கற்றலும் கடைப்பிடித்தலும், வாழ்வில் உயர்வதற்கான திறவுகோல்களாகும். கல்வியின் நோக்கம்,
தேர்வில் மதிப்பெண் பெறுவது, பட்டம் பெறுவதுமட்டும் அல்ல.
கற்ற கல்வியானது ஒரு மனிதனின் ஒழுக்கத்திலும்,
அவன் எடுக்கும் முடிவுகளிலும் பிரதிபலிக்க வேண்டும்.
திருவள்ளுவர்,
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. (391) என்றார்.
எதையும் தெளிவாகக் கற்க வேண்டும். அதோடு நின்றுவிடக் கூடாது;
கற்ற அறநெறிகளின் வழியில், வாழ்க்கை அமைய வேண்டும். அறிவு என்பது வழிகாட்டும் ஒளி என்றால்,
அந்த ஒளியில் நடப்பதே உண்மையான அறம். எல்லா நேரமும் கற்ற கல்வியை வாழ்க்கையில் கடைபிடிக்க இயலுமா
என்று சிந்தித்த வள்ளுவர் நிற்க அதற்குத் தக என்றார். சூழல்களுக்குத் தக சரியாக நிற்பதே
அறிவின் வெளிப்பாடு.
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. (297)
உண்மை பேசுவது அறம் செய்வதைவிட உயர்ந்தது என்று சொன்ன வள்ளுவர்,
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். (292)
நன்மைக்காகப் பேசும் பொய்களும் வாய்மை எனக் கருதப்படும் என்றார். அதனால் நாம் வாழ்வில் எந்த சூழலில் உண்மை பேசவேண்டும், எந்த சூழலில் பொய்பேசவேண்டும் என்று சிந்தித்துப் பேசவேண்டும்.
இதே கருத்தை இன்னும் சுருக்கமாகவும்,
வலிமையாகவும் கற்றது ஒழுகு
என்றார் பாரதியார்.
"கற்றதுவுங் கற்றொருபால் நிற்பக் கடைப்பிடியும் மற்றொருபால்
போக..."
நாம் கற்ற கல்வியானது ஒருபுறம் நம் அறிவை வளர்த்துக் கொண்டிருக்க,
நாம் கற்றுக்கொண்ட நல்லொழுக்கங்களைச் செயல்பாட்டில் (Practice)
கொண்டுவருவது மறுபுறம் நிகழ வேண்டும் என அறிவுத்துகிறது அறநெறிச்சாரம்,
கற்றதோடு அதைக் 'கடைப்பிடித்தல்' (Action) சமமாகச் செல்லும்போதுதான் ஒரு மனிதன் முழுமையடைகிறான்.
நல்ல கல்வி என்பது உடல், உள்ளம், ஆன்மா ஆகிய மூன்றையும் ஒருமித்து வளர்க்கவேண்டும்
என்றார் காந்தியடிகள். ஆம் இம்மூன்றையும் வளர்க்கும் ஆற்றல் கல்விக்கு
மட்டுமே உண்டு. அதே நேரம், கற்க கற்க நாம் அறிவாளியாகிறோம் என்ற எண்ணம் தலைதூக்கக்கூடாது.
முற்றும்
உணர்ந்தவர் இல்லை முழுவதூஉங்
கற்றனம்
என்று களியற்க –14
என உரைத்துள்ளது நீதிநெறி விளக்கம்.
ஆளும் வளரணும் அறிவும் வளரணும்
அதுதான் வளர்ச்சி என்றார் பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம்.
அறிவு வளர்ச்சி என்பது நம் சொல்லிலும் செயலிலும்
வெளிப்படுகிறது. நாம் முழுமையாகக் கற்றுவிட்டோம் என்பது அறியாமை. அதனால்
கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல் – 724
அறிந்ததைக் கூறி, அறியாததை அறிந்துகொள்க,
அரியகற்று ஆசற்றார்
கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.- 503
அரியவை கற்ற, குற்றமற்றவரிடமும்
அறியாமை இருக்கும்,
கற்றாருள் கற்றார் என்படுவர் கற்றார் முன்
கற்றச் செலச் சொல்லுவார் – 722
கற்றோர் மனதில் பதியுமாறு பேசுவோர் கற்றோருள் கற்றோர்
என்படுவார் என்று கற்றோரின் இயல்புகளாக உரைத்தார் திருவள்ளுவர்,
தம்மின்
மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா
பெரிதென் றகமகிழ்க - தம்மினுங்
கற்றாரை
நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
எற்றே
இவர்க்குநாம் என்று 15-நீதிநெறி விளக்கம்-
குமரகுருபரர்
நம்மை
விட செல்வத்தில் குறைந்து உள்ளவர்களைப் பார்க்கும் போது நாம்
போதுமான செல்வம் பெற்றுள்ளோம் என உள்ளத்திலே மகிழ்ச்சி கொள்ள
வேண்டும். நம்மைவிட கற்றவர்களைக் காணும் போது “நாம் இன்னும் அதிகமாகக்
கற்கவேண்டும், இவர் இவ்வளவு படித்துள்ளாரே. வாழ்க்கையை வீணாக்காமல் படித்து அறிவைப்
பெருக்கிக்கொள்ள வேண்டும்” என்று நாம் எண்ண வேண்டும் என்பார் குமரகுருபரர்.
நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.-783
கற்றல் என்பது கல்வி நிலையங்களிலும், நூலகத்திலும் மட்டும் நிகழ்வதல்ல
கற்றறிந்த, பண்பறிந்த சான்றோரிடமும் நாளும் கற்கலாம். நல்ல நூல்கள், ஒவ்வொரு முறை படிக்கும்போதும்
புதிய புதிய சிந்தனைகளைத்தரும் அதுபோலத்தான் நல்ல பண்புடையவர்களை ஒவ்வொருமுறை சந்திக்கும்போது
அவர்களிடமிருந்த பல நற்பண்புகளைக் கற்கலாம் என்பார் திருவள்ளுவர்.
நாம் கற்ற கல்வியும், வளர்த்த
அறிவும், கடைப்பிடிக்கும்
ஒழுக்கமும் எங்கே போய் முடிய வேண்டும் என்பதை,
பகுத்துஉண்டு பல்உயிர்
ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம்
தலை.(322)
நூல்களில் தொகுத்துரைக்கப்பட்ட அறக்கருத்துகளைவிட
மேலானது பகிர்ந்து உண்டு வாழ்தல் என்றார் திருவள்ளுவர்.
கற்றதை வாழ்க்கையில் பின்பற்றாதபோதும், தவறான வழிகளில்
நாம் முதல் அடி எடுத்துவைக்கும்போதும் இந்தச் சமூகம் நம்மைப் பார்த்துக்கேட்கும் முதல்
கேள்வி, நீ படித்த படிப்பு உனக்கு இதைத்தான் சொல்லிக்கொடுத்ததா? என்பதே. இந்தச் சமூகம்
இந்தக் கேள்வியைக் கேட்கும் முன் நம் மனமே நம்மைக் கேட்கும்.
தன்நெஞ்சு அறிவது
பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச்
சுடும். -293
அதனால், பல்வேறு படிப்புகளைப் படித்தவராயினும், பட்டங்கள்
பெற்றவராயினும் ஒழுக்கமானவர்கள் வாழும் வழியிலே வாழவேண்டும். இதனை
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.(140) என்றார் திருவள்ளுவர்.
கல்வி கற்பதால் கிடைக்கும் அறிவு, நாம் எந்த முடிவெடுக்கிறோம்
என்பதில் வெளிப்படுகிறது. சிலநேரம் அறிவு சொல்வதையும் சில நேரம் உணர்வு சொல்வதையும்
சூழல்களுக்குத் தக, கேட்பதே சரியாக அமையும்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தம்நோய்போல் போற்றாக் கடை. 315
பிறர் துன்பத்தையும் தன்துன்பமாக நினைப்பதே அறிவின் பயன் என்று சொன்ன திருவள்ளுவர்,
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு. (578
) என்றார்
கடமைக்கும், அன்புக்கும் இடைவெளி அறிந்தவர் உலகை வெல்வர் என்பது இக்குறளின் பொருள். கடமைக்காக அன்பும், அன்புக்காகக்
கடமையும் பாதிக்கப்படாமல் வாழ்வது நல்ல கல்வியின் பயனாகிறது.
அறிவை எங்கு பயன்படுத்தவேண்டும்,
உணர்வை எங்கு பயன்படுத்தவேண்டும் என்று தெளிந்த முடிவெடுக்கும் திறன் கற்றதைப் பின்பற்றும்போது
வெளிப்படுகிறது. கல்வி நல்ல ஒழுக்கமாகவும், பிறர் துன்பத்தை உணர்வதாகவும் மாறும்போது
மாநிலம் பயன்பெறுகிறது.
