புதன், 27 மே, 2020

அவையஞ்சாமை - திருக்குறள்


திருக்குறள் - 73. அவையஞ்சாமை

 
வகையறிந்து வல்லமை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.                               721
நல்ல பேச்சாளர், அச்சத்தினால் தவறாகப் பேசமாட்டார்கள்
 
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.                                       722
கற்றோரும் போற்றுமாறு பேசுவோர் கற்றோருள் கற்றோராவார்
 
பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்.                                       723
போருக்கு அஞ்சாதார் எளியவர், அவையில் அஞ்சாதாரே அரியவர்
 
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல்.                                           724
தெரிந்ததைப் புரியுமாறு, கூறி தெரியாததை  கேட்டு அறிக
 
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.                                  725
நற்சபையில் அஞ்சாமல் பேச, நல்ல நூல்களைப் படி
 
வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.                                          726
கோழைக்கு வாள் எதற்கு? அவையஞ்சுவோருக்கு நூல் எதற்கு?    


பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.                                     727
அவையயஞ்சுபவனின் அறிவு பேடியின் வாளுக்குச் சமம்
 
பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.                                               728
பேச்சுத்திறன் இல்லாதவர்கள் பல கற்றாலும் பயனில்லை
 
கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.                                      729
அவையச்சம் கொள்வோர், கல்லாதாரைவிடக் கீழானவர்
 
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.                                                73
அவையச்சம் கொள்வோர், வாழ்ந்தும் பயனில்லை

 


வெஃகாமை - பிறர் பொருளை விரும்பாதே..


திருக்குறள் 18. வெஃகாமை

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.                       171
பிறா் பொருளை விரும்பியவனின் குடியும்கெட்டு குற்றமும் சேரும்

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.                       172
நடுநிலையாளர் பிறா் பொருளை விரும்பாதவராவா்

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.                     173
அற இன்பம் பெரிதென உணா்ந்தவா்  சிற்றின்பங்களை விரும்பார்

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்.                      174
புலன்களை வென்றவா் வறுமையால் பிறா் பொருளை விரும்பார்

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.                       175
பிறா் பொருளை விரும்பாமையல்லவா அறிவு   

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.                     176
அருள்வழியென்பதே நல்வழி, பொருள் வழியே தீயவழி

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.                      177
தவறாக சேர்த்த செல்வம் தேவையான நேரத்தில் பயன்படாது

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.                 178
செல்வம் குறையாமலிருக்க வழி பிறர்பொருளை விரும்பாமை

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.                      179
பிறா்பொருளை விரும்பாதவரிடமே செல்வம் தங்கும்

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.               180
ஆசை அழிவின் வழி, ஆசையின்மையே வெற்றியின் வழி

செவ்வாய், 26 மே, 2020

நிற்க அதற்குத் தக  மனித இனத்தின் கண்டுபிடிப்புகளில் தனித்துவமானது மொழியாகும். மொழியே ஒரு இனத்தின் வரலாறு, பண்பாடு, அறிவு, வளர்ச்சி என பலவற்றுக்கும் அடைப்படையாகிறது. உலக மொழிகளுள் தொன்மையானது, தொடர்ச்சியான இலக்கிய, இலக்கண மரபுடையது, காலத்திற்கேற்ப, தன்னைத் தகவமைத்துக்கொள்வது என பல்வேறு சிறப்புகளையுடைய தமிழ் மொழிக்கு, மேலும் பெருமை சேர்க்கும் தலைசிறந்த இலக்கியம் திருக்குறளாகும். உலகமே போற்றும் திருக்குறளை கற்பதும், கற்பிப்பதும் நமது கடமை மட்டுமின்றி காலத்தின் தேவையாகவும் அமைகிறது.

திருக்குறள் கற்றல்
      கற்க, கசடறக் கற்க, கற்பவை கற்க, கற்றபின் நிற்க அதற்குத் தக (391) என்று கல்வி கற்கும் நுட்பம் குறித்து வள்ளுவர் கூறும் சிந்தனையை திருக்குறள் கற்கும் அடிப்படை நுட்பமாகவும் கொள்ள இயலும். வள்ளுவர் கூறும் நுட்பத்தை ஆழ்ந்து நோக்கினால், 1. அறிதல்  2. தெரிதல்  3. தெளிதல் 4. நிற்க அதற்குத் தக ஆகிய கருத்துக்களைக் கற்றல், கற்பித்தல் சார்ந்த நுட்பங்களாகவே காணமுடிகிறது.

திங்கள், 25 மே, 2020

கூகுளுக்கு என்னை அறிமுகப்படுத்திய வலைப்பதிவுதமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
வேர்களைத்தேடி என்ற இந்த வலைப்பதிவை நான் தொடங்கி 12 ஆண்டுகளாகிவிட்டன. செவ்வாய் கிழமை 22 தேதி, ஏப்ரல், 2008 அன்று நான் இந்த வலைப்பதிவில் மடலின் படிநிலைகள் என்ற முதல் பதிவை எழுதினேன். இன்று எனது 1352 வது பதிவை வெளியிடுகிறேன். இந்தப் பதிவு கூகுளின் அட்சென்சு ஒப்புதலுடன் வருகிறது என்ற மகிழ்சியையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 

       2008 ல் நான் பதிவு எழுதத் தொடங்கிய காலத்தில் எனது தமிழ் ஆய்வுக்கட்டுரைகளை மட்டும் வெளியிட்டேன். அதற்குக் கிடைத்த மறுமொழிகளால் தொடர்ந்து சங்க இலக்கியம் சார்ந்தும், கணினி நுட்பங்கள் சார்ந்தும் எழுதினேன். என்னை அறியாமல் எனது பதிவுளுக்கு நான் வழங்கிய தலைப்புகளும், குறிச்சொற்களும் என்னை கூகுளுக்கு அறிமுகப்படுத்தின. இன்று முனைவர் இரா.குணசீலன், வேர்களைத்தேடி, https://www.gunathamizh.com/, https://www.gunathamizh.blogspot.in/ என எப்படித் தேடினாலும் என்னை கூகுள் அடையாளம் காட்டும்.

சனி, 23 மே, 2020

மூடுள் மின் வகுப்பறை - 2 I மாணவர் சேர்க்கை I பாடநெறி உருவாக்கம் I திட்டக...மூடுள் மின் வகுப்பறையில் மாணவர்கள் சேர்க்கை, பாட நெறி உருவாக்கம், திட்டக்கட்டுரை வழங்குதல் குறித்த விளக்கப்பதிவாக இக்காணொளி பகிரப்படுகிறது.

வெள்ளி, 22 மே, 2020

வாத்தியார் பிள்ளை மக்கு!


வைத்தியன் பிள்ளை நோயாளி, வாத்தியார் பிள்ளை மக்கு என்ற பழமொழியைப் பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். நான் வாத்தியார் பிள்ளை என்பதால் இந்தப் பழமொழி என்னை அதிகமாகவே சிந்திக்கவைத்திருக்கிறது. எனது அப்பா பள்ளி ஆசிரியராக இருந்தார், நான் கல்லூரியில் ஆசிரியராக உள்ளேன். என் மகள் வகுப்பில் முதன்மையான மாணவியாகவே படித்துவருகிறாள். அதனால் இந்தப் பழமொழியைக் கேட்கும்போதெல்லாம் மனம் ஆழ்ந்த சிந்தனைக்குள்ளாகிறது.
இது போன்ற பழமொழிகள் சொல்லப்பட்ட காலம் அதன் நோக்கம், காலப்போக்கில் அதை மக்கள் தவறாகப் புரிந்துகொள்வது என்பது இயற்கையே.. 
வாக்குக் கற்றவன் வாத்தியார் வேலைக்குப் போவான், திருடனின் போக்குக் கற்றவன் போலீசு வேலைக்குப் போவான் என்பது வக்கத்தவன் வாத்தியார் வேலைக்குப் போவான், போக்கத்தவன் போலீசு வேலைக்குப் போவான் என்று மாறியது போல, இந்தப் பழமொழியும் சொல்லபட்ட நோக்கமும் வழங்கப்படும் பொருளும் மாறியிருக்கலாம். எனது பார்வையில் இந்தப் பழமொழியின் இன்றைய பொருளையும் எனது கருத்தையும் பதிவுசெய்கிறேன்.