நாலடியார் (Nalatiyar) பதினெண்
கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக்
கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு
தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி
நானூறு எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு.இந்நூலைத்
தொகுத்தவர் பதுமனார் என்ற புலவர் ஆவார். ஆலும் வேலும் பல்லுக்குறுதி;
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழியில் நாலு என்பது
நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும்.
விழுமியம்
– நல்லோர் நட்பு
வாழ்க்கையின்
எளிமையான பொருட்களை உவமைகளாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம்
பெற்று விளங்குகிறது. இந்நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார்.
அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த
நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்
புற்பனிப் பற்றுவிட் டாங்கு.
171
வெயில் காயக் காயப் புல்லில் இருக்கும் பனி மறைந்துவிடும். அதுபோல, ஒருவன் தன் அறியாப் பருவத்தில் அடக்கம் இல்லாதவரோடு சேர்ந்து பழகி, நன்னெறி அல்லாதனவற்றைச் செய்த பிழைகள் எல்லாம் நல்லவர்களோடு சேர்ந்து பழகும்போது போய்விடும்.

