடமை...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. அற்புதமான ஏழு மருத்துவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. மருத்துவர்கள் நம்மருகிலேயே இருந்தும் அவர்களை அடையாளங்கண்டுகொள்ளவியலாத அறியாமையில் மூழ்கிக் கிடக்கிறோம். வரும் தலைமுறைக்காவது வாழ்வின் ரகசியத்தை சொல்லிச் செல்வோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  6. மிக அருமையான பதிவு! இலவசமாய் கிடைத்த இவைகளை நாசம் செய்ததால் இப்போது நோயாளிகளாக தவிக்கிறோம்! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. நல்லதொரு பதிவு....


    உண்மையின் இந்ந 7-ம் சரியான விகிதத்தில் இருந்தால் வாழ்க்கை இனிமையாகவே இருக்கும்...

    அவைகளை மாசுப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் நம் கடமை

    பதிலளிநீக்கு
  8. சரியாச் சொன்னீங்க.இருப்பதைக் கொண்டும் சிறப்பாய் வாழமுடியுமே

    பதிலளிநீக்கு
  9. பாடத்திட்டம் அல்லாத பாடங்களான இவற்றை போதிப்பதும் தங்களைப் போன்ற நல்லாசிரியர்கள் தலையாய பணியாகிறது. ஊதுகிற சங்கை ஊதி வைக்கலாம். அவசியமான பதிவு.

    பதிலளிநீக்கு
  10. உண்மைதான்...நல்லவற்றைத் தவிர்த்து ஓட்டும் வாழ்வு முறை மாற வேண்டும்..அருமையான பதிவு,,நன்றி

    பதிலளிநீக்கு
  11. அருமை. அருகில் இருக்கும் பல நல்ல விஷயங்களை நாம் கவனிக்கத் தவறிவிடுகிறோம் என்பதை உணர்த்தி, இளைய தலைமுறை சமூக தளங்களில் அதிக அக்கறை காட்டுவதைச் சுட்டியும், இயற்கை வளங்களின் அழிவு, மனித வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படைகள் என பதிவு முழுவதும் பயனுள்ள தகவல்களை வழங்கியிருக்கிறீர்கள்.. பாராட்டுகள்..!!!!

    பதிலளிநீக்கு