எப்பிறப் பாயினும் ஏமாப் பொருவற்கு
மக்கட் பிறப்பிற்
பிறிதில்லை-அப்பிறப்பில்
கற்றலும் கற்றவை
கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின், அறநெறிச்சாரம் -72
கற்றலும், கற்றவற்றைக் கேட்டலும், கேட்ட வழியில் வாழ்ந்து நிற்றலும் வாய்க்கப் பெற்றால், மக்கள் பிறப்பிலும் சிறந்தது வேறொன்றும் இல்லை என உரைக்கிறது அறநெறிச்சரம்.
அறிஞர்க்
கழகு கற்றுணர்ந் தடங்கல் என்றார் அதிவீர
ராம பாண்டியர்.
அறிவுடையோர்க்கு அழகாவது நூல்களைக்
கற்றுணர்ந்து அடங்கியிருத்தல்.
நூல் எவ்வளவுதான் சிறப்புடையதாக
இருந்தாலும். அச்சடித்த எழுத்துக்களால் எந்தப் பயன் ஏதுமில்லை. நடைமுறைப்படுத்தினால்
தான் பயன்!
வருந்தித்தாம் கற்றன ஓம்பாது, மற்றும்
பரிந்துசில கற்பான் தொடங்கல் - கருந்தனம்
கைத்தலத்த உய்த்துச் சொரிந்திட்டு, அரிப்புஅரித்து
ஆங்குஎய்த்துப் பொருள்செய் திடல் (8)
ஒருவன் தான் கற்ற கல்வியைப்
பயன்படுத்தாமல் மேலும் கற்கத் தொடங்குவது, தனது கையில் உள்ள
செல்வத்தை மண்ணில் சிதறிவிட்டு, மண்ணிலிருந்து எடுத்து, சல்லடையில் போட்டு அரித்து எடுப்பதைப்
போன்றது என்று உரைப்பார் குமரகுருபரர்.
கற்றுப் பிறர்க்குரைத்துத் தாநில்லார் வாய்ப்படூஉம்
வெற்றுரைக் குண்டோர் வலியுடைமை - சொற்றநீர்
நில்லாத தென்னென்று நாணுறைப்ப நேர்ந்தொருவன்
சொல்லாமே சூழ்ந்து சொலல். 20
கற்பார், பிறருக்கு
எடுத்துச் சொல்லுவார்,
கற்றபடியோ, சொல்கிறபடியோ
தாம் நிற்கமாட்டார். இவர் வாயிலிருந்து வரும் வெற்றுரைக்கும் ஒரு வலிமை உண்டு.
“சொன்னபடி நீ நிற்கவில்லையே” என்று அவரது நாணம் அவரைக் கேட்டுக்கொண்டே இருக்கும்.
இதனை வேறொருவன் சொல்லாமலேயே அவருக்கு அவர் நாணம் சொல்லும். இதுதான் அவர்
சொல்லுக்கு வலிமை என கற்றதை வாழ்க்கையில் பின்பற்றாதவர்களைக் சுட்டிக்காட்டுகிறார்
குமரகுருபரர்.
இதே கருத்தை திருவள்ளுவர்,
வஞ்ச மனத்தான்
படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே
நகும். 271
வஞ்சகரை அவர்
உடலில் கலந்த ஐம்பூதங்களும் தம்முள் நகும் என்றார்.
உண்மையான கல்வி ஒருவனுக்குத்
தன்னம்பிக்கையோடு சேர்த்துத் தலைக்கனம் இல்லாத 'அடக்கத்தையும்' தர வேண்டும்.
நாம் கற்கவில்லை, நாம் கற்றல் என்று அழைப்பது நினைவுகூறும் செயல்
மட்டுமே என்றார் பிளேட்டோ. ஆம் நாம் கற்றவை மனதில் நிற்கவேண்டும். தக்க நேரத்தில் அதைப்
பின்பற்றவேண்டும் அப்போதுதான் கற்ற கல்வி முழுமையாகிறது.
கற்றல் என்பது அறிவாகவும், அறிவு செயலாகவும், செயல், அனுபவமாகவும்,
அனுபவம் பிறருக்கு முன்மாதிரியாகவும் மாறவேண்டும்.
நிறையப் புத்தகங்களைப் படிப்பது மட்டும் வெற்றியல்ல. படித்தவற்றுள் நாம் எதைப் பின்பற்றுகிறோம் என்பதே நம்மை ஒரு வெற்றியாளராகவும்,
மனிதராகவும் காட்டும் என்பதை உணர்வோம்.
கற்றபடி நிற்போம் வாழ்வாங்கு வாழ்வோம்.
முனைவர்
இரா.குணசீலன்
தமிழ்
இணைப்பேராசிரியர்
பி.எஸ்.ஜி
கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்
9524439008

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக