வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

நம் குழந்தைகள் நம்பமாட்டார்கள்!







இத்தனை நீர்நிலைகள் நம்மிடம் இருந்தன என்று சொன்னால் எதிர்காலத்தில் 

நம் குழந்தைகள் நம்பமாட்டார்கள்!

தொடர்புடைய இடுகை





வியாழன், 3 ஏப்ரல், 2014

மட்டின்றி மகிழ்ச்சியில்லை!



அளவற்ற மகிழ்ச்சியைக் குறிப்பிட “மட்டற்ற மகிழ்ச்சி“ என்றே இன்றும் நாம் வழங்கிவருகிறோம். மட்டு என்றால் எல்லை என்றும் கள் என்றும் பொருள் உண்டு.
சங்ககாலத்தில் உணவின் ஒரு கூறாக கள் இருந்தது. கள் இன்றி மகிழ்ச்சி இல்லை என்று சங்ககால மக்கள் வாழ்ந்தனர்.

புறநானூற்றுப் பாடல் ஒன்றைக் காண்போம்..


போர்க்களத்துக்குப் புறப்படும் வீரனைப் பார்த்துநேற்று நீ கொன்றவனுடைய தம்பி இன்று உன்னைக் கொல்வதற்காகப் பெரும் சினம் (கோபம்) கொண்டு உன்னைத் தேடித் திரிகிறான் என அறிவுறுத்துவதாக இப்பாடல் அமைகிறது.

தோல்தா தோல்தா என்றி தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி
அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
பேரூர் அட்ட கள்ளிற்கு
ஓர்இற்கு ஒரில் தேருமால் நின்னே
புறநானூறு -300
பாடியவர் -அரிசில் கிழார்

கேடயத்தைக் கொண்டு வா! கேடயத்தைக் கொண்டு வா! என்று ஆரவாரம் செய்துகொண்டிருக்கிறாயேகேடயம் இருந்தால் மட்டும் நீ பிழைத்துவிடுவாயோ…?

நேற்றைய போரிலே நீ கொன்றாயே அவனுடைய தம்பி சிவந்த கண்களுடன் பெரிய ஊரிலே காய்ச்சிய கள் ஒரு வீட்டிலே இருப்பதை அறிந்த விருப்பமுடையவன் அங்கு சென்று கள் இருக்கும் கலயங்களைத் தேடுவது போன்ற வெறியோடு உன்னை வீடுவீடாகத் தேடியலைகிறான்

அதனால் போர்க்களம் செல்ல எண்ணாமல் தப்பிப் பிழைத்துக்கொள்வாயாக என அறிவுறுத்துவதாக இப்பாடல் அமைகிறது.


பாடலின் வழியே..

சங்ககால மக்களின் போர் சார்ந்த வாழ்வியலை அறியமுடிகிறது.
கள் மீது விருப்பம் கொண்டவன் கள் உள்ள கலயங்களை வெறியோடு தேடுவது போல தன் எதிரியுடன் போரிட விரும்பினான் என்ற உவமை நயமிக்கதாக உள்ளது.

அன்றும் இன்றும்

அன்றுபெரிய ஊரிலே காய்ச்சிய கள் ஒரு வீட்டிலே இருப்பதை அறிந்த வீரனொருவன் அதன் மீதுகொண்ட விருப்பத்தால் அங்கு சென்று கள் இருக்கும் கலயங்களைத் வெறியோடு தேடினான்.
இன்று –

குடிமக்கள் இவ்வாறு கள் இருக்கும் இடத்தைத் தேடி அழையக்கூடாது என்று அவர்களுக்கு அந்தத் துன்பத்தைத் தரக்கூடாது என்று தமிழக அரசு சிந்தித்து தெருவெங்கும் அரசு மதுபானக் கடைகளைத் திறந்துவிட்டது. 

குடிமக்களும் மட்டோடு மகிழ்ச்சியோடு உள்ளனர் அரசும் மட்டின்றி மகிழ்ச்சி இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறது.


வியாழன், 27 பிப்ரவரி, 2014

சொல்லுதல் யார்க்கும் எளிய..

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 
சொல்லிய வண்ணம் செயல் என்பார் வள்ளுவப் பெருந்தகை. கண்தானம் செய்ய, இரத்த தானம் செய்ய உங்களுக்கு விருப்பமா என்று கேட்டால் பெரும்பாலானவர்கள் ஆம் எனக்கு விருப்பம்தான் என்பார்கள். ஆனால் இதுவரை எத்தனை தடவை இரத்த தானம் செய்திருக்கிறீர்கள் என்றால் சிந்திப்பார்கள். கண்தானம் குறித்தும் இரத்ததானம் பற்றியும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய அடிப்படைத்தகவல்களைக் காண்போம்.

வியாழன், 3 அக்டோபர், 2013

முதலிடத்தை நோக்கி இந்தியா


பொருளாதாரம், தொழில்நுட்பம், அறிவியல், ஒலிம்பிக் என எந்தத் துறையில் பார்த்தாலும் இந்தியா பின்னிலையில் இருக்கிறது மக்கள்தொகைப் பெருக்கத்தில் மட்டும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. 2050ல் இந்தியாவின் மக்கள்தொகை எண்ணிப் பார்த்தாலே தலைசுற்றுகிறது. இப்போதே விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. அரசியல்வாதிகளுக்கோ தங்கள் நாற்காலியைத் தக்கவைத்துக்கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது.

நண்பர்களே நம்மால் முடிந்தவரை சமூகத்தளங்களில்

விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் வாங்க..

தொடர்புடைய இடுகைகள்

700 கோடி கறுப்புப் பணம்!!!

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

தற்கொலை செய்துகொ(ல்)ள்வோம்!


ஆற்றிலும், குளத்திலும், கிணற்றிலும்
தினம் தினம் விழுந்து தற்கொலைக்கு முயற்சிக்கிறது நிலா!

ஒவ்வொரு மாலைநேரத்திலும்
கடலில் விழுந்து தற்கொலைக்கு முயற்சிக்கிறது சூரியன்!

பெரிய பெரிய மலைகளில் ஏறி
தற்கொலைக்கு முயற்சிக்கின்றன மேகங்கள்!

என்ன சிரிப்பு வருகிறதா?
நிலவும், சூரியனும் இவ்வாறெல்லாம் தோன்றுவது இயற்கை!
இந்தப் புரிதல் காட்சிப்பிழை என்று தோன்றுகிறதா?

அப்படித்தான் வாழ்வின் சில மணித்துளிகள் நமக்குத் தோன்றும் அச்சங்களும், துன்பங்களும் இவை நிலையானவை அல்ல சில மணித்துளிகளில் மாறிவிடும் காட்சிப்பிழைகளே!

சிங்கங்களுக்கும், புலிகளுக்கும் பயந்து
மான்கள் தற்கொலை செய்துகொள்வதில்லை!

பாம்புகளுக்குப் பயந்து
தவளைகள் தற்கொலை செய்துகொள்வதில்லை!

பூனைகளுக்குப் பயந்து
எலிகள் தற்கொலை செய்துகொள்வதில்லை!

அஃறிணை உயிரினங்கள் கூட வாழ்வதற்காகவே சாகின்றன
அஃறிணை உயிரினங்கள் எதுவும் தற்கொலை செய்துகொண்டதில்லை!

உலகம் முழுவதும் தினமும் 3,000 பேர், ஆண்டுதோறும் சுமார் 9 லட்சம் பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. போர்களாலும், கொலைகளாலும், பயங்கரவாதத் தாக்குதல்களாலும், விபத்துகளாலும் நிகழ்கிற மரணங்களை விடவும், தற்கொலை செய்துகொள்வதன் மூலம் இறந்துபோகிறவர்கள் எண்ணிக்கையே அதிகமாகவுள்ளது.

தற்கொலை செய்துகொள்ள இவர்களுக்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம்.
வாழ்வதற்கு இவர்களுக்கு ஒரு காரணம் கூடவா கிடைக்கவில்லை?

