வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 27 ஜூலை, 2016

இன்றைய சிந்தனை (28.07.2016)


கலாம் என்னும் மந்திரச் சொல்


                      


காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம்
என்றாலும்
என்றும் எங்கள் உதடுகள் உச்சரிக்கும் மந்திரம்.
கலாம்! கலாம்! கலாம்!
கலாம் உங்களுக்குத் தெரியுமா?
உங்கள் மீது பலருக்கும் கோபம் இருக்கலாம்…
ஏனென்றால் நீங்கள்
இன்னும் கொஞ்சகாலம் வாழ்ந்திருக்கலாம்!
அறிவியலில் தாங்கள் பெரிய பெரிய
உயரங்களைத் தொட்டிருக்கலாம்!
ஆங்கிலத்தைக்கூட உங்கள்
உதடுகள் உச்சரித்திருக்கலாம்…
என்றாலும் உலக மேடைகளில்
தங்கள் அடையாளமாகத்
தமிழ் பேசியது பலருக்கும் நினைவிருக்கலாம்!
தாங்கள் பிறந்த மதம் ஒன்றாக இருக்கலாம்..
அதைக்கூட தாங்களும் பரப்பியிருக்கலாம்..
ஆனாலும் தாங்கள் பரப்பியது என்னவோ
தமிழ் மதத்தைத் தானே..
தாங்கள் மேடைகளில் முழங்கியது என்னவே
திருக்குறளும் புறநானூறும் தானே..
இதைப் பலரும் மறந்திருக்கலாம்..
ஆனாலும் என்றும் தமிழ் வரலாற்றில்
தங்கள் பெயர் பொறிக்கலாம்…
தாங்கள் பல உலக நாடுகளைச் சுற்றியிருக்கலாம்..
என்றாலும் உங்கள் மனம் சுற்றி வந்ததோ
மாணவர்களைத்தானே…
தாங்கள் அவா்களுக்குச் சொன்ன வார்த்தைகள்
காற்றில் கரைந்திருக்கலாம்..
அந்த மாணவர்களும் வளர்ந்திருக்கலாம்..
அவா்களோடு சேர்ந்து
தங்கள் கனவும் வளர்ந்திருக்கலாம்.. அதனால்
ஒருநாள் உங்கள் கனவு நனவாகலாம்..
அரசு ஆண்டுக்கு இருமுறை தங்களை நினைவுகொள்ளலாம்
ஆனாலும் என்றுமே தாங்கள் எங்கள் நினைவில் தங்கலாம்!
சிலர் எரிக்கப்படலாம்
சிலர் புதைக்கப்படலாம்
சிலர் மட்டுமே விதைக்கப்படலாம்..
எம் மனதில் என்றும் விதையாக விழுந்தவர் தாங்கள்..
விதைத்தவா் உறங்கலாம்..
விதைகள் உறங்குவதில்லை..
காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம்
என்றாலும்
என்றும் எங்கள் உதடுகள் உச்சரிக்கும் மந்திரம்.
கலாம்! கலாம்! கலாம்!




இன்றைய சிந்தனை (27.07.2016)