வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதன், 4 ஜூன், 2014

குளத்தங்கரை அரசமரம் சொல்லும் கதை...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகிவரும் இன்றைய சூழலில் வ.வே.சு ஐயரின் குளத்தங்கரை அரசமரம் சொல்லும் கதை, நல்ல அறிவுரையாக அமையும்..

கதை சொல்லும் நீதி..

பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம். எந்த விளையாட்டு என்ன வினைக்கு கொண்டுவந்து விடும் என்று யாரால் சொல்லமுடியும்?



வ.வே.சு ஐயரின் நினைவுநாளான இன்று அவரது தமிழ்ப்பணியை எண்ணிப்பார்ப்பதாக இவ்விடுகை அமைகிறது.

வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (வ. வே. சு. ஐயர், ஏப்ரல் 2 1881 — ஜூன் 4 1925) இந்தியவிடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார்.
தமிழிலக்கிய பங்களிப்பு
மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்ததைப் போலவே வ.வே.சு. இலக்கியப் புலமையிலும் சிறந்து விளங்கினார்.
·         திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
·         குளத்தங்கரை அரசமரம் என்கின்ற பெயரில் சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன்முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதையாகும்.
·         இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும்.
·         1921-22 காலப்பகுதியில் பெல்லாரி சிறையில் ஒன்பது திங்கள் சிறைப்பட்ட அவர், கம்பராமாயண ஆராய்ச்சி (KAMBARAMAYANA -A STUDY) எனும் நூலை ஆங்கிலத்தில் எழுதினார். என்றோ வெளிவந்திருக்க வேண்டிய இவ்வாய்வு நூல் 1950 இலேயே நூலாக வெளிவந்தது.கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத மொழிக் காவியங்களை மூலமொழியிலேயே படித்தறிந்து, ஒவ்வொரு பாத்திரமாக ஆராய்ந்து அழகிய ஆங்கிலக் கட்டுரைகளாக வடித்தார். இந்நூல் பின்னர் 1990 இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது.
·         கம்பராமாயணப் பாலகாண்டப் பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார்.
·         கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார்.
·         பல மொழிபெயர்ப்பு நூல்களை வடித்தார்.
·         லண்டனில் இருந்தபோது பாரதியின் இந்தியா இதழில் லண்டன் கடிதம் என்ற பெயரில் தொடர்ந்து எழுதினார்.
·         மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, "கம்பராமாயணம் - ஓர் ஆராய்ச்சி" போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
·         பாரதி எனும் மாபெரும் கவிஞரின் பெருமையை அக்காலத்திலேயே அறிந்து அவர் கவிதைகளை முக்கிய ஆக்கங்களாகக் கருதிச் சில திறனாய்வுக் குறிப்புகளை அவரது சமகாலத்திலேயே பதிவுசெய்தார்.

குளத்தங்கரை அரசமரம் என்பது வ. வே. சு. ஐயர் எழுதிய ஒரு சிறுகதை. இதுவே தமிழின் முதல் சிறுகதை என்றும் கருதப்படுகிறது.  குளத்தங்கரையில் உள்ள அரசமரம் தன் வாழ்வில் கண்ட ருக்மணி எனும் பெண்ணின் கதையைச் சொல்கிறது. ‌”பெண்கள் மனசு நோகும்படி ஏதாவது செய்யத் தோணும்போது இனிமேல் இந்தக் கதையை நினைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுக்காகக் கூடப் பெண்ணாய்ப் பிறந்தவர்களின் மனதைக் கசக்கவேண்டாம்” என்று இக்கதை முடிகிறது. மேலும் காளிதாசனின்பெண்ணியலாரின் அன்பு நிறைந்த இருதயம் பூப்போல மிகவும் மெல்லியது ; அன்புக்குக் கேடுவரின், உடனே விண்டு விழுந்துவிடும். (குஸும ஸத்ருசம் .....ஸத்ய: பாதி ப்ரணயி ஹ்ரதயம்) எனும் மேற்கோளும் கதையின் நீதியாக அமைந்துள்ளது.



குளத்தங்கரை அரசமரம் கதையை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.

கதையில்...


“காற்று, ஸமாதானஞ் செய்ய மனுஷாள் இல்லாத குழந்தைபோல, ஓயாமல் கதறிக்   கொண்டேயிருந்தது..“

என்ற உவமையை மிகவும் இரசித்தேன்


செவ்வாய், 3 ஜூன், 2014

ஆசிரியர்கள் என்னும் சொல்லேர் உழவர்கள்!


பேசிப்பேசியே ஆட்சியைப் பிடிக்கும் அரசியல்வாதிகள்,

நயமான பேச்சாலேயே சமயக்கருத்தைப் புகுத்தும் ஆன்மீகவாதிகள்,
மூளைச்சலவை செய்தே பணம் சம்பாதிக்கும் விளம்பரதாரர்கள்,
நுட்பமான பேச்சால் தம் கட்சிக்காரரைக் காப்பாற்றும் வழக்கறிஞர்கள்,
கடல் அலைபோல நிறைந்த கூட்டத்தைக்கூட தம் இனிமையான பேச்சால் கட்டிப்போடும் மேடைப் பேச்சாளர்கள்,
என யாவருக்கும் பொதுவானது பேச்சுக்கலை. என்றாலும் இப்படி நல்ல பேச்சாளர்கள் உருவாகும் இடம் பெரும்பாலும் பள்ளிகளாகவோ, கல்லூரிகளாகவோ அமைகின்றன. ஆசிரியர்களின் பயிற்சி, பாராட்டு, ஊக்குவிப்பு மாணவர்களை எதிர்காலத்தில் சிறந்த பேச்சாளர்களாக உருவாக்கும்.
ஆசிரியர்களே மாணவர்களின் முதல் முன்மாதிரிகளாக அமைகின்றனர்.
               வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
               சொல்லேர் உழவர் பகை (திருக்குறள் -872)
என்பார் வள்ளுவர். அதாவது வில்லை ஏராகக் கொண்ட உழவராகிய வீரருடன் பகைகொண்டபோதிலும், சொல்லை ஏராகக் கொண்ட உழவராகிய அறிஞருடன் பகைகொள்ளக்கூடாது என்பது இக்குறளின் கருத்தாகும்.
வள்ளுவர் சொல்வதுபோல சொல்லை ஏராகக் கொண்டு உழக்கற்றவர்களாக ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே அவர்களிடம் பயிலும் மாணவர்கள் பேச்சாளர்களாக உருவாகமுடியும்.

பார்க்கும் மாணவரைக் கேட்கவைத்து,
கேட்கும் மாணவரை உற்றுநோக்கவைத்து,
உற்றுநோக்கும் மாணவரை உள்வாங்கவைத்து,
உள்வாங்கும் மாணவரை உணரவைத்து,
உணரும் மாணவரைப் பின்தொடரவைத்து,
பின்தொடரும் மாணவரை தேடவைப்பதே ஒரு சிறந்த ஆசிரியரின் கடமையாகும்.

இன்று உள்ள பொழுதுபோக்கு சாதனங்களையும், கவனச் சிதறல்களையும் கடந்து மாணவரைத் தம் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதே பெரிதாக உள்ள இக்காலச்சூழலில் ஆசிரியர்கள் மாணவர்களைச் சிந்திக்கவைப்பது என்பது மிகப்  பெரிய இலக்காகத் தான் உள்ளது.

திங்கள், 2 ஜூன், 2014

யாழிசை போன்றது….


அன்பின் முகவரிகள் இன்று மாறிவிட்டன. இன்றைய மக்கள் தம் தகுதிக்கேற்ப பல்வேறு அறைகளோடு வீடுகளைக் கட்டுகின்றனர். தமக்கு ஒரு அறை தம் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறை எனத் தந்து தம் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
இன்றைய குழந்தைகளுக்கு விலையுயர்ந்த யாவும் எளிதாகவே கிடைத்துவிடுகின்றன.
இன்றைய பெற்றோர்களால் தம் குழந்தைகளுடன் நேரத்தை ஒதுக்கி அன்பை காட்டமுடியவில்லை என்பதுதான் நிகழ்கால உண்மை.
தொலைக்காட்சி, இணைய சமூகத் தளங்களைக் கடந்து பிள்ளைகள் பெற்றோரிடமும், பெற்றோர் பிள்ளைகளிடமும் பேசுவதற்குக் கூட இன்று நேரம் கிடைப்பதில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.


பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா? என்றால் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அவை காடுகளில் வாழ்ந்தாலும் சுதந்திரமாக வாழ்கின்றன. நாம் வீடுகள் என்ற பெயரில் நான்கு சுவர்களுக்குள் நம்மை சிறைப்படுத்திக்கொள்கிறோம். இதுபோதாதென்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சமூகத் தளங்களிலும் நம்முடைய நேரத்தைத் தொலைத்துவிட்டு நம்மை நாமே தேடிக்கொண்டிருக்கிறோம். நம் வீடுகளில் நான்குபோ் இருந்தாலும் அவர்களிடம் பேசுவதைவிட உலகின் ஏதோ ஒரு நாட்டில் வாழும் முகம் தெரியாத நட்புடன் உரையாடுவதிலேயே பெருமிதம் கொள்கிறோம். 
தொலைக்காட்சிகளும், வானொலிகளும் எழுப்பும் விளம்பரக் கூச்சல்களையும் கடந்து இன்னும் சில வீடுகளில் மெல்லிய இனிய யாழிசை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆம் அந்த வீடுகளில் இந்த தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் குறைவாகத்தான் உள்ளது.


சங்கஇலக்கியத்தில் அன்பு நிறைந்த ஒரு காட்சி..

தாயாகிய தலைவி, தன்னுடைய புதல்வனை அணைத்தபடி படுத்திருக்கிறாள்..அவளை அணைத்தபடி பின்புறம் அவளின் முதுகை வருடியவாறு தலைவன்படுத்திருக்கிறான். இந்தக் காட்சியானது, பாணர்கள் இசைக்கும் யாழ்நரம்பினிடையே எழும் இசையைபோல இனிமையானது. அதோடு, நல்லபண்புடையதுமாம்.

புதல்வற் கவைஇய தாய்புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை பாணர்
நரம்புளர் முரற்கை போல
இனிதால் அம்ம பண்புமார் உடைத்தே

(ஐங்குறுநூறு-முல்லை:402)

-
பேயனார்.
பாடலின் வழியே...
இன்றைய இயந்திர வாழ்க்கையில் இவை போன்ற சங்க இலக்கியப் பதிவுகள், தென்றலைப் போல நம் மனதை வருடிச் செல்கின்றன..
அன்பு நிறைந்த வாழ்க்கை யாழிசையைப் போல இனிமையானது என்ற உண்மை புலப்படுத்தப்படுகிறது.