வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
புறநானூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புறநானூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 அக்டோபர், 2014

புலிதுஞ்சு வியன்புலம்!

வலிமைவாய்ந்த புலிதங்கியிருக்கும் அகன்ற இடத்துக்குள் சராசரியான மனிதர்கள் சென்றால் அவர்கள் நிலை என்ன ஆகும்?

(சமகால விபத்துடன் சங்ககாலக் காட்சியை ஒப்பீடுசெய்வதாக இக்கட்டுரை அமைகிறது.)

விலங்குக் காட்சிசாலைக்குச் சென்ற பாரதி சிங்கத்தை அருகில் சென்று பார்க்கவேண்டும் என்று சொன்னதாகவும். பணியாளர் அருகில் இருக்க, அச்சமின்றி சென்ற பாரதி சிங்கத்தைப் பார்த்து நீ காட்டுக்கு ராஜா, நான் பாட்டுக்கு ராஜா என்று சொல்லியதாகவும். அதை ஏற்றுக்கொள்வதுபோல சிங்கமும் கர்சனை செய்ததாகவும் பாரதி பற்றி வாழ்க்கைக் குறிப்புகள் சொல்வதுண்டு.

எல்லோரும் பாரதியாகமுடியுமா? 



இந்தக் காட்சியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்கமுடியாது.

அந்த மனிதனின் நிலையில் நம்மை வைத்து எண்ணிப்பார்க்கும்போதே மனதெல்லாம் பதைபதைக்கிறது.

நாம் வாழ எத்தனையோ உயிர்களை அழித்திருக்கிறோம்.
ஆனால்

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

அறிவு கெட நின்ற வறுமை!


மக்கள்தொகைப் பெருக்கம், விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், தனியார்மயமான கல்வி என எல்லாவற்றுக்கும் காரணமான அரசின் திறமையற்ற ஆட்சிமுறை யாவும் சேர்ந்து நம் இந்தியாவை வீழ்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது. அதனால் படித்த குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

வறுமை ஒரு மனிதனை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றுவிடுகிறது.

நெருப்பில்கூட ஒருவனால் தூங்கமுடியும் ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது என்பார் வள்ளுவர். இதனை,

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதுஒன்றும் கண்பாடு அரிது

திருக்குறள் – 1049
என்ற குறள் சுட்டும்.

வறுமையைப் போலத் துன்பமானது எது என்று கேட்டால், வறுமையைப் போல் துன்பமானது வறுமை ஒன்றே ஆகும் எனவும் உரைக்கிறார். இதனை,

இன்மையின் இன்னாதது யாதுஎனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

திருக்குறள் – 1041
என்ற குறள் வழி உணரலாம்.

வறுமை மனிதனின் அறிவைக் கெடுத்துவிடும் என்ற உண்மையை உணர்த்தும் புறநானூற்றுப் பாடலைக் காண்போம்.

பயம் கெழு மா மழை பெய்யாது மாறி
கயம் களி முளியும் கோடை ஆயினும்
பழற்கால் ஆம்பல் அகல் அடை நீழல்
கதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம்
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்?
வான் தோய் நீள் குடை, வய மான் சென்னி!
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
ஆசு  ஆகு என்னும் பூசல் போல
வல்லே களைமதி அத்தை – உள்ளிய
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை
பொறிப் புணர் உடம்பில் தோன்றி என்
அறிவு கெட நின்ற நல்கூா்மையே!
புறநானூறு 266

சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட் சென்னியைப் பெருங்குன்றூா்க் கிழார் பாடியது.

பயன்மிக்க வான்மேகம் மழையைப் பொழியாது நீங்குதலால் நீர்நிலைகள் வற்றிப்போகும் கோடைக்காலமாயினும் துளைபொருந்திய நீண்ட காம்பைக் கொண்ட ஆம்பலின் அகன்ற இலையின் நிழலில் கதிர்போன்ற கோட்டினைக் கொண்ட சுழித்த முகத்தை உடைய நத்தையின் ஏற்றை செருக்கினால் பெண்ணாகிய இளைய சங்குடன் பகற்காலத்தே கூடி மகிழும். இத்தகைய நீா்வளமிக்க வயல்களைக் கொண்ட நாட்டையும் வெற்றிச்சிறப்பையும் உடையோய்!

வானளாவ உயா்ந்த குடையையும், வலிமைமிக்க குதிரையினையும், உடைய சென்னி!

அறிவுமிக்க சான்றோர் ஒருங்கிருந்த அவையில் சென்று ஒருவன் யானுற்ற துன்பத்துக்குத் துணையாய் நீவிர் எனக்குப் பற்றாக வேண்டும். என்னும் முறையீட்டை அவா்கள் விரைந்து தீர்பார்கள். அதுபோல என்னை நினைந்து வந்த விருந்தினரைக் கண்டு அவர்க்கு விருந்தளிக்க இயலாமல் ஒளியச் செய்யும் நன்மை இல்லாத இல்வாழ்க்கையை உடையவன் நான். ஐம்புலன்களும் குறைவின்றிப் பொருந்திய என் உடம்பில் அவற்றால் ஆகிய பயனை அடையமுடியாதபடி எனது அறிவு கெட நிலைபெற்ற வறுமையை விரைவாகதத் தீர்பாயாக. 

வெள்ளி, 16 மே, 2014

வாழ்தல் வேண்டிப் பொய்கூறேன்!


இன்றைய சமூகத்தில் பொய்சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் வாழத்தகுதியற்றவர்கள் என்று மதிப்பிடப்படுகிறார்கள்.  
உண்மை மட்டுமே பேசுபவர்களை வேற்றுகிரகவாசிகளைப் பார்ப்பதுபோலவே நாம் பார்க்கிறோம்.

வாழத் தகுதியுள்ளன மட்டுமே வாழும்! அல்லன செத்துமடியும்!  என்ற கோட்பாட்டின்படி,
இந்த உலகில் வாழத்தேவையான தகுதி, நடித்தல், பொய்சொல்லுதல். நான் வாழவும், என்னை நம்பியிருப்பவர்கள் வாழ்வதற்காகவும் தான், நான் பொய்சொல்கிறேன் என்று நாம் சொல்லும் பொய்களுக்கு நாம் காரணம் சொல்லிக்கொள்கிறோம்.

செவ்வாய், 6 மே, 2014

நம்மை மாற்றும் மாபெரும் ஆற்றல்!


குழந்தைப் பருவத்திலிருந்து இன்றுவரை நாம் கடந்துவந்த பாதையை, சற்று திரும்பிப் பார்த்தால்…

பெற்றோர், உறவினர்கள், ஆசிரியர்கள், நூல்கள், அனுபவங்கள், வெற்றிகள், தோல்விகள் என நாம் வாழ்வில் சந்தித்த ஒவ்வொரு உறவுகளும், சூழல்களும் நம் பழக்கவழக்கத்தை, பண்பாட்டை செதுக்கியிருக்கின்றன என்பதை நாம் உணரமுடியும். மேற்சொன்ன உறவுகளையும், சூழல்களையும்விட நாம் தேர்ந்தெடுக்கும் நட்பு நம்மை மாற்றும் மாபெரும் ஆற்றலாக அமைவதை நாம் உணரவேண்டும்.

வெள்ளி, 2 மே, 2014

பெரிதே உலகம் ! பேணுநர் பலரே!



நான்கு சுவர்களுக்குள் நம் உலகம் அடங்கிவிடுகிறது. அது வீட்டுக்கு உள்ளேயோ, வெளியோ நாம் படிக்கும், பணிபுரியும் இடமாகவோ அமைகிறது. இன்று இணையம் வந்து உலகத்தை உள்ளங்கைக்குள் அடக்கிவிட்டது என பெருமிதமடைந்தாலும், சிந்தித்துப் பார்த்தால் நாம் வாழும் உலகம் மிகவும் சிறியது என்பது புரியவரும்.

திங்கள், 14 ஏப்ரல், 2014

புகழ் - வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும்..


உன்னைப் புகழும்போது செவிடனாக இரு!
உன்னை இகழும்பொது ஊமையாக இரு!
என்றொரு பொன்மொழி உண்டு..
புகழ் ஒரு போதை! இன்னும் இன்னும் என்று நம்மை மதிமயக்கி நம் வளர்ச்சியைத் தடுப்பது அதனால்தான் நம்மைப் புகழும்போது நாம் செவிடனாக இருக்கவேண்டும்!
நாம் இகழப்படும்போது நம்மை நாம் தன்மதிப்பீடு செய்துகொள்வது நம்மை வளர்த்துக்கொள்ள துணைநிற்கும் அதனால் தான் நாம் அப்போது ஊமையாக இருக்கவேண்டும்!

வியாழன், 3 ஏப்ரல், 2014

மட்டின்றி மகிழ்ச்சியில்லை!



அளவற்ற மகிழ்ச்சியைக் குறிப்பிட “மட்டற்ற மகிழ்ச்சி“ என்றே இன்றும் நாம் வழங்கிவருகிறோம். மட்டு என்றால் எல்லை என்றும் கள் என்றும் பொருள் உண்டு.
சங்ககாலத்தில் உணவின் ஒரு கூறாக கள் இருந்தது. கள் இன்றி மகிழ்ச்சி இல்லை என்று சங்ககால மக்கள் வாழ்ந்தனர்.

புறநானூற்றுப் பாடல் ஒன்றைக் காண்போம்..


போர்க்களத்துக்குப் புறப்படும் வீரனைப் பார்த்து “ நேற்று நீ கொன்றவனுடைய தம்பி இன்று உன்னைக் கொல்வதற்காகப் பெரும் சினம் (கோபம்) கொண்டு உன்னைத் தேடித் திரிகிறான் என அறிவுறுத்துவதாக இப்பாடல் அமைகிறது.

தோல்தா தோல்தா என்றி தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி
அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
பேரூர் அட்ட கள்ளிற்கு
ஓர்இற்கு ஒரில் தேருமால் நின்னே
புறநானூறு -300
பாடியவர் -அரிசில் கிழார்

கேடயத்தைக் கொண்டு வா! கேடயத்தைக் கொண்டு வா! என்று ஆரவாரம் செய்துகொண்டிருக்கிறாயே… கேடயம் இருந்தால் மட்டும் நீ பிழைத்துவிடுவாயோ…?

நேற்றைய போரிலே நீ கொன்றாயே அவனுடைய தம்பி சிவந்த கண்களுடன் பெரிய ஊரிலே காய்ச்சிய கள் ஒரு வீட்டிலே இருப்பதை அறிந்த விருப்பமுடையவன் அங்கு சென்று கள் இருக்கும் கலயங்களைத் தேடுவது போன்ற வெறியோடு உன்னை வீடுவீடாகத் தேடியலைகிறான். 

அதனால் போர்க்களம் செல்ல எண்ணாமல் தப்பிப் பிழைத்துக்கொள்வாயாக என அறிவுறுத்துவதாக இப்பாடல் அமைகிறது.


பாடலின் வழியே..

சங்ககால மக்களின் போர் சார்ந்த வாழ்வியலை அறியமுடிகிறது.
கள் மீது விருப்பம் கொண்டவன் கள் உள்ள கலயங்களை வெறியோடு தேடுவது போல தன் எதிரியுடன் போரிட விரும்பினான் என்ற உவமை நயமிக்கதாக உள்ளது.

அன்றும் இன்றும்

அன்று – பெரிய ஊரிலே காய்ச்சிய கள் ஒரு வீட்டிலே இருப்பதை அறிந்த வீரனொருவன் அதன் மீதுகொண்ட விருப்பத்தால் அங்கு சென்று கள் இருக்கும் கலயங்களைத் வெறியோடு தேடினான்.
இன்று –

குடிமக்கள் இவ்வாறு கள் இருக்கும் இடத்தைத் தேடி அழையக்கூடாது என்று அவர்களுக்கு அந்தத் துன்பத்தைத் தரக்கூடாது என்று தமிழக அரசு சிந்தித்து தெருவெங்கும் அரசு மதுபானக் கடைகளைத் திறந்துவிட்டது. 

குடிமக்களும் மட்டோடு மகிழ்ச்சியோடு உள்ளனர் அரசும் மட்டின்றி மகிழ்ச்சி இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறது.


புதன், 2 ஏப்ரல், 2014

நிழலில் நீளிடைத் தனிமரம்

நாம் ஏன் பிறந்தோம்..?
மீண்டும் பிறக்காமலிருப்பதற்காகவே பிறந்தோம் என சமயங்கள் உரைக்கின்றன. நாம் செய்யும் நல்வினை, தீவினை அடிப்படையில் நமக்குப் பல்வேறு பிறப்புகள் உண்டு என்று சமயங்கள் அறிவுறுத்திச் செல்கின்றன. காவல்நிலையங்களும், நீதிமன்றங்களும் பல்வேறு சட்டங்களை வகுத்து மக்களை நல்வழிப்படுத்த முயற்சிசெய்கின்றன. இருந்தாலும் இந்த உலகம் சுயநலமிக்கதாகவே உள்ளது. உலகம் செல்லும் பாதையில் நாமும் செல்வோம் என்றே பலரும் செல்கிறோம். இந்த நிலையிலும் மனிதாபிமானத்தோடு, சீவகாருண்யத்துடன், பொதுநல உணர்வோடு வாழ்பவர்களைக் காணும்போது பெரு வியப்பு தோன்றுகிறது.
ஒரு நாளிதழில் ஒருவருடைய அனுபவம் படித்தேன்..

தன் தந்தையின் நினைவுநாளுக்காக ஒரு முதியோர் இல்லத்துக்குச் சென்றிருக்கின்றனர் அண்ணன், தம்பி இருவரும் அங்கு உள்ள முதியோருக்கு ஏதாவது தந்தையின் நினைவாகச் செய்யலாம் என்ற எண்ணத்தோடு..
அப்போது அங்கு முதியோரெல்லாம் முடிதிருத்தம் செய்துகொண்டிருந்தார்களாம். இவர்களுக்கு மனதில் ஒரு எண்ணம். இந்த முதியோரின் முடிதிருத்தத்துக்கு ஆகும் செலவை நாம் ஏற்றுக்கொண்டால் என்ன? என்று தோன்றியதாம். தம் எண்ணத்தை அந்த விடுதிக் காப்பாளரிடம் கேட்டபோது அவர் சொன்னாராம்….
ஐயா இந்த முதியோர் இல்லத்துக்கு நீண்ட நாட்களாகவே முடிதிருத்தம் செய்ய வருபவர் அதற்காக பணம் எதுவும் வாங்குவதில்லை. தம் மனநிறைவுக்காக அவர் மாதம் ஒரு முறை இங்கு வந்து இலவசமாகவே முடிதிருத்தம் செய்துவிட்டுச்செல்கிறார் என்றவுடன் எங்களுக்கு வியப்பாக இருந்தது என்றுதம் அனுபவத்தை அவர் பகிர்ந்திருந்தார்.

இப்படியும் மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். இந்த மனிதாபிமானமிக்கவரின் பண்பை எண்ணி நான் மனதில் ஒப்பீடுசெய்துகொண்ட பாடல் இதுதான்,

கார்ப்பெயல் தலைஇய காண்புஇன் காலைக்
களிற்றுமுக வரியின் தெறுழ்வீ பூப்பச்
செம்புற்று ஈயலின் இன்அளைப் புளித்து
மென்தினை யாணர்த்து நந்துங் கொல்லோ;
நிழலில் நீளிடைத் தனிமரம் போலப்
பணைகெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!


                                        புறநானூறு, 119, பாடியவர்: கபிலர்.



பாரி இருந்த பொழுது, கார்காலத்து மழை பெய்து ஓய்ந்த பொழுது , யானையின் முகத்தில் உள்ள புள்ளிகள் போல் தெறுழ்ப் பூக்கள் பூத்தன. செம்புற்றிலிருந்த வெளிவந்த ஈசலை இனிய மோரில் புளிக்கவைத்த கறி சமைக்கப்பட்டது. அத்தோடு மெல்லிய தினையாகிய புதுவருவாயும் உடையதாக இருந்தது பறம்பு நாடு. நிழலில்லாத நெடிய வழியில் தனித்து நிற்கும் மரத்தைப் போல், முரசுடைய வேந்தர்களைவிட அதிகமாக இரவலர்க்கு வழங்கிய வள்ளல் பாரியின் நாடு இனி அழிந்துவிடுமோ?

பாடலின் வழியே..

தெறுழ்ப் பூக்கள் யானையின் முகத்தில் உள்ள புள்ளிகள் போல் பூத்தன என்ற உவமை மிகவும் நுட்பமானதாகவுள்ளது.

ஈசலைத் தயிர் அல்லது மோரோடு சேர்த்துச் சமைத்து உண்ணும் சங்ககால உணவு மரபு சுட்டப்பட்டது.

இரவலர்களுக்கு அள்ளி அள்ளி வழங்கிய பாரியின் வள்ளல் தன்மைக்கு நிழலில்லாத நெடிய வழியில் தனித்து நிற்கும் மரத்தைப் போல என்ற உவமை மிகவும் ஏற்புடையதாகவுள்ளது.


தமிழ்ச்சொல் அறிவோம் :-

பெயல் = மழை
தலைஇய = பெய்த
காண்பு = காட்சி
காலை = காலம், பொழுது
வரி = புள்ளி
தெறுழ் = ஒரு கொடி
வீ = பூ
ஈயல் = ஈசல்
அளை = மோர்
யாணர் = புதுவருவாய்
நந்துதல் = கெடுதல்
பணை = முரசு


திங்கள், 27 ஜனவரி, 2014

நிறையா வாழ்க்கை

பசிக்கு உணவு வாங்க காசின்றி ஒரு கூட்டம்!
பணத்தைப் பதுக்கிவைக்க இடமின்றி கூட்டம்!
பணத்தை எப்படி சம்பாதிப்பது என்று அறியாமல் ஒரு கூட்டம்!
பணத்தை செலவுசெய்வது எப்படி என்று தெரியாமல் ஒரு கூட்டம்!
என அறிவுடையோராலும், அறியாமையுடையோராலும் நிறைந்தது இவ்வுலகம்!

பறவைகள் எந்த மரங்களையும்
விலைக்கு வாங்கியதில்லை!
இருந்தாலும்..
மரங்கள் யாவும் பறவைகளுக்காகவே
வான் நோக்கி வளர்கின்றன!

நிலவு என்றும்
இரவைச் சேமித்துவைத்தில்லை!
இருந்தாலும்..
இரவு நிலவை மட்டுமே
எதிர்நோக்கியிருக்கிறது!

ஆடு, மாடுகள் யாவும்
தலையில் புல்லைக் கட்டிக்கொண்டு
மேயச்செல்வதில்லை!
இருந்தாலும்..
தாவரங்கள் இவற்றையே
பச்சைக் கொடிகாட்டி அழைக்கின்றன!

நதிகள் எங்கும்
முகவரி தேடி மயங்கியதில்லை!
இருந்தாலும் கடல்
நதிகளுக்காகவே காத்திருக்கிறது!

வேர்கள் எப்போதும்
தன்னை விளம்பரம் செய்துகொண்டதில்லை!
இருந்தாலும்..
மழை என்றும்
வேர்களை மறந்ததில்லை!

ஆனால் மனிதன் மட்டும்..
எதை எதையோ விலைக்கு வாங்குகிறான்!
சேமித்து வைக்கிறான்!
உணவுமூட்டையைத் தூக்கிக்கொண்டே திரிகிறான்!
முகவரியைத் தேடித்தேடி மயங்குகிறான்!
எதற்காகவோ காத்திருக்கிறான்!
விளம்பரப் பலகை ஏந்திக்கொண்டே நடக்கிறான்!

மனிதன் மட்டும் ஏன் இப்படி..??
என்று மக்களைக் காணும் போது தோன்றும்.
புறநானூற்றுப் பாடல் ஒன்று வறுமையில் வாடும் எளியோரின் வாழ்வை நிறையா வாழ்க்கை எனக் குறிப்பிடுகிறது. அவர்கள் வறுமையில் வாடினாலும் பகுத்துண்ணும் பண்புடையவர்களாக இருந்தனர் என்பதை எடுத்துரைக்கும் சிறந்த பாடலைக் காண்போம்.
“களிறு நீறாடிய விடு நில மருங்கின்
வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தெனக்
குழி கொள் சின்னீர் குராஅல் உண்டலின்
செறு கிளைத் திட்ட கலுழ் கண் ஊறல்
முறையன் உண்ணும் நிறையா வாழ்க்கை
முளவுமாத் தொலைச்சிய முழுச் சொல் ஆடவர்
உடும்பிழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறு செய்திடுமார்
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம்
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து
அலந்தலை இரத்தி அலங்கு படு நீழல்
கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும்
அரு மிளை இருக்கையதுவே வென் வேல்
வேந்துதலை வரினும் தாங்கும்
தாங்கா ஈகை நெடுந்தகை ஊரே.“
புறநானூறு 325, 
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்,
                                 திணை: வாகை, துறை: வல்லாண் முல்லை
யானைகள் புழுதியில் விளையாடிய பரந்த நிலப்பகுதியில் வேனிற்பருவத்தில் புதிதாகப் பெய்த மழையால்  குழிகளில் சிறிதளவு தேங்கிய நீரினை, குரால் என்னும் ஒருவகைப் பசு நீர் வேட்கையினால் உண்டது. நீர் அற்ற அக்குழியின் சேற்றைத் தோண்டிப் பெற்ற கலங்கிய ஊற்று நீரினைத் தங்களுக்குள் முறையாகப் பெற்று உண்கின்ற நிறைவு பெறாத வாழ்க்கையுடையோர் அங்கு வாழ்பவர் ஆவார்.
முள்ளம் பன்றியைக் கொன்ற பேரொலியை உடைய அவ்வினத்து ஆண்மக்கள் , ஒடு மரத்தின் கோல்களால் அமைக்கப்பட்ட கட்டுக் கதவினையுடைய தங்கள் சிறப்பில்லாத இல்லங்களின் முன்னர், உடும்பினது நிணத்தை அறுத்து யாவர்க்கும் பகுத்துத் தருவதற்காகத் தீயைமூட்டி, அதில் உடும்பினை வாட்டும்போது பிறக்கும் கொழுவிய நிணத்தின் நாற்றம், அச் சிற்றூர்களின் தெருக்கள் எங்கும் கமழ்வதாகும்.
இத்தகைய செயலையுடையோர் உறையும்போது இடத்திலுள்ள இத்தி மரத்தின் அசைகின்ற நிழலில் இருந்து, மெல்லிய தலையையுடைய சிறுவர்கள் அம்புகளை எறிந்து விளையாடுவார்கள்.
வெற்றியையுடைய வேலினையுடைய வேந்தர்கள் தன்னோடு பகைத்து வந்தவழி, தான் ஒருவனாக நின்று எதிர்த்துத் தாங்குவதற்கு உரிய வலிமையும், வரையறுக்க இயலாத கொடையினையும் உடைய பெரிய தகுதியையடைய வீரனின் ஊர், கடத்தற்கரிய காவற்காடு சூழ்ந்த இருப்பிடத்தை உடையதாகும்.

திணை – வாகை. ( வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரம் செய்தல்)
துறை – வல்லாண் முல்லை ( ஒரு வீரனுடைய ஊரையும் அவனது இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல் வல்லாண்முல்லை ஆகும்.)

அன்றும் இன்றும்
·         அன்று வறுமையில் இருந்தாலும் பகுத்துண்ணும் மரபு பின்பற்றப்பட்டது இன்றோ யாரும் உணவைப் பகிர்ந்தளித்தாலும் மயக்கமருந்து கலந்திருக்குமோ என்ற அச்சம்தான் முதலில் வருகிறது.
·         அன்று குழியில் தேங்கிய நீரைக்கூட மக்கள் குடித்தனர் நலமாகவும் இருந்தனர் இன்றோ சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்ற பெயரில் குடிநீரைக்கூட பணம் கொடுத்து வாங்குகிறோம்.

·         அன்றைய குழந்தைகள் தெருக்களில், மரங்களின் நிழலில், மண்ணில் விளையாடினர். இன்றைய குழந்தைகள் கணினி, தொலைக்காட்சி, திறன்பேசிகளில் உள்ள விளையாட்டுகளே போதும் என அறிவுறுத்தப்படுகின்றனர். 
  
   பாடல் வழியாக...
   உணவு, உடை, உறைவிடம் என்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் எத்தனையோ பேர் இவ்வுலகில் உள்ளனர். பதுக்கி வைத்து பணக்காரர் தரவரிசையில் இடம்பெறுவது பெரிய சாதனையல்ல. பகுத்துண்டு நம்மால் முடிந்தவரை மனிதாபிமானத்தோடு வாழ்வதே பெரிய சாதனைதான் என்பதை இப்பாடல் நினைவுபடுத்திச் செல்கிறது.
  


ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

உன்னையே வியக்கும் உலகம்!


சிறியவர், பெரியவர் என்ற அளவீடுகள் ஒருவரின் வயதை வைத்தோ, உயரத்தை வைத்தோ அளக்கப்படுவதில்லை. அவர்களின் செயல்பாடுகளை வைத்தே முடிவுசெய்யப்படுகின்றன. செயற்கரிய செயல்களைச் செய்த ஒருவரை இவ்வுலகம் பெரிதும் வியந்து நோக்கும். 

புறநானூற்றில் சோழன் கடுமான் கிள்ளி என்ற அரசனை,கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்ற புலவர் வியந்து பாடுகிறார். 

கிள்ளி கண்ணுக்கு இன்னாதவனாக இருந்தாலும் செவிக்கு இனியவனாக இருக்கிறான். 
அவனுடைய எதிரி கண்ணுக்கு இனியவனாக இருந்தாலும் செவிக்கு இன்னாதவனாக இருக்கிறான். இருந்தாலும் கிள்ளியையே இவ்வுலகம் வியக்கிறது என்கிறார் புலவர். ஏனென்று பார்க்கலாம் வாங்க..


நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்,
வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யொடு,
கேள்விக்கு இனியை, கட்கின் னாயே!
அவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின்,

ஊறுஅறியா மெய் யாக்கை யொடு.
கண்ணுக்கு இனியர்; செவிக்குஇன் னாரே!
அதனால்,நீயும் ஒன்று இனியை;அவரும்ஒன்றுஇனியர்;
ஒவ்வா யாவுள, மற்றே? வெல்போர்க்
கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி!

நின்னை வியக்குமிவ் வுலகம்; அது
என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே.



வெல்லும் போரைச் செய்யும் வீரக்கழல் அணிந்த, திருந்திய அடியினையும், விரைந்த வேகம் கொண்ட குதிரையையும் உடைய கிள்ளி! நீயோ போரைக் கண்டால் பகைவரை வென்று அவரது படையை விலக்கி எதிர்நின்றாய். அதனால் வாள் தைத்த தழும்புடன் நீ காணப்படுவதால் உன் வீரத்தைக் கேட்பவர் செவிகளுக்கு இனியவனாக விளங்குகிறாய். புண்ணுடைய உடம்புடன் கண்ணுக்கு இன்னாதவனாகத் தோன்றுகிறாய்.

பகைவரோ உன்னைக் கண்டு புறங்காட்டி ஓடியதால் புண்இல்லாத உடம்புடன் தோற்றத்தில் கண்ணுக்கு இனியவராகவும்,அவரது அச்சம் காரணமாக, செவிக்கு இன்னாதவராகவும் உள்ளனர்.

அதனால் நீயும் ஒன்றில் இனியை, அவரும் ஒன்றில் இனியர் இருந்தாலும் இவ்வுலகம் உன்னையே புகழ்ந்து போற்றுகிறது அதற்குக் காரணம் யாதோ? எமக்குச் சொல்வாயா? என்று திருக்கிள்ளியின் வீரத்தை வியந்து இகழ்வதுபோல புகழ்ந்து வஞ்சப்புகழ்ச்சியாகப் புலவர் பாடுகிறார்.

“அழகு என்பது கண்களால் காண்பது மட்டுமல்ல!
செவியால் கேட்பதும் தான்” என்ற நுட்பமான கருத்தை மிக அழகாக இப்பாடல் விளக்குகிறது.