நவில்தொறும் நயம் தரும் நூல் திருக்குறள். அதனால் கற்போரின் அறிவுக்கேற்ப புதிய புதிய சிந்தனைகளைத் தருகிறது. இன்றைய செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியால், பல வடிவங்களில் இணையத்தில் தரவுகளாக இந்நூல் கிடைக்கின்றது. திருக்குறளின் மூல பாடம், உரை தொடர்பான விளக்கங்களை உரை, ஒலி, காணொலி, குறுஞ்செயலி, சொல்லடைவு, தொடரடைவு வடிவிலும் பெறமுடிகிறது. திருக்குறள் ஏஐ என்ற தளம் ஒரு தேடுபொறிபோல செயல்படுகிறது. சாட் ஜி.பி.டி, ஜெமினி போன்ற செயற்கை நுண்ணறிவு உரையாடிகள் வழியாக குறள் விளக்கங்களைப் படங்களாகவும், காணொலிகளாகவும் உருவாக்கமுடிகிறது. என்றாலும் பதில்களின் துல்லியத்தன்மை, நம்பகத்தன்மை குறைவாகவே உள்ளது. இச்சூழலில் LLM என அழைக்கப்படும் பெரிய மொழி மாதிரிகளை திருக்குறளுக்கென நுட்பமாக வடிவமைத்தல் மற்றும் அவற்றுக்கான நுண்பயிற்சியளித்தல் காலத்தின் தேவையாகிறது.
திருக்குறள்- பெரிய மொழி மாதிரிகள், நுண்பயிற்சி
பொதுவான LLM மாதிரிகள், இணையத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான தரவுகளைக் கொண்டு பயிற்சி பெற்றிருக்கும். சாட் ஜிபிடி, ஜெமினி போன்ற உரையாடிகள் இலவசம், கட்டணம் என இருநிலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கேற்ப தேடல் முடிவுகளும் வேறுபடுகின்றன. ஜெமினி உரையாடி, ஜூலை 10-2025 தேதி வரையிலான தரவுகளைத் தமிழில் வைத்திருப்பதாக குறிப்பிடுகிறது. ஆனால், திருக்குறள் போன்ற ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த, ஆழமான அறவியல் கருத்துகளைக் கொண்ட ஒரு இலக்கியத்தைப் புரிந்துகொள்ளவும், அதிலிருந்து துல்லியமான பதில்களை உருவாக்கவும் இதுவரை உள்ள தரவுகள் போதுமானவை அல்ல. ”LLM-கள் மனித மொழியைப் புரிந்துகொண்டு, அதைப் பகுப்பாய்வு செய்து, உகந்த பதில்களை உருவாக்கும் திறன் கொண்டவை. இவை Pretraining மற்றும் Fine-Tuning போன்ற செயல்முறைகள் மூலம் பயிற்சி பெறுகின்றன” (என்கிறார் கணியம் தமிழரசன் (2025). அதனால் திருக்குறளுக்கென பெரிய மொழி மாதிரிகளை உருவாக்கி ஜெமினி போன்ற உரையாடிகளுக்கு நுண்பயிற்சி (Fine-tuning) செய்வதன் மூலம், இக்கருவிகள் வழியாக திருக்குறள் தொடர்பான துல்லியமான பதில்களைப் பெறமுடியும்.