ஒரு தோழி சொன்னார்….
ஆண்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள்,
ஆண்களோடு சேர்த்துப் பெண்களுக்கு ஆயிரத்தியொரு பிரச்சனைகள் என்று..
அதற்கு நான் கேட்டேன்..
ஆண்களோட ஆயிரம் பிரச்சனை என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? என்று..
அதற்கு அவர் தெரியாது என்று சொன்னார்..
நான் சொன்னேன்…………..
ஆண்களின் ஆயிரம் பிரச்சனைகளும் பெண்கள் தான் என்று..

இந்த உரையாடல் நகைச்சுவைக்காக மட்டுமல்ல. இதில் ஒரு உண்மையும் உள்ளது.

ஒவ்வொருவருக்கும் தாம் தான் உலகிலேயே மிகவும் துன்பப்படுகிறோம், நம்மைவிட துன்பப்படுபவர் யாருமே இல்லை என்ற எண்ணம் உண்டு. அதன் விளைவே நாம் வாழத்தகுதியற்றவர் என்ற முடிவில் தற்கொலை செய்துகொள்கின்றனர். துன்பங்களே இல்லாதவர் இன்னும் பிறக்கவேயில்லை என்பதை உணர்ந்துகொள்ளும்போது பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனவலிமை நமக்கு வந்துவிடும்.

தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு கொடுமையான சூழல் ஒவ்வொருவக்குமே வரும். அப்போதெல்லாம் நாம் தற்கொலை செய்துகொள்வோம் என்ற முடிவை ஒவ்வொருவரும் எடுத்தால் இந்த உலகமே இடுகாடாக மாறிப்போய்விடும். அதனால் அப்படியொரு கொடுமையான சூழல் நம் வாழ்வில் வந்தால் முதலில் தற்கொலை செய்துகொள்வோம் என்ற எண்ணத்தை தற்கொலை செய்து கொல்வோம்!

இந்த உலகிலேயே விலைமதிக்கமுடியாதது உயிர் என்பதை உணர்வோம் உணர்த்துவோம்..


இன்று உலக தற்கொலை தடுப்புநாள்! (செப்டம்பர்10) 

தொடர்புடைய இடுகைகள்.

1. நான் ஏன் வாழக்கூடாது?
2. தற்கொலைகளைத் தடுக்கும் ஆற்றல்

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

2035ல் இயற்கை?



இந்த நிலை தொடர்ந்தால் நாளை...


இதுதான் நடக்கும்!

உலக எழுத்தறிவு நாள்


எண்ணெழுத்து இகழேல் (கணிதத்தையும், அறநூல்களையும் இகழ்ந்து கற்காமல் விட்டுவிடாதே!

ஓதுவது ஒழியேல் (நல்ல நூல்களைக் கற்பதை ஒருபோதும் விட்டுவிடாதே)
என்று அன்றே ஔவையார் எழுத்தறிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்.

இன்று லக எழுத்தறிவு நாள்.  (செப்டம்பர் 8)
இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..
உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.
கற்கை நன்றே; கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
என்பார் அதிவீரராமபாண்டியர்.
காலம் போகிற போக்கைப் பார்த்தால் பிச்சையெடுத்துத்தான் குழந்தைகளைக் கல்விச்சாலைகளில் சேர்க்கமுடியும் போல இருக்கிறது. இந்த நிலைக்குக் காரணம் நாம்தான். ஆம் நாம் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளின் திறமின்மையே இன்றைய கல்வி தனியாரிடம் சிக்கி வியாபாரப் பொருளாகிவிட்டதற்கு முழுமுதற் காரணமாகும்

எந்தப் பணியாக இருந்தாலும் அதற்குத் தேவையான கல்வித்தகுதி, அனுபவம், வயதுவரம்பு இதெல்லாம் பார்ப்போம் ஆனால் அரசியலுக்கு மட்டும் இப்படி எதுவுமே பார்ப்பதில்லை. துறைசார்ந்த அடிப்படை அறிவுகூட இல்லாத ஒருவர் அமைச்சராகமுடியும் என்ற அவலம் இருக்கும் வரை கல்வியில் ஒரு சமூகம் தன்னிறைவடைவது என்பது வெறும் கனவுதான்.

