நாலடியார் (Nalatiyar) பதினெண்
கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக்
கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு
தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி
நானூறு எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு.இந்நூலைத்
தொகுத்தவர் பதுமனார் என்ற புலவர் ஆவார். ஆலும் வேலும் பல்லுக்குறுதி;
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழியில் நாலு என்பது
நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும்.
விழுமியம்
– நல்லோர் நட்பு
வாழ்க்கையின்
எளிமையான பொருட்களை உவமைகளாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம்
பெற்று விளங்குகிறது. இந்நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார்.
அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த
நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்
புற்பனிப் பற்றுவிட் டாங்கு.
171
வெயில் காயக் காயப் புல்லில் இருக்கும் பனி மறைந்துவிடும். அதுபோல, ஒருவன் தன் அறியாப் பருவத்தில் அடக்கம் இல்லாதவரோடு சேர்ந்து பழகி, நன்னெறி அல்லாதனவற்றைச் செய்த பிழைகள் எல்லாம் நல்லவர்களோடு சேர்ந்து பழகும்போது போய்விடும்.
அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்:
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.
172
அறநெறி இன்னதெனத் தெரிந்துகொள்ளுங்கள். உயிரைக்
கொண்டுசெல்லும் எமனுக்குப் பயப்படுங்கள். பிறர் கடுஞ்சொல் சொன்னால் பொறுத்துக்
கொள்ளுங்கள். பிறர் தனக்குச் செய்யும் வஞ்சகச் செயல்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.செயலில்
தீமை செய்பவர் நட்பினை வெறுத்து ஒதுக்குங்கள்.
எப்போதும் பண்பில் பெரியவர் வாயிலிருந்து வரும் சொற்களைக் கேட்டுப்
பின்பற்றுங்கள்.
ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; - ஓருங்
குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நலமாட்சி நல்லாரைச்
சார்ந்து. 175
ஊரில் ஓடும் சாய்கடை (சாக்கடை) நீர் மிகப் பெருமளவில்
ஓடும் ஆற்று நீரில் கலக்கும்போது அதன் பெயர் "சாய்க்கடை"என்பது மாறித் "தீர்த்தம்"
என்று ஆகிவிடும். அதுபோலக், குலத்தால் சிறப்பு இல்லாதவரும்
நல்ல மாண்பு மிக்க நல்லவரைச் சேர்ந்து குன்று போல் உயர்ந்து செம்மாந்து நல்லவர்
என்று நிற்பர்.
ஒண்கதிர் வான்மதியும் சேர்தலால் ஓங்கிய
அங்கண் விசும்பின் முயலும் தொழுப்படூஉம்;
குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்,
குன்றன்னார் கேண்மை கொளின்.
176
நிலாவில் முயல் போன்ற நிழல் களங்கம் இருக்கிறது. நிலாவைத்
தொழுவோர் அந்த முயல் களங்கத்தையும் தொழுவர்.அதுபோல, தன்னளவில் சீர்மை குன்றியவர் ஆனாலும்
சீர்மையில் குன்று போன்றவர் நட்பினைப் பெறுவாரேயானால், அவர்
சிறப்பினைத் தாமும் பெறுவர்.
கொல்லை யிரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவ ருழுபடைக்கு;
மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார்மேற்
செல்லாவாம் செற்றார் சினம்.
178
புனத்தில் நிற்கும், மரம் வெட்டிய குத்துக் கட்டைக்கு "குற்றி" என்று பெயர். உழவர் நிலத்ததை உழும்போது அந்தக் குற்றியின்
ஓரமாக முளைத்திருக்கும் புல்லானது உழும் மாடு விலகிச் செல்வதால் உழவரின் கலப்பை
நாவில் அகப்படாமல் தப்பித்துக்கொள்ளும். அதுபோல, மென்மையானவரே
ஆயினும் நல்லவரைச் சேர்ந்திருப்பவர்களின் மேல் மென்மையானவர் மீது கொண்ட சினம்
செல்லுபடி ஆகாது.
நிலநலத்தால் நந்திய நெல்லேயோல் தத்தங்
குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; - கலநலத்தைத்
தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை
தீயினஞ் சேரக் கெடும். 179
நில வளத்தால் நெல் செழிக்கும். அதுபோலச் சான்றோர் தம்
குலத்தின் நலத்தால் தோன்றுவர். கடலில் செல்லும் கப்பலின் நலத்தைச் சூறாவளி
தாக்கிச் சிதைக்கும். அதுபோலத் தீயவர் இனத்தோடு சேர்ந்தால் சான்றாண்மை
கெட்டுப்போகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக