வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 8 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 30. வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

தீமை இலாத சொலல்.- 291

நற்சொற்களே வாய்மை எனப்படும்              

பொய்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின். - 292

நன்மைக்காகப் பேசும் பொய்களும் வாய்மை எனக் கருதப்படும்

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்.- 293

மனமறிந்து பொய்கூறின் மனமே அவனைத் துன்புறுத்தும்

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள்ளெல்லாம் உளன். - 294

உள்ளமறிய பொய் கூறாதவன், உலகத்தார் உள்ளத்தில் வாழ்வான்

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானஞ்செய் வாரின் தலை.-295

தானம், தவத்தைவிட வாய்மை உயர்ந்தது

பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை

எல்லா அறமும் தரும்.- 296

உண்மையே புகழையும். அறத்தையும் கொடுக்கும்

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற

செய்யாமை செய்யாமை நன்று.- 297

உண்மை பேசுவது அறம் செய்வதைவிட உயர்ந்தது

புறம்தூய்மை நீரான் அமையும் அகம்தூய்மை

வாய்மையான் காணப் படும்.-298

உண்மையால் அகமும், நீரால் புறமும் தூய்மையாகும்

எல்லா விளக்கும் விளக்குஅல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு.-299

சான்றோர்க்கு உண்மையே மெய்யான விளக்கு 

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்துஒன்றும்

வாய்மையின் நல்ல பிற.-300

நான் கண்டவற்றுள் உண்மையைவிட உயர் அறம் வேறில்லை


திங்கள், 7 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 29. கள்ளாமை

 


எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்

கள்ளாமை காக்கதன் நெஞ்சு. - 281

இகழ்ச்சியை விரும்பாதவன் திருடும் எண்ணத்தை விடவேண்டும்

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.- 282

மனதால் பிறர்பொருளைத் திருட நினைப்பதும் குற்றமே

களவினால் ஆகிய ஆக்கம் அளவுஇறந்து

ஆவது போலக் கெடும்.- 283

திருடிய செல்வம், பெருகுவதுபோல அழிந்துபோகும்

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்

வீயா விழுமம் தரும்.   284

களவாடிய பொருள் தக்க நேரத்தில் பயன்படாது

அருள்கருதி அன்புடையர் ஆதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.-285

பொருளால் பெற்ற நட்பைவிட, மனதால் பெற்ற நட்பே சிறந்தது

அளவின்கண் நின்றுஒழுகல் ஆற்றார் களவின்கண்

கன்றிய காத லவர். - 286

களவுசெய்து வாழ்பவர்கள் அளவறிந்து வாழமாட்டார்கள்

களவுஎன்னும் கார்அறிவு ஆண்மை அளவுஎன்னும்

ஆற்றல் புரிந்தார்கண் இல்.- 287

அளவறிந்து வாழ்பவர்கள் திருடி வாழ மாட்டார்கள்

அளவுஅறிந்தார் நெஞ்சத்து அறம்போல நிற்கும்

களவுஅறிந்தார் நெஞ்சில் கரவு.-288

அறவழியையும், தீயோர் வஞ்சனையும் கொள்வா்

அளவுஅல்ல செய்தாங்கே வீவர் களவுஅல்ல

மற்றைய தேற்றா தவர்.-289

களவு வாழ்வு நெடுங்காலம் நீடிக்காது

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்

தள்ளாது புத்தேள் உலகு.-290

திருடர் அழிவையும், நல்லவர்கள் நல்வாழ்வையும் அடைவா்

வெள்ளி, 4 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 28. கூடா ஒழுக்கம்


வஞ்ச மனத்தான் படிற்றுஒழுக்கம் பூதங்கள்

ஐந்தும் அகத்தே நகும்.- 271

வஞ்சகரை அவர் உடலில் கலந்த ஐம்பூதங்களும் தம்முள் நகும்

வான்உயர் தோற்றம் எவன் செய்யும் தன்நெஞ்சம்

தான்அறி குற்றப் படின்.- 272

மனமறிந்தும் தவறு செய்பவா், துறவுக்கோலத்தால் பயன் என்ன

வலிஇல் நிலைமையான் வல்உருவம் பெற்றம்

புலியின் தோல் போர்த்துமேய்ந் தற்று.- 273

பொய்தவக்கோலம் புலித்தோலை பசு போர்த்தியது போன்றது

தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.- 274

போலித்துறவிகள் வேடர்களுக்கு ஒப்பானவர்கள்

பற்றுஅற்றேம் என்பார் படிற்றுஒழுக்கம் எற்றுஎற்றுஎன்று

ஏதம் பலவும் தரும்.- 275

துறவிபோல நடிப்பவர்கள் முடிவில் பெருந்துன்பமடைவார்கள்

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்.-276

போலித்துறவிகளைப் போல கொடியவர்கள் யாருமில்லை

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி

மூக்கிற் கரியார் உடைத்து.-277

வெளியே நல்லவராகவும்,மனதில் தீயவராகவும் வாழ்வோர் பலர்

மனத்தது மாசுஆக மாண்டார்நீர் ஆடி

மறைந்துஒழுகு மாந்தர் பலர்.- 278

மனதில் மாசுடன், புறத்தே மெய்யான துறவிகளாக நடிப்பார் பலர்

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன

வினைபடு பாலால் கொளல்.-279

தோற்றத்தைவிட, செயலால் ஒருவரை இனம்காண்பதே சிறந்தது

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின். -280

தோற்றத்தைவிட பற்றற்று வாழ்வதே உயர்ந்தது

வியாழன், 3 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 27. தவம்

 


உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை

அற்றே தவத்திற்கு உரு.- 261

பொறுமையும், துன்பம் செய்யாதிருத்தலுமே தவம்

தவமும் தவம்உடையார்க்கு ஆகும் அவம் அதனை

அஃதுஇலார் மேற்கொள் வது. - 262

போலியான துறவிகளால் உண்மையான துறவிகளுக்கு இழுக்கு

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்

மற்றை யவர்கள் தவம். - 263

துறவிகளுக்கு உதவவே இல்லறத்தால் துறவை மறந்தனா்

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும். - 264

தீயவரை அழித்தலும், நண்பரை உயர்த்துதலும் தவத்தால் ஆகும்

வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும். - 265

விரும்பியது கிடைப்பதால் பலரும் தவம் செய்ய முயல்வர்

தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்

அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. - 266

பிறர் ஆசையால் தவறுசெய்ய, துறவிகள் கடமையையே செய்வா்

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. - 267

தங்கம்போல, துன்பத்திலும் மெய்யறிவு பெறுவர்கள் துறவிகள்

தன்உயிர்தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயிர் எல்லாம் தொழும். - 268

பற்றற்று வாழ்பவர்களை உயிர்கள் எல்லாம் வணங்கும்

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றம் தலைப் பட்ட வர்க்கு.269

தவத்தால் மரணத்தையும் வெல்லலாம்         

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர்.  - 270

இல்லாதவர்கள் பலர் வாழக்காரணம் தவம் செய்பவர்கள் சிலரே

புதன், 2 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 26.புலால் மறுத்தல்

 


தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்

எங்ஙனம் ஆளும் அருள். -  251

அருளுடையவன் புலால் உண்ணமாட்டான்

பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி

ஆங்குஇல்லை ஊன்தின் பவர்க்கு.  - 252

பொருளைப் போல அருளைக் காக்க புலாலை மறுத்து வாழ்

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்று ஊக்காது ஒன்றன்

உடல்சுவை உண்டார் மனம்.- 253

போராளியைப் போல புலால் உண்பவனும் அன்பில்லாதவன்

அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்

பொருள் அல்லது அவ்வூன் தினல். - 254

கொல்லாமை அருள்! கொல்லுதலும், புலால் உண்பதும் பாவம்

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு. - 255

புலால் உண்ணாதவர் நரகம் செல்லமாட்டார்கள்

தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்

விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல். - 256

யாவரும் புலால் மறுத்தால் கறிக்கடைகள் இருக்காது

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்

புண்அது உணர்வார்ப் பெறின். - 257

புலால் இன்னொரு உயிரின் உடற்புண், அதை உண்பதை தவிர்

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்

உயிரின் தலைப்பிரிந்த ஊன்.- 258

அறிவுடையோர் உயிரைப் பிரிந்த ஊனை உண்ணமாட்டார்கள்

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத்து உண்ணாமை நன்று.- 259

வேள்வி செய்வதைவிட ஊன் உண்ணாமை நன்று

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிரும் தொழும்.- 260

கொல்லாதவனை, புலால் மறுத்தவனை உயிர்கள் வணங்கும்

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

திருக்குறள் - அதிகாரம் - 25. அருளுடைமை




அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள.-241

பொருள் பெறுவது எளிது, அருள் பெறுவது அரிது

நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்

தேரினும் அஃதே துணை. - 242

ஆராய்ந்து நோக்கினாலும் அருளே வாழ்க்கைக்குத் துணை

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.- 243

அருளுடையார் வாழ்வே சொர்க்கமாகும்

மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப

தன்னுயர் அஞ்சும் வினை.- 244

எவ்வுயிரையும் போற்றும் அருளுடையா் தம் உயிர்க்கு அஞ்சார்

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்

மல்லல்மா ஞாலங் கரி.- 245

அருளுடையவருக்கு இவ்வுலகில் துன்பங்கள் வராது

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

அல்லவை செய்தொழுகு வார். - 246

வாழ்க்கையின் பொருளை மறந்தவரே அருளற்றவராவார்

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு. -247

இல்லறத்துக்கு பொருளும், துறவறத்துக்கு அருளும் தேவை

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்

அற்றார்மற் றாதல் அரிது.-248

இழந்தால் பெற இயலாதது அருள் மட்டுமே

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்.-249

அருளற்றவன் அறம் செய்வது பேதையின் நூலறிவு போன்றது

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து.-250

எளியாரைத் துன்புறுத்தும்போது வலியவரை நினைக்கவேண்டும்