இனிமேலாவது இலவசங்களை மறுத்து நல்ல படித்த அரசியல்வாதிகளைத் தேர்ந்தேடுப்போம்இலவசமாக அரசிடமிருந்து நாம் எதுவும் வாங்குவதாக இருந்தால் அது கல்வியாக 
மட்டுமே இருக்கட்டும். 

சனி, 7 செப்டம்பர், 2013

தமிழை மறந்ததால் இறந்த அம்மா,அப்பா!

இன்றைய சூழலில் அம்மாவும், அப்பாவும் வேலைக்குப் போகிறார்கள், தம் குழந்தைகளை மதிப்புமிக்க கல்விச்சாலையில் சேர்க்கவேண்டும் என்று...
அதனால் வளர்ந்தபிறகு குழந்தைகளும் வேலைக்குப் போகிறார்கள்,தம் பெற்றோரை மதிப்புமிக்க முதியோர் இல்லத்தில் சேர்க்கவேண்டும் என்று...
இந்தக் காலத்தில்,
நம்மைப் பெற்ற தாய்க்குக் கொடுக்கவேண்டிய மதிப்பை
நாம் பெற்ற நம் தாய்மொழிக்கும் கொடுக்கவேண்டும் என்று சொன்னால் உங்களில் பலருக்கும் சிரிப்பு வரலாம்..

ஆனால் கீழ்க்காணும் இரண்டு சிந்தனைகளைப் பார்த்து யாரும் சிரிக்கமாட்டீர்கள்! சிந்திப்பீர்கள் என நம்புகிறேன்.

  1. பள்ளியில் படிக்கும் ஒரு சிறுமி அன்று வீட்டு பாடங்களை செய்யவில்லை. ஆசிரியை அந்த சிறுமியிடம் ஏன் வீட்டு பாடங்களை செய்யவில்லை என்று கேட்டார் அதற்கு சிறுமி, வீட்டில் யாரும் இல்லை என்று சொன்னாள். 
  • அதற்கு ஆசிரியை உன் அப்பா என்ன செய்கிறார்?என்று கேட்டார்
  • சிறுமி எனக்கு அப்பா இல்லை என்று கூறினாள். 
  • பிறகு அம்மா என்ன செய்கிறார் என்று கேட்டார். 
  • அதற்கும் சிறுமி, எனக்கு அம்மா இல்லை என்று கூறினாள். ஆசிரியை, உன்னை தினமும் பள்ளிக்கு யார் தயார் செய்து அனுப்புவது என்று கேட்டார் அதற்கு சிறுமி கூறிய பதில்  My Daddy and Mummy என்று கூறினாள்.........
இந்தக் சிறுமிக்கு அம்மா, அப்பா இருந்தும் இவள், யாரும் இல்லாதவளாகவே இருக்கிறாள். இந்தப் பெற்றோர் உயிரோடு இருந்தும் இல்லாதவர்களாகவே மதிக்கப்படுகின்றனர். 
இதே கருத்தை கொஞ்சம் கடுமையாகவும் அதேநேரம் நகைச்சுவையாகவும் முகநூல் ஒருவர் இப்படிப் பதிவிட்டிருக்கிறார்.
மொழிகளில் உயர்வு தாழ்வு இல்லை!
ஆனால் ஒவ்வொரு மொழிகளும் உயர்வானவையே!

அந்த மொழிகளின் உயர்வை முழுவதும் உணர்ந்துகொள்வதற்கு நமக்கு தாய்மொழி என்னும் அடித்தளம் முழுமையாக இருக்கவேண்டும். தாய்மொழி என்னும் அடித்தளத்தில் எத்தனை மொழிகளைவேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம் என்பதை நாம் உணர்ந்து நம் குழந்தைகளுக்கு தாய்மொழி அறிவை கல்விச்சாலைகளில் கொடுக்காவிட்டாலும் வீட்டிலாவது சொல்லித்தரலாமே என்பதே இவ்விடுகை வழி நான் சொல்லவிரும்பும் கருத்து..

வியாழன், 5 செப்டம்பர், 2013

தினங்களை இப்படியும் கொண்டாடலாம்

             

இன்று ஆசிரியர் தினம். வழக்கமாக இந்தநாளில் நான் ஆசிரியர் குறித்த சிறப்புப் பதிவு இடுவதுண்டு. ஆனால் இன்று அப்படி எதுவும் இடவில்லை. இன்று மாணவர்களுக்கு முன்மாதிரியாக ஏதாவது செய்யலாம் என்ற எண்ணத்தில் எங்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தேன். நான் இரத்ததானம் செய்வதைப் பார்த்து, பல மாணவர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர். எடைகுறைவான மாணவர்களும் ஆர்வத்துடன் இரத்ததானம் செய்ய முன்வந்தனர். சிலர் என் நண்பர் இரத்தம் கொடுக்கிறார் நானும் கொடுக்கவேண்டும் என அடம்பிடித்தனர். அவர்களிடம் உங்க பெற்றோரிடம் இதற்கு அனுமதி வாங்கினீர்களா என்று கேட்டேன். அதற்கு அவர்கள், எங்கள் பெற்றோர் உங்கள் விருப்பம் என்று சொல்லிவிட்டார்கள் என்று சொன்னார்கள். இருந்தாலும் இரத்ததானம் செய்பவருக்கு குறைந்தது, 45கிலோவாவது எடை இருக்கவேண்டும் என அறிவுறுத்தி எடைகுறைவான மாணவர்களை, நீங்கள் வரும் நாட்களில் தானம் செய்யுங்கள் என ஆற்றுப்படுத்தி்னேன். பிறகு அவர்கள் அடுத்து இந்த முகாம் நடக்கும்போது தவறாது என்னை அழையுங்கள் என ஆர்வத்துடன் சொல்லிச்சென்றனர். 

பெற்றோரிடமும், இளம் தலைமுறையினரிடமும் ஏற்பட்டுள்ள இந்த  விழிப்புணர்வு வரவேற்புக்குரியது பாராட்டுதலுக்குரியது.



ஒரு ஆசிரியர் வகுப்பில் கூறும் அறிவுரைகளைவிடவும் அவரது செயல்பாடுகள் மாணவர்களைப் பெரிதும் சிந்திக்கவைக்கும்  என்பதை இன்றைய நாள் எனக்கு உணர்த்தியது.

பலர் தம் திருமண நாளிலோ, பிறந்தநாளிலோ இரத்ததானம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல ஆசிரியர்களான நாம் இதுபோன்ற சமூகவிழிப்புணர்வை ஏற்படுத்தும் செயல்பாடுகளை மாணவர்களுக்கு முன்மாதிரியாக செய்து ஆசிரியர் தினத்தைக் கொண்டாடலாமே..

சனி, 24 ஆகஸ்ட், 2013

ஊக்க மது கைவிடேல்!






                   ஊக்கமது கைவிடேல் (நல்ல செயல் செய்யும்போது, எத்தகைய தடைகள் வந்தாலும் மனம் தளராது ஊக்கத்தோடு செயல்படவேண்டும்) என்று ஔவையார் சொன்னதை, நம்ம தமிழ்நாட்டில் ஊக்க மது கைவிடேல் (ஊக்கம் தரும் மதுவைக் கைவிடேல்)எனத் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டார்களோ??


வெள்ளி, 15 பிப்ரவரி, 2013

இன்று கலீலியோ பிறந்தநாள்

கலீலியோ கலிலி (பெப்ரவரி 151564 - ஜனவரி 81642) பிறந்தார். இவர் இத்தாலியில் பிறந்தார்.

இயற்பியலின் தந்தை, நவீன வானியலின் தந்தை என்று போற்றப்பட்டராவார்.

“ஒன்பது கோள்களில் ஒன்றுதான் உலகம், நிலா பூமியைச் சுற்றுகிறது.பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பதும் இன்று நாமறிந்த உண்மை. ஆனால் 500 ஆண்டுகளுக்கு முன்னால், 

நிலவும் சூரியனும் பூமியைச் சுற்றுகின்றன என்று நம்பினார்கள். நம் புராணங்களில் கூட அசுரன் பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு ஓடினான் என்றும்..

சூரியன் ஏழுகுதிரைகள் பூட்டிய தேரில் கிழக்கிலிருந்து மேற்கே செல்வார் என்றும் சிந்தனைகள் உண்டு. அந்தக் காலத்தில் சூரினைச்சுற்றித்தான் அனைத்துக் கோள்களும் சுற்றிவருகின்றன என்ற கருத்தைச் சொன்னதற்காக பெருந்துன்பத்தை அனுபவித்தார் கலீலியோ. இவர் கணிதமும், இயற்பியலும் பயின்றார். படிக்கும் காலத்தில் ஆசிரியரிடம் நிறையவே கேள்விகள் கேட்டார். கற்பிக்கப்படும் அறிவியல் கருத்துக்களை மற்ற மாணவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்ள இவர் மட்டும் ஆசிரியர்களிடம் அதற்கான ஆதாரங்களைக் கேட்பார். அரிசுடாடில் கூற்றைக்கூட மறுத்துப் பேசும் அளவுக்கு இவருக்கு அறிவியலின் மீது ஆர்வமும், பற்றும் இருந்தது. 

சனிகிரகத்தைச் சுற்றியுள்ள வளையத்தைக் கண்டறிந்தார். வியாழன் கோளுக்கு நான்கு நிலாக்கள் உண்டு என்பதையும் கண்டுசொன்னார். சூரியனில் கரும்புள்ளிகள் தெரிவதை அவர் கண்டார். அவை என்னவாக இருக்கும் என்ற சி்ந்தித்தபோது அவை சூரியனைச்சுற்றும் கிரகங்களாகத்தான் இருக்கும் என்று சொன்னார். சூரியனைச் சுற்றித்தான் அனைத்துக்கோள்களும் சுழல்கின்றன என்ற கருத்தை அதன் வழிதான் நிரூபித்தார் கலீலியோ. கலீலியோ அவர்களின் தேடல் இன்றைய இளம் தலைமுறையினர் அவரிடம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடமாகும்.

புதன், 9 ஜனவரி, 2013

முகத்தின் அழகு நிறத்தில் இல்லை..

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றார்கள் அன்று. இன்று பலருக்கு 

முகத்தின் அழகு சிவப்பழகுப் பசைகளில்தான் தெரிகிறது..



சிவப்பழகுப் பசைகளை நம் முகத்தில் பூசிக்கொண்டு நாம் சிவப்பாக 

இருக்கிறோம் என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு ஊரையும் 

ஏமாற்றுவதைவிட இயல்பான நம் நிறங்களுடனேயே அழகான நம் 

பண்புகளால் நம் அகத்தின் அழகை முகத்துக்குத் தருவோம்..

வெள்ளி, 30 நவம்பர், 2012

மின்வெட்டை சமாளிக்க எளிய வழிகள்.

தமிழகத்தில் அதிகரித்துவரும் மின்வெட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அணுஉலை, அணுமின்நிலையம், காற்றாலை, சூரியமின்உற்பத்தி என அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.இன்னும் 6மாதங்களில் மின்மிகை மாநிலமாக தமிழகம் விளங்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் மின்வெட்டு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. மக்கள் மனநிலையை எடுத்தியம்பும் படங்கள் சில.. 



கதை ஒன்று..
முல்லா ஒரு கழுதை வைத்திருந்தார். அதில் தான் அவர் செல்வார். அந்தக் கழுதை எப்போதும் அவர் பேச்சைக் கேட்பதே இல்லை. கிழக்கே போகச் சொன்னால் மேற்கே போகும். மேற்கே போகச்சொன்னால் வடக்கே போகும்.
     ஒருநாள் முல்லாவின் நண்பர், முல்லாவைப் பார்த்து, “என்ன முல்லா நேற்று நீங்கள் கழுதைமீது அமர்ந்து விரைவாகச் செல்லும்போது நான் நிற்கச்சொன்னேன். நீங்க நிற்காமலே போய்விட்டீர்களே? என்று கேட்டார்.
அதற்கு முல்லா, நானா நிற்கமாட்டேன் என்று சொன்னேன். தாங்கள் சொல்வதை என் கழுதையிடம் சொல்லுங்கள். அதுதான் நிற்கமாட்டேன் என்கிறது. நான் சொல்வதை அது என்றுமே கேட்டதில்லை.“
அதனால் அதற்கு ஏற்றவாறு நானும் என்னை மாற்றிக்கொண்டேன்.
கழுதை எங்கெல்லாம் செல்கிறதோ அங்கு என்ன வேலை உண்டோ அதைப் பார்க்கப் பழகிக்கொண்டேன் என்றார்.

(மின்சாரம் நாம் நினைக்கும்போதெல்லாம் வந்துவிடாது. 
அது வரும்போது நாம் மின்சாரம் சார்ந்த வேலைகளை முடித்துக்கொள்ளவேண்டும்)

இந்தக் கதையில் முல்லாவும் – கழுதையும்
நிகழ்காலத்தில் தமிழக மக்களும் – மின்சாரமும்.
 ஒப்புநோக்கி சிரித்து மகிழ்க. (இடுக்கண் வருங்கால் நகுக)

இந்நிலையில்,மின்வெட்டை சாமாளிக்க சில வழிமுறைகளைக் காண்போம்.
  •  எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் அதனால் மின்சாரம் என்ற ஒன்று இருப்பதையே (இருந்ததையே) மறந்துவிடுங்கள்.
  •  இணையம், தொலைக்காட்சி, கணினி எல்லாவற்றையும் மறந்து (நினைத்தாலும் பயன்படுத்தமுடியாது) குடும்பஉறவுகளிடமும், நண்பர்களிடமும் பேச மின்வெட்டு நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

  • ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல், திருகை, விசிறி ஆகிய பொருள்களை வாங்கிப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளலாம்.
  • மின்விசிறி இல்லாததால் வீட்டில் மரங்களை வளர்த்துக்கொள்ளலாம்.

      ·  பொழுதுபோக்குவதற்காக நல்ல நூல்களைப் படிக்கலாம்.
  • அதிகரித்து வந்த மின்பயன்பாட்டால் மனிதஉடல் உழைப்புகள் குறைந்து வந்தன. அதனால் நோய்களும் பல உருவாகிவந்தன. இப்போது நோயின்றி வாழ சிறந்த வழி இந்த மின்வெட்டு என எண்ணி்க்கொள்வோம்.
மின்வெட்டை சாமாளிக்க நான் கடைபிடிக்கும் வழிமுறைகளை இதில் தெரிவித்திருக்கிறேன்.

அன்பு நண்பர்களே நீங்களும் மின்வெட்டை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என்று சொன்னால் பெரிதும் மகிழ்வேன்.

புதன், 28 நவம்பர், 2012

பூமியின் விரல்கள்



பூமியின் விரல்களல்லவா மரங்கள்?


நம் விரல்களில் காயம்பட்டால் நமக்கு வலிக்கிறதே..



பூமியின் விரல்களை வெட்டும்போது 



பூமிக்கு வலிக்காதா?


(தொடர்புடைய இடுகைகள்)

அதனால் மரங்களை வெட்டாதீர்கள்

செவ்வாய், 27 நவம்பர், 2012

நாம் அறிவுடையவர்கள்! நம்மால் முடியும்!

சுத்தமான காற்று!
சுகாதாரமான சுற்றுச்சூழல்!

ஆகிய இரண்டும் உலகம் எதிர்நோக்கும் மிகப்பெரிய சவால்களாக உள்ளன.

நோய்கள் உருவாக அடிப்படைக் காரணமாக மனிதர்கள் வெளியேற்றும் குப்பைகளே அமைகின்றன. 

நம் வீடு போலத்தானே நாடும்! என்ற எண்ணம் எப்போது ஒவ்வொருவருக்கும் உருவாகிறதோ அப்போது அந்த நாடு சுத்தமான நாடாகக் காட்சிதரும். 

சுகாதாரமான சூழல் கொண்ட உலகின் பல்வேறு நாடுகளைக் காணும்போது வியப்பாக உள்ளது. 

எப்படி இவர்களால் மட்டும் தம் நகரை சுத்தமாக வைத்துக்கொள்ளமுடிகிறது?
இதற்கு யார் காரணம்?
அரசுமட்டுமா?
அரசு விதிக்கும் அபராதம் என்னும் அச்சுறுத்தல் தான் காரணமா?

என்ற கேள்விகள் மனதில் எழுகின்றன.

ஆழ்ந்துநோக்கினால் மக்ககளின் பொதுநலன் குறித்த சிந்தனையும், தனிமனித ஒழுக்கமுமே ஒரு வீட்டையும், நாட்டையும் சுகாதாரமாக வைத்துக்கொள்ளஉதவும் என்பது புரிகிறது.

நம்மைச்சுற்றி கொஞ்சம் திரும்பிப் பாருங்களேன்.
நகரைத் தூய்மையாக வைத்துக்கொள்ள அரசு எவ்வளவு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது? அதைப் பொதுமக்கள் எந்த அளவுக்கு மதித்து நடக்கிறார்கள்? 

நேற்று காரைக்குடி சென்றேன் ஒரு தெருவில் குப்பை மேட்டின் மீது அமர்ந்து ஒருவர் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்..

என்ன என்று பார்த்தேன்..

அறிவு உள்ள எவரும்.. என்று மட்டும் எழுதியிருந்தார். என்னவாக இருக்கும்..? இங்கு குப்பை கொட்டக்கூடாது என்று எழுதுவாரோ என்று நினைத்துக்கொண்டே வந்தேன்..

நான் நினைத்ததுபோலவே அடுத்த தெருவில் “அறிவு உள்ள எவரும் இப்பகுதியில் குப்பை கொட்டவோ, அசுத்தம் செய்யவோ மாட்டார்கள்“ என்று எழுதப்பட்டிருந்தது.

இதை செய்யென்றால் செய்யமாட்டோம்..
செய்யாதே என்றால் செய்வோம் இதுதானே நம் இயல்பு?



அழகாக எழுதப்பட்ட இந்தக் கருத்தைப் படிக்கத்தெரிந்தால் அவர் இங்கே குப்பை கொட்டுவாரா?
என்ற கேள்வி முதலில் நம் மனதில் எழும். இருந்தாலும் நன்கு சிந்தித்துப் பார்த்தால் படித்தவர்களில் பெரும்பாலானவர்களே இந்தத் தவறைச் செய்கிறார்கள் என்ற உண்மை புலப்படும்.அதனால் சுத்தமான சுற்றுச் சூழல் நோய்நொடியற்ற வாழ்வு தரும்  என்பதை உணர்ந்து நம் சுற்றுச்சூழல் தூய்மையா இருக்க உதவுவோம்.

  • நீர்வளங்கள்
நீர் வளங்களைப் பாதுகாக்கவேண்டிய பெரிய கடன் நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து, நீர்வளங்களை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்போம்.


  • இதைப் பார்த்தாவது திருந்துவோம்


  • நாம மக்கு மனுசனா?



  • இயற்கை வளங்களைப் பாதுகாப்போம்.




எவ்வளவு பெரிய உண்மை??

இந்த பூமி எவ்வளவு அழகானது?
இதை இன்னும் அழகாக்காவிட்டாலும்- கொஞ்சம் அழுக்காக்காமால் விட்டுச்செல்வோமே!!

நாம் அறிவுடையவர்கள்! நம்மால் முடியும்!

தொடர்புடைய இடுகை