வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழர் பண்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் பண்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 24 மே, 2013

தமிழ்மொழியின் தனிச்சிறப்புகள் ஐந்து.


உலகமொழிகளுள் தமிழ்மொழி தனிச்சிறப்புடையது.  உலகமொழிகள் பலவற்றிலும் எழுத்துக்கும், சொல்லுக்கும் இலக்கணம் உண்டு. வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த மொழி தமிழ்.

அகத்திணையியல் புறத்திணையியல், களவியல், கற்பியல் என வாழ்க்கைக்கான இலக்கணத்தை அழகாக எடுத்துரைக்கிது தொல்காப்பியம்.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவா்கள் தமிழ்மொழியின் சிறப்புகளை கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.



ஞாயிறு, 17 ஜூன், 2012

பே(பெய)ராசைபிடித்த பெண்கள்!



ஆண் - பெண் இருவரில் பேராசை பிடித்தவர்கள் யார்? என்றால் கண்களை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம் பெண்கள்தான் என்று..

ஏனென்று கேட்கிறீர்களா?
கீழே பாருங்கள் இவர்களுக்கு எத்தனை பெயர்கள் என்று..


பொருளாசை பிடித்தவர்கள் என்பதால் அல்ல
ஆண்களுக்குப் பிடித்தவர்கள் என்பதால்

ஆம் தமிழ் இலக்கியப்பரப்பில் ஆண்களால் அழைக்கப்பட்ட பெண்களின் பெயர்களைத்தான் இன்று காணப்போகிறோம்.





பேதை, பெதும்பை,மங்கை, மடந்தை,
அரிவை,தெரிவை, பேரிளம்பெண்,
அங்கனை, ஆடவள், ஆயிழை,ஆட்டி,
மாயோள், சுரிகுழல்
மகடூஉகாந்தை
சுந்தரி, வனிதை, மாது
மானினி, நல்லாள், சிறுமி,சேயிழை,
தையல், நங்கை,நாரி, பிரியை, காரிகை
அணங்கு, பிணா
பெண்டு,குறத்தி, இடைச்சி,உழத்தி,
 நுழைச்சி, எயிற்றி, மறத்தி,
தலைவி, தோழி, நற்றாய், 
செவிலி,விறலி

சனி, 7 ஏப்ரல், 2012

தாலாட்டுப் பாடத்தெரியுமா?





தாயின் கருவறையில் இருக்கும்போது
அவளின் இதயத்துடிப்பையே தாலாட்டாகக் கேட்டுவந்த குழந்தை மண்ணுலகிற்கு வந்தவுடன் அந்த பாட்டுக் கேட்காமல் திருதிருவென விழிக்கிறது. சில நேரம் அழுகிறது. குழந்தையைத் தாய் தூக்கியவுடன் அழுகை நின்றுபோகிறது.
குழந்தையைத் தூக்கிக்கொண்டே வைத்திருக்கமுடியுமா? அதனால் தான் பழந்தமிழர் கண்டறிந்தனர் தாலாட்டு என்னும் சீராட்டை!

நான் சிறுவனாக இருந்தகாலத்தில் பல வீடுகளிலும் தாலாட்டுப் பாடும் ஓசை கேட்டிருக்கிறேன்..

நான் வளர வளர தாலாட்டின் பரிணாமமும் வளர்ந்துவந்திருக்கிறது.

முதலில் திரைப்படப்பாடலைத் தாலாட்டாகப் பாடினார்கள்..
அடுத்து வானொலி...தொலைக்காட்சி...சிடி..டிவிடி..அலைபேசி...
என இந்தக் காலத்துக் குழந்தைகளும் 'இவர்கள் பாடும் தாலாட்டுக்கு இதுவே பரவாயில்லை' என்று எண்ணித் தூங்கிப்போகின்றன.

இதோ நானறிந்த தாலாட்டு..
ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே உறங்கு..
ஆரடித்தார் ஏனழுதாய்
அடித்தாரைச் சொல்லி அழு
கண்ணே என் கண்மணியே
அடிச்சாரைச் சொல்லி அழு
ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே உறங்கு..
கொப்புக்கனியே, கோதுபடா மாங்கனியே
வம்புக்கழுதாயோ, வாயெல்லாம் பால் வடிய
மாமன் அடித்தாரோ மல்லிகைப்பூ செண்டாலே
அத்தை அடித்தாளோ அல்லிப்பூ செண்டாலே
அடித்தாரைச் சொல்லி அழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
தொட்டாரைச் சொல்லி அழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே உறங்கு..


இப்படி ஒரு தாலாட்டு என்பது தன் உறவுகளையும், நல்லபழக்கவழக்கங்களையும்,  பண்பாடுகளையும்,மரபுகளையும் அறிவுறுத்துவதாக இருக்கும்.
இணையத்தில் உலவியபோது தாலாட்டு என்னும் வலைப்பதிவு கண்ணில்பட்டு வியப்பை ஏற்படுத்தியது. நீங்களும் சென்று பாருங்களேன்..

செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

காற்றுக்கு இத்தனை பெயர்களா?

தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று
வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று
கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று
மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று
 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று மென்காற்று
6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று இளந்தென்றல்
12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று தென்றல்
20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புழுதிக்காற்று
30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று ஆடிக்காற்று
100கி.மீ வேகத்தில் வீசும் காற்று கடுங்காற்று
101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று புயற்காற்று
120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்றுசூறாவளிக் காற்று

தொடர்புடைய இடுகைகள்

ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

முறைமாமன் சீரு.


தமிழ் மரபுகளையெல்லாம் மறந்துவிட்ட இன்றைய தலைமுறையினரிடையேயும் மரபுகளை மறக்காத சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதோ தமிழ் மண்வாசனையோடு ஒருகவிதை..
இதை எழுதியவர் என் மாணவர் திரு.ச.கேசவன் என்பதைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்





முக்கனிகள் சேர்த்தெடுத்து
முறைமாமாமன் சீரெடுத்து
முச்சந்தியில் மக்களெல்லாம்
மூக்கின் மேல் விரலைவைக்க
மேளம் கொட்டி வாராண்டி!

பச்ச ஓலையில
உன்னைப் பூட்டப் போறாண்டி!

பித்தளையில் பாத்திரங்கள்
செப்புதனில் நீர்க்குடங்கள்
தங்கத்துல நகைசெஞ்சு
வாராண்டி!

உன்னத் தங்கத்துல செஞ்ச
வைரமுன்னு சொல்வாண்டி!

பலவனத்துப் பூவினங்கள்
ஊர்மயங்கும் பல நிறங்கள்
மாலையாகக் கோர்த்தெடுத்து
வாரண்டி!

அந்த மாலையில
உன்னக் கட்டப் போறாண்டி!

மொட்டு ஒன்னு மலர்ந்திருச்சி
நாணம் வந்து செவந்திடுச்சி
வண்டு போல மாமன் அவன் வாராண்டி!

உந்தன் நாணத்தை
வெல பேசப் போறாண்டி!

ஊரடக்கிப் பேசியவ
ஊரச்சுத்தித் திரிஞ்சபுள்ள
வாயடச்சி நிற்கிறத
பாருங்கடி!

இப்ப வட்டியும்
முதலுமா வாங்கிக்கடி!

மாமன் அவன் வாங்கிவந்த
பட்டுடுத்தி நடக்கயிலே
ஊருசனம் கண்ணுவெக்கும்
வாருங்கடி..
வந்து இவளுக்குக் கருநிலா
பொட்டெடுத்து வையுங்கடி!

தீட்டு வந்து சேருமின்னு
நல்லெண்ண தலைக்குவெச்சு
நட்டாத்தில் குளிச்சுப்புட்டு
வாராண்டி!

நல்லா கறிசமைச்சு
ஆக்கிப்போட வாருங்கடி..

பெண்ணாகப் பொறந்தவளே
கல்லாக இருந்த உன்ன
செலையாக செதுக்க மாமன்
வாராண்டி!

உன் சிரிப்பெடுத்து
தன்மனசுல கோர்க்கப் போறாண்டி!

ச.கேசவன்
இளம்கலை இயற்பியல் இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு

சனி, 21 ஜனவரி, 2012

மாடு உட்கார்ந்திருக்கு!

னது சிறுவயதில் நடந்த மறக்கமுடியா நிகழ்வு ஒன்று..

எங்கள் வீட்டில் மாடு வளர்த்தார்கள். ஒருநாள் அதற்கு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் காண்பித்தோம். அவரும் வந்து அதைப் பார்த்துவிட்டு ஊசி போட்டுச்சென்றார். சில மணிநேரம் கழித்து என் உறவினர்கள் என்னை அழைத்து..

“போய் மாடு என்ன செய்யுதுன்னு பார்த்துட்டு வா” என்றார்கள்.
 நானும் சென்று பார்த்துவிட்டு வந்து..

“மாடு சும்மாதான் உட்கார்ந்திருக்கு” என்றேன்.

வீட்டில் உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து சிரியோ சிரின்னு சிரிச்சாங்க..

எனக்கு ஏன் அப்படிச் சிரிக்கிறார்கள் என்றே புரியாமல் திருதிருவென விழித்தேன்.

அப்போது என் தாத்தா சொன்னார்..

தம்பி..


“மாடு படு்த்துதான் கிடக்கும்.. மனுசன் தான் உட்கார்ந்திருப்பான்”

இதை இப்படித்தான் சொல்லனும் இதுதான் நம் மரபு. இதை மாற்றிச் சொன்னால் இப்படித்தான் சிரிப்பார்கள் என்றார்..

 சிறுவயதில் எவ்வளவு அறியாமையோடு இருந்திருக்கிறேன் என்று...இப்போது நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது.

எனக்காவது சொல்லித்தர ஒரு தாத்தா இருந்தார்..!

இன்றைய தனிக்குடும்பங்கள் நிறைந்த தலைமுறைக்கு எந்தத் தாத்தா வந்து சொல்லிக்கொடுப்பார்..!

சில தமிழர் மரபுகளை நினைவுபடுத்திச் செல்கிறேன்..

கோழி கொக்கரிக்கும்
கழுதை கத்தும்
குதிரை கணைக்கும்
காகம் கரையும்
யானை பிளிறும்
சிங்கம் முழங்கும்
புலி உறுமும்
நரி ஊளையிடும்
குயில் கூவும்
நாய் குரைக்கும்
 ஆந்தை குழறும்
கொக்கு நரலும்
கிளி சொல்லும்
 பன்றி உறுமும்

காலம் மாறிப் போச்சுங்க.. 
இது இந்தக் காலத்து மாடுங்க..
இந்த மாட்டைப் பாருங்க..

திங்கள், 14 நவம்பர், 2011

திருமண அழைப்பிதழ் மாதிரி

அன்பான தமிழ் உறவுகளே.. 
எனது திருமணத்துக்காக நான் வடிவமைத்த திருமண அழைப்பிதழை என் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அதனைப் பலநாட்கள் சென்றும் கூகுளின் படங்கள் பகுதியில் பார்த்து சில நண்பர்கள் அழைப்பிதழ் நன்றாகவுள்ளது. இதனை எனக்கு பயன்படுத்திக்கொள்ளலாமா என்று கேட்டனர்... சிலர் இதுபோல எனக்கும் வடிவமைத்துத்தாங்களேன் என்றும் அன்பாகக் கேட்டுக்கொண்டனர். சரி கூகுளின் படங்கள் பகுதியில் சென்று மாதிரித் திருமணத் அழைப்பிதழ்கள் தமிழில் எவ்வாறு உள்ளன என்று பார்வையிட்டேன்..

இப்பகுதியில் இனி வரும் காலங்களில் என் கண்ணில்படும் சிறந்த தமிழால் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ்களைத் தொகுக்கத் திட்டமிட்டுள்ளேன்.





திருமண அழைப்பிதழ்
மங்கள நாண் விழா
இருகரம் சேரும் விழா
இருமணம் சேரும் விழா
திலகமிடும் திருவிழா
வாழ்க்கைத் துணைநல ஏற்பு விழா
மன்றல் விழா
என்று தலைப்பே இப்போதெல்லாம் தமிழ் நயத்துடன் வைக்கின்றனர்.

மாதிரிக்காக..

இருமணம் இணையும் திருமணம்

விழிகளில் மலர்ந்தது 
காதல் மலர்
ஐப்பசி - அறிவன் புதன்
விடியலில் துவங்கும்
என் வாழ்க்கைப் பயணம்
வேதங்கள் ஓத மத்தளங்கள் முழங்க
சுற்றம் புடைசூழ
நம்பி (மணமகன் பெயர்)நான்
நங்கை (மணப் பெண் பெயர்)யின் கரம் பற்ற
நண்பர்காள் வாரீர்
உம் உள்ளம் குளிர வாழத்துவீர்
எம் மனம் மகிழ

நாள்
இடம்
நேரம்
வழி

அன்புடன் அழைக்கும்
மணமக்கள்

தொடர்புடைய இடுகைகள்

திங்கள், 24 அக்டோபர், 2011

எதிர்காலத் தொழில்நுட்பம்!!




அறிவியல் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகளைப் படைத்து வருகிறது..
நிலவைப் பார்க்கும் சிறு குழந்தையாய் நானும்..
இன்றைய உலகிற்கு ஏற்ப என்னை மாற்றிக் கொள்ள முயன்று வருகிறேன்..
அறிவியல் மாற்றங்கள் சிலவற்றைக் காணும்போது..
“மனிதனுக்காக அறிவியலா?
அறிவியலுக்காக மனிதனா?“
என்று கூட சிலநேரங்களில் தோன்றும்.
இன்றைய அறிவியல் உலகைக் கண்டு எனக்குத் தோன்றிய கற்பனை“ யான தொழில்நுட்பம் பற்றிய இடுகை இது..
             


                இணையத்தில் உலவும்போது “புதிய தொழில்நுட்பம் “ என்றொரு அறிவிப்பு காணக் கிடைத்தது. சரி என்னதான் நுட்பம் என்று பார்க்கலாம் என்று அந்த இணைப்பில் சென்றேன்..

என்றொரு இணையதளம் அறிவித்தது. நானும் அதில் பயனர் கணக்கை உருவாக்கிக் கொண்டு உள்நுழைந்தேன்..

நான் நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்திலிருப்பவருடன் பேசக் காத்திருப்பதுபோலவே, எதிர்காலத்திலிருந்து கடந்த காலத்துக்குப் பேச பலரும் காத்திருந்தார்கள்...

காத்திருப்போர் பட்டியலில் “கபிலன்“ என்ற பெயர் எனக்குப் பிடித்தது. அவருடன் உரையாட முடிவுசெய்து தொடர்புகொண்டேன்.. சில மணித்துளிகளில் அவர் முகம் என் கணினித் திரையில் தெரிந்தது..

இனி எங்கள் உரையாடல்..

நான் : வணக்கம் கபிலன்!
கபிலன் : வணக்கம் முனைவரே!


நான் : கபிலன் இதெல்லாம் உண்மையா!! இதையெல்லாம் இன்னும் என்னால் நம்பமுடியவில்லை?
கபிலன் : ஏன் நண்பரே..!!


நான் : அறிவியல் காலத்தை வென்றுவிட்டதா..?
கபிலன் : இல்லை நண்பரே.. காலம் தான் அறிவியலை வென்றுவிட்டது!  காலத்தின் கோட்பாடுகளை மனிதனால் இன்னும் மாற்றமுடியவில்லை. கொஞ்சம் புரிந்துகொண்டிருக்கிறான். அவ்வளவுதான்..


நான் : எது எப்படியோ.. எதிர்காலத்துக்கு வந்துவிட்டேன்.. உங்களிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் வைத்திருக்கிறேன்..
கபிலன் : நானும் தான் நண்பரே..


நான் : மகிழ்ச்சி..
கபிலன் : நீங்களே முதலில் கேளுங்கள்  நண்பரே..
நான் : தங்கள் பெயர் பற்றி முதலிலேயே கேட்க வேண்டும் என நினைத்தேன்.. “கபிலன்“ என்ற பெயர் தங்களுக்கு எந்தச் சூழலில் வைத்தார்கள்.
கபிலன் : என் தந்தை ஒரு கணினி வன்பொருள் துறைசார்ந்தவராக இருந்தாலும் தமிழின் மீது மிகுந்த பற்றுடையவர். அதனால் சங்கப்புலவரான கபிலரின் நினைவாக இப்படியொரு பெயர் வைத்துவிட்டார்.


நான் : அப்படியா.. மகிழ்ச்சி!! கபிலன்.. நான் தங்கள் காலத்துக் கல்வி நிலை குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
கபிலன் : எங்கள் காலத்தில் வீட்டிலிருந்துகொண்டோ, பணியாற்றிக்கொண்டோ இணையவழியே கல்வி பயில்வதுதான் வழக்கமாக உள்ளது..


நான் : அட அப்படின்னா எல்லோரிடமும் கணினி இருக்கிறதா..?
கபிலன் : என்ன அப்படிக் கேட்டிட்டீங்க.. மேகக் கணினி நுட்பத்“தால் கணினி இன்றைய சூழலில் எல்லா தரப்பினருக்கும் சென்று சேர்ந்துவிட்டது.

நான் : வியப்பா இருக்கே.. சரி! இவ்வளவு அழகாத் தமிழ் பேசறீங்களே.. எப்படி..?
கபிலன் : மொழி மாற்றி மென்பொருள்கள் பல பெருவழக்கில் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. அதனால் எந்த மொழியையும் யார் வேண்டுமானாலும் எழுதப் படிக்க, புரிந்துகொள்ள, பேச முடிகிறது. அதனால் அவரவர் தம் தாய்மொழி மீது பற்றுடையவர்களாகத் தான் இருக்கிறார்கள்.
நான் : கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது...


கபிலன் : தமிழரின் நாட்டுப்புற மரபுகள் குறித்த தேடல் எனக்கு என்றுமே உண்டு. இணையத்தில் தேடியபோது நிறைய செய்திகள் கிடைக்கின்றன. உங்கள் பார்வையில் உங்களுக்குப் பிடித்த இரு இணைய பக்கங்களை எனக்கு அறிமுகம் செய்யுங்களேன்..
நான் : 1.தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தில் “பண்பாட்டுக் காட்சிகம்“ என்னும் பிரிவு.
      2.அன்பு நண்பர் மகேந்திரன் அவர்களின் 
“வசந்த மண்டபம்“  என்னும் வலைப்பக்கம்.
கபிலன் : பார்க்கிறேன் முனைவரே.. இன்றைய சூழலில் விளையாட்டுகள்  கூட வீட்டுக்குள்ளே கணினிக்குள்ளே விளையாடுவது மட்டுமே விளையாட்டு என்றாகிவிட்டது. உடல் உழைப்பு என்பது சிறிதும் இல்லாமல்  போய்விட்டது. தமிழரின் தொன்மையான விளையாட்டுக்களைப் பற்றி அறிந்துகொள்ள ஆவலவாக உள்ளேன்..
கபிலன் : மகிழ்ச்சி முனைவரே இதையும் பார்க்கிறேன்..
தனித்தமிழ்! தனித்தமிழ்! என்று இலக்கிய வரலாறுகளில் ஒரு காலம் குறிப்பிடப்பட்டுள்ளதே.. அப்படின்னா என்ன? தனித்தமிழ் என்றால் மொழியைத் தனிமைப்படுத்துவதா? தனிமைப்படுத்திக்கொள்வதா? எனக்கு இந்தக் கோட்பாடே புரியவில்லை..?
நான் : பிறமொழிக் கலப்பால் தாய்மொழி சீர்கெட்டுவிடும் என்று மொழியைத் தற்காத்துக்கொள்ளும் முயற்சி இது கபிலன்.


கபிலன் : அட! வியப்பாக உள்ளதே.. பிற மொழி கலந்தால் அம்மொழி செத்துவிடுமா..? அப்படியென்றால் வடமொழி கலந்தபோதே தமிழ் மொழி செத்திருக்கவேண்டுமே..


நான் : இப்படித் தனித்தமிழ்க் கோட்பாடுகள் அன்று தோன்றியதால் தான் இன்று எதிர்காலத்தில் கூட உங்களால் தமிழ் பேச முடிகிறது.. இல்லையா..?


கபிலன் : அது அப்படியல்ல முனைவரே...
“அறிவுக்கு மொழி  தடையல்ல!
 இன்று உலகமே பேசும் ஒரே மொழி இணையமொழி!“
உங்கள் காலத்தில் இயல், இசை, நாடகம் என்று அதோடு நின்றுவிடாமல்..
இணையத்தமிழ் என்று இலக்கிய, இலக்கணச் செல்வங்களைப் பதிவு செய்தீர்களல்லவா.. அந்த அரிய செயல் தான் இன்று தமிழ்மொழியைக் காத்து நிற்கிறது..


நான் : அட!! அப்படியா.. கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது..
கபிலன் : உங்களோடு உரையாடியதில் எனக்கு நேரம் போனதே தெரியவில்லை..
நான் : எனக்கும் தான் கபிலன்..


கபிலன் : பணி அழைக்கிறது... மீண்டும் உரையாடுவோம்...
நான் : நன்றி கபிலன் தங்களோடு உரையாடியதில் பல உண்மைகளை உணர்ந்து கொண்டேன் மகிழ்ச்சி.. மீண்டும் உரையாடுவோம்..

வியாழன், 20 அக்டோபர், 2011

வருக! வருக! என வரவேற்கிறேன்!

வாங்க! வாங்க!

மிழர் பண்பாட்டில் வரவேற்றல் குறிப்பிடத்தக்க பண்பாடாகும்.       இப்பண்பாட்டை புறப்பாடல் வழி இயம்புவதே இவ்விடுகையின்    நோக்கமாகிறது.


அன்புள்ளவரைக் கண்டால் அகமகிழ்ச்சியடைகிறோம்.                            
புன்சிரிப்புடன் புகழ்மொழி கூறுகிறோம்.பெரியோராயிருந்தால் கைகுவித்துக் கும்பிட்டு வரவேற்கிறோம்.    வரவேற்பதிலே இன்றும் கூடப் பலவகை உண்டு. 

கை கும்பிட்டு வரவேற்பது. கை கொடுத்து சமத்துவமாக வரவேற்பது. ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு வரவேற்பது. இப்படிப் பல வகையில் வரவேற்கிறோம்.

இவற்றுள் கை குலுக்கி வரவேற்பது தமிழர் நாகரிகம் அன்று. இந்த முறை  மேல் நாட்டாரிடம்  நாம் கற்றுக் கொண்டது  என்போர் உண்டு. உயர்ந்தவர்களை பெரியோர்களைக் கண்டால் நிலத்தில் வீழ்ந்து வணங்கி வரவேற்கவேண்டும் சமமுள்ளவரைக் கண்டால்  கும்பிட்டு வரவேற்கவேண்டும். தன்னிலும் தாழ்ந்தவரை இளையவரைக் கண்டால்  தழுவிக் கொண்டு  வரவேற்கவேண்டும்.  இதுவே தமிழரின் வரவேற்பு முறை இந்திய நாட்டு நாகரிகம் என்றும் கூறுகின்றனர்.

இவை தமிழர் நாகரிகமாக இருக்கட்டும்.இந்திய நாகரிகமாகவும் இருக்கட்டும். இந்த நாகரிகத்தைப் பற்றி நாம் ஆராய்ச்சியில் இறங்கவேண்டாம்.

கை கொடுத்து வரவேற்பது  மேல் நாட்டு நாகரிகமா? அந்நியர் நமக்குக் கற்றுத் தந்த நாகரிகமா? தமிழர் நாகரிகம் அல்லவா? என்பதுதான் நம் கேள்வி...

என்று தம் பண்பாடு சார்ந்த வினாவை புறநானூறு தமிழ் நாகரிகம் என்னும் நூலில் முன் வைக்கிறார் 
தமிழறிஞர் சாமி. சிதம்பரனார். இதற்கு அவர் சான்று கூறும் புறப்பாடலில் இந்தப் பண்பாடு எந்த அளவுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது என்பதைக் காண்போம்.

பிலர் ஒருநாள் டுங்கோ வாழியாதனைச் சந்திக்கச் சென்றார் வேந்தனும் எழுந்து வந்து கைகொடுத்து வரவேற்றான். கபிலரின் கைகளைத் தொட்டபோது வேந்தனுக்கு மனதில் ஒரு கேள்வி தோன்றியது..

நம் கைகளைவிட புலவரின் கைகளில் மிகவும் மென்மையாக இருக்கிறதே?“ என்பதுதான் அந்தக் கேள்வி. அதை வாய் திறந்து புலவரிடமே கேட்டுவிட்டான் வேந்தன்..

அதற்குக் கபிலர் பதிலளிப்பதாகவே இப்பாடல்அமைகிறது..  


கபிலர் கடுங்கோ வாழியாதனைப் பார்த்து ...

அரசே.. நீ உழைப்பாளி

யானையை அடக்கியாளும் இரும்பாலான அங்குசம்!

குதிரையின் கடிவாளம்!

அம்பு, வில் மற்றும் ஆயுதங்கள்! ஆகியவற்றையெல்லாம் பிடித்துக் கொண்டே இருப்பதல்லவா உன் கைகள் வன்மையாக இருக்கின்றன!!

ஆனால் என் கையோ சுவையான ஊன் கலந்த சோற்றை உண்டு வயிற்றைத் தடவிக் கொண்டிருப்பதல்லவா என் வேலை.. அதனால் தான் என் கைகள் மென்மையாக இருக்கின்றன என்கிறார். பாடல் இதோ..

கடுங்கண்ண கொல்களிற்றாற்
காப்புடைய வெழுமுருக்கிப்
பொன்னியற் புனைதோட்டியான்
முன்புதுரந்து சமந்தாங்கவும்
5.
பாருடைத்த குண்டகழி
நீரழுவ நிவப்புக் குறித்து
நிமிர்பரிய மாதாங்கவும்
ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
10.
பரிசிலர்க் கருங்கல நல்கவுங் குரிசில்
வலிய வாகுநின் றாடோய் தடக்கை
புலவு நாற்றத்தை பைந்தடி
பூநாற் றத்த புகைகொளீஇ யூன்றுவை
கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது
15.
பிறிதுதொழி லறியா வாகலி னன்றும்
மெல்லிய பெரும தாமே நல்லவர்க்
காரணங் காகிய மார்பிற் பொருநர்க்
கிருநிலத் தன்ன நோன்மைச்
செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே. (14)




 புறநானூறு -14

கபிலர் வேந்தனைப் பார்த்து..
மன்னா நீயோ..
வலிமைகொண்ட யானைகளைக் கொண்டு எதிரிகளின் காவல் மிக்க கோட்டைகளை அழிப்பாய்!

அக்கோட்டையின் உள்ளே தாழிடப்பட்ட எழு என்னும் கணைய மரத்தைச் சிதைப்பாய்!

இரும்பாலான அங்குசத்தைத் தாங்கி யானைகளை போர்க்களத்தே செலுத்துவாய்!

எத்தகைய போரானாலும் அச்சமின்றிச் சென்று தாங்கி நிற்பாய்!

குந்தாலியால் கற்பாறைகள் உடைக்கப்பட்டு அவ்விடத்தே பெரிய குழிகளாகவும் அதில் நீர் நிறைந்தும் காணப்படும். ஆழமான அக்குழிகளில் குதிரைகள் வீழ்ந்துவிடாமல் குதிரைகளைக் கடிவாளத்தாலே கட்டுப்படுத்துவாய்!

அம்புசுமந்த உன் முதுகிலிருந்து அம்பெடுத்து வில்லின் நாணை இழுத்துப் பிடித்து எதிரிகளின் மீது அம்புகளை எய்வாய்!

உன்னை நாடிப் பரிசில் வேண்டி வருவோர்க்கெல்லாம் இல்லை என்றுரைக்காமல் பொன்னும் பொருளும் அணிகலனும் வாரி வாரி வழங்கிக் கொண்டே இருப்பாய்.. இவ்வாறு உன் கைகள் ஓயாது பணியாற்றிக் கொண்டே இருக்கின்றன. அதனால் உன் கைகள் வலிமையானதாகக் காட்சியளிக்கின்றன.

என் போன்ற புலவர்களின் கை உன் கைக்கு நேர் எதிரானது. எங்களுக்கு என்ன பெரிய வேலை இருக்கிறது..

உன் போன்ற வள்ளல்கள் தரும் ஊன் கலந்த உணவை உண்டுவிட்டு, அது செறிக்கவில்லையே என வருந்தி வயிறு தடவிக் கொண்டிருப்பது மட்டுமல்லவா எங்கள் வேலை என்கிறார்.


 பாடல் வழியே..

1. விருந்தினரைக் கை கொடுத்து வரவேற்கும் தமிழர் பண்பாடு அறிவுறுத்தப்படுகிறது.
2. கடுங்கோவின் வீரம், கொடை ஆகியன நயமாகப் புலப்படுத்தப்படுகின்றன.

தொடர்புடைய இடுகைகள்.