வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வாழ்வியல் நுட்பங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்வியல் நுட்பங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 மே, 2021

வாழ்க்கை பற்றிய 40 பொன்மொழிகள்


 

1. அறியாமையுடன் ஒருவன் நூறு ஆண்டு வாழ்வதை விட, அறிவுடன் ஒரு நாள் வாழும் வாழ்க்கையே மேலானது. - புத்தர்.

 

2. வாழ்க்கையில் முன்பகுதியில் வெற்றிபெற சுறுசுறுப்பும், ஊக்கமும் தேவை. இறுதியில் வெற்றிபெற பொறுமையும், தன்னடக்கமும் தேவை.

-அரிஸ்டாட்டில்          

 

3. வாழ்க்கை என்கிற ஆடையில் நன்மை, தீமை

என்ற இரு நூல்களும் இருக்கும். - ஷேக்ஸ்பியர்

 

4. பெரும் அறிவாளிகள் புத்தகங்களோடு வாழ்க்கையையும் சேர்த்தே படிக்கின்றார்கள். - லிண்டல்

 

5. நூலகம் என்பது ஆடம்பரமல்ல. ஆனால் அது வாழ்க்கையின் அவசியங்களுள் ஒன்று- ஹென்றி வார்டு பீச்சர்

 

6. நேரத்தை வீணாக்காதே அதில்தான் வாழ்க்கை அடங்கியிருக்கிறது. -பெஞ்சமின்

 

7. வாழ்க்கை அனுபவமில்லாத எவரும் கல்வி கற்றவராக முடியாது!                                       - பெர்னார்ட்ஷா

 

8. வாழ்வில் வெற்றிபெற நண்பன் தேவை. வாழ்க்கை முழுவதும் வெற்றிபெற எதிரி தேவை - யாரோ

 

9. நீங்கள் தான் உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும் அதை, அடுத்தவர்களை எழுத விட்டு விடாதீர்கள் - ஹார்லி டேவிட்சன்

10. வாழ்க்கை ஒரு போர்க்களம். நம்பிக்கைதான் ஆயுதம்

- மகாவீரர் 

 

ஞாயிறு, 29 ஜூன், 2014

செவ்வாய், 30 ஜூலை, 2013

மூச்சுவிட மறந்துவிட்டார்…



இந்தத் தலைப்பைப் பார்த்தவுடன் உங்களுக்கு, யாராவது மூச்சுவிட மறப்பாங்களா? என்ற கேள்வி மனதில் தோன்றலாம். ஒருவர் இறந்துவிட்டார் என்பதை இப்படியும் சொல்வதுண்டு. இப்படிச் சொல்வதால் முதலில் கேட்பவருக்கு சிரிப்புதான் வரும். பிறகுதான் உண்மை சுடும்.

கருவுற்ற நிலையிலிருந்து இன்று வரைநாம் எத்தனை தோற்றங்களை இழந்து வந்திருக்கிறோம்..
நாம் நினைத்தாலும் மீண்டும் குழந்தைப் பருவத்துக்குச் செல்லமுடியுமா..?
சரி அதற்காக என்றாவது அழுதிருக்கிறோமா?
நாளும் நாளும் சாகும் நாம் என்றாவது நமக்காக அழுதிருக்கிறோமா?என்று நம்மைச் சிந்திக்கச் சொல்கிறது இந்தப்பாடல்..


பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் 
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும் 

மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி 
நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ

குண்டலகேசி -9

உறங்குவது போன்றது இறப்பு
உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு என்கிறார் வள்ளுவர்..
இதனை,
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
என்ற குறள் விளக்கும்.


பிறப்பும், இறப்பும் இயல்பானதுதான். ஆனால் பிறப்பைக் கொண்டாடும் நாம் இறப்பைக் கண்டு அஞ்சுகிறோம். ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியைச் சொல்வதற்கும், கேட்பதற்கும் ஒரு பக்குவம் வேண்டும். சொல்லத்தெரியாதவர் சொன்னால் கேட்பவர் இதயம் பலவீனமாக இருந்தால் அவர் இறந்துவிடுவார்.

ஒரு சின்னக் கதை,

பணி நிறைவுபெற்ற குமார் என்பவர், தம் பணிநிறைவில் கிடைத்த பத்துஇலட்சம் ரூபாய் பணப்பெட்டியோடு பேருந்தில் சென்றார். அப்போது அருகே அமர்ந்த ஒருவர் திட்டமிட்டு அவரது பெட்டியை மாற்றிவிட்டார். வீட்டுக்குச் சென்றபிறகு, பெட்டியைப் பார்த்தால் பெட்டியில் பணம் இல்லை. அதிர்ச்சியில் குமாருக்கு மயக்கமே வந்துவிட்டது. பேச்சுமூச்சே இல்லாமல் இருந்த அவர், அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரைப் பரிசோதனை செய்த மருத்துவரோ, இவர் இதயம் மிகவும் பலவீனமாக உள்ளது. அதிர்ச்சியளிக்கும் செய்திகளைச் சொன்னால் இவரால் தாங்கமுடியாது என்றார். குமாரது உறவினர்களோ மருத்துவரிடம்,
ஐயா காவல்துறையில் புகாரளித்திருந்தோம், அந்தத் திருடன் வேறொரு திருட்டில் மாட்டிக்கொண்டான். அப்போது இந்தப் பெட்டியையும் காவல்துறையினர் மீட்டுக்கொடுத்துவிட்டார்கள். பணம் முழுவதும் கிடைத்துவிட்டது. அதனால் குமாரிடம் இந்த செய்தியைப் பக்குவமாக நீங்களே எடுத்துச்சொல்லுங்கள் என்றனர்.

மருத்துவர்-  குமாரிடம் மெதுவாக ஆரம்பித்தார்,
குமார் தொலைந்த பெட்டியில் எவ்வளவு பணம் இருந்தது?
குமார் – பத்து இலட்சம் ரூபாய் இருந்தது. எல்லாம் மொத்தமா போச்சு..
மருத்துவர் – சரி இப்போ தொலைந்த பெட்டியை காவல்துறையினர் மீட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் ஐந்து இலட்சம் ரூபாய் மட்டுமே கிடைத்தது என்றால் நீங்க என்ன செய்வீங்க?
குமார் – ஐந்து இலட்சம் ரூபாய் கிடைத்தால் எனது கடனையெல்லாம் அடைத்துவிடுவேன். என் மகளுக்கு நகை வாங்கிவிடுவேன்.
மருத்துவர் – சரி தொலைந்த பணம் மொத்தமும் அப்படியே  கிடைத்தால் என்ன செய்வீர்கள்?
குமார் – அப்படி மட்டும் மொத்த பணமும் கிடைத்தால் அதில் பாதி ஐந்து இலட்சம் ரூபாயை உங்களுக்குத் தந்துவிடுவேன் என்றாராம்.

இதைச் சற்றும் எதிர்பாராத மருத்துவர் அதிர்ச்சியில் இறந்துவிட்டாராம். இந்த மருத்துவருக்கு அந்த அளவுக்கு இதயம் பலவீனமாக இருந்திருக்கிறது. என்று ஒரு கதை உண்டு.

அதனால் ஒருவர் இறந்துவிட்டார் என்ற செய்தியை எப்போதும் பக்குவமாக சொல்வது தமிழர் மரபு. முன்பெல்லாம் ஒருவர் இறந்துவிட்டார் என்று தந்தி கொடுக்கவேண்டுமென்றால். இறந்துவிட்டார் என்று சொல்லாமல். கவலைக்கிடமாக இருக்கிறார் உடனே வாருங்கள் என்று தான் சொல்வது வழக்கம்.

மரணம் என்றவுடன் நம் மனதில் தோன்றும் அச்சம், ஆற்றாமை, நடுக்கம் ஆகிய உணர்வுகளைக் கருத்தில் கொண்டு நாம் மரணத்தை எவ்வாறெல்லாம் அழைக்கிறோம் என்று காண்போம்,


இறந்தார்
காலமானார்
மறைந்தார்
மரணமடைந்தார்.
அமரரானார்
தெய்வமானார்
சாமிகிட்ட போய்ட்டார்
இறைவனடி சேர்ந்தார்
இயற்கை எய்தினார்
மாய்ந்தார்
கைலாயப் பதவியடைந்தார்
கைலாசப் பதவியடைந்தார்
சிவலோகப் பதவியடைந்தார்
வைகுந்தப் பதவியடைந்தார்
செத்தார்
மாண்டார்
மண்டையைப் போட்டுட்டார்
ஊருக்குப் போயிட்டார்
மேலூருக்குப் போயிட்டார்
டிக்கெட் வாங்கிட்டார்
பெரிய காரியமாயிடுச்சு
போய்ச் சேர்ந்திட்டார்
நம்மைவிட்டு போயிட்டார்
நீத்தார்
மர்கயா
மௌத்தாயிட்டார்
கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்

 இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்

நம்மைவிட்டு நீங்கிவிட்டார்

சமாதியானார்


அன்பு நண்பர்களே எனக்குத் தெரிந்தவரை இறப்பை உணர்த்த நாம் பயன்படுத்தும் பல சொற்களைப் பதிவுசெய்திருக்கிறேன். இதற்கு இணையான தாங்கள் அறிந்த சொற்களையும் மறுமொழியில் சொல்வீர்கள் என நம்புகிறேன்.

புதன், 9 ஜனவரி, 2013

காதலின் எடையை அறிந்துகொள்ள...


 காதல் வாழ்வின் பொருளை உணரச் செய்கிறது!                                

காதல் இல்லாத வாழ்க்கை துடுப்பில்லாத ஓடம் !!
காதல் பற்றிப் பாடாத கவிஞர்களே இல்லை. பெரும்பாலும் காதலின் உயரத்தையும்,அகலத்தையும், ஆழத்தையும் திருமணத்துக்கு முந்தைய காலப்பகுதியிலேயே அதிகமாகப் பாடியுள்ளனர். 

காதலித்தல் என்பது திருமணத்துக்கு முந்தைய வாழ்க்கை என்றே பலரும் வாழ்ந்து வருகிறோம். இதனையே கவிஞர் கண்ணதாசனும்...


காதல் என்பது எதுவரை? 
கல்யாண காலம் வரும் வரை 
கல்யாணம் என்பது எதுவரை? 
கழுத்தினில் தாலி விழும் வரை 
பெண்ணுக்கு இளமை எது வரை? 
பிள்ளைகள் பிறந்து வரும் வரை

கழுத்தினில் தாலி விழுந்த பின்னும் தன் மனைவியைக் காதலிப்பவர்கள் உலகில் எத்தனைபேர்?
பெண்ணின் இளமையை பிள்ளைகள் பிறந்து வளர்ந்த பின்னும் விரும்புபவர்கள் எத்தனை போ்..?
திருமணத்துக்கு முந்தைய காதல் : திருமணத்துக்குப் பின்வரும் காதல் ஆகிய இரண்டினுள் சிறந்தது எது? என்ற கேள்வியே காதலை எடைபோடவல்ல சிறந்த வழியாகும்.

இன்றைய காதல்,

“எனக்காக தாஜ்மகால் கட்டுகிறேன் என்றான்
ஒரு தாலி மட்டும் கட்டு என்றேன்
ஷாஜகானைக் காணவில்லை!
என்றொரு புதுக்கவிதை உண்டு. இன்றைய காதல் இப்படித்தான் இருக்கிறது.

உடல் சார்ந்த காதலுக்கு, ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் தான் இருக்கும். ஆனால் உள்ளம் சார்ந்த காதலுக்கு ஆசை அறுபது ஆண்டுகள், மோகம் முப்பது ஆண்டுகள் இருக்கும்.
இன்றைய தலைமுறையினர் திரைப்படங்களைப் பார்த்துவிட்டு இதுதான் காதல் என்று நம்பும் அப்பாவிகளாக உள்ளனர். இவர்கள் வள்ளுவரின்,

மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார். (-குறள் எண்:1289) என்ற குறளின் நயம் உணராதவர்கள்.

சங்கப் பாடல் ஒன்று..
தலைவனுடன் தலைவியை உடன்போக்கில் அனுப்புகிறாள் தோழி அப்போது அவனிடம் கூறும் அறிவுரையாக இப் பாடல் இடம்பெற்றுள்ளது.

தலைவனே மலைப்பகுதியில் மேயும் மரையா (மலை ஆடு) அம்மலையில் தமக்குத் தேவையில்லாத பல செடிகொடிகள் இருந்தாலும் தனக்குத் தேவையான இலைகளைத் தேடிவிரும்பி உண்டு அங்கே தங்கும். அதுபோல நீ இவள் (தலைவி) மீது அன்புடையவனாக இருப்பாயாக. இவள் இப்போது இளமைத்தன்மையுடையவளாக உனக்கு எல்லா இன்பங்களும் தரும் தகுதியுடையவளாக இருக்கிறாள். அதனால் இவள் மீது நீ இப்போது அன்புடனிருப்பது அரிய பெரிய செயலல்ல!
அவள் குழந்தைகள் பெற்ற பின்னரும், அவளிடம் ஏதும் குறைகளிருப்பினும் அந்த மரையா போல அதனை மறந்து அவளிடம் உள்ள நிறைகளைத் தேடி அவளிடம் அன்பு செலுத்துபவனாக நீ இருக்கவேண்டும். அவளை மறக்கவோ வெறுக்கவோ நீ காரணம் தேடாமல், அவளை இன்னும் அதிகமாக விரும்புவதற்குக் காரணம் தேடு. ஏனென்றால் இவளுக்கு இனி நீதான் எல்லாமே. இவளுக்கென்று இனி யாரும் இல்லை என்பதை மனதில் வைத்துக்கொள் என்பதே தலைவனுக்குத் தோழி சொன்ன அறிவுரை. பாடல் இதோ..
பெருநன் றாற்றிற் பேணாரு முளரே
ஒருநன் றுடைய ளாயினும் புரிமாண்டு
புலவி தீர வாளிமதி யிலைகவர்
பாடமை யொழுகிய தண்ணறுஞ் சாரல்
மென்னடை மரையா துஞ்சும்
நன்மலை நாட நின்னல திலளே.

குறுந்தொகை -115
கபிலர்.
 (தலைவனுடன் போகும்படி தலைவியை உய்க்கும் தோழி, “இவளை எக்காலத்தும் அன்பு வைத்துப் பாதுகாப்பாயாகஎன்று அவனுக்குக் கூறியது.)

அசைகின்ற மூங்கில்கள் நீண்டு வளர்ந்த, குளிர்ந்த நறுமணம் உடைய மலைப் பக்கத்தில் தளர்ந்த நடையையுடைய மரையா, இலைகளை விரும்பி உண்டு, உறங்கும் நல்ல மலை நாட்டையுடைய தலைவனே,
பிறர் தாம் விரும்பிய பெரிய நன்மை யொன்றை ஒருவர் நமக்குச் செய்தால்,
அவ்வாறு செய்தவரைப் போற்றாதாரும் இவ்வுலகில் உள்ளாரோ? யாவரும் போற்றுவர்.
அது போல, இவள் சிறிதளவு நன்மையை, உடையளாக இருந்தாலும்,
இத்தலைவி குழந்தை பெற்றவளாக இருக்கும் காலத்திலும்,
அவளோடு அன்புடையவனாக நீ இவளைப் பாதுகாக்கவேண்டும்.
இவள் உன்னையன்றி வேறு பற்றுக்கோடு இல்லாதவள் என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

நிறைவாக..
 உடல் சார்ந்த காதல் போதை தரும், 
உள்ளம் சார்ந்த காதலே இன்பம் தரும்.
உடல் சார்ந்த காதலுக்கு, ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் தான் இருக்கும். ஆனால் உள்ளம் சார்ந்த காதலுக்கு ஆசை அறுபது ஆண்டுகள், மோகம் முப்பது ஆண்டுகள் இருக்கும்.
    
      உண்மையான காதல் உடல் அழகைப் பார்க்காது, உள்ளத்தின் அழகையே இரசிக்கும்.  தலைவா நீ தலைவியின் குறைகளைப் பார்க்காமல் நிறைகளை மட்டும் பார்த்து இவளிடம் பெற்ற இன்பங்களை மனதில் நினைத்து நன்றியோடு முதுமைப்பருவத்திலும் அன்புடையவனாக இருப்பாயாக என்ற தோழியின் அறிவுரை காதலின் எடையை அளக்கும் சரியான அளவுகோலாக உள்ளது.

      நாமும் நம் வாழ்க்கைத் துணையின் மீது முதுமைப் பருவத்திலும் அன்புடையவர்களாக இருந்து காதலின் எடையை அறிந்துகொள்வோம்.

அன்பை மட்டும் கடனாகக் கொடுங்கள்
அதுதான் வட்டியோடு திரும்பக் கிடைக்கும்
என்றொரு பொன்மொழி உண்டு நாம் நம் வாழ்க்கைத்துணையிடம் தரும் அன்பு நமக்கு இருமடங்காகக் கிடைக்கும் என்பதே இப்பாடல் நமக்களிக்கும் அறிவுரை.




தொடர்புடைய இடுகை

காதல் என்பது எதுவரை?
இரு பேராண்மைகள்

வியாழன், 3 ஜனவரி, 2013

நோயற்ற வாழ்வு

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். நோயின்றி வாழ என்ன செய்யலாம்..?

மருத்துவர் சொல்லும் அறிவுரைகளைவிட வள்ளுவர் சொல்லும் அறிவுரை மிகவும் ஏற்புடையதாக உள்ளது..



சனி, 8 டிசம்பர், 2012

பணம் சம்பாதிக்க சிறந்த வழி.


பணம் ஈட்டுவது மட்டும்தான் வாழ்க்கையா?

ஆம் என்று பலரும், 
இல்லை அதற்கும்மேலே கிடைக்கும் அனுபவத்தில் அடங்கியிருக்கிறது வாழ்க்கை என்று சிலரும் சொல்வதுண்டு.

இணையத்தில் சென்று பணம் சம்பாதிப்பது எப்படி என்று கேட்டால் பல்லாயிரம் வழிமுறைகளை இணையம் பரிந்துரை செய்கிறது.

எல்லா வழிமுறைகளையும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

ஒன்று நேர்வழி, இரண்டாவது குறுக்குவழி.

பலருக்கும் பிடிப்பது என்னவோ குறுக்குவழிதான்.

ஒவ்வொருநாளும் நாளிதழிகளிலும், தொலைக்காட்சிகளிலும் புதிய புதிய மோசடிசெய்திகளைப் பார்க்கமுடிகிறது.

ஆசை ஆசை எல்லோருக்கும் ஆசை..

உழைக்காமலேயே உயரத்துக்கு வரவேண்டும் என்று. இதைப் பயன்படுத்திக்கொண்டு பலர் அவர்களை ஏமாற்றி உயரத்துக்கு வந்துவிடுகிறார்கள்.

கால காலமாகவே நடந்துவரும் நிதிநிறுவன மோசடி, நிலமோசடிகளின் வரிசையில் சமீபத்தில் நடந்த ஈமு கோழிமோசடி, நாட்டுக்கோழிமோசடி, தேங்காய் மோசடி என நாளுக்கு நாள் புதிது புதிதாக சிந்தித்து மோசடிகள் நடந்துவருகின்றன.



 அதனால் பணத்தை சம்பாதிப்பது ஒன்றும் சாதனையல்ல. நேர்வழியில் சம்பாதிப்பதே வாழ்நாள் சாதனையாகும்.

யாரை ஏமாற்றுகிறோமோ, ஏறி மிதிக்கிறோமோ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது. எப்படியோ நிறைய பணம் சம்பாதிக்கவேண்டும்.
நாம் உயரத்துக்கு வந்துவிட்டபிறகு நாம் வந்துவிட்டதைப்பற்றித்தான் பேசுவார்கள், எப்படிவந்தோம் என்பதைப் பற்றி யாரும் பேசமாட்டார்கள் என்றே பலரும் நினைத்துவருகிறாரகள்.

இவ்வாறு பலரும் நினைத்ததால் தான் நம் முன்னோர் நமக்குச் சொல்லிச்சென்றார்கள்..

நமக்குமேலே ஒருவன் இருக்கிறான் அவன் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று.

ஆனால் இன்று கடவுளின் பெயராலேயே நடக்கும் மோசடிகளைக் (போலிசாமியார்கள்) காணும்போது மக்களுக்கு கடவுள் நம்பிக்கை எந்த அளவுக்கு இருக்கிறது? என்று சிந்திக்கவேண்டியதாக உள்ளது.

அடுத்தவரை ஏமாற்றி குறுக்குவழியில் ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதைவிட
நேர்வழியில் நாம் ஈட்டும் ஐநூறு ரூபாய் மதிப்புமிக்கது.


இதைத்தான் வள்ளுவர்,



பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் 
கழிநல் குரவே தலை. 
குறள் 657:


பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

என்று சொல்கிறார்.

பணத்தை எப்படியும் சம்பாதிக்கலாம்..
இழிதொழில் செய்துகூட ஈட்டிவிடலாம்..
அதனால் விரைவில் நிறைய பணம் சம்பாதித்துவிடமுடியும்..

ஆனால்... இந்த செல்வநிலையைவிட..

நேர்வழியில் வாழ்ந்து வறுமையோடு வாழ்வதே சிறந்தது.

என்பது வள்ளுவர் வாக்கு.

இந்தக்குறளை வாழ்க்கையில் கடைபிடிக்க எல்லோராலும் முடியாது.

ஆனால் நினைத்தால் உங்களாலும் முடியும். 




தொடர்புடைய இடுகை

வியாழன், 29 நவம்பர், 2012

எவ்வளவு பெரிய உண்மை!!



பிறப்பு - இறப்பு
வெற்றி-தோல்வி
இன்பம்- துன்பம்
வரவு - செலவு
சிரிப்பு - அழுகை

என வாழ்வின் இருபக்கங்களையும் கண்டு மனிதர்கள் புலம்பிக்கொண்டிருக்க. சங்கஇலக்கியத்தில் புறநானூற்றுப் பாடல் ஒன்று அழகான விளக்கத்தைச் சொல்லிச் செல்கிறது.

வானில் நிலவு இருக்கிறதே..
அது வளர்கிறது, தேய்கிறது
தேய்கிறது, வளர்கிறது!
சிலகாலம் முழுநிலவாக இருக்கிறது, சில காலம் குறைநிலவாக இருக்கிறது.

அறியாத மக்களுக்கும் இந்த நிலவு என்ன பாடம் சொல்கிறது தெரியுமா?


இதுதான் வாழ்க்கை..


என்பதுதான் அந்தத் வாழ்வியல் தத்துவமாகும்.

வளர்வது தேயும்! தேய்ந்தது வளரும்!
பிறந்தது இறக்கும்! இறந்தது பிறக்கும்!


எவ்வளவு பெரிய சிந்தனை!!

இந்த அடிகளுக்கான சூழலும், உரையாசிரியர்களும் வாழ்க்கை நிலையாமை என்றே பொருள் கொண்டு சொன்னாலும். கால மாற்றங்களுடன் இப்பாடலை ஒப்பிட்டு நோக்கும்போது மனம் பெருவியப்படைகிறது.

நிலையாமை என்னும் எல்லையைக் கடந்து இந்தக் கோட்பாட்டை,

பரிணாம வளர்ச்சி
அறிவியல் மாற்றங்கள்
சமயக் கோட்பாடுகள்
சித்தர் தத்துவங்கள்
பிறவி தொடர்பான நம்பிக்கைகள்

என பலநிலைகளில் ஒப்புநோக்கிப் பார்க்கமுடிகிறது.

ஒப்பு நோக்கத்தக்க  சித்தர் பாடல்

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;

தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;


பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;


உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்;


புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்




                                                           -சித்தர் பட்டினத்தார்-


தொடர்புடைய இடுகை


புதன், 28 நவம்பர், 2012

இந்த உலகம் ஒரு நாயின் வால்.

இந்த உலகில் யாரும் யாரையும் மாற்றமுடியாது.
நாமே நம்மை மாற்றிக்கொண்டால்தான் உண்டு.

நம்மாற்றமே இன்னொருவரின் 
மாற்றத்துக்கு அடிப்படையாக இருக்கும் 
என்பதே உலகியல் உண்மை.

விவேகானந்தர் சொன்ன கதை..

எல்லாம் நிறைவேறும் எனக் கருதி ஒரு முனிவரை அணுகித் தொந்தரவு செய்ய அவரும்,''நான் உனக்கு அடிமையாய் ஒரு பூதம் தருகிறேன்,
ஆனால் அதற்கு நீ தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.இல்லையெனில் அது உன்னையே கொன்று விடும்,''என்று கூறி தன ஆற்றலால் ஒரு பூதத்தை வரவழைத்து அவனிடம் கொடுத்தார்.

அவன் கட்டளைகளைச்  சொல்லச் சொல்ல பூதம் உடனுக்குடன் செய்தது.ஒரு நிலையில் என்ன வேலை கொடுப்பது என்று தெரியாமல் நிற்க பூதம்அவனைக் கொல்ல வந்தது.அவன் மீண்டும் முனிவரை தஞ்சம் அடைந்தான்.முனிவர் சொன்னார்,''உன் பூதத்திடம் ஒரு நாயின் வாலை நிமிர்த்த சொல்லு,'' என்றார்.அவனும் அவ்வாறே பூதத்திடம் உத்தரவிட,பூதம் முயற்சி செய்து முடியாமல் போகவே களைத்துப்போய்,ஆளை விட்டால் போதும் என்று ஓடி விட்டது.
இந்த உலகமும் நாயின் வால் போல் தான் உள்ளது.

அதை நிமிர்த்த மனிதர்கள் காலம் காலமாய் முயன்றும் 

இன்னும் சரி செய்ய முடியவில்லை...

திங்கள், 24 செப்டம்பர், 2012

சில நூல்களும் ஒரு குப்பைத்தொட்டியும்

ஒரு நூலகத்தில் இருந்த குப்பைத்தொட்டி தனியே புலம்ப ஆரம்பித்தது...

இந்த நூலகத்தில் நிறையபேர் பயன்படுத்துவது என்னைத்தான். இங்கு நிறைய சுமப்பவனும் நான்தான். இருந்தாலும் என்னை யாருமே மதிப்பதில்லை. ஆனால் இங்கு யாருமே பயன்படுத்தாத நூல்கள் நிறைய உள்ளன. இருந்தாலும் அவை எதையும் சுமப்பது கூட இல்லை. இருந்தாலும் அந்த நூல்களையே எல்லோரும் மதிக்கிறார்கள். 
என்ன உலகம்டா இது..” என்று தன்னைத்தானே நொந்துகொண்டது குப்பைத்தொட்டி.

சிலநூல்கள் குப்பைத்தொட்டியின் அறியாமை குறித்து வருத்தமடைந்தன. அந்த நூல்களுள் ஒருநூல் மட்டும் குப்பைத்தொட்டிக்கு அறிவுரை சொன்னது...

நாம் எத்தனை முறை பயன்படுத்தப்படுகிறோம்?  என்பதைவிட
எதற்குப் பயன்படுகிறோம் என்பதல்லவா சிந்திக்கத்தக்கது!

நாம் எவ்வளவு சுமக்கிறோம் என்பதைவிட
எதைச் சுமக்கிறோம் என்பதுதானே விரும்பத்தக்கது!

என்று குப்பைத்தொட்டிக்கு அதன் அறியாமையைச்சுட்டிக்காட்டியது ஒரு நூல்.

இருந்தாலும் குப்பைத்தொட்டி புலம்பிக்கொண்டே இருந்தது. எல்லாம் என் தலைவிதி என்று..


(விதியை எண்ணிப் புலம்பும் மனிதர்களைக் காணும் போது என்மனதில் தோன்றிய சிந்தனையே இக்கதை)
தொடர்புடைய இடுகை



ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவும்!



வெள்ளி, 21 செப்டம்பர், 2012

நட்பின் அடையாளம்

நண்பனுக்காக உயிரையும் கொடுக்கலாம்
ஆனால்..

உயிரைக் கொடுக்கும் அளவுக்கு 
உண்மையான நண்பன் கிடைப்பது தான் அரிது

என்றொரு பொன்மொழி உண்டு.



சங்க இலக்கியம் சுட்டும் நட்பின் அடையாளம்..
கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார்


வியாழன், 6 செப்டம்பர், 2012

வேக வேகமா..

பாய்ச்சல்
வேக வேகமா, உணவைக்கூட வேகாம வேகாம சாப்பிட்டு எங்கே ஓடுறோம்...
எங்கோ ஓடுறோம்..
எல்லோரும ஓடுறாங்க..
நாமும் ஓடுவோம்...

நாம் எந்த வேலை செய்தாலும் அவசரம், அவசரம், அவரசம்..
அதனால் இந்த மண்ணைவிட்டும் அவசரமாகவே சென்றுவிடுகிறோம்.

அந்தக் காலத்தில் ஒரே நேரத்தில் பல வேலைகளையும் செய்பவர்கள் இருந்தார்கள். ஒரே நேரத்தில் எட்டு செயல்கள் செய்பவர்களை அட்டாவதாணி என்றும் ஒரே நேரத்தில் நூறு செயல்கள் செய்தவர்களை சதாவதாணி என்றும் 
அழைத்தார்கள்.


உங்கள் வேலையை வேகமாக முடிக்க ஒரே வழி
ஒரு நேரத்தில் ஒரே வேலையை மட்டும் செய்வது

என்றொரு பொன்மொழி உண்டு. பதறாத காரியம் சிதறாது என்ற பழமொழியும் இங்கு சிந்திக்கத்தகதாகவுள்ளது.
என்னுடைய அனுபவத்தில் ஒருவேலையை விரைவாக முடிக்க ஒருநேரத்தில் ஒரு வேலை மட்டுமே செய்கிறேன். 


உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் பாய்ச்சல் என்றொரு கதை நினைவுக்கு வருகிறது...

ரத்தை வெட்டி வீழ்த்திவிட்டுக் கோடரியும் கயிறும்
விறகுவெட்டிக்குப் பக்கத்தில் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்தன.

காட்டுக்குள் நுழைந்த ஒரு மரங்கொத்தி மாறி மாறி நான்கு மரங்களைத் தன் அலகால் கொத்திவிட்டுப் பறந்துபோனது.

'இந்த மரங்கொத்தியைப் பார்த்தாயா? நான்கு மரங்களை மாறி மாறித் தன் அலகால் வெட்டியது - ஒரு மரத்தையாவது அதனால் உருப்படியாக வீழ்த்த முடிந்ததா?' என்று கயிற்றைப் பார்த்துக் கேட்டது கோடரி.

'மரங்கொத்தியால் முடியாது' என்றது கயிறு.
'ஏன் அப்படிச் சொல்கிறாய்?'
கயிறு சொன்னது :-

'நாலு மரத்தையும் வெட்டுகிறவன் ஒரு மரத்தையும் வீழ்த்துவதில்லை'



தொடர்புடைய இடுகை


ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

உணவுக்கு நீங்கள் தரும் மரியாதை!

 


என் நண்பர் ஒருவருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென அவர் பாதி சாப்பாட்டை வைத்துவிட்டு போதும் என்றார்.

ஏன் உடல்நிலை எதுவும் சரியில்லையா? ஏன் பாதி உணவை அப்படியே வைத்துவிட்டீர்கள் என்றேன். உடல் நிலை நன்றாகத்தான் இருக்கிறது, மனநிலை தான் சரியில்லை என்றார்.

சரி அதனால் உணவை வீணாக்கலாமா?

உலகில் ஒவ்வொரு 3.6 வினாடிகளுக்கும் ஒருவர் பசியால் இறக்கிறார்.என்றொரு புள்ளிவிவரம் சொல்கிறது நண்பரே என்றேன்.

அதற்கு அவர் என் மனக்கவலையைவிட இந்தப் புள்ளிவிவரம் பெரிய கவலையைத் தருகிறது நண்பரே என்றார் அவர்.

ஆமாம்..

“நீ உன்னால் முடியாது என்று எதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறாயோ..
அதை உலகின் ஏதோ ஓரிடத்தில் ஒருவர் முடித்துக்கொண்டிருக்கிறார்! என்றொரு பொன்மொழி உண்டு நண்பரே..

அவரும் சிரித்துக்கொண்டே ஆமாம் ஆமாம் பலர் சாப்பிடுவதற்காகவே பிறந்திருக்கிறோம் என்றுதான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லி்க்கொண்டே கொஞ்சம் முயற்சித்து சாப்பிட்டார். அப்போது நான் சொன்னேன்..

நண்பரே இதுதான் நீங்கள் உணவுக்குத் தரும் மரியாதை என்றேன்.



இனிமேல் உணவுப் பொருட்களை வீணாக்கும் முன் சிந்திப்போம்.

இதுகூட செய்வதற்கு அரிய செயல்தான்..

முயற்சித்தால் நாமும் பெரியோராகலாம்.

தொடர்புடைய இடுகைகள்