வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

உங்கள் பெயரின் பொருள் ? – பதிவு 2

2011 ஆம் ஆண்டு என் வலையில், உங்கள் பெயரின் பொருள்?? என்றொரு பதிவை வெளியிட்டேன். அந்தப் பதிவு 70 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்தப் பதிவின் நோக்கம், அவரவர் தாய்மொழியில் குழந்தைகளுக்கான பெயர்கள் இடவேண்டும். தமிழர்கள் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர்வைக்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பதே ஆகும். அந்தப் பதிவின் வழி பலரும் என்னைத் தொடர்புகொண்டு தம் குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்களைக் கேட்டனர். நானும் பரிந்துரை செய்தேன். பலர் தம் பெயர் என்ன மொழி சார்ந்தது, அதன் பொருள் என்ன என்றும் அறிந்துகொண்டனர்.     
இன்றும் பலர் தம் பெயர்கள் என்ன மொழி சார்ந்தது என்றும்,அதன் பொருள் என்ன என்றும் அறிந்துகொள்ளாதவர்களாகவே உள்ளனர். அதனால், இன்றைய சூழலிலும் 
தமிழ் மொழியில் பெயர் வைக்கவேண்டும்!!
                   தமிழில் கையொப்பமிடவேண்டும்!!    
                          தமிழில் பேசவேண்டும்!!
இணையத்தில் தமிழில் உலவவேண்டும்!!
என்ற சிந்தனைகளை நாம் மீண்டும் மீண்டும் எடுத்துச்சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
18.04.2017 இன்று காலை தமிழ் இந்து நாளிதழில் படித்து வியந்த செய்தி,
(நன்றி தமிழ் இந்து)
ராஜஸ்தானில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ‘குடியரசுத் தலைவர் ஆடு மேய்க்க சென்றுள்ளார்’ என்றோ பிரதமர் பலசரக்கு வாங்க நகரத்துக்கு சென்றுள்ளார் என்றோ யாராவது சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம். ஆம். அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு பதவி, பிரபல பிராண்ட்களின் பெயரைச் சூட்டுவது வழக்கமாக உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் புந்தி மாவட்டத்தில் ராம்நகர் கிராமம் உள்ளது. சுமார் 500 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் கஞ்சார் சமுதாயத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் படிப் பறிவில்லாதவர்கள். ஆனாலும், இங்கு குழந்தைகளுக்கு அரசு உயர் பதவி மற்றும் உயர் அலுவலகங்களின் பெயர்களைச் சூட்டுவது வழக்கமாக உள்ளது.
ஒருமுறை மிடுக்கான தோற்றத்துடன் தனது கிராமத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியரைப் (கலெக்டர்) பார்த்து அசந்துபோன ஒரு பெண், தனது பேரனுக்கு கலெக்டர் என பெயரிட்டுள்ளார். அவருக்கு இப்போது 50 வயதாகிறது. அவர் பள்ளிக்குச் சென்றதே இல்லை.
இதுகுறித்து ராம்நகர் கிராம அரசு பள்ளி ஆசிரியர் கூறும்போது, “சூழ்நிலை காரணமாக காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் சென்ற கிராம மக்கள், அங்கு அதிகாரிகளுக்கு கிடைக்கும் மரியாதையைக் கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதையடுத்து, தங்கள் குழந்தைகளுக்கு ஐஜி, எஸ்பி, ஹவில்தார், மாஜிஸ்திரேட் என பெயரிடத் தொடங்கினர்” என்றார்.
இதுபோல மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஹை கோர்ட் என பெயரிட்டுள்ளனர். இவர் பிறந்தபோது, குற்ற வழக்கில் சிக்கிய இவரது தாத்தாவுக்கு ஹை கோர்ட் ஜாமீன் வழங்கியதால் இந்த பெயர் வைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் ஸ்மார்ட்போன் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், புந்தி மாவட்டம் நைன்வா தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களில் செல்போன் பிராண்ட்கள், சாப்ட்வேர் மற்றும் அதன் உதிரி பாகங்களின் பெயரையும் சூட்டத் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து, நைன்வா தாலுகா சுகாதார மையத்தில் பெயர் பதிவு அதிகாரியாக பணியாற்றும் ரமேஷ் சந்த் ரத்தோர் கூறும்போது, “பர்கானி, அர்னியா, ஹனுமந்தபுரா, சுவாலியா உள்ளிட்ட கிராம மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு சாம்சங், நோக்கியா, ஜியோனி, ஆண்ட்ராய்டு, ஸ்மார்ட்போன், சிம் கார்டு, சிப், மிஸ்டு கால் உள்ளிட்ட பெயர்களைச் சூட்டுகின்றனர்” என்றார். 

வியாழன், 13 ஏப்ரல், 2017

ஜாலியன் வாலாபாக் படுகொலையின் திருப்புமுனை!

உயிர்க்கொலை என்பது சில நேரங்களில் நீதியாகவும்,
சிலநேரங்களில் அநீதியாகவும் நம்மால் பார்க்கப்படுகிறது!
ஜாலியன் வாலாபாக் படுகொலை என்றதும் நம் நினைவுக்கு வருபவர் ஆளுநர் மைக்கேல் ஓ டையர்! இவர் செய்த கொலையை நாம் அநீதியாகப் பார்க்கிறோம்.
டையரின் செயலைக் கண்டு வருந்தி அவரைக் கொல்வதற்காக 21 ஆண்டுகள் முயன்று அவரைக் கொன்ற ஒருவரின் செயலை நாம் நீதி என்று கொண்டாடுகிறோம்.
அந்த ஒருவரின் செயலை,

காந்திஜி கண்டித்தார்! நேதாஜி வரவேற்றார்!
இந்திய சுதந்திரத்தின் வழிகாட்டி இவர் என்றது பெர்லின் பத்திரிக்கை!
ரோம் நகரில் அதிகம் வெளியான பெர்கெரெட் (BERGERET) என்ற பத்திரிக்கை
இவரின் செயலை தீரச்செயல் என்று பாராட்டியது
ஒடுக்கப்பட்ட மக்கள் குண்டுகளால் பேசிவிட்டனர் என்றும் இந்தியர்கள்
யானையைப்போல எதிரிகளை மன்னிக்கவே மாட்டார்கள் என்றும் 20 ஆண்டுகள் கழித்தும் அவர்கள் பழிதீர்த்துவிட்டார்கள் என்றும் கூறியது
ஜெர்மனி வானொலி!

ஆம் அந்த ஒருவர் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தின் புரட்சியாளர்களுள் ஒருவர் உத்தம்சிங்!
1889- ஆம் ஆண்டு டிசம்பர் 26- ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தில் சங்க்ரூர் மாவட்டத்தில் சுனாம் கிராமத்தில் பிறந்தவர். பெற்றோர் இவரின் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். பின்னர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அதுவரை அவரது பெயர் ஷேர்சிங். அங்குதான் உத்தம் சிங் என்று பெயர் மாற்றப்பட்டது
1919- ஆம் ஆண்டு ஏப்ரல் 13- ஆம் நாள் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த அன்று உத்தம் சிங்கும் அவரது ஆசிரம நண்பர்களும் கூட்டத்திற்கு தண்ணீர் வழங்கும் பணியைச் செய்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் கலைந்து செல்லவும் வழியில்லாமல் நடத்தப்பட்ட படுகொலை அவரைக் கடுமையாக பாதித்துவிட்டது. அவர் இச்சம்பவத்திற்குப் பழிவாங்க பொற்கோவிலில் சபதம் பூண்டார்
1919 ஆகஸ்ட் 25 அன்று ஜெனரல் டையர் ஜெனரல் ஸ்டாஃப் டிவிஷன் எனும் ராணுவ மேலதிகார நிலையினருக்குச் சமர்ப்பித்த வாக்குமூலத்தில் தெரிவித்தது:
நான் சுட்டேன். கூட்டம் சிதறிப்போகும் வரை சுட்டுக்கொண்டேயிருந்தேன். மக்களின் நெஞ்சிலே எவ்வளவு பெருந்தாக்கம் ஏற்படுத்த வேண்டுமென்று எண்ணங் கொண்டேனோ அதன் படிக்கு அத்தனை அதிகம் சுடவில்லை என்றுதான் நினைக்கிறேன். என்னிடம் மட்டும் இன்னும் கூடுதலாகப் படையாட்கள் இருந்திருந்தால் அடிபட்டோர் மற்றும் இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாகவே இருந்திருக்கும். நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதும் ஆன எல்லோருக்குமே குலை நடுக்கம் தோன்ற வேண்டும் என்றுதான் சுட்டுக்கொண்டேயிருந்தேன். அவசியத்துக்கு மேல் கடுமை காட்டிவிட்டேனோ என்ற கேள்விக்கே இடமில்லை.
என்று தான் செய்த செயல் குறித்து சிறிதும் வருத்தம் கொள்ளாத டயரைக் கொல்வதுதான்
தன் வாழ்வின் இலக்கு என்று கொண்டார் உத்தம்சிங்
மூன்றாண்டுகள் மைக்கேல் ஓ டையரைக் கொலை செய்யும் திட்டத்துடன் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். 1933- ல் காஷ்மீர் சென்று ஜெர்மனிக்குத் தப்பிவிட்டார். அவர் இத்தாலி, பிரன்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா வழியாக 1934- ல் லண்டனை அடைந்தார்.
மைக்கேல் ஓ டையரைக் கொல்ல சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் காத்திருந்தார். 1940- ஆம் ஆண்டு மார்ச் 13 அன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 21 ஆண்டுகள் கழித்து அந்த சந்தர்ப்பம் கிடைத்தது.

கேக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் கிழக்கிந்திய சங்கம், மத்திய ஆசிய சங்கம் இவற்றின் கூட்டம் நடந்தது.
மைக்கேல் ஓ டையர் ஒரு பேச்சாளர். சிங் ஒரு புத்தகத்தில் ரிவால்வர் மாதிரியே வெட்டி அதனுள் ரிவால்வரை வைத்து எடுத்துச் சென்றார். சுவரின் அருகில் நின்றார். கூட்ட முடிவில் டையர் மேடையை நோக்கிச் செல்லும் போது இருமுறை சுட்டார். டையர் உடனே இறந்துவிட்டார்.

உத்தம் சிங் சிறையில் 42 நாள் உண்ணாவிரதம் இருந்தார். அவர் கட்டாயப்படுத்தி உணவு உண்ண வைக்கப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் "நான் அவரைப் பழிவாங்க எண்ணியிருந்தேன். அவர் அதற்குப் பொருத்தமானவர்தான்" என்று கூறினார்
1940- ஆம் ஆண்டு ஜூலை 31 அன்று அவர் பென்டோன்வில் சிறைச்சாலையில் அவர் தூக்கிலிடப்பட்டார். அன்று மதியமே அவரது உடல் சிறைச்சாலை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

அடிமைப்பட்டிருந்த இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்க உயிர் தியாகம் செய்தவர்கள் பலர். அவர்களின் ஒருவரான உத்தம்சிங் வாழ்வின் திருப்புமுனையாக ஜாலியன் வாலாபாக் படுகொலை அமைந்தது என்பது நாம் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்சொல்லவேண்டிய வரலாற்று நிகழ்வு.