வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 12 செப்டம்பர், 2011

சந்தன மரம்!


காடு நகரமானால்
நாடு நரகமாகும்!

பூமியின்
பச்சை இதயம் – மரங்கள்!


என எழுதிவைப்பதோடு சரி!

ஒரு மரத்தை வெட்டும்போது ஒரு செடியை நடவேண்டும் என்பதை வழக்கத்தில் கொண்டிருக்கிறோமா..?

நம் பார்வையி்ல் மரங்கள் என்பவை பணத்தின் மாற்று வடிவம்!

பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைபுற்ற வாழ்வு வாழ்ந்தனர் என்பதற்கு சங்கப்பாடல்களே சான்றுகளாக அமைகின்றன.

1.சகோதரியான புன்னை மரம்.

தலைவனிடம் தோழி கூறுவாள்........

நீயோ தலைவியைச் சந்தித்து மகிழ்வதற்காக இங்கு வந்திருக்கிறாய். ஆனால் தலைவியோ இவ்விடத்தில் உன்னுடன் மகிழ்ந்து உறவாட விரும்பவில்லை. ஏனென்றால்....

யாரவது தம் தங்கையின் முன் காதலித்து மகிழ்வார்களா?
ஆம்... நீ நிற்கும் இந்த புன்னை மரம் எங்களுக்குத் தங்கை உறவாகும். அதனால் நீ வேறு மர நிழல் உண்டா என்று பார் என்கிறாள்....!


2. அகநானூற்றுத் தலைவன் தன் அஃறிணை உயிர்களும் கூட தன்னால் பாதிக்கப்படக் கூடாது என்று எண்ணுகிறான். (தலைவியைக் காணப் பெரும் ஆவலுடன் வினை முற்றித்
திரும்புகிறான். புறப்படுமுன் தேர் மணியினது நாக்கு ஒலிக்காதபடி அதைக் கட்டுகிறான்.ஏனென்றால், வண்டுகள் தம் துணையுடன் கூடி மகிழும் போது,
தேர் மணி ஓசை அவைகளுக்கு அச்சத்தைக் கொடுத்துப் பிரித்து விடக் கூடாது என்பற்காகவே அவ்வாறு செய்தான்
இதனை..

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த
தாதுஉண் பறவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்
(அகநானூறு - 4 : 10-12)

என்ற அகப்பாடல் உணர்த்தும்.)

இதோ இங்கொரு தலைவி தன்னை சந்தன மரத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்கிறாள்..

தலைவனைப் பிரிந்த தலைவி உடல்மெலிவுற்றாள். அதனால் தலைவியின் நிலையைத் தலைவனுக்குத் தூதனுப்ப எண்ணினாள் தோழி. அதற்குத் தலைவி, தோழியிடம் தன் நிலையை சந்தன மரத்தோடு ஒப்பிட்டு உரைக்கிறாள்.

என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக
அன்னவாக இனையல் – தோழி! – யாம்
இன்னமாக நத் துறந்தோர் நட்பு எவன்?
மரல் நார் உடுக்கை மலை உறை குறவர்
அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம்
வறனுற்று ஆர முருக்கி, பையென
மரம் வறிதாகச் சோர்ந்து உக்காங்கு, என்
அறிவும் உள்ளமும் அவர் வயின் சென்றென
வறிதால் இகுளை! என் யாக்கை இனி அவர்
வரினும் நோய் மருந்து அல்லர் வாராது
அவணர் ஆகுக, காதலர்! இவண் நம்
காமம் படர் அட வருந்திய
நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே!

நற்றிணை – 64
குறிஞ்சி
உலோச்சனார்

கூற்று – பிரிவிடைத் தலைவியது அருமை கண்டு தூதுவிடக் கருதிய தோழிக்குத் தலைவி சொல்லியது.

தோழி! நம் காதலர் எத்தகு சிறப்புடையவர் ஆயினும் அவரிடத்துத் தூதுவிடக் கருதுவதனை நீ விட்டுவிடுக!

அவர் நம்மைக் கைவிட்டார் என்பதற்காக வருந்தாதே!

நாம் இவ்வாறு துன்பத்தில் வருந்துமாறு நம்மைத் துறந்தவர் நட்புதான் இனி நமக்கு எதற்கு..?

மரல் நாரினாலே பின்னிய உடையினை உடையவராகிய மலையில் வாழும் குறவர், சிறிய இலைகளை உடைய சந்தன மரத்தின் மேற்பட்டையை அறியாமையால் அறுத்தனர். அதனால் அந்த மரம் வற்றத் தொடங்கி வறிதாகிச் சோர்ந்தது. அறுபட்ட அதனிடத்திருந்து நீரும் வடிந்ததுபோல என் அறிவும், உள்ளமும் அவரிடத்தே சென்றுவிட்டன. எனவே தோழி!

என் உடம்பு உள்ளே ஒன்றுமில்லாமல் மெலிந்தது. அவர் இனி இங்கு வந்தாலும் என் நோய்க்குரிய மருந்தாக அவர் ஆகமாட்டார். அதனால் அவர் அங்கேயே தங்கியிருக்கட்டும்!
நாம் படும் துன்பத்தை அவர் காணாமலேயே இருக்கட்டும்!

பாடல் வழியே.

1. புன்னை மரத்தைத் தன் சகோதரி என்று நற்றிணைத் தலைவி கூறுவதன்வழி தாவரங்களையும் தன்னைப் போல பழந்தமிழர்கள் மதித்தமை அறியமுடிகிறது.
2. அகநானூற்றுத் தலைவன் சிறுஉயிர்கள் கூட தன்னால் பாதிக்கப்படக்கூடாது என்று எண்ணுகிறான்.

3. நற்றிணைப் பாடலில், குறவர்கள் மரல் நாரிலே பின்னிய உடையை அணிவார்கள் என்ற சங்ககால வழக்கத்தைப் பாடல் உணர்த்துகிறது.
4. சந்தன மரத்தின் நீர்ச்சத்து குன்றியபின் அது வற்றலாகிப் பின் இறந்துபடும் என்ற செய்தி பழந்தமிழரின் தாவரவியல் அறிவை எடுத்தியம்புவதாக உள்ளது.
5. சந்தன மரம் போலவே தன் அறிவும், உணர்வும் வற்றிய பின்னர் உயிர் அழிந்துபடும் என்ற தலைவியின் கூற்று உலோச்சனாரின் கற்பனை நயத்துக்குத் சான்றாகத் திகழ்கிறது.

மனித உயிர்களுக்கே மதிப்பில்லாத இன்றைய சூழலில் தாவரங்களையும், சிறுஉயிர்களையும் கூட மதித்து வாழ்ந்த பழந்தமிழர் வாழ்வு இன்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய வாழ்வியலாக அமைகிறது.

36 கருத்துகள்:

  1. உண்மை தான் நண்பரே

    மரம நிழல் தருவதோடு அதனால் பல பலன்களும் உண்டு .மழை வருவதும் அதன் மூலமே .

    தங்கள் சொல்வது போல் ஒரு மரம் வெட்டினால் ஒரு கன்று நடவேண்டும் என்பது வெட்டுபவர்களுக்கு தெரிவதில்லை .

    அவர்களுக்கு தேவை பணம் ,அல்லது இடம்

    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு பாராட்டுக்கள் நண்பரே

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    பதிலளிநீக்கு
  3. பழந்தமிழர்களின் சிறு உயிர்கள், மரங்கள் இவற்றையெல்லம் எவ்வாறு மதித்து வாழ்ந்தார்கள் என்பது பற்றிய அழகான விளக்கம் தந்துள்ளீர்கள்.
    நல்ல பதிவு, பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அழகா பகிர்ந்ததற்கு நன்றிகள் நண்பா!

    பதிலளிநீக்கு
  5. இயற்கையை அழிக்கிறோம். பதிலுக்கு இயற்கை சீற்றம் கொள்கிறது.

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொரு பாடலிலும் காணக்கிடைக்கும் செய்திகளை அருமையாக விளக்குகிறீர்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  7. இயற்கை பற்றி அழகான பதிவு.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தாவரங்கள் பற்றி, நீங்கள் தொடர் பதிவு எழுத வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. தன்னை வெட்டப் போகும் மனிதர்களுக்கு கூட சுயநலமின்றி நிழல் தருகின்றது என்று ஒரு சொலவடை உண்டு..

    பதிலளிநீக்கு
  10. முனைவர்'னா சும்மாவா அருமையா சொல்லி இருக்கீங்க..!!!

    பதிலளிநீக்கு
  11. சந்தனமா மனக்குறீங்க....
    தமிழ்மணம் 10.

    பதிலளிநீக்கு
  12. புன்னை மரத்தை சகோதரியாக பாவித்த

    அந்த பழங்காலம் கண்முன்னே வாராதோ??

    தன ஒவ்வொரு பாகத்தையும்

    தனைவெட்டும் மனிதனுக்காய்

    ஈதல் செய்யும் மரமிடம்

    மனிதா கற்றிகொள்ளவேண்டியவை

    ஏராளம்...

    அன்புநிறை முனைவரே,

    உங்களின் படைப்புகளில்

    நான் லயித்துப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  13. மரங்கள் பற்றிய பண்டைய மக்களின் நோக்கு மிகவும் மதிக்கத்தக்கது. சங்க இலக்கியங்கள் பற்றி அனைவரும் அறிந்துகொள்ளும் விதமாகத் தெளிவாகப் பதிவிட்டு அறியச் செய்வதற்கு நன்றி. வாய்ப்பின்மையால் பலரும் சுவைக்கத் தவறியிருந்த இலக்கியச் சுவையை நித்தமும் புகட்டும் உங்கள் முயற்சியைப் பெரிதும் பாராட்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. மரப்பொருட்கள் மனிதனின் அவசியத்தேவை ஆகிவிட்டது நண்பரே.. எனவே மரங்களை வெட்டாமல் இருக்கமுடியாது.. ஆனால் ஒரு மரம் வெட்டும் முன் ஒரு மரக்கன்று நடவேண்டும் என்பதை கட்டாய நடைமுறைப் படுத்தவேண்டும்.. இல்லையேல் பதிக்கப்பட போவது வரஇருக்கும் சந்ததியினரே..

    பதிவு மிக அருமை நண்பரே.. வாழ்த்துகள்

    பகிர்வுக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  15. எங்கள் அலுவலகத்தில் கடந்த நான்கு நாட்களாக வளைத் தொடர்பு துன்டிக்கப் பட்டுவிட்டது ஆகயால் தான் என்னால் வரஇயள வில்லை.. மன்னிக்கவும்..

    பதிலளிநீக்கு
  16. தாவரங்களையும் மரம் செடி கொடிகளையும் அவர்கள் மதித்து வாழ்ந்ததால் தான் அவர்கள் இயற்கையை காப்பாற்றி செழிப்புடன் வாழ்ந்தார்கள். நாம் ஓசோனை ஓட்டைப்போட்டுக்கொண்டு இருக்கிறோம். அருமை முனைவரே. நன்றி

    பதிலளிநீக்கு
  17. பழந்தமிழர்கள் பற்றிய சிறந்த பாடலுடன் கூடிய பதிவு உளம் கனிந்த பாராட்டுகள் நன்றி

    பதிலளிநீக்கு
  18. வழக்கம் போல்,

    சிறப்பு மிக்க படைப்பு. சங்கப்பாடலையும் படிக்க வச்சு, பழந்தமிழர் வாழ்வையும் எடுத்து வச்சு, நிகழ்கால நிலைமையயும் புரிய வெச்சு...

    அருமையா ஒரு பாடம் புகட்டியாச்சு.

    பதிலளிநீக்கு
  19. சங்க காலத்தில் மனிதன் மரங்கள் மீது கொண்டிருந்த உறவு முறைகளை
    சங்க தமிழ் பாடல்களின் ஆதாரத்துடன் அருமையாக சொன்னீர்கள். நல்ல பதிவு முனைவர் நன்பரே..

    பதிலளிநீக்கு
  20. ..இப்பதிவு, மரத்தைப்பற்றி மனிதர்களின் எண்ணங்களின் வேர்களாக பதியும் தோழா..
    ..அருமை..

    பதிலளிநீக்கு
  21. ..இப்பதிவு, மரத்தைப்பற்றி மனிதர்களின் எண்ணங்களின் வேர்களாக பதியும் தோழா..
    ..அருமை..

    பதிலளிநீக்கு
  22. புறப்படுமுன் தேர் மணியினது நாக்கு ஒலிக்காதபடி அதைக் கட்டுகிறான்.ஏனென்றால், வண்டுகள் தம் துணையுடன் கூடி மகிழும் போது,
    தேர் மணி ஓசை அவைகளுக்கு அச்சத்தைக் கொடுத்துப் பிரித்து விடக் கூடாது என்பற்காகவே அவ்வாறு செய்தான்

    அருமையான பதிவு.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  23. //மனித உயிர்களுக்கே மதிப்பில்லாத இன்றைய சூழலில் தாவரங்களையும், சிறுஉயிர்களையும் கூட மதித்து வாழ்ந்த பழந்தமிழர் வாழ்வு இன்று நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டிய வாழ்வியலாக அமைகிறது.//

    உண்மையான வார்த்தைகள் முனைவரே... மனித உயிர்களுக்கு இங்கே மதிப்பில்லை...

    நல்ல பாடல்கள்... பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. தன் சகோதரி முன யாராவது காதலிப்பார்களா என்ற கருத்து மிகப் பிடித்துள்ளது. அருமையான ஆக்கம் . வாயடைத்துப் போயுள்ளேன் வார்த்தை வரவில்லைக் கூற. சிறப்பு. வாழ்த்துகள். அருமை.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  25. நன்றி எம்ஆர்
    நன்றி தமிழ்த்தோட்டம்
    மகிழ்ச்சி இராம்வி
    நன்றி சசி
    நன்றி விக்கி
    உண்மைதான் தமிழ் உதயம்.

    பதிலளிநீக்கு
  26. மகிழ்ச்சி சென்னைப் பித்தன் ஐயா
    நன்றி இந்திரா
    நன்றி நடனசபாதி ஐயா
    உண்மைதான் சூர்யா
    நன்றி நண்டு
    மகிழ்ச்சி மனோ

    பதிலளிநீக்கு
  27. மகிழ்ச்சி மகேந்திரன்
    நன்றி கீதா
    நன்றி இராஜா
    உண்மைதான் காந்தி
    நன்றி மாலதி
    நன்றி சத்ரியன்

    பதிலளிநீக்கு
  28. வருகைககு நன்றி இரத்தினவேல் ஐயா
    நன்றி வெங்கட்
    நன்றி முருகேஷ்வரி
    நன்றி இலங்காதிலகம்
    நன்றி சாருஷன்.

    பதிலளிநீக்கு
  29. நான் தொடர்ந்து உங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். அருமையான நல்ல முயற்சி. தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி. வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு