வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சங்க கால நம்பிக்கைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்க கால நம்பிக்கைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 25 ஜூலை, 2014

பொய்சாட்சி சொன்னால்..



ஒரு கதை...

ஒரு அரசன் ,நம்பக்கூடிய சிறந்த பொய்யை சொல்லும்ஒருவருக்கு ஆயிரம் 

பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும்  என்று அறிவித்தார்.நாட்டின் பல 

பகுதியிலிருந்து பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர்.ஆனால் 

அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.ஒரு நாள்  கந்தல் உடை அணிந்த 

ஒருஏழை அரச சபைக்கு வந்து தான் அப்போட்டியில் கலந்து கொள்ள 

விரும்புவதாகக் கூறினான்.அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் 

தெரிவித்தார்.அந்த ஏழை சொன்னான்,''அரசே,உங்களுக்கு ஞாபகம்  

இருக்கிறதா?நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர 

வேண்டியிருக்கிறது.அதை வாங்கத்தான்  இன்று இங்கு நான் 

வந்தேன்.''அரசனுக்கு கோபம் வந்து விட்டது.''நீ பொய் சொல்கிறாய்   

..நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?'என்று 

கத்தினான்.உடனே ஏழை சொன்னான்,''அரசே,நீங்களே ஒத்துக் 

கொண்டுவிட்டீர்கள்,நான் சரியான பொய் சொன்னேன் என்று.எனவே 

போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் 

கொடுங்கள்.''அரசன்,தான் அவசரத்தில் உளறிவிட்டோம் என்பதை 

உணர்ந்தான்.உடனே சொன்னான்,''இல்லை,இல்லை,நீ பொய் 

சொல்லவில்லை.''என்று அவசரமாக மறுத்தான்.ஏழை சொன்னான்,''நல்லது 

அரசே,நான் சொன்னது பொய் இல்லை,உண்மைதான் என்றால்,எனக்கு தர 

வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுங்கள்,''அரசன் அந்த ஏழையை 

சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான்.


பொய் குறித்து இப்படிப் பல கதைகள் உண்டு. மருத்துவரிடமும், 

வழக்கறிஞரிடமும் பொய் சொல்லக்கூடாது என்பார்கள். ஆனால் இவர்கள் 

எவ்வளவு வேண்டுமானாலும் பொய்சொல்லலாம் என்பது இன்றைய 

நிலையாகிவிட்டது.



பொய் பற்றிய சங்ககால நம்பிக்கையைக் காண்போம்


கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி


கலித்தொகை 34-10


பொய் சாட்சி கூறியவன் வந்து கீழே தங்கியதால் பட்டுப்போன மரம் போல 

நானும் அழகினை இழந்துவிட்டேன் என்கிறாள் தலைவி. 


பொய் சாட்சி உரைத்தவன் கீழே நின்றால் அந்த மரம் வாடிவிடும் என்ற 

இச்செய்தி அக்கால மக்களின் நம்பிக்கைக்குத் தக்க சான்றாக அமைகிறது.


தொடர்புடைய இடுகைகள்






செவ்வாய், 22 நவம்பர், 2011

இங்கு சிரிப்பும், அழுகையும் கற்றுத்தரப்படும்!

இப்ப சிரி!! இப்ப அழு..
னிதர்கள் எல்லாம் யந்திரங்களாக மாறிவருகிறார்கள். எதிர்காலத்தில் மனிதர்களுக்குச் சிரிப்பும், அழுகையும் கற்றுக் கொடுக்கும் நிலை வந்தாலும் வியப்பதற்கில்லை...
அவ்வேளையில் உணர்வு என்றால் என்ன? என்று எடுத்தியம்ப சங்கப் பாடல்கள் துணைநிற்கும்..


இதோ ஒரு சங்கப்பாடல்..


போருக்குச் சென்ற தன் கணவன் வீடு திரும்பவில்லை அவன் வீரமரணம் அடைந்துவிட்டான். அதனை அவன் மனைவி அறியவில்லை பாவம் காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போனவள் அவனுக்கு ஏதும் நேர்ந்திருக்கும் என அஞ்சியவளாகப் போர் நடைபெற்ற இடத்தைச் சென்றடைந்தாள். அவன் வீழ்ந்து கிடந்த இடமோ புலி போன்ற கொடிய விலங்குகள் வாழும் காடு. தன் கணவன் இறந்தமை கண்டு உள்ளம் வெதும்பி அழுது புலம்புவதாகவும். தன்னை இந்நிலைக்கு ஆளாக்கிய எமனுக்கே சாபம் கொடுப்பதாகவும் இப்பாடல் அமைகிறது.


கணவன் இறந்துவிட்டான் என்று புத்தி சொல்கிறது...
இல்லை அவன் எழுந்து தன்னுடன் நடந்து வந்துவிடுவான் என்று உணர்வு சொல்கிறது...



ஐயோ! எனின் யான் புலி அஞ் சுவலே;
அணைத்தனன்’ கொளினே, அகன்மார்புஎடுக்கல்லேன்!
என்போல் பெருவிதிர்ப்பு உறுக, நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே!
நிரைவளை முன்கை பற்றி-
வரைநிழல் சேர்கம்- நடந்திசின் சிறிதே!

புறநானூறு-255

இப்பாடலின் ஆங்கில வடிவம்

I Cannot cry out,
I'm afraid of tigers.
I cannot hold you
your chest is too wide
for my lifting

Death
has  no codes
and has dealt you wrong
may he 
shiver as I do!

Hold my wrist
of bangles,
let's get to the shade
of that hill.
just try and walk a little

எல்லா உணர்வுகளையும் எல்லோராலும் உணர முடியும். ஆனால் 
வெளிப்படுத்த முடியாது. 
சங்கப் பாடல்களை நோக்கும் போது பெரு வியப்புத் தோன்றுகிறது!
எத்தகைய சூழலாக இருந்தாலும் அதனை அழகாக எளிமையாக விளக்கிச் செல்லும் பாங்கு தமிழ் மொழியின் செம்மைப் பண்பிற்குத் தக்க எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.


பாடலின் பொருளை மேலும் சுவைக்க..

 

திங்கள், 20 ஜூன், 2011

தண்ணீர் தண்ணீர்!!




தண்ணீர்!
தண்ணீர்!
எங்கு பார்த்தாலும் நீர் வேட்கை!

ஆழ்துளைக் கிணறுகளும், பூச்சிக் கொல்லி (கூல்டிரிங்) மருந்து நிறுவனங்களும் உறிஞ்சியது போக மினரல் வாட்டர் என்ற பெயரில் இன்று கிடைக்கும் நீர்தான் மக்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கிறது. அந்த மினரல் வாட்டரும் தயாரிக்கப்படும் முறையை அறிந்தால் நீர்வேட்கையே அடங்கிப்போய்விடுகிறது.

தாவரங்களை அழித்து வானத்தை ஏமாற்றியதால்..
இப்போது..
வானமும் மக்களை ஏமாற்ற ஆரம்பித்துவிட்டது!
சில நேரங்களில் நாம் வாழும் நிலம் தான் பாலையா?
என்ற சிந்தனை வந்துவந்து போகிறது!!


சங்ககாலத்தில் பெண்யானையின் நீர்வேட்கைக்காக வானத்தைப் பார்த்துக் கதறிய ஆண்யானையின் பேரொலி இன்றும் கேட்கிறதே!!!


இதோ....


வளை உடைத்தனையது ஆகி பலர் தொழ
செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி
இன்னாப் பிறந்தன்று பிறையே அன்னோ
மறந்தனர் கொல்லோ தாமே – களிறு தன்
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது
நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி
வெண்நார் கொண்டு கை சுவைத்து அண்ணாந்து
அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும்
அத்த நீள் இடை அழப் பிரிந்தோரே?

குறுந்தொகை – 307
பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்கு கிழத்தி உரைத்தது.

கடம்பனூர்ச் சாண்டில்யன்.
தலைவன் வருவதாகச் சொல்லிச் சென்ற பருவம் வந்தும் தலைவன் வரவில்லை. அதனால் வருந்தினாள் தலைவி. இச்சூழலில் அவளை ஆற்றுப்படுத்த தோழி கடுஞ்சொல் கூறினாள். அதற்குத் தலைவி பதிலளிப்பதாக இப்பாடல் அமைகிறது.

வண்ணத்தாலும், வடிவத்தாலும் உடைந்த சங்குவளையலைப் போன்ற பிறைத்திங்கள் வானில் தோன்றும். அதனைக் கன்னியர் பலரும் விரும்பித் தொழுவர்.

நீர்வேட்கை காரணமாக வருந்தி நடக்கும் பெண்யானையின் வருத்தம் தாங்க இயலாத ஆண்யானை, உயர்ந்து நிற்கும் யா மரத்தின் நிலை கெடும்படியாகத் தன் தந்தங்களால் குத்தியது. தன்னுடைய பிடியானை அந்த நீரில்லாத நாரினைக் கொள்ளுதலால் வருந்தித் தன் தும்பிக்கையைச் சுவைத்தது.

இத்தனைக்கும் காரணமான மழை பெய்யாத வானத்தை அண்ணாந்து நோக்கி வருத்தமுற்ற மனத்துடன் கதறியது.

அந்தோ! நெடும்பொழுது நாம் அழுமாறு, இத்தகைய பாலை நிலத்தில் கடப்பதற்கு அரிய வழியில் பிரிந்து சென்றோர் தாம் வருவதாகச் சொல்லிச் சென்ற பருத்தை மறந்தனரோ..?
என வருந்துகிறாள் தலைவி.


பாடல் வழியே.
1. பாலை வழியே தலைவன் சென்றமையால் ஏற்பட்ட தலைவியின் வருத்தம் – பிடியின் நீர்வேட்கையைத் தீர்க்க இயலாத களிறின் வருத்தம்.
2. பிறைத்திங்கள், அன்புடைய விலங்குகள் – தலைவனுக்கு தான் சொல்லிச் சென்ற பருத்தை நினைவூட்டுவதாக உள்ளது.
3. பிறையைக் கன்னியர் தொழும் சங்ககால மரபு பாடல்வழி சுட்டப்படுகிறது.

தமிழ்ச்சொல் அறிவோம்.


உயங்குதல் – தளர்தல்.
நீள் இடை – நெடும்பொழுது.
அத்தம் – பாலை வழி.
நோனாது – பொறுக்க இயலாது.

ஞாயிறு, 22 மே, 2011

காலத்தை வெல்ல சகுனம் ஒரு தடையல்ல.


“ஊருக்கே குறி சொல்லுமாம் பல்லி
கழுநீர் நீர்ப்பானையில் விழுமாம் துள்ளி“

நோயுற்றபோது மருத்துவமனைக்குச் செல்ல நேரம் பார்க்காத மனிதன்..

சாலையைக் கடக்கும்போது தன் இராசிக்கு ஏற்ற திசையைப் பார்க்காத மனிதன்..

வேலைக்குச் செல்ல நல்ல காலம் பார்க்காத மனிதன்..

கீழே கிடக்கும் பணத்தை எடுக்க சகுனம் பார்க்காத மனிதன்.


ஏனோ இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறான் சாதகம், சோசியம், சகுனம் என்று...

அதனால் தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன இன்னும்..

கூண்டில் வாழும் கிளிகளும், எலிகளும்...

மூடநம்பிக்கையை வளர்க்கும் ஊடகங்களும்!

இதில் என்ன கொடுமையென்றால்..

ஒரு தொலைக்காட்சி சொல்லும் சோசியத்தை

இன்னொரு தொலைக்காட்சி ஏற்றுக்கொள்வதில்லை.

நாம் நினைத்தா இந்த பூமிக்கு வந்தோம்..?
நாம் நினைத்த போதா இங்கிருந்து செல்லப்போகிறோம்?

செல்லும் நேரம் வந்தால் எல்லோரும் செல்லவேண்டியதுதானே..
இதில் ஏன் இந்த மூட நம்பிக்கைகள்..?

நல்ல சகுனங்கள்:-

1. கன்னிப்பெண் தண்ணீர் குடத்துடன் வருதல்.
2. பிணம் எதிரே வருதல்.
3. அழுக்குத் துணியோடு வண்ணான் வருதல்.
4. தாயும் பிள்ளையும் வருதல்.
5. கோயில் மணியடித்தல்.
6. சுமங்கலிகள் வருதல்.
7. கருடனைக் காண்பது.
8. திருவிழாவைக் காணல்.
9. எருக் கூடையைக் காணல்.
10. யானையைக் காண்பது.
11. நரி இடமிருந்து வலமாகச் செல்லல்.
12. பாம்புகளில் ஆணும், பெண்ணும் பிணைந்திருப்பதைக் காணல்.
13. கருடன் வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கம் செல்லல்.
14. காகம் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கம் செல்லல்.
15. கழுதை கத்துதல்.
16. பசு கன்றுக்குப் பால் கொடுத்தலைக் காணல்.
17. அணில் வீட்டிற்குள் வருதல்.

கெட்ட சகுனங்கள்:-

1. பூனை குறுக்கே போதலும் எதிர்ப்படுதலும்.
2. ஒற்றைப் பிராமணனைக் காணல்.
3. விதவையைக் காணல்.
4. எண்ணெய்ப் பானை எதிர்ப்படல்.
5. விறகுடன் வருபவரைக்காணல்.
6. மண்வெட்டியுடன் எதிர்ப்படல்.
7. தும்மல் ஒலி கேட்டல்.
8. ஆந்தை அலறல்.
9. கருடன் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லல்.
10. காகம் வலமிருந்து இடமாகச் செல்லல்.
11. நாய் குறுக்கே செல்லுதல்.
12. போர் வீரனைக் காணுதல்.
13. நாய் ஊளையிடுவதைக் கேட்டல்.
14. அம்பட்டனைக் காணல்.
15. வெளுத்த துணிகளுடன் வண்ணான் வருதலைக் காணல்.
16. பாய் விற்பவரைக் காணல்.
17. அரப்பு விற்பவரைக் காணல்
18. சிமாறு (விலக்குமாறு) விற்பவரைக் காணல்.
19. முக்காடிட்டவரைக் காணல்.
20. தலைமுடியை விரித்துப் போட்டுள்ள பெண்ணைக் காணல்.



பல்லி சகுனம்:-

சிரசில் - மரணம்
மூக்கில் - நோய்
வயிற்றில் - குழந்தை
முழங்காலில் - கலகம்
பாதத்தில் - பிணி
இடக்கையில் - மரணம்
வலக்கையில் - பெரிய சாவு
உடம்பு – தீர்க்காயம்

அறிவியல் வளர்ந்த இந்தக் காலத்திலும் இதுபோன்ற நம்பிக்கைகள் ஒவ்வொருவருக்கும் இருப்பது உண்மைதான்.

அறிவியல் வளர்ச்சி குறைவான, நம்பிக்கைகள் நிறைவான சங்ககாலத்திலேயே சகுனங்களைப் புறந்தள்ளிய சோழமன்னனைப் பற்றிய புறப்பாடல் ஒன்றைப் பார்ப்போம்.

பாடல் இதோ..




புறநானூறு 41

திணை – வஞ்சி

துறை – கொற்றவள்ளை

பாடியவர் கோவூர்கிழார்

பாடப்பட்டவன் – சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.



பகைவரை எதிர்த்துப் போர்மேல் செல்லும் வஞ்சித்திணையின் ஒரு துறையே கொற்றவள்ளை ஆகும்.

இது பகைவர் நாட்டின் அழிவுதனைக் கூறி மன்னனின் புகழை எடுத்துரைக்கும் தன்மையுடையது.

இப்பாட்டில் “எரிதிகழ்ந்தன்ன செலவுடைய வளவன்“ என்று மன்னனைப் புகழ்ந்தும் உன் பகைவர் நாடு பெருங்கலக்கம் அடைந்தது என்று இரங்கிப் பாடியமையாலும் கொற்றவள்ளையானது.



ஒருவரின் உயிரைப் பற்றிக்கொள்ள காலனான எமன் கூட தக்க நேரம் பார்த்துக் காத்திருப்பான். ஆனால் உரிய காலம் எதுவும் பார்காமல் வேல்செறிந்த பகைவர்களை நீ நினைத்த நேரத்தில் அழிக்கும் தன்மை கொண்டவன்.

வேந்தே!!

எட்டுத் திசைகளிலும் எரிகொள்ளி எரிந்து வீழும்!

பெரிய மரத்தின் இலையில்லாத பெரிய கிளை உலர்ந்துபோகும்!

வெம்மையான கதிர்களையுடைய ஞாயிறு பல இடங்களில் செறிந்து தோன்றும்!

மேலும் அச்சம் தரும் பறவைகளும் சேர்ந்து ஒலி எழுப்பும்!

இவ்வாறு நனவில் பல தீய குறிகளைக் கண்டாய்!!



பல் நிலத்தில் விழுந்தது போலவும்,

எண்ணையினைத் தலையில் தடவியது போலவும்,

ஆண் பன்றி மீது ஏறுவது போலவும்,

ஆடைகளைக் களைந்தது போலவும்,

படைக்கருவிகளிருந்த கட்டில் கீழே கவிழ்வது போலவும்,

தாங்க முடியாத அரிய பல தீய குறிகளைக் கனவில் கண்டாய்...

அதனாலென்ன...

தீய குறிகளைக் கருதாமல் போர் புரியும் வலிமைகொண்டவனே...

போர்க்களத்தில் காற்றும் நெருப்பும் கலந்து சுழல்வதுபோல இயங்கும் பேராற்றல் உடைய வளவனே!!



நீ போருக்குக் கிளம்பியதை அறிந்து நின் பகைவர்கள் தம் புதல்வருடைய மலரைப் போன்ற கண்களை முத்தமிடுவர். அதன் வாயிலாக மனைவியருக்குத் தன் துன்பத்தை மறைப்பர்.

இத்தகைய துன்புறும் வீரருடன் உன்னை சினமடையச் செய்தவர்களின் நாடு மிகுந்த கலக்கத்தை அடைந்தது.

பாடல் வழியே..

1. சங்ககால மக்களின் சகுனம் பற்றிய நம்பிக்கைகளை அறிந்துகொள்ளமுடிகிறது.

2. சகுனத்தைப் புறந்தள்ளிச் செல்லும் இயல்புகொண்ட பகுத்தறிவுச் சிந்தனையையும் உற்றுநோக்கமுடிகிறது.

3. கொற்றவள்ளை என்னும் புறத்துறையும் விளக்கம்பெறுகிறது.

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

உங்கள் நண்பர் எலியா? புலியா? - UPSC EXAM TAMIL - புறநானூறு -190



உன் நண்பனைக் காட்டு உன்னைப் பற்றிச் சொல்கிறேன் என்பார்கள். நண்பர்கள் நம் கண்ணாடி போல, நம் நிழல் போல…
நம் உணர்வுகளுக்கும், கொள்கைகளுக்கும், ஆசைகளுக்கும் இயைபுடைய நண்பர்களைத்தான் நாம் தேர்ந்தெடுப்போம். இதோ நண்பர்களை எப்படித் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதைச் சோழன் நல்லுருத்திரனார் … 

“எலி போன்ற நண்பர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடாது”

 “புலி போன்ற நண்பர்களையே தேர்ந்தெடுக்கவேண்டும்

” என்று உரைக்கிறார். இயல்பான வழக்கில் எலி, புலி என்ற உவமையை பயத்துக்கும், வீரத்துக்கும் நாம் கூறுவதுண்டு. இங்கு.. 

விளைந்து முற்றிய பின் அறுவடைக்கு முன் உள்ள சிறிய வயலில் இருந்து கதிராகிய உணவைக் கொண்டுசென்று எலி தன் வலைக்குள் மிகுதியாகச் சேர்த்து வைக்கும். அவ்வெலியைப் போல சிறுமுயற்சியையும், சுயநலமும் கொண்டவர்களிடம் நட்புக் கொள்வதைவிட.. வீரம் செறிந்த புலி முதல்நாள் வேட்டையாடிய ஆண்பன்றி இடப்பக்கம் விழுந்தால் அதனை உண்ணாது, அடுத்தநாள் காத்திருந்து பெருமலைப்பக்கத்தில் வீரம் நிறைந்த ஆண்யானையை வலப்பக்கமாக வீழ்த்தி உண்ணும். அத்தகைய புலிபோன்ற பெருமுயற்சியும், கொள்கையும் கொண்டவர்களிடம் நட்புக் கொள்வதே சிறந்தது என்கிறார். 


பாடல் இதோ.. 

விளைபதச் சீறிடம் நோக்கி , வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலி முயன்றனையர் ஆகி உள்ளத் தம்
வளம் வலியுறுக்கும் உளம் இலாளரொடு
இயைந்த கேண்மை இல்லாகியரோ!
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்று அவண் உண்ணாதாகி வழி நாள்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டு எழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும்
புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து
உரனுடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள ஆகியரோ!

புறநானூறு -190 
சோழன் நல்லுருத்திரன். திணை – பொதுவியல் துறை – பொருண்மொழிக்காஞ்சி. 

தமிழ்ச்சொல் அறிவோம் 

1. வல்சி – உணவு, நெல், சோறு, அரிசி. 
2. கேண்மை – நட்பு, உறவு. 
3. உரன் – வலிமை.
4. கேழல் – பன்றி. 
5. களிறு – ஆண்யானை, பிடி- பெண்யானை. 

பாடலின் வழி அறியலாகும் கருத்துக்கள்.

1. எலிபோன்ற சுயநலமும், சிறுமுயற்சியும் கொண்டவர்களின் நட்பைப் பெறுவதைவிட, புலி போன்ற பெருமுயற்சியும், உயர்ந்த கொள்கையும் கொண்டவர்களிடம் நட்புக் கொள்வதே சிறந்தது என்ற உயரிய கருத்து எடுத்துரைக்கப்படுகிறது. 

2. புலியானது தன் வேட்டையில் வலப்பக்கம் வீழும் விலங்குகளையே உண்ணும் இடப்பக்கம் வீழ்ந்தால் உண்ணாது என்ற புலியின் வழக்கமாகச் சங்ககால மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை இப்பாடல் வழி அறியமுடிகிறது. 

3. மெலியோரின் (எலி) நட்பைவிட, வலியோரின் (புலி) நட்பே சிறந்தது என்ற செம்மாந்த கருத்து உரைக்கப்படுவதால் இப்பாடல் பொருண்மொழிக் காஞ்சியானது.

செவ்வாய், 30 மார்ச், 2010

வாழ்க்கையின் இலக்கு.




காட்டில் வாழும் முயலைப் பிடிக்க எண்ணியவன் அந்த முயலை எய்து வருவதைவிட, பெரிய யானையைக் கவர முயன்றவன் எய்த அம்பு பிழைத்து வெறுங்கையுடன் வந்தாலும் அது தான் சிறப்பு என்பதை,


"கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது" என்பர் வள்ளுவர்.

யானையை எய்யச் சென்றவன் யானையைப் பிடித்து வெற்றியோடு திரும்புவதும் உண்டு.

சிறுபறவையை வேட்டையாட எண்ணியவன், வெறுங்கையுடன் திரும்புவதும் உண்டு.

அதனால் நமது இலக்குகள் உயர்ந்தனவாக இருத்தல் வேண்டும்.

இலக்கில்லாத வாழ்க்கை முள்ளில்லாத கடிகாரத்தைப் போல அது யாருக்கும் பயன் தருவதில்லை என்கிறார் கோப்பெருஞ்சோழன்.

வாழ்வியல் இலக்கைக் கூறும் புறப்பாடல் ஒன்று,

கோப்பெருஞ்சோழன் தன் மகன்கள் தன்மீது கொண்ட பகையால் மனம் வாடி தன் நாட்டை அவர்களிடமே கொடுத்து மானம் போனதாகக் கருதி வடக்கிருந்து உயிர்துறக்க முடிவுசெய்தான்.

வடக்கிருத்தல் என்பது,
ஊர்ப்புறத்தே தனியிடத்தில் அறம் கூறும் சான்றோர் சூழ புல்லைப்பரப்பி அதன் மீதமர்ந்து உண்ணா நோன்பு இருத்தலாகும். இப்படி இருப்பதால் வீடுபேறும், மீண்டும் பிறவா நிலையும் கிடைக்கும் என்பது அற்றைக் கால நம்பிக்கையாகும்.


வடக்கிருத்தலால் வீடுபேறு கிடைக்காது என்றும், மீண்டும் பிறவாநிலையென்பது கிடைக்காது என்ற கருத்தினரும் சங்க காலத்தில் இருந்தனர்.

யாவரையும் பார்த்து கோப்பெருஞ்சோழன் சொல்கிறார்...

அறம் செய்வதையே நம் வாழ்க்கைப் இலக்காகக் கொள்வோம். நல்வினை செய்வோமா? செய்யவேண்டாமா? என்ற சிந்தனை கொண்டோர் நெஞ்சத் துணிவில்லாதவர்களாவர்.

யானை வேட்டுவன் தவறாது யானையை வேட்டையாடி மீள்வதும் உண்டு.
சிறு பறவைகளை வேட்டையாட விரும்பிச் செல்வோர் அவற்றைப் பெறாது வெறுங்கையுடனே வருவதும் உண்டு.

“சாதிக்கப் பிறந்தவர்கள் நாம் வெறும் வயிற்றுக்கு வாழ்ந்து மடிந்து போவதா?“

அடுத்தவர்களைப் பார்த்து வாழும் வாழ்க்கையை முதலில் தூக்கி எறிந்து இலக்கோடு வாழப்பழக வேண்டும்.

அறவழியே (நேர்வழி) வாழ்ந்தால் சொர்க்கம் என்னும் மறு உலகம் கிடைக்கப் பெறும்.

பிறப்பு என்னும் நோயிலிருந்து “ மீண்டும் பிறவா நிலை“ அடையலாம்.
(பிறவி என்பதே நோய் – பிறவிப்பிணி. நாம் செய்த பாவத்தால் தான் மீண்டும் மீண்டும் பிறக்கிறோம் என்பது தமிழர்தம் நம்பிக்கை)

இவையிரண்டும் கிடைக்காவிட்டாலும் இமையத்தின் உயரத்துக்கு நம் புகழைப் பெற்று குற்றமில்லா உடலுடன் வாழ்ந்து மறையலாம் என்கிறார். பாடல் இதோ,

“செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே
ஐய மறாஅர் கசடீண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே
யானை வேட்டுவன் யானையும் பெறுமே
5 குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே
அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கி னெய்த லுண்டெனிற்
றொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்
தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின்
10 மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும்
மாறிப் பிறவா ராயினு மிமயத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தவறத் தலையே
(புறநானூறு -214)

சொர்கம், நரகம், மறுபிறப்பு போன்றன இருக்கிறதா? இல்லையா என்ற கருத்து சங்ககாலத்திலிருந்தே இருந்திருக்கிறது.

இருந்தால் நன்றாக இருக்கும் என்ற மனித நம்பிக்கையே இதற்குக்காரணம்.

மனிதனைப் பண்படுத்தவே இவையெல்லாம் தோன்றின. நல்லபடி அடுத்தவுயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் வாழ்ந்தால் இறந்த பின்பு சொர்ககம் இல்லாவிட்டாலும் வாழும் வாழ்க்கை சொர்க்கமாக அமையும் என்பது சங்கத்தமிழர் கண்ட உண்மை.


பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்

1. வாழ்க்கையில் அறம் செய்ய வேண்டும்.
2. சொர்ககம், நரகம், என்னும் மறு உலகம் மற்றும் மறுபிறப்பு ஆகியன உண்டு என்றும் இல்லை என்றும் எண்ணிய அக்கால நம்பிக்கை புலப்படுகிறது.
3. மானம் போனால் வடக்கிருந்து உயிர்நீப்பர் எண்ணும் அக்கால மரபு சுட்டப்படுகிறது.
4. அறவழியே வாழ்வதே வாழ்வின் இலக்கு என்னும் வாழ்வியல் அறம் உணர்த்தப்படுகிறது.

வியாழன், 21 ஜனவரி, 2010

சகுனம் பார்த்த பன்றி!




“ஊருக்கே குறி சொல்லுமாம் பல்லி
கழுநீர் நீர்ப்பானையில் விழுமாம் துள்ளி“

என்பது நம் முன்னோரின் அனுபவ மொழி. சகுனம் பார்க்கும் வழக்கம் பன்னெடுங்காலமாகவே நம்மிடையே உள்ளது. சகுனம் என்பது நன்மை, தீமைக்கான குறியீடு என்று பொருள் வரையறுத்து வழங்கிவருகின்றனர்.

சகுனங்களுள் பல்லி கத்துவது பல்வேறு மக்களும் நம்பும் குறியீடாக உள்ளது. இன்று, நேற்றல்ல சங்க காலம் முதலாகவே இந்த நம்பிக்கை உள்ளது..

ஊருக்கே குறி சொல்கிறது பல்லி,
என்று நம்புகிறவார்கள் அந்தப் பல்லியே தன்னுடைய எதிர்காலம் தெரியாமல் தான் கழுவு நீர்ப் பானையில் தவறி வீழ்கிறது என்பதைச் சிந்திக்க மறுக்கிறார்கள். அந்தப் பல்லி மனித உடலில் எந்த இடத்தில் விழுந்தாலும் அதற்கென்று பலன் சொல்ல ஒரு கூட்டமே இருக்கிறது.
தன் துணையை அழைக்கத்தான் பல்லி கத்துகிறது என்பது படித்தவருக்குக் கூடப் புரியவில்லை.

பூனை குறுக்கே சென்றால் அது எலிக்குத் தான் கெட்டகாலம் ஆனால் இந்த மனிதனோ தனக்குக் கெட்டகாலம் என்று நம்புகிறான்..

'ஒரு அரசன் காலையில் தன் மாளிகையிலிருந்து கீழே பார்த்தானாம்.
ஒரு ஏழை அந்தப்பக்கம் சென்று கொண்டிருந்தானாம். அரசனுக்கு அன்று முழுதும் நடந்த நிகழ்வுகள் சரியில்லையாம். தான் காலையில் முழித்த முகம் சரியில்லை என்ற எண்ணம் வந்ததாம். தன் வீரர்களை அழைத்து தான் காலையில் விழித்த அந்த ஏழை எங்கிருந்தாலும் அழைத்து வாருங்கள் என்ற கட்டளையிட்டானாம்.
ஏழையும் அழைத்துவரப்பட்டான். அரசன் அந்த ஏழைக்கு மரணதண்டனை விதி்த்தானாம். சிரித்தானாம் அந்த ஏழை!
சாவின் விளிம்பில் நிற்பவன் சிரிக்கிறானே என்று குழம்பிய அரசன்,

ஏன் சிரிக்கிறாய்?

என்று கேட்டானாம். அந்த ஏழை சொன்னானாம்.

“என்னைப் பார்த்த தங்களுக்காவது சிறு சிறு துன்பங்கள் தான் நேர்ந்தது.
நான் காலையில் தங்கள் முகத்தில் தான் விழித்தேன். எனக்கோ உயிரே போகப் போகிறது. யார் ராசியில்லாதவர் என்று எண்ணிப்பார்த்தேன் அது தான் சிரித்தேன் என்றானாம்.”


கண் துடிப்பதற்கு நரம்பியல்க் கூறுகள் காரணமாகின்ற. ஆனால் வலக்கண் துடித்தால் ஒரு பலன், இடக்கண் துடித்தால் ஒரு பலன் என இவர்கள் படும் பாடு கொஞ்சமல்ல.

நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கையாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது.

மனிதன் தன்னைப் போலவே தன் நம்பிக்கைகளையும், கடவுள் குறியீடுகளையும் படைத்துக்கொண்டான்.

நற்றிணைப் பாடல் ஒன்று,


தினைக்கதிர்களை உண்ணச் சென்ற காட்டுப்பன்றி தவறான திசையிலிருந்து பல்லி கத்தியதால் தனக்கு துன்பம் நேரும் என்று அஞ்சி பின் திரும்பியாதாக ஒரு குறிப்பு உள்ளது.

பாடல் இதோ,


எய்ம் முள் அன்ன பரூஉ மயிர்எருத்தின்
செய்ய்ம்ம் மேவல் சிறு கட் பன்றி
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர், வீங்கு பொறி
நூழை நுழையும் பொழுதில், தாழாது
5 பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டென,
மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து, தன்
கல் அளைப் பள்ளி வதியும் நாடன்!
எந்தை ஓம்பும் கடியுடை வியல் நகர்த்
துஞ்சாக் காவலர் இகழ் பதம் நோக்கி,
10 இரவின் வரூஉம் அதனினும் கொடிதே-
வைகலும் பொருந்தல் ஒல்லாக்
கண்ணொடு, வாரா என் நார் இல் நெஞ்சே!


புலவர் - உக்கிரப் பெருவழுதி

நற்றிணை - 98. (குறிஞ்சி)

பாடல் குறிப்பு.

இரவுக்குறி வந்தொழுகும் தலைவனத் தோழி வரைவு கடாயது ( திருமணத்துக்கு அறிவுறுத்தியது)

களவுக்காலத்தில் இரவுக்குறியில் (இரவுசந்திப்பு) பல தடைகளையும் மீறி வந்து தலைவியைச் சந்தித்து மகிழும் தலைவனிடம் தோழி,

நீ பல அச்சம் நிறைந்த வழிகளில் காவல்களை மீறி வருகிறாய். அதனால் உனக்கு ஏதும் தீங்கு நேருமோ என தலைவி அஞ்சுகிறாள். நீ இரவில் வரும் வழியினும் அதனால் வருந்தும் தலைவியின் இமை மூடாத கண்களும், உன்னைத் தேடிச்சென்று திரும்பி வராத நெஞ்சமும் கொடியன என்கிறாள்.

பாடலின் பொருள்.

முள்ளம் பன்றியின் முள்ளைப் போன்ற பருத்த மயிர்களையுடைய பிடரியும், சிறிய கண்களையும் கொண்டது காட்டுப்பன்றி. அது தினைப் பயிர்களை உண்பதை விரும்பிச் சென்றது. பெரிய இயந்திரம் பொருத்திய பகுதியில் அப்பன்றி செல்லும் போது பல்லியொன்று கத்தியது. பல்லியின் ஒலியைத் தனக்கு எதிர்வரும் துன்பத்தின் குறியீடாக எண்ணிய பன்றி தினை உண்ணாமல்த் திரும்பி மலைப் பகுதியில் தங்கியது.

எம் தந்தைபால் பாதுகாக்கப் படும் காவல் நிறைந்த மாளிகையில் தூங்காத காவலர் சிறிது அயர்ந்த நேரத்தில் வந்து நீ தலைவியைப் பார்த்து மகிழ்கிறாய். உன்னை எண்ணித் தலைவி வருந்துகிறாள். நீ வரும் துன்பம் நிறைந் வழிகளைக் காட்டிலும் தலைவியின் மூடாத இமைகளும், உன்னைத் தேடிச்சென்று திரும்பாத அவளின் நெஞ்சும் கொடியன. என்று தலைவனைப் பார்த்து வரைவு கடாவினாள் தோழி (தலைவன் தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டினாள்)இதனால் தலைவியின் அன்புமனதும் எடுத்துரைக்கப்பட்டது.

இப்பாடலின் உட்பொருள்.

� காட்டுப் பன்றி கூட வழித்துன்பம் கண்டு தன் பயணத்தை தவிர்க்கும் நீயோ எதற்கும் அஞ்சாது வந்து தலைவியைப் பார்க்கிறாய். உனக்கு ஏதும் துன்பம் நேருமோ என்ற அச்சத்தால் தலைவிக்கு தூக்கம் வருவதில்லை. உன்னை எண்ணிச் சென்ற அவளின் மனது அவளிடம் மீண்டும் வராமல் மிகவும் வருந்துகிறாள்.

� பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்

1. பல்லி கத்துவது நன்மை, தீமைக்கான குறியீடு என்ற நம்பிக்கை சங்ககாலத்திலேயே இருந்தது என்பதை அறியமுடிகிறது.
2. இயல்பாகவே விலங்குகள் ஒலிகளை உள்வாங்கிச் செல்வது வழக்கம். ஆனால் பன்றி, பல்லியின் ஒலியை துன்பத்திற்கான குறியீடாகக் கொண்டது என்ற புலவரின் கற்பனை, அவர்களின் எண்ணத்தின் வெளிப்பாடகக் கொள்ள முடிகிறது.
3. வரைவு கடாவுதல் (திருமணத்திற்குத் தூண்டுதல்) என்றும் அகத்துறை விளக்கப் படுகிறது
4. இரவுக்குறி ( தலைமக்களின் இரவு நேர சந்திப்பு) என்னும் அகத்துறை உணர்த்தப்படுகிறது.
5. வீங்கு பொறி என்பது பெரிய இயந்திரம் என்ற பொருளுடையது. பன்றிகளைப் பிடிக்க பெரிய இயந்திரங்களைச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தினர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.