வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 19 மார்ச், 2013

சின்னச் சின்னத் தீப்பொறிகள்.


ஈழத்தமிழர்களுக்காக இளைய தலைமுறையினர் செய்துவரும் போராட்டங்களை சில அரசியல்வாதிகள் அரசியலாக்கப்பார்க்கின்றனர்.
சில ஊடகங்கள் காசாக்கப்பார்க்கின்றன.
இன்று நேற்று ஏற்பட்டதல்ல இந்தக் கோபம்.

நெடுங்காலமாகவே  சிறிது சிறிதாய் சேர்த்துவைத்த தீப்பொறிகள் இவை.

அதற்கான சான்று..



நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே
உயர்ந்தோங்கிய தூணோரம்
ஒதுங்கி நின்று
உள்ளே வரலாமா? என்று
“இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு
ஐம்பதாண்டு காலமாக
அடிதொழுது கிடக்கிறாள்
என் தாய்.

பள்ளிகளின்
வாயில்களுக்கு வெளியே
வறியவள் போல் நின்று
தான் பெற்ற குழந்தைகளுக்குத்
தாய் பாலூட்ட
ஆங்கிலச் சீமாட்டியிடம்
அனுமதி கோரி
கண்ணீரோடு காத்து நிற்கிறாள்
என் தாய்.

ஆலயத்துக்குள்ளே நடக்கும்
ஆறுகால பூசைகளில்
ஒரு காலத்துக்கேனும் என்னை
உள்ளே விடக்கூடாதா- என்று
சமசுகிருத எசமானியிடம்
தட்டேந்தி நிற்கிறாள்
என் தாய்.

இசை மன்றங்களின்
குளிரூட்டிய கூடங்களில்
துக்கடாவாக மட்டுமே
தூக்கி எறியப்படுவதைச்
சகித்துக் கொண்டு
நூலோரின் சங்கீத சபைக்குள்
நுளையமுடியுமா –என்று
தெலுங்கு தியாகையரிடம்
தேம்பி நிற்கிறாள்
என் தாய்.

டெல்லி வழி இந்தி
பள்ளி வழி ஆங்கிலம்
இறைவன் வழி சமசுகிருதம்
இசையின் வழி தெலுங்கு மொழி

என்ற நான்கு சங்கிலிகள்
கைகள் இரண்டிலும்
கால்கள் இரண்டிலும்
இரும்புத் தளைகளால்
இறுக்கப்பட்ட என் தாய்

அடைக்கப்பட்ட சிறையின் பெயர்
டெல்லி!

தேசியக் கொடியாட்சி
என்ற பெயரில் – இந்தியத்
தேசங்களின் மீது
கொடிய ஆட்சி
 

ஆளும் கொடிகள்
வண்ணங்கள் மாறலாம்
சின்னங்கள் மாறலாம்
எண்ணங்கள் மட்டும்
எப்போதும் மாறுவதில்லை

சற்றே திரும்பிப்பார்க்கிறேன்
என் – சரித்திரச் சாலையை

அன்று நான்
சோழனாக இருந்தேன்
சேரனாக இருந்தேன்
பாண்டியனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

அன்று நான்
சைவனாக இருந்தேன்
வைணவனாக இருந்தேன்
சமணனாக இருந்தேன்
பவுத்தனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

நான்

பல்லவனாக இருந்தேன்
சுல்தானாக இருந்தேன்
பாளையக்காரனாக இருந்தேன்
தமிழனாக இல்லை!

பிரிட்டீஷ் இந்தியனாக இருந்தேன்
பிரெஞ்சு இந்தியனாக இருந்தேன்
போர்த்துகீஸ் இந்தியனாக இருந்தேன்
தமிழ் இந்தியனாக இருந்ததில்லை!

இன்று நான்

இந்துவாக இருக்கிறேன்
இஸ்லாமாக இருக்கிறேன்
ஏசுவாக இருக்கிறேன்
எங்கேயும் நான் தமிழனாக இல்லை!

நான்

சூத்திரனாக இருக்கிறேன்
பஞ்சமனாக இருக்கிறேன்
பழங்குடியாக இருக்கிறேன்
தமிழனாக இல்லை!

ஆயிரம் உண்டிங்கு சாதி
அத்தனைச் சாதியாகவும்
நான் இருக்கிறேன்
தமிழ்ச் சாதியாக மட்டும்
இருக்க மறுக்கிறேன்

அமெரிக்காவில் நான் கருப்பிந்தியன்
இலங்கையில் நான் கங்காணி கள்ளத்தோணி
டெல்லியில் நான் மதராஸி
அந்தமானில் நான் தோத்திவாலா
ஆந்திரத்தில் நான் அரவாடு
கேரளத்தில் நான் பாண்டிப்பறையா
கர்நாடகத்தில் நான் கொங்கா
ரிக் வேதத்தில் நான் தஸ்யூ
ராமாயணத்தில் நான் ராட்சசன்
சரித்திரத்தில் நான் திராவிடன்
எங்கேயும் தமிழனாக
ஏற்கப்படவில்லை நான்

அரசியல் சட்டத்தில்
என் பெயர் இந்தியன்
இந்தியத் தேர்தலில்
என் பெயர் வாக்காளன்
எங்கேயும் நான் தமிழனாக இருந்ததில்லை

தமிழ் நாட்டில் என் அடையாளம்
வன்னியன்,வேளாளன்,
கள்ளன்,கைக்கோளன்,
பள்ளன், பறையன்,
இத்தியாதி இத்தியாதி
என்று எத்தனையோ சாதி

செட்டியார் இனம்
ரெட்டியார் இனம்
என்பது போல்
சாதி தான் இனம் என்று எனக்குத்
தவறாகத் தரப்பட்ட அடையாளத்தால்
தமிழன் என்ற இன அடையாளம்
சந்திரகிரகணமாகிவிட்டது……
 

என்பார் கவிஞர்.தணிகைச்செல்வன் . தற்போது தன் இனம், மொழி, நாடு குறித்த சிந்தனை இளைய தலைமுறையினரிடம் ஏற்பட்டிருப்பருப்பது வரவேற்கத்தக்கதாகவுள்ளது.



எல்லா ஆரம்பத்துக்கும் ஒரு முடிவு உண்டு!
எல்லா முடிவுக்கும் ஒரு ஆரம்பம் உண்டு!

என்பதை நடந்துமுடிந்த இனப்படுகொலையும்
நடந்துகொண்டிருக்கும் மாணவர் போராட்டமும் உணர்த்துகின்றன.
            
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
      ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே !

என்ற மகாகவி பாரதியின் வாக்கை மனதில் கொண்டு, நடக்கும்,இந்தப் போராட்டங்கள் எவ்விதமான உள்நோக்கங்களும் இன்றி, இனப்பற்று மற்றும் மொழிப்பற்றை மட்டுமே அடித்தளமாகக்கொண்டு நடந்துவருகின்றன என்பதை மாநில, மத்திய அரசுகள் உணர்ந்து மாணவர்களின் குரலைச் செவிமடுத்து அதை எதிரொலித்தால்தான் இந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வரும் என்பதை அரசு மட்டுமின்றி நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

புதன், 13 மார்ச், 2013

முதல் ஆசிரியரும் & இரண்டாவது பெற்றோரும்.





Parents are first teacher
Teachers are second Parents என்றொரு பொன்மொழி உண்டு.

ஒவ்வொரு குழந்தைக்கும் தம் பெற்றோர்தான் முதல் ஆசிரியர்!
ஆசிரியர்கள்தான் இரண்டாவது பெற்றோர்!

அதனால் தான், குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போதே ஆசிரியர்கள் கேட்கிறார்கள் குழந்தையின் பெற்றோர் என்ன படித்திருக்கிறார்கள் என்று..

குழந்தைகளை வசதியான கல்விநிலையங்களில் சேர்த்துவிட்டோம் நம் கடன் முடிந்துவிட்டது என்று எண்ணும் பெற்றோரும்,

பாடத்திட்டத்தை முடித்துவிட்டோம், மதிப்பெண் வாங்குவதற்கு மாணவர்களைத் தயாரித்துவிட்டோம் நம் கடமை முடிந்தது என்று எண்ணும் ஆசிரியர்களும் தகுதியான மாணவர்களை உருவாக்கிவிடமுடியாது!

பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களுக்குக் கற்றுத்தரவேண்டிய அடிப்படைப் பாடத்தின் உட்கூறுகள் சிலவற்றை இங்கே கொடுத்திருக்கிறேன்.


Creativity – படைப்பாக்கத் திறன்.
Language debit – மொழிப் பற்று
Self-discovery – சுய தேடல்
Self-confidence - தன்னம்பிக்கை
Unique ability – தனித்துவ ஆற்றல்
Critical thinking – வித்தியாசமான சிந்தனை
Resilience – விரைவில் மீளும் திறன்
Motivation - ஊக்குவிப்பு
Persistence – உறுதி
Curiosity – ஆர்வம்
Question asking – கேள்வி கேட்டல்
Humor – நகைச்சுவை
Endurance – சகிப்புத்தன்மை
Reliability – நம்பகத்தன்மை
Enthusiasm – உற்சாகம்
Civic mindedness – பொது மனப்பான்மை
Self – discipline – சுய ஒழுக்கம்
Empathy – பச்சாதாபம்
Leadership – தலைமைத்துவம்
Compassion – ஈவிறக்கம்
Courage – துணிவு
Sense of beauty – அழகுணர்ச்சி்
Sense of wonder – வியப்புணர்ச்சி
Resourcefulness – வளம்
Spontaneity – தன்னிச்சையான இயல்பு
Humility – பணிவு
Humanity – மனிதாபிமானம்
Social awareness – சமூக விழிப்புணர்வு


வெள்ளி, 1 மார்ச், 2013

காதலின் எதிரிகள்





பெற்றோர், அண்ணன், தம்பி, மாமன், மச்சான், சாதி, சமயம் எனக் 
காலகாலமாகவே காதலுக்கு ஆயிரம் எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. இவையெல்லாம் 

உண்மையில் காதலுக்கு எதிரிகளே அல்ல காதலின் உண்மையான எதிரி காதலர்கள் தான்.

பெற்றோர்களெல்லாம் காதலை ஏன் எதிர்க்கிறார்கள்?
சின்னப்புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராது..
என்பது பெற்றோரின் ஒட்டுமொத்தக் குரலாக இருக்கிறது.

குழந்தைப் பருவத்திலிருந்து எப்பொழுது என்ன வேண்டும் என்று பார்த்துப் பார்த்து 

அவர்கள் கேட்காமலேயே செய்துவைத்த தமக்குத் தெரியாதா இவர்களுக்கு ஏற்ற 

வாழ்க்கைத் துணையை எப்போது, எப்படித் தேடித்தருவது? என்று, என்பது பெற்றோரின் குரலாகவுள்ளது.

காதலுக்குக் கண்கள் இல்லை!

நாங்கள் சாதி, மதம், உயர்வு, தாழ்வு எதுவும் பார்க்கமாட்டோம் ஆனால் எங்கள் பெற்றோர் 

இவையெல்லாம் பார்க்கிறார்கள் என்பது பிள்ளைகளின் வாதமாகவுள்ளது.

எல்லாம் உங்கள் எதிர்கால நலன் கருத்தித்தானே பார்க்கிறோம் என்பது பெற்றோரின் எண்ணமாகவுள்ளது.

கொடிய விலங்குக்கோ, கள்வர்களுக்கோ கூட அஞ்சாத காதலன் பெற்றோரிடம் தம் 

காதலைச் சொல்வதற்கு அஞ்சுகிறான். அது பெற்றோர் மீது இருக்கும் அச்சமல்ல! 

அவர்கள் செய்த நன்றியை நாம் மறந்துவிட்டோமே என்ற குற்ற உணர்வே காரணமாகும்!

காதலுக்காகப் பெற்றோரைத் தூக்கியெறியும் பிள்ளைகளில்
எத்தனைபேர் பெற்றோருக்காகக் காதலைத் தூக்கிப்போடுகின்றனர்?

தம் பிள்ளை நமக்காக காதலையே தூக்கிப்போட முடிவு செய்துவிட்டது என்பதை அறிந்துமா பெற்றோர் அவர்களைப் பிரித்துவைப்பார்கள்.

காதலிப்பதோ அவர்களையே திருமணம் செய்வதோ ஒன்றும் பெரிய சாதனையல்ல!

பெற்றோரின் ஏற்போடு காதலரைக் கைபிடிப்பதே பெரிய சாதனையாகும்.


பெற்றோரிடம் முறைப்படி சொன்னால், காத்திருந்தால் பெற்றோர் காதலுக்கு மரியாதை செய்வார்கள்.

காதலுக்கு மரியாதை செய்த பெற்றோரைப் பற்றிய சங்கப்பாடல் ஒன்றைக் காண்போம்..

(தலைவன் சான்றோரைத் தலைவியின் பெற்றோரிடம் மணம் பேசி வர அனுப்பினான்

தன்பெற்றோர் மறுப்பாரோ என்று அஞ்சிய தலைவியை நோக்கி, “தலைவன் வரைவை 

பெற்றோர் ஏற்றுக்கொண்டனர்; நீ கவலை ஒழிவாயாகஎன்று தோழி கூறியது.)

அம்ம வாழி தோழி நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போ ரிருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்
நன்றுநன் றென்னு மாக்களோ
                                             குறுந்தொகை 146. 
                                             வெள்ளிவீதியார்.


தலைவி - தோழி நீ நீடு வாழ்க!
நம் ஊரில் பிரிந்தோரைச் சேர்ந்து வைப்போர் உண்டா?

தோழி - தலைவன் சான்றோரை உன் பெற்றோரிடம் மணம் பேசி வர அனுப்பினான், நம் 
பெற்றோர் மறுப்பாரோ என்று நீ அஞ்சவேண்டிய தேவையில்லை தலைவன் வரைவை பெற்றோர் ஏற்றுக்கொண்டனர்; நீ கவலை ஒழிவாயாக

தலைவன் மணம்பேச அனுப்பிய சான்றோர் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா?
வயது முதிர்ந்தோர், அவர்களுக்குத் தலைமுடியெல்லாம் நரைத்திருந்தது, தலைப்பாகை அணிந்திருந்தனர், உடல்தளர்ச்சி நீங்க கம்பு ஊன்றியவர்களாக அவர்கள் இருந்தனர். அவர்களோடு பேசிய நம் பெற்றோரும் மிக்க மகிழ்வோடு நன்று நன்று என்று ஏற்றுக்கொண்டனர். நம் ஊரில் பிரிந்தோரைச் சேர்ந்து வைப்போர் உண்டு என்று தோழி தலைவியிடம் கூறுவதாக இப்பாடல் அமைகிறது.

  • இப்போதெல்லாம் காதலர் தினம் கொண்டாடுகிறேன் என்ற பெயரில் பெற்றோருக்குத் தெரியாமல் பள்ளிக்கோ, கல்லூரிக்கோ விடுப்பு எடுத்துவிட்டு பூங்காக்களில் சில ஆண்களும், பெண்களும் காதலைக் கொண்டாடுகிறோம் என்று கூடுகிறார்கள். சில காதல் எதிர்பாளர்கள் அவர்களை உங்கள் காதல் உண்மை என்றால் இதோ தாலி இப்போதே கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள். அவர்களும் அப்போது தப்பி்க்க தாலிகட்டிக்கொண்டு போகும்போது அந்தத் தாலியை கீழே எறிந்துவிட்டுச் செல்கின்றனர். இதுதான் தற்காலக் காதலின் நிலை. இந்தக் காதலர்களா காதலை வாழவைக்கிறார்கள்?
         இந்தக் காதலர்கள் அல்லவா காதலின் முதல் எதிரிகள்??

தொடர்புடைய இடுகை..

மாமலையும் ஓர் கடுகாம்