பக்கங்கள்

இந்திய குடிமைப் பணித்தேர்வு - தமிழ் - 2 - (UPSC EXAM TAMIL)

செவ்வாய், 24 மார்ச், 2026

தற்புகழ்ச்சி- சான்றோர் சிந்தனை - வானொலி உரை

 

புகழ் பெற வாழவேண்டும் என்பது மனித இயல்பு.

ஈதல் இசைபட வாழ்தல், தோன்றின் புகழொடு தோன்றுக என்றெல்லாம் திருவள்ளுவர் உரைத்துள்ளார்.

என்றாலும் எல்லோரும் புகழ்பெற வாழ்வதில்லை.

புகழைத் தேடிச்செல்வோர் பலர், ஆனால் புகழ் சிலரை மட்டுமே தேடிச்செல்வதுண்டு.

அவ்வாறு புகழ் பெறாதவர்கள் தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்வதுண்டு.

தற்புகழ்ச்சி, தற்பெருமை, சுயதம்பட்டம் என பலவாறு அழைத்தாலும்.

சில நேரங்களில் இதனால் நன்மையும் பலநேரங்களில் தீமையும் விளைகிறது.

உடையது விளம்பேல் என்பது ஔவையார் வாக்கு

கற்க வேண்டிய நூல்களைக் கற்று அறிவுடையவர்கள் கண்ட அடக்கமே உண்மையான அடக்கமாகும். கற்று அறியாதவர்களோ, தங்களுடைய அறியாமையான தன்மையை மறந்துவிட்டுத் தம்மைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருப்பர். நீர் நிறைந்த குடம் தளும்பாது; குறை குடமே தளும்பும் என உரைக்கிறது பழமாழி நானூறு.

(கற்று அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்

பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார்; - தெற்ற

அறைகல் அருவி அணிமலை நாட!

நிறைகுடம் நீர்தளும்பல் இல்.  -பழமொழி நானூறு.)

பலவற்றையும் கற்றுள்ளோம் என்று உன்னை நீயே புகழ்ந்துகொள்ளாதே. எவ்வளவு பெரிய வெயில்! கையில் இருக்கும் குடை அதனை மறைக்கவில்லையா? சிலவற்றைக் கற்றவரிடமும்

நீ கற்றவற்றிற்கெல்லாம் அச்சாணி போன்றதொரு சொல் இருக்கும் என இயம்புகிறது அறநெறிச்சாரம்

(பலகற்றோம் யாமென்று தற்புகழ வேண்டா

அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையும் காக்கும்

சிலகற்றார் கண்ணும் உளவாம் பலகற்றார்க்

ச்சாணி யன்னதோர் சொல். அறநெறிச்சாரம்- 79 (முனைப்பாடியார்)

தற்புகழ்ச்சி என்பது ஒருவர், தம் இயல்பான தகுதியை மீறி, தன்னை உயர்வாகக் காட்டிக்கொள்ளும் ஒரு வீண் முயற்சி.

மயில் ஆடுவதைப் பார்த்து வான்கோழி தன்னையும் மயில் என்று எண்ணிக்கொண்டு, தன் அழகில்லாத சிறகை விரித்து ஆடினால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது, தமிழ் இலக்கணம் கல்லாத ஒருவன் சொல்லும் கவிதை என்று மயிலைப் பார்த்து ஆடிய வான்கோழியைக் காட்சிப்படுத்துகிறார் ஔவையார். மயில் இயற்கையிலேயே அழகுடையது; வான்கோழி செயற்கையாக முயன்றாலும் மயிலாக முடியாது. அதுபோல, உண்மையான தகுதி இல்லாத ஒருவன் தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது கேலிக்குரியதாகவே முடியும்.

 

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி

தானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்

பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே

கல்லாதான் கற்ற கவி. 14 ஔவையார் பாடிய வாக்குண்டாம் (மூதுரை)

உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்ற பழமொழியும் இக்கருத்தையே உரைக்கிறது. பருந்து உயரத்தில் பறப்பது அதன் இயல்பு. ஊர்க்குருவி அவ்வாறு உயரமாகப் பறந்தாலும் பருந்தாகாது, அதனால் பருந்தின் வலிமையை, இயல்பைப் பெற முடியாது. "தற்புகழ்ச்சி என்பது ஒருவரை தற்காலிகமாக உயரத்தில் வைத்திருப்பது போன்ற உணர்வைத் தரலாம், ஆனால் அது தகுதியை உயர்த்திவிடாது" உண்மையான உழைப்பு, நற்செயல்களால் மட்டுமே உண்மையான புகழ் கிடைக்கும்.

மயிலோ, வான்கோழியோ, பருந்தோ, ஊர்க்குருவியோ, மனிதனோ பிறப்பால் பெருமை இல்லை செய்யும் செயலால் தான் பெருமை தோன்றும் என்றார் திருவள்ளுவர்,

 

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்

நன்னீர் சொரிந்து வளர்த்து அற்றால்,  -–  தன்னை

வியவாமை அன்றே வியப்பு ஆவது, இன்பம்

நயவாமை அன்றே நலம்.  - நீதிநெறி விளக்கம்

எரியும் தீயில், நீர் விட்டால் முன்னிருந்த தீயும் எப்படி வளராது அவிந்தே போகுமோ, அதுபோலவே, தனக்கு மதிப்பு மிகும் என்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டால் இதற்கு முன்னிருந்த மதிப்பும் அழிந்தே போகும் என்பது நீதிநெறி விளக்கம் கூறும் கருத்து.

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க

நன்றி பயவா வினை. -439

தற்பெருமை கொள்ளாதே, தீய செயல்களைச் செய்யாதே என்று திருவள்ளுவர் அறிவுறுத்துகிறார்.

ஒரு குடம் நீரால் நிறைந்த பிறகு அதில் மேற்கொண்டு நீரை நிரப்ப முடியாது. அதுபோல, 'எனக்கு எல்லாம் தெரியும்' என்ற தற்பெருமை கொண்ட மனதில் புதிய அறிவோ, வளர்ச்சியோ சேர்வதில்லை. அதனால் தான்,

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய

சுருக்கத்து வேண்டும் உயர்வு.    -963

உயர்வில் பணிவும், வறுமையில் உயர்வும் வேண்டும்   

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு

அணியல்ல மற்றுப் பிற.- 95

பணிவுடன், இனிய சொல்லுடையவர்க்கு வேறு அணி வேண்டாம்

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை

அணியுமாம் தன்னை வியந்து.-978

பணிவதே பெருமை, தற்பெருமை கொள்வது சிறுமையின் அடையாளம் என்றார் திருவள்ளுவர்.

தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு வேறு எதிரிகளே தேவையில்லை என்றார் ஃபிராங்கிளின்

செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர்,
தம்மேல் புகழ்பிறர் பாராட்டத் தம்மேல்தாம்
வீரம்சொல் லாமையே வீழ்க களிப்பினும்
சோரப் பொதியாத வாறு.

போரில் பகைவரை வென்றபின், பிறர் தம்மைப் பாராட்டும்போது தம் வீரம் பற்றித் தான் ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட வேண்டும். பிறர் பாராட்டில் களிப்புற்றாலும் அவரது வீரத்துக்குப் பெருமையில்லை என்ற முன்றுறை அரையனார்,

தமரேயும் தம்மைப் புகழ்ந்துரைக்கும் போழ்தில்
அமரா ததனை அகற்றலே வேண்டும்
அமையாரும் வெற்ப! அணியாரே தம்மைத்
தமவேனும் கொள்ளாக் கலம். (முன்றுறையரையனார், பழமொழி நானூறு)


தனது சுற்றத்தாராகவே இருப்பினும், தன்னைப் புகழ்ந்து பேசும் பொழுதில், அவை பொருத்தமற்ற புகழுரைகளாக இருக்கும் பொழுது தடுத்துவிடல் வேண்டும். தன்னுடையதாகவே இருப்பினும் பொருந்தாத அணிகலன்களை ஒருவரும் அணிய விரும்புவதில்லை என்றுரைத்துள்ளார்.

 

தற்புகழ்ச்சி என்பது நம் கண்களை மறைக்கும் ஒரு திரை. அது நம்மிடம் இருக்கும் குறைகளைக் காணவிடாமல் செய்துவிடும்.

தற்பெருமை என்பது எதிர்மறையான குணமாகத் தெரிந்தாலும், உளவியல் அடிப்படையில், அது ஒருவரின் அக ஆற்றலைத் தூண்டும் ஒரு கருவியாகவும் அமைகிறது.

கடினமான சூழலில் ஒருவன் தனக்குள் பேசிக்கொள்ளும் "தற்புகழ்ச்சி" அவனது மூளையில் ஊக்கத்தை சுரக்கச் செய்து, சவால்களை எதிர்கொள்ளும் மன உறுதியை அளிக்கிறது. பேச்சுப்போட்டியிலோ அல்லது பெரும் கூட்டத்திலோ பேசத் தயங்கும் ஒருவன் என்னால் முடியும் நான்தான் அறிவாளி என எண்ணிகொள்வதில் தவறில்லை. அப்போதுதான் அவனுக்கு பேசுவதற்கான மன உறுதி பிறக்கும். ஆனால் தான் பேசுவதை பிறர் காதுகொடுத்து கேட்கிறார்கள் என்பதை உணர்ந்த உடன் இங்கு நாம் தான் முட்டாள் யாவரும் அறிவாளிகள் என்ற உணர்வு தோன்ற வேண்டும். அப்போது தான் அவன் பேச்சை அவர்கள் தொடர்ந்து கேட்பார்கள்.

பேச்சுப்போட்டிக்கு மட்டுமல்ல வாழ்வின் தாழ்வுமனப்பான்மை தோன்றும் சூழ்நிலைகளிலெல்லாம் தற்புகழ்ச்சி தேவைப்படுகிறது. ஒருவர் தனது முந்தைய வெற்றிகளைத் தானே புகழ்ந்து கொள்வது அல்லது நினைவுகூர்வது, தோல்வியுற்ற நேரங்களில் அவருக்கு ஒரு பிடிமானத்தைக் கொடுக்கிறது. "இவ்வளவு செய்த என்னால் இதையும் செய்ய முடியும்" என்கிற அந்த ஒரு சிறு தற்பெருமை, தாழ்வு மனப்பான்மை என்னும் மனச்சோர்வில்  விழாமல் அவரைக் காக்கிறது.

 

"தற்பெருமை என்பது அடர்ந்த காட்டில் கையில் ஏந்திய சிறுவிளக்கு போன்றது; அது காட்டின் பெரும்இருளை விரட்டாது, ஆனால் நம்மை முடக்கிப் போட்டிருக்கும் அச்சத்தை விரட்டி அடுத்த அடி எடுத்து வைக்கும் துணிவைத் தரும்."

ஒருவர் தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும் உளியாக 'தற்புகழ்ச்சி' இருக்கலாம். ஆனால், அதுவே பிறரை குத்திக் காயப்படுத்தும் ஈட்டியாக மாறிவிடக் கூடாது."

 

தற்புகழ்ச்சி தவறென்று உணர்வோம். அதே நேரம் தாழ்வு மனப்பான்மையை நீக்கும் ஊக்கம் தரும், விதையே தற்புகழ்ச்சி என்பதை நினைவில்கொள்வோம்.

 

 

 

முனைவர் இரா.குணசீலன்

தமிழ் இணைப்பேராசிரியர்

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர்

9524439008

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக