வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 21 செப்டம்பர், 2026

எல்லை - சான்றோர் சிந்தனை - வானொலி உரை

  


எல்லைகளற்றது வானம். ஆனால் நிலம் மனிதர்களால் எல்லைகளாகப் பகுக்கப்பட்டது. நிலங்களில் மட்டுமல்ல மனித மனங்களிலும் எல்லைக்கோடுகள் உண்டு. தெரிந்தே எல்லைகளை மீறுவோர் பலர். தெரியாமல் எல்லைகளைத் தாண்டுவோர் சிலர். எது எல்லை என்றே தெரியாதவர்கள் பலர். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கணியன் பூங்குன்றனார் சொன்னது எல்லைகளைக் கடந்த உயரிய சிந்தனை.

 எல்லையற்ற ஆற்றல், எல்லையற்ற உற்சாகம், எல்லையற்ற துணிச்சல் மற்றும் எல்லையற்ற பொறுமையுடன் முன்னேறுங்கள் - அப்போதுதான் மாபெரும் செயல்களைச் சாதிக்க முடியும் என்றார் விவேகானந்தர், மாபெரும் செயல்களை சாதிக்கவிரும்புவோர் எது எல்லை என்பதை அறிவதும், எல்லைகளை எப்போது தாண்டலாம் எந்த எல்லைகளைத் தாண்டவே கூடாது, எந்த எல்லைக்குள் வாழ்வது பெருமை என்பதை உணர்ந்திருப்பார்கள்.


 நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், கயிறு இழுத்தல் என எந்தப் போட்டிகளை எடுத்துக்கொண்டாலும் எல்லைக் கோடுகளை மிக கவனமாக உணர்ந்தவர்களே வெற்றிபெறுவார்கள். அதுபோல வாழ்விலும் எல்லைகளை உணர்ந்தவர்களே வெற்றி பெறுவார்கள்.

 சாலைகளில் பயணிப்பவர்கள் தாம் செல்லும் வாகனங்களுக்கு ஏற்ப எவ்வளவு வேகம் செல்லவேண்டும் என்ற சாலை விதிமுறைகளை உணர்ந்து பயணித்தால் பாதுகாப்பாக சென்று வரலாம். பாதுகாப்பு எல்லைகளைக் கடந்து விரைவாக வாகனங்களை இயக்கும்போது விபத்து ஏற்படுகிறது. அதுபோலத்தான் குடும்ப உறவுகள், நண்பர்கள், பணியாற்றும் இடம், சமுதாயம் என பல சூழல்களில் தமது எல்லைகளைப் பலரும் உணர்வதில்லை. விருந்தாக இருந்தாலும் மருந்தாக இருந்தாலும் மூன்று நாட்கள் என்பது  மதிப்பின் எல்லையைக் காட்டுகிறது.

மனதின் எல்லைகளைத் தமிழ் இலக்கியங்கள் நுட்பமாகப் பதிவுசெய்துள்ளன.

அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவுடைமை அல்ல, அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி விலகி நடப்பதே அறிவுடையவர் செயல். பொய், களவு, சூது போன்ற தீய செயல்கள் செய்வோர் எல்லைகளைத் தாண்டியவர்களாவர். தன்னைப் பெற்ற தாயின் பசித் துன்பத்தைக் கண்ட போதிலும், மேலோர் பழிக்கும் ஒழுக்கம் என்ற எல்லைகளைத் தாண்டவே கூடாது என உரைத்தார் திருவள்ளுவர். மேலும்,

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின். (475)

மயிலிறகானாலும் அளவு மிகுந்தால் வண்டியின் அச்சு முறியும். என சுமையின் எல்லை,

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை

போகாறு அகலாக் கடை.(478)

வருமானம் அளவில் சிறிதென்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடில்லை என வரவு செலவின் எல்லை,

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல

இல்லாகித் தோன்றாக் கெடும்.  (479)

அளவறியாதன் வாழ்க்கை வளர்வதுபோல தேய்ந்து அழியும் என்று எல்லைக்குள் வாழ்வதன் தேவையை உரைத்தார்.

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க

இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.(691)

நெருப்பில் குளிர்காய்வதுபோல் அரசனிடம் அணுகாது, அகலாது பழகு என அதிகாரத்தின் எல்லை.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்

சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.(127)

யாராக இருந்தாலும் நாவைக் காக்க வேண்டும். எல்லை கடந்த வார்த்தைகளால் இழுக்கு வரும் என வார்த்தைகளின் எல்லை,

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று.  (941)

உணவின் தன்மை அறிந்து அளவுடன் உண்டால் நோய்வராது என்று உணவின் தன்மைகளின் எல்லை,

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. (943)

நீண்டகாலம் வாழ, அளவுடன் உண்பதே மிகச்சிறந்த வழி என நாம் எடுத்துக்கொள்ளும் உணவின் எல்லையே உடல் நலத்தின் எல்லை எனவும் உரைத்துள்ளார்.

திருவள்ளுவரின் எல்லை, குறித்த சிந்தனைகளை ஆழ்ந்து நோக்கினால் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள், எல்லைகளை நன்கறிந்தவர்கள் என்பது புலனாகும்.

 

இன்னா செய்தாருக்கு இன்னா செய்வது மனித இயல்பு!

இன்னா செய்தாருக்கு இனிய செய்வது மாமனிதர்களின் இயல்பு! பொறுமையின், சகிப்புத்தன்மையின், அறத்தின் எல்லைகளை அறிந்தவர்களால்தான் இவ்வாறு வாழமுடியும்.

 

மாவளத்தான் என்ற சோழ அரசனுடன் தாமப்பல் கண்ணன் என்ற புலவர் வட்டு விளையாடியதாக புறநானூற்றில் ஒரு பாடல் உண்டு.

 

மாவளத்தான் வெல்லும் நிலையில், புலவர் விளையாட்டாக ஆடுவதற்கென அமைந்த காய் ஒன்றினை மறைத்தார். அதை அறிந்த மாவளத்தான், கோபம் கொண்டான், வட்டினை சட்டெனப் புலவர் மேல் எறிந்தான். அதற்குப் புலவர்,

சோழமன்னனே! மாவளத்தானே! ன்குலப்பெருமையை மறந்தாயே! புறாவுக்காகத் தன் இன்னுயிரையும் ஈயத் துணிந்த சிபி எனும் பெரியோன் வழி வந்தவனே! சோழ மரபில் வந்தவர்கள் இவ்வாறு புலவர்களிடம் கோபம் கொள்ளமாட்டார்கள் என்று புலவர், இடித்துக்கூறினார். தவறை உணர்ந்து மனம் வருந்தி, வாய்மூடி இருந்தான் மாவளத்தான். “உனக்கு, நான் செய்த பிழையைப் பொருட்படுத்தாமல், நீ பெரும் தவறு செய்தது போலப் பெரிதும் நாணினாய். தமக்குப் பிழை செய்தோரைப் பொறுத்துக்கொள்ளும் செம்மாப்பு  சோழர் குடிக்கு எளிது என்பதைக் கண்ணாரக் காட்டிய நீ,  நீண்டகாலம் வாழ்வாயாக என்று வாழ்த்தினார்.

இப்பாடலில் விளையாட்டாகவே இருந்தாலும் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவமில்லாத நிலையில் அறம் என்ற எல்லை மீறி காயைப் புலவர் மறைத்து வைத்தார். விளையாட்டு என்பதை மறந்த மாவளத்தான் கோபம் என்ற எல்லையை மீறி, புலவர் மீது வட்டினை எறிந்தான். ஆனால், புலவர், அரசனின் அதிகார எல்லைக்கு அடிபணியாமல் பணிவு என்ற எல்லை மீறி, மன்னா நீ செய்தது தவறு என சுட்டிக்காட்டினார். தன்னிடம் அதிகாரம் இருந்தும் இவ்வாறு எதிர்த்துப் பேசிய புலவர் மீது கோபம் கொள்ளாமல் தவறை உணர்ந்த மாவளத்தான் அறம் என்ற எல்லைக்குள் நின்றான்.

மனித மனம் எவ்வாறு ஒவ்வொரு மணித்துளிகளிலும் பல உணர்வு எல்லைகளைக் கடக்கிறது என்பதற்கு இப்பாடல் ஒரு சான்றாகிறது. அதனால்

நாம், எந்த எல்லையில் நிற்கவேண்டும் என்ற சிந்தனை யாவருக்கும் தேவை.

 

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.   (72) என்ற குறள் அன்புடையவர்களின் பொது நல எல்லையையும், அன்பில்லாதவர்களின் சுயநல எல்லையையும் குறிப்பிடுகிறது.

 

அன்பில்லாதவர்களே நில எல்லைகளை விரிவுபடுத்திக்கொள்வார்கள். அறிவுடையவர்கள், கொடுத்துச் சேர்க்கும் புகழே அழியாத எல்லை என்பதை உணர்ந்திருப்பார்கள்." புறநானூற்றில், கபிலர் பாடல் ஒன்று,

போரிட்டு வெல்லும் இயல்புடைய மூவேந்தரும் ஒன்று கூடிப் போர் செய்தாலும் பறம்பு மலையை உங்களால் பெறமுடியாது. ஏனென்றால் பறம்பு நாட்டில் உள்ள முந்நூறு ஊர்களையும் பாரியிடம் பரிசிலர்கள் பெற்றுவிட்டனர். ஒருவேளை நீங்கள் பாடிக் கொண்டு பரிசிலராக வந்தால் நீங்கள் பெறுவதற்காக யாமும், பாரியும் உள்ளோம். மேலும் மலையும் உள்ளது என்றார் கபிலர்.

 "படை பலத்தால் நில எல்லையை விரிவுபடுத்த நினைத்த மூவேந்தர்களுக்கு முன்,  கொடையால் தன் புகழ் எல்லையை விரிவுபடுத்தியவன் பாரி!

நில எல்லைகளை விரிவுபடுத்துவதா? புகழ் எல்லைகளை விரிவுபடுத்துவதா? எது சிறந்தது என்று சிந்திப்போம்.

அறிவின் எல்லைகளை, அன்பின் எல்லைகளை, புகழின் எல்லைகளை, இலக்குகளின் எல்லைகளை விரிவுபடுத்துவோம்..

எல்லை என்பது நம்மை அடைத்து வைக்கும் சிறைச்சாலை அல்ல;

நம்மைப் பாதுகாக்கும் அரண் என்பதை உணர்ந்து சான்றோர் காட்டிய  தன்மானம்,  ஒழுக்கம் என்னும் எல்லைகளுக்குள் வாழப் பழகுவோம். உறவுகளிடமும் நண்பர்களிடமும் பணிபுரியும் இடங்களிலும் நமது எல்லை எது என உணர்ந்து, "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்ற முன்னோர் அனுபவ மொழியை நினைவில் கொள்வோம்.

எல்லைகளுக்குள் வாழ்தல் என்பது ஒழுக்கத்தையும் நெறிமுறையையும் கற்றுத் தருகிறது; எல்லைகளைக் கடந்து வாழ்தல் என்பது வளர்ச்சியையும் சாதனையும் சாத்தியமாக்குகிறது. எது எல்லை என்பதை உணர்ந்தவர்கள்தான் எல்லைகளைக் கடந்தும் சாதனை செய்யமுடியும் என்பதை உணர்ந்து, எது எல்லை என்பதை அறிந்து வாழ்வோம்.

 

முனைவர் இரா.குணசீலன்

தமிழ் இணைப்பேராசிரியர்

பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி

கோயம்புத்தூர்

9524439008

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக