வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்ததில் பிடித்தது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

புத்தக வாசிப்பு பற்றிய பொன்மொழிகள்


இன்றைய சமூகத்தளங்களின் ஆதிக்கத்தால் நூல் வாசிப்பு மரபுகள் மாறிவருகின்றன. திறன்பேசிகளில் மின்னூலாக வாசித்தல், ஒலிப்புத்தகம், காணொளி வழி கற்றல் என்ற நிலையில் வீட்டுக்கொரு நூலகம் என்பதையோ, புத்தகங்களை கையில் வைத்துக்கொண்டு வாசிக்கவேண்டும் என்பதையோ, இன்றைய தலைமுறையினரால் புரிந்துகொள்ளமுடியவில்லை. புத்தகங்களின் பெருமை பற்றியும் புத்தக வாசிப்பின் அருமை பற்றியும், நூலகங்களின் தேவை பற்றியும் நான் வாசித்த பொன்மொழிகளின் தொகுப்பு,

இந்த வாழ்வின் ஆகச் சிறந்த கேளிக்கை.. கொண்டாட்டம் ஓசையின்றி நடக்கிறது.. அதுதான் புத்தக வாசிப்பு. – எமர்சன்

எங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று லன்டன் தோழர்கள் கேட்டபோது…
எது நூலகத்துக்கு அருகில் உள்ளது எனக் கேட்டவர் – டாக்டர் அம்பேத்கர்.

தான் தூக்கிலிடுவதற்கு ஒரு நிமிடம் முன்புவரை வாசித்துக்கொண்டு இருந்தவர் – பகத்சிங்

ஒரு  கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்றவர் – மகாத்மா காந்தி

நல்ல புத்தகங்களை வாசிக்காத ஒருவன் வாசிக்கவே தெரியாதவனைவிட உயர்ந்தவன் அல்ல. - மார்க் டிவைன் 

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனப் பயிற்சி புத்தக வாசிப்பு - சிக்மண்ட் பிராய்டு.  

எவ்வளவோ கேளிக்கைகளை குழந்தைகளைக் கவர ஏற்படுத்தினேன். எல்லாவற்றையும் விட அதிக புதையல் புத்தகங்களிலே உள்ளன - வால்ட் டிசினி

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குபவர் – சார்லி சாப்லின்

ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். – விவேகானந்தர்.

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும். – நெல்சன் மண்டேலா.

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு புத்தகம் – ஆல்பர்ட் ஐன்சுடீன்

புரட்சிப்பாதையில் கைத் துப்பாக்கிகளைவிட பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே – லெனின்.

எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள். – சேகுவாரா

போதும் என நொந்து புதிய வாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத்தொடங்குங்கள் – இங்கர்சால்

உண்மையான வாசகன் வாசிப்பை முடிப்பதே இல்லை – ஆசுகார் வைல்டு


ரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தை தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்துவைக்கிறான். – சாமுவேல் சான்சன்.

செவ்வாய், 21 மார்ச், 2017

நேரம் கிடைத்திருந்தால்..

புத்தகம் என்ற சொல்லுக்கு, புத்தி அகம் என்று பொருள் கொள்வது நலம்.
புத்தகம் எழுதுவது என்பது பலருக்கும் கனவு!
அந்தக் கனவு பலருக்கும் கனவாகவே போய்விடும்!
ஏனென்றால் அவர்களுக்குக் கனவுகாண நேரம் கிடைக்கும்!
அதை செயல்படுத்த நேரம் கிடைக்காது!
சிலர் புத்தகம் எழுதுவதற்கென நேரம் ஒதுக்கி எழுதுவதும் உண்டு. சிலர் எண்ணிலடங்கா பக்கங்களை எழுதிக் குவித்துவிடுவதும் உண்டு.
அதனால்தான் நம் முன்னோர்கள் சொன்னார்கள் போலும்..
“ கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான் ” என்று.
கண்டதை என்றால் கண்ணில் படும் எதையும் என்று பொருள் கொள்வதைவிட பயனற்ற பல நூல்களைக் கண்டு அதில் சிறந்த நூலைக் கண்டு அதைக் கற்றவன் பண்டிதனாவான் எனப் பொருள் கொள்வதே சரியானதாக இருக்கும்.
நேரம் கிடைத்திருந்தால்…
நான் அதைச் செய்திருப்பேன், இதைச் செய்திருப்பேன் என நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சூழலில் சொல்லியிருப்போம்..
பிரிட்டன் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அந்தப் புத்தகம் 40 பக்கங்களை மட்டுமே கொண்டது. அதைப் படித்த ஒருவர், “ தாங்கள் இந்தப் புத்தகத்தை இன்னும் அதிக பக்கங்களில் எழுதியிருக்கலாமே… நேரம் கிடைக்கவில்லையா?” என்று கேட்டார்.
அதற்கு சர்ச்சில் அவர்கள், “எனக்கு இன்னும் நேரம் கிடைத்திருந்தால் இதையே நான் ஐந்து பக்கங்களில் சுருக்கி எழுதியிருப்பேன்” என்றார்.

இந்த எதிர்பாராத பதில் புத்தகம் எழுத விரும்பும் ஒவ்வொருவருக்கும் தேவையான அறிவுரையாகவே அமைகிறது.
நல்ல பேச்சு என்பது…
சிறந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவது மட்டுமல்ல!
எந்த வார்த்தை பேசக்கூடாது என்று உணர்ந்து பேசுவதே!
அதுபோல நல்ல நூல் என்பது..
சிறந்த கருத்தை தேர்ந்தெடுத்துச் சொல்வது மட்டுமல்ல!
தேவையில்லாத கருத்துக்களை எழுதாமல் இருப்பதும் தான்!


எனக்கு மட்டும் நேரம் இருந்திருந்தால் இதை ஐந்தே வரிகளில் சொல்லியிருப்பேன்..!

புதன், 21 செப்டம்பர், 2016

புதன், 30 மார்ச், 2016

இயலான் மண்ணில் அயலான் ஆட்சி.



தமிழக அரசியலில் நாள்தோறும் நடைபெறும் நகைச்சுவைக் காட்சிகளைப் பார்க்கும்போது திரைப்படங்களில் கூட இப்படியெல்லாம் காட்சிகள் இதுவரை எடுக்கப்படவில்லையே என்றுதான் தோன்றுகிறது. அரசியல்வாதிகளைக் குறைசொல்வதைவிட அவர்களைத் தேர்ந்தெடுக்கும் நம்மைநாம் தன்மதிப்பீடுசெய்துகொள்ளவேண்டி நிலையில் உள்ளோம் என்பதை நினைவுபடுத்துவதாகவே இவ்விடுகை அமைகிறது.

அரசியல் என்பது கொள்ளையடிப்பது
தேர்தல் என்பது நல்ல கொள்ளையனை மக்களே தேர்ந்தெடுப்பது

என்பதுதான் இன்றைய நிலைப்பாடாகவுள்ளது.

திங்கள், 20 அக்டோபர், 2014

இத்தனை அழகா இளவேனில்!



கடைசி தலைமுறை என்ற தலைப்பில் முகநூலில் படித்ததில் பிடித்தது,
1.
ஒளியும் ஒலியும் பார்த்த கடைசி தலைமுறையும் நாமதான் ஓனிடா மண்டையன பாத்த கடைசி தலைமுறையும் நாமதான்
2.செல்போன்ல பட்டன பார்த்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
3.மஞ்சள் பூசிய பெண்கள் முகத்தை பார்த்த கடைசி தலைமுறை நாமாதான்...!
4.கேலண்டர் அட்டையில் தேர்வெழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
5.மயில் இறகை நோட்டுக்குள்ள வெச்சி அரிசி போட்டு அது குட்டி போடும்னு நம்பின கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
6.வெட்டிப்போட்ட நுங்கை வைத்து வண்டியோட்டிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
7.தந்தியில் மரணச் செய்தி அறிந்ததும், தந்திக்கே மரணம் வந்ததையும் அறிந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
8.கல்யாண மண்டபங்களில் உறவினர்கள் கையால் உணவு உண்ட கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
9.காதல்கடிதத்தை கவரில் வைத்து மஞ்சள் தடவி ,பூஜை போட்டு ,பயந்து கொண்டே காதலியிடம் கொடுத்து திரும்பிப்பார்க்காமல் ஓடி வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
10.நண்பர்களுக்கு கடிதம் எழுதிய கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.
11.மாமா பொண்ணு ,அத்தை பொண்ணு என ஏகப்பட்ட முறைப்பொண்ணுங்க புடை சூழ வந்த கடைசி தலைமுறை நம்மளாதான் இருக்கும்.

இப்படி கணினியும், திறன்பேசியும் நம் உலகை நிறையவே மாற்றிவிட்டன. இன்றைய அறிவியலின் குழந்தைகளாக வாழும் நாம்,
இயற்கையின் குழந்தைகளாக வாழ்ந்த சங்ககால மக்களின் வாழ்வியலை சங்கஇலக்கியங்கள் வழியாகக் காணம்போது வியப்புதான் தோன்றுகிறது.

இதோ ஒரு கலித்தொகை பாடல்,

தலைமக்களுக்கிடையே கருத்துப் பரிமாற்றத்துக்கு பல தூதுப் பொருள்களையும் கேட்டிருப்போம் இளவேனிற் பருவமே தலைவனின் வரவைச் சொல்லும் தூதாக வந்ததாக இப்பாடல் மொழிகிறது,
தலைவன் பிரிந்து சென்றுள்ளான். அவன் குறித்த இளவேனிற் காலம் வந்தது. அவன் இன்னும் வரவில்லையே என்று அப்பருவம் கண்டு தலைவி  ஆற்றாது வருந்தினாள். தோழி காலத்தை நோக்கி,

வியாழன், 16 அக்டோபர், 2014

புதன், 24 செப்டம்பர், 2014

அரிதினும் அரிது கேள்...


பெரிதினும் பெரிது கேள் என்ற பாரதியின் புதிய ஆத்திச்சூடியைப் படிக்கும்போதும் ஔவையின்,

ரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையின்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்ததாயினும்
வானவர் நாடி வழி பிறந்திடுமே!

என்ற பாடலைப் படிக்கும்போதும்,

 அரிதினும் அரிது எது? என்ற கேள்வி மனதில் தோன்றியது.
தமிழ்மொழிக்கு மணிமகுடமாகத் திகழும் திருக்குறளில் வள்ளுவர், தமிழ் என்ற சொல்லை ஒரு முறை கூடப் பயன்படுத்தவில்லை. இருந்தாலும் சில சொற்களைப் பலமுறை பயன்படுத்தியிருக்கிறார். 

அரிது என்ற சொல்லை எத்தனை முறை பயன்படுத்தியிருக்கிறார் என்று பார்த்தேன். 29 முறை வெவ்வேறு விளக்கங்களுக்காகப் பயன்படுத்தியுள்ளார்.

அரிது என்ற சொல்லை இவர் ஏன் இத்தனை குறள்களில் பயன்படுத்தியிருக்கிறார்? என்ற கேள்வியோடு ஒவ்வொரு குறள்களையும் வாசிக்கும் போது, வள்ளுவர் சொல்லும் ஒவ்வொரு சிந்தனைகளும் நம் வாழ்க்கைக்கு எவ்வளவு மதிப்புமிக்கன என்பது புரிகிறது.

மறக்கவேண்டியவற்றை நினைவுகொள்வதும்
நினைக்கவேண்டியவற்றை மறந்துவிடுவதும் தானே மனித இயல்பு!

மனித சமூகம் தெரிந்தும் சில மரபுகளைப் பின்பற்றத் தவறுகிறது என்பதை உணர்ந்தே வள்ளுவப் பெருந்தகை அரிது என்ற சொல்லை இத்தனை முறை பயன்படுத்தியிருக்கிறார் என்று தோன்றியது.

குறள்களைக் காண்போம்...












செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

கணக்கில்லாக் கடவுள்கள் (கலீல் சிப்ரான்)


 கிலாபிசு  மாநகரின் கோயில் கோபுரத்தின் முன் நின்று ஒரு மதவாதி – குதர்க்கவாதி – உலகில் உள்ள பல கடவுள்கள் பற்றி விக்கமாகப் பிரச்சாரம் செய்தார். அதைப் பல ஆயிரம் மக்கள் நின்று கேட்டுக்கொண்டிருந்தனர்.

பேருரை முடிந்தது. மக்கள், “எங்களுக்குத் தெரியாதா? இந்தக் கடவுள்களெல்லாம் எங்களுடன் வாழ்கின்றனர். நாங்கள் போகுமிடமெல்லாம் எங்களுடன் இக்கடவுள்கள் வருகின்றனர். என்று பேசிக்கொண்டே சென்றர்.

சில நாட்கள் கழிந்தபின் கடைத்தெருவின் சதுக்கத்திலே ஒரு நாத்திகன் மக்களிடையே சொற்பொழிவாற்றினான். “ கடவுள் ஓர் கற்பனை. மனிதன் இல்லாத கடவுளைக் கற்பனை செய்து அதற்கு இன்று அடிமையாகி அல்லல்படுகின்றான்.“ என்று கூறினான். மக்களுக்கு ஒரே மகிழ்ச்சி. ஆரவாரம்! ஏன் தெரியுமா? கடவுளுக்காகப் பயந்து நடுங்கவேண்டாமே!

சில மாதங்கள் ஓடின. மிகவும் திறமையான, சொல்நயம் மிளிரப் பேச்சாற்றல் மிக்க ஞானி பேசினார். “இந்த உலகில் இருப்பவர் ஒரே ஒரு கடவுள்தான். கடவுளின் தீர்ப்பு நாளில் நீங்களெல்லாம் உங்கள் செயலுக்கு விளக்கம் கூறவேண்டும். தீர்ப்பு நாளிலிருந்து தப்பமுடியாது.“ என்றார். இதைக் கேட்ட மக்களுக்கெல்லாம் ஒரே பயம். ஏற்பட்டது. அஞ்சி அஞ்சி செத்தனர். பல கடவுள்கள் என்றபோது பயப்படாதவர்கள் கூட “ஒரே கடவுள்“ என்று கேட்டபோது அஞ்சி நடுங்கினர்.

சில ஆண்டுகளில் வேறோர் அறிவாளி தோன்றினார். அவர் “உலகில் மூன்று கடவுள்கள் இருக்கின்றர். படைத்த, காத்தல், அழித்தல் இவர்கள் தொழில். இந்தக் கடவுள்கள் வானவெளியிலே வாழ்கின்றர்.” என்றார்.
அதுமட்டுமல்ல, அவர் மேலும் கூறினார். “இந்தக் கடவுள்களுக்கு கருணைக் கடலான தாய் இருக்கின்றாள். இவர்களுக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்ககை, கணவன், மனைவி எல்லாம் குடும்பமாய் இருக்கிறார்கள்“ என்று புகன்றார்.
இந்த விளக்கவுரையைக் கேட்டவுடன் மக்களுக்கு மனதிலே ஒரு திருப்தி ஏற்பட்டது.

மூன்று கடவுள்கள் இருப்பதால் அவர்களுக்குள்ளே கருத்து வேற்றுமை ஏற்படும். குற்றம் குறைகள் இருக்கும். கடவுளின் தாய் கருணை மிக்கவர். அவருக்குக் கட்டாயம் நம் ஏழ்மையும் பலவீனமும் நன்றாகப் புரியும் இல்லையா? என்று திருப்தி அடைந்தனர்.

இந்நாள் வரை கிலாபிசு நகரில் மட்டுமல்ல, இந்த நாடு முழுமையும் மக்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் வாதாடுகின்றர். சொற்போர் நடத்துகின்றனர். “கடவுள்கள் பலப்பல“ என்போர் சிலர். கடவுளே இல்லை என்போர் கொஞ்சம் பேர். உலகில் ஒரே ஒரு கடவுள் தான் உண்டு என்கிறார்கள் சிலர். நம்மை மூன்று கடவுள்கள் வாழ்விக்கின்றார்கள் என்பார்கள் சிலர். தாய் தந்தையுடன் பிள்ளை குட்டியுடன் பெரிய குடும்பமே “கடவுள் குடும்பம்“ என்று கூறுகின்றவர்களோ மிகப் பலர்.

புதன், 20 ஆகஸ்ட், 2014

எல்லா சாலைகளும் மருத்துவமனையை நோக்கி...


கல்வியின்மையும், வறுமையும், வேலைவாய்ப்பின்மையும், அறியாமையும், மக்கள் தொகைப் பெருக்கமும் மிகுந்து காணப்படுகின்ற நமது நாட்டில், துறைதோறும் வெளியிடப்படுகின்ற புள்ளிவிவரங்கள் அனைத்தும், ஒவ்வொரு துறையிலும் நாம் அடைந்திருக்கும் வீழ்ச்சியை முன்வைக்கின்றன.
இன்றைய நமது வாழ்க்கை முறையின் அனைத்துக் கூறுகளும் மருத்துவமனைகளையும், மருந்துகளையும் நோக்கியே நம்மை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. அதிலும் தமிழ்நாடு, நோய் மயம், சிகிச்சை மயம், மருந்து மயம், மருத்துவர் மயம், மருத்துவமனைகளின் மயமாக மாறிக்கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை.
தமிழ்நாட்டில் இருசக்கர வாகனங்கள் உட்பட மொத்தம் 1,86,69,500 வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் வெளிவரும் புதிய வாகனங்களின் எண்ணிக்கை தலைசுற்ற வைக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 16 லட்சம் புதிய வாகனங்கள் சாலைகளுக்கு வந்துள்ளன.
இதே பாய்ச்சலில், விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகள் மற்றும் உடலுறுப்பு இழப்புகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டேயிருக்கிறது. இந்திய அளவில் கடந்த 2003 முதல் 2012 வரையிலான பத்து ஆண்டுகளில் மட்டும் 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்திருக்கின்றனர். 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் மற்றும் படுகாயங்களுக்கு உள்ளாகி முடங்கியுள்ளனர்.
அதாவது, சராசரியாக ஓர் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களை சாலை விபத்துகளில் இந்தியா பறிகொடுத்துக் கொண்டிருக்கிறது. காயம், படுகாயம் மற்றும் உடலுறுப்புகள் இழப்புக் கணக்குத் தனிக் கணக்கு.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இன்றைய நிலையில் ஓர் ஆண்டுக்கு 16,000-க்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். காயம், படுகாயம், உடலுறுப்புகள் இழப்பு, வாகனங்களின் காயம் என்பது தனிக் கணக்கு.
அதாவது, ஒரு மாதத்திற்குச் சராசரியாக 1,350 பேர். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு நாளைக்குச் சராசரியாக 56 பேர் எனும் கணக்கில், இன்றைய தமிழ்நாடு தனது மனித உயிர்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறது.
1993-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த 34,925 சாலை விபத்துகளில் 7,300-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். 32,336 பேர் காயம் மற்றும் படுகாயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை எகிறிக்கொண்டே வந்து 2013-ஆம் ஆண்டில் 66,238 விபத்துகளாகவும், 15,563 உயிரிழப்புகளாகவும், 76,000 காயம் மற்றும் படுகாயம் அடைந்தோராகவும் உயர்ந்து இருக்கிறது.
தமிழ்நாட்டின் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் விபத்து காரணமாக மட்டும் ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தப் புள்ளிவிவரங்களெல்லாம் காவல்துறையில் பதிவான விபத்துகளின் அடிப்படையில் மட்டுமே. காவல்துறைவரை செல்லாத விபத்துகளின் எண்ணிக்கை கணக்கிலடங்கா.
அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் தற்போது 6,800-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள், ஆண்டில் ஒரு சில நாள்களைத் தவிர, மற்ற அனைத்து நாள்களிலும் 22,000 கோடிக்கு மேல் மது வகைகளை விற்பனை செய்கின்றன. மதுவை உறிஞ்சிப் பழகிவிட்ட ஒருவர், காலப்போக்கில் மதுவினால் உறிஞ்சப்பட்டு மரணமடைவார் என்பது உறுதி.
அரசு "டாஸ்மாக்' மதுபானக் கடைகளின் சுகாதாரமற்ற குடிப்பகங்களில் தொடங்கி, தனியார் விடுதிகள் மற்றும் நட்சத்திர விடுதிகளின் ஆடம்பரமான குடிப்பகங்கள் வரை மதுப் பழக்கம் என்பது நமது மக்களின் பொதுப் பழக்கமாக மாறிவிட்டது.
மதுவை இயல்பாகக் கையாளுவதைப் போன்று ஏராளமான கதாபாத்திரக் காட்சிகளை தமிழ்த் திரைப்படங்கள் முன்வைக்கின்றன. அண்மைக் காலப் படங்களில் அதிகரித்திருக்கும் இந்தப் போக்கு, இளைஞர்களின் மதுப் பழக்கத்திற்கு மறைமுகமாக வலிமை சேர்த்து அப்பழக்கத்தை அங்கீகரிக்கின்றன.
பதின்ம வயதுகளில் தொடங்கி தனது இளமை முழுவதும் மது குடிப்பவர்கள், அதன்பிறகு தன் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் எவ்வகையிலும் பயன்படாத உயிர்ச்சுமைகளாக உளைச்சல் அடைந்து, அவ்வுளைச்சல்களையே மற்றவர்களுக்கும் கொடுப்பவர்களாக மாறுகின்றனர்.
இப்படியான குடி நோயாளிகள் மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினர் அடையும் மன அழுத்தங்கள் தொடர்பான நோய்களுக்கும் நமது மருத்துவமனைகளின் வாயிலாகவே தீர்வு கண்டாக வேண்டும். எனவே, இவ்வகையிலும் மருத்துவமனைகள் கூடுதல் சுமைகளைப் பெறுகின்றன.
அடுத்து பரவி வரும் புதிய சிக்கலாக உணவுக் கலாசாரம் மாறியிருக்கிறது. நடைபாதை உணவுக் கடைகள் முதல் நட்சத்திர விடுதி உணவுக் கூடம்வரை மக்கள் கூட்டம் கூட்டமாக உண்கின்றனர்.
பசிக்காகவோ, சத்துக்காகவோ அல்லாமல், புதிய புதிய ருசிக்காகவும், மேலைநாட்டு நாகரிகமாகவும் இந்தக் கலாசாரம் பரவிக் கொண்டிருக்கிறது. பொருந்தாத உணவுகள் பெருந்தீனியாக உட்கொள்ளப்படுவதால் ஏற்படுகிற புதிய புதிய நோய்கள் பெருகிக் கொண்டேயிருக்கின்றன.
துரித உணவு என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதால், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின்றன. உணவுகளே நோய்களாக மாறி மக்களைக் கொல்லுகின்ற அவலம் பெருகி வருகிறது.
இதுபோன்ற உணவுகளின் விளைவால் 29 பேர் இறந்ததாக 1990-ஆம் ஆண்டு ஆய்வு சொல்கிறது. 2008-ஆம் ஆண்டின் ஆய்வோ அவ்வகை மரணங்கள் 53 நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
எதிர்வரும் 2020-ஆம் ஆண்டு இவ்வகையிலான (அதாவது, புது புது வகையான பெருந்தீனிகளை வயிற்றில் அடைத்துக் கொள்வதால்) மரணங்கள் 57 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துரித உணவு வகைகள் பெரியவர்களை மட்டுமல்ல, இளம் குழந்தைகளையும் சீரழித்துச் சிதைக்கிற உண்மைகளை "அறிவியல் - சுற்றுச்சூழல் மையம்' (Centre for Science and Environment) மிக விரிவாகத் தெளிவுபடுத்தி எச்சரித்திருக்கிறது.
துரித உணவுகளைத் தடை செய்தும், துரித உணவு விளம்பரங்களுக்குக்கூட தடைவிதித்தும், துரித உணவுகளுக்கு அதிகமாக வரி விதித்தும் பல வல்லரசு நாடுகள் உள்ளிட்ட உலகின் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது மக்களை துரித உணவுக் கலாசாரத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு அதிரடியாகக் களமிறங்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
துரித உணவு வணிகத்திற்கு பல மேலை நாடுகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கிற கடுமையான நெருக்கடிகள் நமது இந்தியாவுக்கான பெருஞ்சந்தை வாய்ப்புகளாக மாற்றப்பட்டுவிட்டன.
இதன் விளைவாக கோடிக்கணக்கான நமது குழந்தைகள் தங்களது வளரும் பருவத்திலேயே நோய்களில் வீழ்கிறார்கள். இந்த அவலநிலையை மாற்றுங்கள் என்று நமது மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது சி.எஸ்.இ. என்ற அமைப்பு.
இதுமட்டுமின்றி உலகளாவிய நீரிழிவு நோய் கழகம் (International Diabetes Federation), உலகளாவிய மருத்துவ ஆய்வு இதழான Epidemiologyபோன்ற ஆய்வு அமைப்புகள் இந்தியாவில் பெருகிப் பரவிவரும் நோய்களின் அளவு அபாயகரமான கோடுகளைத் தொடுவதாக ஆய்வுபூர்வமாகவே தெரிவிக்கின்றன.
மனித வளம் என்கிற நமது வலிமையின் மீதும் பெருமையின் மீதும் மிகப்பெரிய அளவில் நோய்களின் வடிவில் இடிகள் இறங்கிக் கொண்டிருக்கின்றன.
அவ்வகையில் துரித உணவு, பொட்டல உணவு, சத்தில்லாத உணவு போன்ற காரணங்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கும் பல்வேறு நோய்களுக்குத் தீர்வு காணவேண்டிய இடமும் மருத்துவமனைகள்தான்.
இவையெல்லாம் போதாதென்று இயற்கைப் பேரிடர்கள், வகுப்புக் கலவரங்கள், புகையிலை நோய்கள், குடும்ப வன்முறைகள், குடும்ப விபத்துகள், தாய்சேய் நலன் மற்றும் பொது நோய்கள் போன்றவற்றுக்கும் மருத்துவமனைகள்தான் உதவிக்கரங்களை நீட்டியாக வேண்டும்.
அதேபோல, எத்தகைய நோய்க் கொடுமைகளுக்கும் ஆளாகாமல் தங்களது எழுபத்தைந்து வயதைக் கடந்துவிட்ட நமது மூத்த குடிமக்களுக்கு நேருகின்ற இயற்கையான வயோதிக நோய்களையும்கூட மருத்துவமனைகள்தான் இயன்றவரை சரிசெய்தாக வேண்டும்.
தமிழ்நாட்டில் சிறியவையும், பெரியவையும், மிகப் பெரியவையுமாக 12,350-க்கும் மேற்பட்ட அரசுச் சார்பான பல்வகை மருத்துவச் சேவை அமைப்புகள் இரவு பகலாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை போதாதென்று தனியார் மருத்துவமனைகளும், மருந்து விற்பனையகங்களும் நாடு தழுவிய அளவில் லட்சக் கணக்கில் இருக்கின்றன.
ஏழைகள், அரசு மருத்துவமனைகளிலும், பணக்காரர்கள் தனியார் மருத்துவ மனைகளிலும் தஞ்சமடைகின்றனர். வாகன விபத்துகள், மதுப்பழக்க நோய்கள், உணவு முறை நோய்கள், மனநலச் சிதைவு நோய்கள், இயற்கைப் பேரிடர்கள் என்று எண்ணிலடங்கா வழிகளில் நமது மக்கள் வலுக்கட்டாயமாக மருத்துவமனைகளை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.
அப்படித் தள்ளப்படுவோரில் வசதிபடைத்தவர்களை தனியார் மருத்துவமனைகள் தன்பக்கம் வரவழைத்துக் கொள்கின்றன. வசதியற்றவர்கள் அரசு மருத்துவமனைகளில் கிடத்தப்படுகிறார்கள்.
விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்தவர்கள், தங்களது உயிரைக் கொடுத்து, தங்களது உடல் உறுப்புகளையும் தேவைப்படுவோருக்குக் கொடுக்கிறார்கள். ஆனால், இத்தகையப் பரிமாற்றம் தொடர்பான சிகிச்சைகள் மட்டும் லட்சங்களை மேசைமேல் வைத்தால்தான் நடக்கும் என்ற நிலை ஒரு கசப்பான உண்மை.
அதற்கும் ஆயிரம் காரணங்களும் கணக்குகளும் இருக்கலாம். அத்தகைய வணிகக் கணக்குகளின் முன்பாக மனிதநேயக் கணக்குகள் எதுவும் செல்லுபடியாவதில்லை.
நோய்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து களைவது, நோய்களை சேவை நோக்கில் தீர்ப்பது எனும் இரண்டு நிலைகளில் நமது அரசுகள் செயல்பட்டாக வேண்டிய நேரம் இது.
புதிய கொள்கைகளையும் சட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தினால்தான் ஏழை எளியவர்கள் நட்சத்திர மருத்துவமனைகளைப் பார்த்து ஏங்காமல் உயிர்பிழைப்பார்கள்.
உயிர்களை மையப் பொருளாக வைத்து, மருத்துவ வணிகமுறை கோரதாண்டவமாடிக் கொள்ளையடிக்கும் போக்கினை, அரசுகள் நினைத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும்.
உயிர் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். வாழ்வுரிமை என்பதும் எல்லோருக்கும் சமமானது. பணம் படைத்தவர்களை மட்டுமே பாதுகாப்போம் எனும் போக்கு மனிதத் தன்மைக்கும் மருத்துவ நாகரிகத்திற்கும் எதிரானது.


First Published : 20 August 2014 02:49 AM IST

நன்றி தினமணி.

செவ்வாய், 29 ஜூலை, 2014

கேள்வி கேட்கவேண்டிய முறை (தென்கச்சியார்)



முன்னொரு காலத்தில் முனிவர்கள் பலர் ஒன்று கூடி ஆத்ம விசாரத்தில் ஈடுபட்டார்கள் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது பற்றி அவர்களுக்கிடையில் விவாதம் எழுந்தது.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விளக்கம் கூறினார்கள். இருந்தாலும் அவர்களுக்குச் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. ஆதலால் அவர்கள் தங்கள் சந்தேகத்தை உத்தாலக மகரிசியிடம் சென்று கேட்டனர்.
ஆனால் உத்தாலகரோ, “இதற்கு ஒருவரால்தான் விளக்கம் கொடுக்கமுடியும். அவர்தான் மன்னர் அசுவபதி. மகாஞானி அவர். எனவே நாம் அனைவரும்அவரிடம் சென்று இதைப்பற்றிக் கேட்கலாம்.”என்றார்.
அதன்படியே அனைவரும் அசுவபதி மன்னரிடம் சென்றனர்.
அசுவபதி எல்லோரையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். அவா்களுக்கு உயர்ந்த ஆசனம் கொடுத்து விதிமுறைப்படி வணங்கினார். பிறகு நல்ல உணவு பரிமாறி அவர்கள் அனைவரையும் சாப்பிடும்படிக் கேட்டுக்கொண்டார். ஆனால் ரிசிகள் யாரும் சாப்பிடாமல் பேசாமல் உட்கார்ந்திருந்தார்கள்.

இதை அசுவபதி மன்னர் பார்த்தார்.அவர்  அவர்களை நோக்கி ஏன் சாப்பிடாமல் உட்கார்ந்திருக்கிறீர்கள்? நான் கொடுத்த உணவு குற்றமுடையது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படி எதுவுமில்லை. என் ராச்சியதில் திருடர்கள் கிடையாது! குடிகாரர்கள் கிடையாது! ஆசாரமற்ற ஆண்கள் கிடையாது! அதனால் ஆசாரமற்ற பெண்களும் கிடையாது! என்றார்.

அதற்கு அந்த ரிசிகள்,  “ நாங்கள் இங்கே உங்களுடைய உணவை உட்கொள்வதற்காக வரவில்லை. ஜீ(சீ)வாத்மா, பரமாத்மா பற்றிய எங்களுடைய சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வதற்காகவே உங்களிடம் வந்திருக்கிறோம். என்று தெரிவித்தார்.
உடனே அசுவபதி மகாராசா, ” இன்று உணவு அருந்துங்கள். நாளைக்கு அதைப்பற்றி யோசிக்கலாம்” என்று தெரிவித்தார். முனிவர்களும் அவரது கருத்தை ஏற்றுக்கொண்டு உணவு அருந்தினார்கள்.
அதன்பிறகு அவர்கள் தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்குச் சென்று தங்களுக்குள் உரையாட ஆரம்பித்தனர்.
அப்போது முனிவர்களுள் ஒருவர், “அசுவபதி மன்னர் நாளைக்கு இதைப் பற்றி யோசிக்கலாம் என்றுதான் கூறினாரே தவிர, பதில் சொல்கிறேன் என்று சொல்லவில்லையே!” என்றார் அவர் அவ்விதம் கூறியதும், மகாராசா இப்படிச் சொன்னதற்குக் காரணம் என்னவாக இருக்கும்!” என்று முனிவர் அனைவரும் தங்களுக்குள் யோசிக்க ஆரம்பித்தனர். அப்போது மகரிசி உத்தாலகருக்குப் பளிச்சென்று காரணம் புரிந்தது.
உடனே அவர் மற்ற முனிவர்களைப் பார்த்து, ”நாம் எல்லோரும் ரிசிகள். நன்றாக விவரம் தெரிந்தவர்கள். அப்படியிருந்தும் ஒரு விசயத்தில் நாம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றார். எந்த விசயத்தில் நாம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள்?” என்று மற்ற முனிவர்கள் வினவினார்கள்.

உத்தாலகர் விளக்கம் கூறினார் – நம்முடைய சந்தேகத்தை மன்னர் அசுவபதியிடம் கேட்கவேண்டிய முறையில் நாம் கேட்கவில்லை.நாம் உயர்ந்த ஆசனங்களில் அமர்ந்துகொண்டு அவரிடம் விளக்கம் கேட்டது சரியில்லை” என்றார் உத்தாலகர்.
அவர் கூறியதைக் கேட்டபிறகுதான் முனிவர்களுக்குத் தாங்கள் செய்த தவறு புரிந்தது. மறுநாள் முனிவர்கள் அனைவரும் அசுவபதியிடம் சென்றார்கள்.  ஒரு சீடன் எப்படி குருவை நாடிப் போகவேண்டுமோ, அந்த முறையில் பணிவோடு, முறைப்படி அசுவபதியை வணங்கி தங்கள் சந்தேகத்தைக் கேட்டார்கள்.  
அவரும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்குச் சரியான விளக்கம் கொடுத்தார். இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், எதையும் கேட்கவேண்டிய முறைப்படி கேட்கவேண்டும் என்பதுதான்!
ஒரு விசயத்தை எடுத்துச்சொல்பவர் உயர்ந்த இடத்தில் இருக்கவேண்டும். கேட்டுத்தெரிந்துகொள்பவர் தாழ்ந்த இடத்தில் இருக்கவேண்டும். அப்போதுதான் கேட்பர் அக்கறையாகக் கவனித்துப் புரிந்துகொள்ளும் பக்குவம் ஏற்படும். இது கௌரவப் பிரச்சினை இல்லை.

( இன்று பாடம் கேட்பவர் அமர்ந்துகொண்டும், பாடம் சொல்லித்தருபவர் நின்றுகொண்டும் இருப்பதை அன்றைய கல்வி முறையோடு ஒப்பிட்டுக் காணும்போது, பெரியவர்கள் ஏன் அடிக்கடி நான் அந்தக்காலத்துல படித்தவன் என்று சொல்கிறார்கள் என்பதை உணர்ந்துகொள்ளமுடிகிறது.)

தொடர்புடைய இடுகை

அந்தக் காலத்து எட்டாவது

புதன், 16 ஜூலை, 2014

நான் மனிதன்



கண்களால் காண வேண்டியது?
செவிகளால் கேட்கவேண்டியது?
வாயால் பேச வேண்டியது?

இந்த மூன்றும் அறியாமல்தான் நாம் வாழ்ந்துவருகிறோம். கவிஞர் மீரா அவர்களின் “ நான் மனிதன் ” என்ற கவிதை இந்த உண்மையை அழகுபட மொழிகிறது. இந்தக் கவிதையைப் படித்தவுடன் நானும் கண், செவி, வாய் என்னும் புலன்களின் இன்பம் பெற ஆவலாக உள்ளேன். அதற்குத் தக்க வாய்ப்பாக ஈரோடு புத்தகத் திருவிழா 2014 அடுத்த மாதம் முதல் நடைபெற உள்ளது.

நல்ல புத்தகங்களைக் கண்களால் பார்த்து
நல்ல சொற்பொழிவுகளைச் செவிகளால் கேட்டு
நல்ல அறிஞர்களுடன் நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து

புலன்களின் பயன்களை முழுமையாக அடைய ஆவலாக உள்ளேன்.


நான் மனிதன்!

வான்திரியும் தண்ணிலவைப் பார்த்த துண்டா?
வசந்தத்தைக் கண்டதுண்டா? துள்ளி ஓடும்
மான்கூட்டம் மயில்ஆட்டம் மலரின் தோட்டம்
மங்கைமுகம் இவையனைத்தும் கண்ட துண்டா?
தேன்கவிதைத் தமிழ்மொழியின் எழுத்தைக் கண்ணால்
தின்றதுண்டா? சுவைத்ததுண்டா? இல்லை! அந்தோ!
நான்குருடன் நான் குருடன்! உலகை நோக்கும்
நல்லநிலை எனக்கில்லை; என்ன வாழ்க்கை?

கான்ஓடும் ஆறுகளின் சத்தம் என்றன்
காதுகளைத் தொட்டதுண்டா? குயிலின் பாட்டைத்
தான்கொஞ்சம் கேட்டதுண்டா? குழலும் யாழும்
தரும்மதுரத் தனிச்சுவையில் பித்துக் கொண்டே
நான்மயங்கிக் கிடந்ததுண்டா? அறிஞர் பேச்சில்
நனைந்ததுண்டா என்நெஞ்சம்? இல்லை! அந்தோ
நான்செவிடன்! நான்செவிடன்! குரலைக் கேட்கும்
நல்லநிலை எனக்கில்லை; என்ன வாழ்க்கை?
ஊண்வேண்டும் நீர்வேண்டும் என்றே வாயால்
உரைத்ததுண்டா ஓயாமல்? துன்பத் தூண்டில்
மீன்போலத் துடிக்கின்ற கொடுமைக் காக
மிகவருந்தி ஒப்பாரி வைத்த துண்டா?
மேன்மையுள்ள மனக்கருத்தை யாருக் கேனும்
மெதுவாகச் சொன்னதுண்டா? இல்லை! அந்தோ
நான் ஊமை! நான் ஊமை! வார்த்தை யாடும்
நல்லநிலை எனக்கில்லை; என்ன வாழ்க்கை?

நான் உலகைப் பார்த்ததில்லை! ஓசை யாவும்
நான்கேட்ட தேயில்லை! இனிதாய்ப் பேசத்
தான்என்றும் முடியவில்லை! ஆமாம்! உண்மை!
தணல்சூழ்ந்த குடிசைக்குள் கிடப்ப தேபோல்
ஏன் இன்னும் இருக்கின்றேன் என்றே நாளும்
எண்ணுகிறேன்; விம்முகிறேன்; என்ன செய்வேன்?
நான்மனிதன்! நான்மனிதன்! அதனால் சாக
நடுங்குகிறேன்! நடத்துகிறேன் ஆசை வாழ்க்கை!

                                          -கவிஞர் மீரா

இந்தக் கவிதை நான் இதுவரை சராசரி மனிதனாகத்தான் இருந்திருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தியது. உங்களுக்கும் உணர்த்தியிருக்கும் என நம்புகிறேன்.