பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

புதன், 13 மார்ச், 2013

முதல் ஆசிரியரும் & இரண்டாவது பெற்றோரும்.





Parents are first teacher
Teachers are second Parents என்றொரு பொன்மொழி உண்டு.

ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோரே முதல் ஆசிரியர்கள்; ஆசிரியர்களே இரண்டாவது பெற்றோர்கள். ஒரு குழந்தையைப் பள்ளியில் சேர்த்தவுடன் தன் கடமை முடிந்துவிட்டது எனப் பெற்றோரோ, அல்லது பாடத்திட்டத்தை முடித்து மதிப்பெண் வாங்க வைத்துவிட்டால் போதும் என ஆசிரியரோ நினைத்தால், தகுதியான மாணவர்களை உருவாக்க முடியாது. மாணவர்கள் கற்க வேண்டிய அடிப்படைப் பண்புகள் பல உள்ளன. ஒரு காலத்தில் புத்தகங்களும் ஆசிரியர்களும் மட்டுமே அறிவின் வாயில்களாக இருந்த நிலை மாறி இன்று செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் விரல் நுனியில் அறிவு வளங்கள் கிடைக்கின்றன. என்றாலும் ஏன் கற்கவேண்டும்? எப்படிக் கற்கவேண்டும்? கற்றபின் என்ன செய்யவேண்டும்? கற்ற கல்வியை எவ்வாறு கடைபிடித்த நிற்கவேண்டும் என்ற கேள்விகளுக்கான பதில்களை மாணவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

 கற்க கசடற என்ற குறளில் எங்கும் துணைக்கால் இல்லை அதனால் வள்ளுவர் கற்பதற்கு யாரின் துணையும் தேவையில்லை எனக் கருதினார் என்று, சிலர் விளக்கம் சொல்வதுண்டு. ஆனால் அனுபவமுள்ள எந்த ஆசிரியரும்  மாணவனின் வெற்றிக்கு தான் தான் காரணம் என்று சொல்லமாட்டார்கள். அதுபோல நல்ல மாணவர்களும் இந்த வெற்றிக்கு பெற்றோரும் ஆசிரியரும் மட்டுமே காரணம் என்று சொல்லாமல் இருக்கமாட்டார்கள்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது (குறள்-68)

மாணவர்கள் தம்மைவிட அறிவுடையவர்களாக இருப்பது தமக்கு மட்டுமல்ல இந்த மாநிலத்துக்கே இனிது என்று கருதுவது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் இயல்பு.

அதே நேரம் வகுப்பறைகளைக் கடந்தும் வாழ்க்கை உள்ளது என்பதைப் புரியவைக்கவேண்டும். மாணவர்கள் அறிந்துகொள்ளவேண்டிய, வளர்த்துக்கொள்ளவேண்டிய நற்பண்புகள் சிலவற்றைக் காண்போம்.

1. படைப்பாக்கத்திறன் (Creativity):

எல்லா மாணவர்களிடமும் படைப்பாக்கத்திறன் மறைந்துள்ளது. மதிப்பெண், வேலைவாய்ப்பைவிட படைப்புத்திறன் மேலானது என்பதை அவர்கள் உணரும்போது அவர்கள் வெற்றிபெறுவார்கள். சொன்ன வேலையை இயந்திரங்கள் கூட செய்துவிடும் படைப்புத்திறன் எல்லோரிடமும் இருந்தாலும் சிலர் மட்டுமே அதை வெளிப்படுத்துகிறார்கள்.

2. மொழிப்பற்று (Language Pride)

மனிதன் மற்ற உயிரினங்களை விட உயர்ந்து நிற்பது மொழியால் மட்டுமே. தாய்மொழி என்பது பண்பாட்டு அடையாளமாகும். "தாய்மொழி மீது பற்று வை, பிற மொழிகளைக் கற்று வை" என்பதே சரியான அணுகுமுறை. எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் கற்கலாம், ஆனால் தாய்மொழியை நேசிப்பது மிக அவசியம்.

3. சுய தேடல் (Self-Discovery):

அறிவைத் தன்புத்தி, சொல்புத்தி என இரண்டாகப் பிரிக்கலாம். தன்புத்தி என்பது சுய தேடலுக்கு அடிப்படை. "நாம் யார்? நம் திறன் என்ன? எதிர்காலத்தில் என்னவாகப் போகிறோம்?" என்ற தேடலே ஒருவரை உலகிற்கு அடையாளப்படுத்தும்.

4. தன்னம்பிக்கை (Self-Confidence):

"தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்" என்றார் வள்ளுவர். பயிற்சியும் முயற்சியும் தன்னம்பிக்கையைச் சார்ந்தே இருக்கின்றன. ஒரு மாணவன் வெற்றி பெற தன்னம்பிக்கை மிக அடிப்படைத் தேவையாகும்.

5. தனித்துவ ஆற்றல் (Unique Ability):

ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்துவமான ஆற்றல் இருக்கும். 'பசித்திரு, தனித்திரு, விழித்திரு' என்ற கோட்பாட்டின்படி, புதிதாக ஒன்றைக் கற்க ஆர்வத்தோடும் (பசித்திரு), மற்றவர்களிடமிருந்து வேறுபட்டுத் தனித்துத் தெரிவதிலும் (தனித்திரு), எப்போதும் விழிப்புணர்வோடு தேடலில் ஈடுபடுவதிலும் (விழித்திரு) மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

6. ஆக்கபூர்வமான சிந்தனை (Critical Thinking):

வாழ்க்கையின் நிகழ்வுகளை மற்றவர்கள் பார்க்காத ஒரு கோணத்தில் பார்ப்பது அவசியம். "இடுக்கண் வருங்கால் நகுக" என்ற வள்ளுவர் வாக்குப்படி, துன்பமான சூழலையும் எதிர்கொண்டு அதை மாற்றியமைக்கும் சிந்தனைத் திறன் மாணவர்களுக்குத் தேவை. வாய்ப்புகளில் உள்ள பிரச்சனைகளைக் காணாமல் பிரச்சனைகளுக்குள் உள்ள வாய்ப்புகளைக் காண்பவர்களாக மாணவர்கள் வளரவேண்டும்.

7. விரைவில் மீளும் திறன் (Resilience):

வாழ்க்கையில் கீழே விழுவது முக்கியமல்ல, விழுந்த பிறகு எவ்வளவு விரைவாக மீண்டு எழுகிறோம் என்பதே முக்கியம். காட்டில் வளரும் மரங்கள் தண்ணீருக்காகத் தேடித் தம் வேர்களைப் பரப்புவது போல, மாணவர்களும் சவால்களை எதிர்கொண்டு தங்களைத் தாங்களே மீட்டெடுத்துக் கொள்ளும் திறனை வளர்க்க வேண்டும்.

8. ஊக்குவிப்பு (Motivation):

மாணவர்களிடம் இருக்கும் சிறந்த பண்புகளைக் கண்டறிந்து அவர்களைப் பாராட்ட வேண்டும். அதே சமயம், அவர்களுக்குள்ளேயே ஒரு சுய ஊக்குவிப்பை (Self-motivation) வளர்க்க வேண்டும். மனச்சோர்வு, உடல்சோர்வு ஏற்படும்போதும், முடியாது என்று தோன்றும்போதும் தங்களைத் தாங்களே ஊக்குவித்துக்கொள்ளும் இயல்புகளை மாணவர்கள் அறிந்துகொள்ளவேண்டும்.

9. உறுதி (Persistence):

எந்தவொரு செயலிலும் உறுதி அவசியம். "பந்திக்கு முந்து, படைக்கு பிந்து" என்றொரு பழமொழிக்கு உண்டு. 'வரிசையில் முதல் ஆளாக நில், போர்க்களத்தில் வெற்றி பெற்று வீரனாகக் கடைசியில் திரும்பி வா' என்பதே உண்மையான பொருள். உடல் உறுதியை விட உள்ள உறுதி மேலானது.

10. ஆர்வம் (Curiosity):

மாணவர்கள் ஒவ்வொரு நாளும் புதியவற்றைக் கற்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருக்க வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகளைக் கேட்க வேண்டும். ஆர்வமுள்ள மாணவர்களிடம் கற்பிக்கும் ஆசிரியர் தான் திட்டமிடாத பல நற்கருத்துகளையும், அனுபவத்தையும் பகிர்ந்துகொள்வார்.

11. கேள்வி கேட்டல் (Questioning):

கேள்வி கேட்கத் தயங்கக் கூடாது. கேள்வி கேட்கும்போது நாம் முட்டாள்போல தெரியலாம், கேள்வி கேட்காவிட்டால் வாழ்நாள் முழுவதும் முட்டாளாக இருக்க நேரிடும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

12. நகைச்சுவை உணர்வு (Sense of Humor):

தொல்காப்பியர் மெய்ப்பாடுகளில் 'நகை'யை முதலாவதாகக் கூறுகிறார். இன்ப துன்பங்களைச் சமமாக எடுத்துக்கொண்டு, எதையும் நகைச்சுவையுடன் அணுகும் பண்பு வாழ்க்கையை எளிதாக்கும். "இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாதவர்" என்பதே இதற்குச் சான்று.

13. சகிப்புத்தன்மை (Endurance):

வாழ்க்கையில் எல்லாச் சூழலையும் நம்மால் மாற்ற முடியாது. சில நேரங்களில் சகிப்புத்தன்மையுடன் வாழ்வதையும், சமூகத்தோடு இணைந்து போவதையும் மாணவர்கள் பழகிக் கொள்ள வேண்டும். குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை என்பதை உணரவேண்டும். அடுத்தவர் செய்யும் தவறுகளுக்கு நீதிபதியாகவும் நாம் செய்யும் தவறுகளுக்கு வழக்கறிஞர்களாகவும் இருப்பது தவறு என்பதை உணர்ந்து சகிப்புத் தன்மையுடன் வாழப் பழகவேண்டும்.

14. நம்பகத்தன்மை (Reliability):

ஒருவர் மீது மற்றவர்கள் வைக்கும் நம்பிக்கையே அவரின் மிகப்பெரிய சொத்து. பொய் சொல்லாமல், சொன்ன சொல்லைக் காப்பாற்றும் நம்பகத்தன்மையை வளர்த்துக் கொள்வது அவசியம். சொல்லுவது யாருக்கும் எளிது என்பது வள்ளுவர் வாக்கு. சொல்லுக்கும் செயலுக்கும் இரண்டிலும் நம்பகத்தன்மை பெற்றால் மட்டுமே இந்த சமூகம் ஒருவரை நம்பும் என்பதை உணரவேண்டும்.

15. உற்சாகம் (Enthusiasm):

எப்போதும் உற்சாகத்தோடு இருப்பது உடல் மற்றும் மன நலத்திற்கு நல்லது. அதிகாலையில் எழுதல், உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகள் அன்றைய நாளை உற்சாகமாக மாற்றும். நல்ல தூக்கம் நம் ஆற்றலுக்கான எரிபொருள். ஆனால் பள்ளியில் தூங்கியவன் கல்வியிழப்பான் என்பதை மறக்கக்கூடாது. நம் உற்சாகமே மகிழ்ச்சியாக வெளிப்படுகிறது.

16. பொது மனப்பான்மை (Civic Mindedness):

சுயநலமின்றிப் பொது நோக்கத்தோடு சிந்திக்கும் பண்பு ஒருவரை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்லும். தலைமைப்பண்புள்ளவர்கள் பொது நோக்கோடு சிந்திப்பார்கள்.

17. சுய ஒழுக்கம் (Self-Discipline):

          "தன் நெஞ்சறிவது பொய்யற்க" என்றார் வள்ளுவர். வகுப்பறையில் மட்டுமல்லாமல் வாழ்வின் எல்லா நிலைகளிலும் சுய ஒழுக்கம் அவசியம். ஜப்பான் போன்ற நாடுகளின் வளர்ச்சிக்கு அந்நாட்டு மக்களின் சுய ஒழுக்கமே காரணமாகும்.

18. பச்சாதாபம் (Empathy):

எல்லா உயிர்கள் மீதும் இரக்கம் கொள்வதே மனிதாபிமானம். "எல்லார்க்கும் எல்லா உயிர்க்கும்" என்ற பொதுமைப் பண்பை மாணவர்கள் வளர்க்க வேண்டும். ஜீவகாருண்யத்துக்கும் மனிதாபிமானத்துக்கும் வேறுபாட்டை உணரவேண்டும். கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு உரிமை உடைத்திவ் வுலகு என்று ஏன் திருவள்ளுவர் உரைத்தார் என்பதை உணரவேண்டும்.  

19. தலைமைத்துவம் (Leadership):

          தலைமை என்பது அதிகாரம் அல்ல. அது கடமை என்று உணரவேண்டும். காட்சிக் கெளியவராக கடுஞ்சொல்லன் இல்லாதவராக இருத்தல் அதன் அடிப்படையாகும்.

20. துணிவு (Courage):

"அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே" என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப, எதற்கும் அஞ்சாமல் துணிவுடன் உண்மையை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்க்க வேண்டும். அதே நேரம் அவரவர் மனசாட்சிக்கு அஞ்சி நடக்கவேண்டும்.

21. அழகுணர்ச்சி (Sense of Beauty):

இயற்கையின் அழகையும் கலைகளையும் ரசிக்கக் கற்றுத் தர வேண்டும். ஒரு சிற்பிக்கு, கல்லுக்குள் இருக்கும் சிலை தெரிவது போல, மாணவர்களுக்குத் தங்களைச் சுற்றியுள்ள அழகை ரசிக்கும் பண்பு அவசியம்.

22. வியப்புணர்ச்சி (Sense of Wonder):

உலகில் வியப்படைய நிறைய விஷயங்கள் உள்ளன. கடந்த கால வரலாறு, நிகழ்காலக் கண்டுபிடிப்புகள் என அனைத்தையும் வியப்புடன் நோக்கும்போது கற்றல் எளிதாகும்.

23. அறிவு வளம் (Resourcefulness):

கல்வி என்பது ஒரு பாடத்தோடு முடிந்து விடுவதல்ல. பல்வேறு துறைகள் சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்வதே உண்மையான வளம். நமக்கு எதுவும் தெரியாது என்று தெரிந்துகொள்ள நிறைய தெரிந்துகொள்ளவேண்டும். அதேநேரம் தெரியாததைத் தெரியாது என்று ஒப்புகொள்வதே பெருமை.

24. பணிவு (Humility):

"பணியுமாம் என்றும் பெருமை" என்பதற்கேற்ப, பணிவுடன் இருப்பதே தலைமைத்துவத்தின் முதல் பண்பு. உலகத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தித் தலைமைப் பண்பை வளர்க்கலாம். பணிவு ஒருவருக்குச் சிறந்த அணிகலன். எவ்வளவு உயர்ந்த இடத்திற்குச் சென்றாலும் பணிவுடன் இருப்பது ஒருவரைப் போற்றத்தக்கவராக மாற்றும்.

கல்வி என்பது வெறும் ஏட்டுச் சுரைக்காய் மட்டுமல்ல. சமூகம், இயற்கை மற்றும் சுய ஒழுக்கம் சார்ந்த விழிப்புணர்வே உண்மையான கல்வி. லெபனான் நாட்டுத் தத்துவ ஞானி, கலீல் ஜிப்ரான் கூறியது போல, குழந்தைகளுக்கு உங்கள் அன்பைத் தரலாம், ஆனால் உங்கள் எண்ணங்களைத் திணிக்கக் கூடாது. அவர்கள் தமக்கான சுய சிந்தனையோடு வளர வழிவகை செய்ய வேண்டும். இந்த உலகமே ஒரு பெரிய பாடசாலை, அதில் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருப்பதே சிறந்த வாழ்வாகும்.










Creativity – படைப்பாக்கத் திறன்.
Language debit – மொழிப் பற்று
Self-discovery – சுய தேடல்
Self-confidence - தன்னம்பிக்கை
Unique ability – தனித்துவ ஆற்றல்
Critical thinking – வித்தியாசமான சிந்தனை
Resilience – விரைவில் மீளும் திறன்
Motivation - ஊக்குவிப்பு
Persistence – உறுதி
Curiosity – ஆர்வம்
Question asking – கேள்வி கேட்டல்
Humor – நகைச்சுவை
Endurance – சகிப்புத்தன்மை
Reliability – நம்பகத்தன்மை
Enthusiasm – உற்சாகம்
Civic mindedness – பொது மனப்பான்மை
Self – discipline – சுய ஒழுக்கம்
Empathy – பச்சாதாபம்
Leadership – தலைமைத்துவம்
Compassion – ஈவிறக்கம்
Courage – துணிவு
Sense of beauty – அழகுணர்ச்சி்
Sense of wonder – வியப்புணர்ச்சி
Resourcefulness – வளம்
Spontaneity – தன்னிச்சையான இயல்பு
Humility – பணிவு
Humanity – மனிதாபிமானம்
Social awareness – சமூக விழிப்புணர்வு



23 கருத்துகள்:

  1. மிக்க நன்றி...

    அனைவரும் அறிய பகிர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

      நீக்கு
  2. இன்றைய காலத்திற்கு ஏற்ற பதிவு

    பதிலளிநீக்கு
  3. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி நண்பரே.

      நீக்கு
    2. Sariyana Varthaigal ! Petror sollitharaatha panbugalai ulagil perumbalum veru yaarum sollithanthuvida mudiyathu enbathu sathiyam.

      நீக்கு
  4. நிச்சயம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கற்று தர வேண்டிய பாடங்கள்தான் இவை. மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி உஷா அன்பரசு.

      நீக்கு
  5. ரொம்ப நாள் கழித்து வந்த பதிவானாலும் மிகுந்த பயனுடைய பதிவு.... என் முக நூல் பக்கத்தில் பகிர்கிறேன் நன்றி

    பதிலளிநீக்கு
  6. //ஒவ்வொரு குழந்தைக்கும் தம் பெற்றோர்தான் முதல் ஆசிரியர்!
    ஆசிரியர்கள்தான் இரண்டாவது பெற்றோர்!//

    உண்மைதான். மிகச் சிறப்பாக சொல்லியிருக்கீங்க.
    மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய பட்டியல் அருமை. சிறப்பான பகிர்வுக்கு நனறி.

    பதிலளிநீக்கு

  7. கற்றுத் தர வேண்டிய உட்கூறுகளைக் கற்கவே இந்த ஆயுள் போதுமா. ! ( in lighter vein.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போதாது அன்பரே. தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி

      நீக்கு
  8. வீட்டிற்கு வீடு ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய பதிவிது.
    சிறந்த வழிகாட்டலும் கூட...

    பதிலளிநீக்கு
  9. இன்றைய காலத்தில் பெரும்பாலான பெற்றோர்களும், ஆசிரியர்களும் எப்படி உள்ளனர்? அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு விளக்கமான மாணவர்களுக்குக் கற்றுத்தரவேண்டிய அடிப்படைப் பாடத்தின் உட்கூறுகளை கொடுத்துள்ள விதம் அருமை. ஜி.எம். பாலசுப்பிரமணியம் ஐயா கூறியிருப்பது போல கற்றுத் தர வேண்டிய உட்கூறுகளைக் கற்கவே இந்த ஆயுள் போதுமா என்ன?

    அறியத்தந்தமைக்கு நன்றி..! வாழ்த்ததுகள்!!!

    பதிலளிநீக்கு