வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சாலையைக் கடக்கும் பொழுதுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாலையைக் கடக்கும் பொழுதுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 ஆகஸ்ட், 2014

எல்லா சாலைகளும் மருத்துவமனையை நோக்கி...


கல்வியின்மையும், வறுமையும், வேலைவாய்ப்பின்மையும், அறியாமையும், மக்கள் தொகைப் பெருக்கமும் மிகுந்து காணப்படுகின்ற நமது நாட்டில், துறைதோறும் வெளியிடப்படுகின்ற புள்ளிவிவரங்கள் அனைத்தும், ஒவ்வொரு துறையிலும் நாம் அடைந்திருக்கும் வீழ்ச்சியை முன்வைக்கின்றன.
இன்றைய நமது வாழ்க்கை முறையின் அனைத்துக் கூறுகளும் மருத்துவமனைகளையும், மருந்துகளையும் நோக்கியே நம்மை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. அதிலும் தமிழ்நாடு, நோய் மயம், சிகிச்சை மயம், மருந்து மயம், மருத்துவர் மயம், மருத்துவமனைகளின் மயமாக மாறிக்கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை.
தமிழ்நாட்டில் இருசக்கர வாகனங்கள் உட்பட மொத்தம் 1,86,69,500 வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் வெளிவரும் புதிய வாகனங்களின் எண்ணிக்கை தலைசுற்ற வைக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் 16 லட்சம் புதிய வாகனங்கள் சாலைகளுக்கு வந்துள்ளன.
இதே பாய்ச்சலில், விபத்துகளின் எண்ணிக்கையும், உயிரிழப்புகள் மற்றும் உடலுறுப்பு இழப்புகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் உயர்ந்துகொண்டேயிருக்கிறது. இந்திய அளவில் கடந்த 2003 முதல் 2012 வரையிலான பத்து ஆண்டுகளில் மட்டும் 12 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்திருக்கின்றனர். 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் மற்றும் படுகாயங்களுக்கு உள்ளாகி முடங்கியுள்ளனர்.
அதாவது, சராசரியாக ஓர் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களை சாலை விபத்துகளில் இந்தியா பறிகொடுத்துக் கொண்டிருக்கிறது. காயம், படுகாயம் மற்றும் உடலுறுப்புகள் இழப்புக் கணக்குத் தனிக் கணக்கு.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், இன்றைய நிலையில் ஓர் ஆண்டுக்கு 16,000-க்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். காயம், படுகாயம், உடலுறுப்புகள் இழப்பு, வாகனங்களின் காயம் என்பது தனிக் கணக்கு.
அதாவது, ஒரு மாதத்திற்குச் சராசரியாக 1,350 பேர். இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு நாளைக்குச் சராசரியாக 56 பேர் எனும் கணக்கில், இன்றைய தமிழ்நாடு தனது மனித உயிர்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறது.
1993-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த 34,925 சாலை விபத்துகளில் 7,300-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். 32,336 பேர் காயம் மற்றும் படுகாயமடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை எகிறிக்கொண்டே வந்து 2013-ஆம் ஆண்டில் 66,238 விபத்துகளாகவும், 15,563 உயிரிழப்புகளாகவும், 76,000 காயம் மற்றும் படுகாயம் அடைந்தோராகவும் உயர்ந்து இருக்கிறது.
தமிழ்நாட்டின் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் விபத்து காரணமாக மட்டும் ஆண்டுக்கு சராசரியாக ஒரு லட்சம் பேர் அனுமதிக்கப்படுகின்றனர். இந்தப் புள்ளிவிவரங்களெல்லாம் காவல்துறையில் பதிவான விபத்துகளின் அடிப்படையில் மட்டுமே. காவல்துறைவரை செல்லாத விபத்துகளின் எண்ணிக்கை கணக்கிலடங்கா.
அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் தற்போது 6,800-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள், ஆண்டில் ஒரு சில நாள்களைத் தவிர, மற்ற அனைத்து நாள்களிலும் 22,000 கோடிக்கு மேல் மது வகைகளை விற்பனை செய்கின்றன. மதுவை உறிஞ்சிப் பழகிவிட்ட ஒருவர், காலப்போக்கில் மதுவினால் உறிஞ்சப்பட்டு மரணமடைவார் என்பது உறுதி.
அரசு "டாஸ்மாக்' மதுபானக் கடைகளின் சுகாதாரமற்ற குடிப்பகங்களில் தொடங்கி, தனியார் விடுதிகள் மற்றும் நட்சத்திர விடுதிகளின் ஆடம்பரமான குடிப்பகங்கள் வரை மதுப் பழக்கம் என்பது நமது மக்களின் பொதுப் பழக்கமாக மாறிவிட்டது.
மதுவை இயல்பாகக் கையாளுவதைப் போன்று ஏராளமான கதாபாத்திரக் காட்சிகளை தமிழ்த் திரைப்படங்கள் முன்வைக்கின்றன. அண்மைக் காலப் படங்களில் அதிகரித்திருக்கும் இந்தப் போக்கு, இளைஞர்களின் மதுப் பழக்கத்திற்கு மறைமுகமாக வலிமை சேர்த்து அப்பழக்கத்தை அங்கீகரிக்கின்றன.
பதின்ம வயதுகளில் தொடங்கி தனது இளமை முழுவதும் மது குடிப்பவர்கள், அதன்பிறகு தன் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் எவ்வகையிலும் பயன்படாத உயிர்ச்சுமைகளாக உளைச்சல் அடைந்து, அவ்வுளைச்சல்களையே மற்றவர்களுக்கும் கொடுப்பவர்களாக மாறுகின்றனர்.
இப்படியான குடி நோயாளிகள் மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினர் அடையும் மன அழுத்தங்கள் தொடர்பான நோய்களுக்கும் நமது மருத்துவமனைகளின் வாயிலாகவே தீர்வு கண்டாக வேண்டும். எனவே, இவ்வகையிலும் மருத்துவமனைகள் கூடுதல் சுமைகளைப் பெறுகின்றன.
அடுத்து பரவி வரும் புதிய சிக்கலாக உணவுக் கலாசாரம் மாறியிருக்கிறது. நடைபாதை உணவுக் கடைகள் முதல் நட்சத்திர விடுதி உணவுக் கூடம்வரை மக்கள் கூட்டம் கூட்டமாக உண்கின்றனர்.
பசிக்காகவோ, சத்துக்காகவோ அல்லாமல், புதிய புதிய ருசிக்காகவும், மேலைநாட்டு நாகரிகமாகவும் இந்தக் கலாசாரம் பரவிக் கொண்டிருக்கிறது. பொருந்தாத உணவுகள் பெருந்தீனியாக உட்கொள்ளப்படுவதால் ஏற்படுகிற புதிய புதிய நோய்கள் பெருகிக் கொண்டேயிருக்கின்றன.
துரித உணவு என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உண்பதால், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படுகின்றன. உணவுகளே நோய்களாக மாறி மக்களைக் கொல்லுகின்ற அவலம் பெருகி வருகிறது.
இதுபோன்ற உணவுகளின் விளைவால் 29 பேர் இறந்ததாக 1990-ஆம் ஆண்டு ஆய்வு சொல்கிறது. 2008-ஆம் ஆண்டின் ஆய்வோ அவ்வகை மரணங்கள் 53 நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
எதிர்வரும் 2020-ஆம் ஆண்டு இவ்வகையிலான (அதாவது, புது புது வகையான பெருந்தீனிகளை வயிற்றில் அடைத்துக் கொள்வதால்) மரணங்கள் 57 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துரித உணவு வகைகள் பெரியவர்களை மட்டுமல்ல, இளம் குழந்தைகளையும் சீரழித்துச் சிதைக்கிற உண்மைகளை "அறிவியல் - சுற்றுச்சூழல் மையம்' (Centre for Science and Environment) மிக விரிவாகத் தெளிவுபடுத்தி எச்சரித்திருக்கிறது.
துரித உணவுகளைத் தடை செய்தும், துரித உணவு விளம்பரங்களுக்குக்கூட தடைவிதித்தும், துரித உணவுகளுக்கு அதிகமாக வரி விதித்தும் பல வல்லரசு நாடுகள் உள்ளிட்ட உலகின் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது மக்களை துரித உணவுக் கலாசாரத்தில் இருந்து காப்பாற்றும் பொருட்டு அதிரடியாகக் களமிறங்கிச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
துரித உணவு வணிகத்திற்கு பல மேலை நாடுகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கிற கடுமையான நெருக்கடிகள் நமது இந்தியாவுக்கான பெருஞ்சந்தை வாய்ப்புகளாக மாற்றப்பட்டுவிட்டன.
இதன் விளைவாக கோடிக்கணக்கான நமது குழந்தைகள் தங்களது வளரும் பருவத்திலேயே நோய்களில் வீழ்கிறார்கள். இந்த அவலநிலையை மாற்றுங்கள் என்று நமது மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறது சி.எஸ்.இ. என்ற அமைப்பு.
இதுமட்டுமின்றி உலகளாவிய நீரிழிவு நோய் கழகம் (International Diabetes Federation), உலகளாவிய மருத்துவ ஆய்வு இதழான Epidemiologyபோன்ற ஆய்வு அமைப்புகள் இந்தியாவில் பெருகிப் பரவிவரும் நோய்களின் அளவு அபாயகரமான கோடுகளைத் தொடுவதாக ஆய்வுபூர்வமாகவே தெரிவிக்கின்றன.
மனித வளம் என்கிற நமது வலிமையின் மீதும் பெருமையின் மீதும் மிகப்பெரிய அளவில் நோய்களின் வடிவில் இடிகள் இறங்கிக் கொண்டிருக்கின்றன.
அவ்வகையில் துரித உணவு, பொட்டல உணவு, சத்தில்லாத உணவு போன்ற காரணங்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கும் பல்வேறு நோய்களுக்குத் தீர்வு காணவேண்டிய இடமும் மருத்துவமனைகள்தான்.
இவையெல்லாம் போதாதென்று இயற்கைப் பேரிடர்கள், வகுப்புக் கலவரங்கள், புகையிலை நோய்கள், குடும்ப வன்முறைகள், குடும்ப விபத்துகள், தாய்சேய் நலன் மற்றும் பொது நோய்கள் போன்றவற்றுக்கும் மருத்துவமனைகள்தான் உதவிக்கரங்களை நீட்டியாக வேண்டும்.
அதேபோல, எத்தகைய நோய்க் கொடுமைகளுக்கும் ஆளாகாமல் தங்களது எழுபத்தைந்து வயதைக் கடந்துவிட்ட நமது மூத்த குடிமக்களுக்கு நேருகின்ற இயற்கையான வயோதிக நோய்களையும்கூட மருத்துவமனைகள்தான் இயன்றவரை சரிசெய்தாக வேண்டும்.
தமிழ்நாட்டில் சிறியவையும், பெரியவையும், மிகப் பெரியவையுமாக 12,350-க்கும் மேற்பட்ட அரசுச் சார்பான பல்வகை மருத்துவச் சேவை அமைப்புகள் இரவு பகலாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவை போதாதென்று தனியார் மருத்துவமனைகளும், மருந்து விற்பனையகங்களும் நாடு தழுவிய அளவில் லட்சக் கணக்கில் இருக்கின்றன.
ஏழைகள், அரசு மருத்துவமனைகளிலும், பணக்காரர்கள் தனியார் மருத்துவ மனைகளிலும் தஞ்சமடைகின்றனர். வாகன விபத்துகள், மதுப்பழக்க நோய்கள், உணவு முறை நோய்கள், மனநலச் சிதைவு நோய்கள், இயற்கைப் பேரிடர்கள் என்று எண்ணிலடங்கா வழிகளில் நமது மக்கள் வலுக்கட்டாயமாக மருத்துவமனைகளை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.
அப்படித் தள்ளப்படுவோரில் வசதிபடைத்தவர்களை தனியார் மருத்துவமனைகள் தன்பக்கம் வரவழைத்துக் கொள்கின்றன. வசதியற்றவர்கள் அரசு மருத்துவமனைகளில் கிடத்தப்படுகிறார்கள்.
விபத்தில் அடிபட்டு மூளைச்சாவு அடைந்தவர்கள், தங்களது உயிரைக் கொடுத்து, தங்களது உடல் உறுப்புகளையும் தேவைப்படுவோருக்குக் கொடுக்கிறார்கள். ஆனால், இத்தகையப் பரிமாற்றம் தொடர்பான சிகிச்சைகள் மட்டும் லட்சங்களை மேசைமேல் வைத்தால்தான் நடக்கும் என்ற நிலை ஒரு கசப்பான உண்மை.
அதற்கும் ஆயிரம் காரணங்களும் கணக்குகளும் இருக்கலாம். அத்தகைய வணிகக் கணக்குகளின் முன்பாக மனிதநேயக் கணக்குகள் எதுவும் செல்லுபடியாவதில்லை.
நோய்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து களைவது, நோய்களை சேவை நோக்கில் தீர்ப்பது எனும் இரண்டு நிலைகளில் நமது அரசுகள் செயல்பட்டாக வேண்டிய நேரம் இது.
புதிய கொள்கைகளையும் சட்டங்களையும் வகுத்து நடைமுறைப்படுத்தினால்தான் ஏழை எளியவர்கள் நட்சத்திர மருத்துவமனைகளைப் பார்த்து ஏங்காமல் உயிர்பிழைப்பார்கள்.
உயிர்களை மையப் பொருளாக வைத்து, மருத்துவ வணிகமுறை கோரதாண்டவமாடிக் கொள்ளையடிக்கும் போக்கினை, அரசுகள் நினைத்தால் மட்டுமே மாற்றியமைக்க முடியும்.
உயிர் என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். வாழ்வுரிமை என்பதும் எல்லோருக்கும் சமமானது. பணம் படைத்தவர்களை மட்டுமே பாதுகாப்போம் எனும் போக்கு மனிதத் தன்மைக்கும் மருத்துவ நாகரிகத்திற்கும் எதிரானது.


First Published : 20 August 2014 02:49 AM IST

நன்றி தினமணி.

வியாழன், 15 நவம்பர், 2012

ஒரு எலியும் மூன்று காக்கைகளும்


இறந்த எலிக்கும் மூன்று காக்கைகளுக்கும் இடையே உள்ள தூரம் தான் 
நம் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே உள்ள தூரம்.

இதற்குள் எத்தனை எத்தனை ஆசைகள், கனவுகள்,ஏக்கங்கள், துக்கங்கள்....


சென் கதைகள் இரண்டு....

1. சென் குரு இகியு இளம் வயதிலேயே அறிவு முதிர்ச்சியுடன் 
காணப்பட்டார்.சிறுவனாய் இருக்கும்போது ஒரு நாள் தன் குரு வைத்திருந்த ஒரு அருமையான,மிகப் பழமையான , அபூர்வமான  தேநீர்க் கோப்பையை கை நழுவி உடைத்து விட்டார்.அவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.அப்போது குருவின் குரல் கேட்டது.உடனே வேகமாக அவர் குருவிடம் சென்று,''அய்யா,பிறக்கும் உயிர்கள் ஏன் இறக்க வேண்டும்?''சின்ன வயதிலேயே இப்படிக் கேள்வி கேட்கிறானே என்று மகிழ்ந்து குரு சொன்னார்,''அது இயற்கை . தவிர்க்க முடியாதது..பிறந்த ஒவ்வொன்றும் அதற்குரிய காலம் முடிந்தவுடன் இறக்கத்தான் செய்யும்.''இகியு சொன்னார்,''அய்யா,நான் உங்களுக்கு ஒரு தகவல் சொல்ல வேண்டியிருக்கிறது.
உங்களின் தேநீர்க் கோப்பைக்கு 
காலம் முடிந்ததால் இறந்து விட்டது.''

2. சென் ஞானி ஒருவரின் மனைவி இறந்து விட்டார்.துக்கம் விசாரிக்க ஊரே திரண்டு வந்திருந்தது.எல்லோர் முகத்திலும் வருத்தம்,கண்ணீர்.ஆனால் ஞானியோ கைகளால் தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருந்தார்,சர்வசாதாரணமாக!வந்தவர்களுக்கு அதிர்ச்சி.ஒருவன் துணிந்து கேட்டான்,
''குருவே,நீங்களே இப்படி செய்யலாமா?
என்ன இருந்தாலும் இவ்வளவு காலம் உங்களுடன் வாழ்ந்த உங்கள் மனைவி இறந்திருக்கும்போது,
நீங்கள் கவலையின்றி பாடிக் கொண்டிருக்கிறீர்களே?
''ஞானி சொன்னார்,''பிறப்பில் சிரிக்கவோ.இறப்பில் அழுவதற்கோ என்ன இருக்கிறது?பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை.என் மனைவிக்கு முன்பு உடலோ,உயிரோ இல்லை.பிறகு உயிரும் உடலும் வந்தன.
இப்போது இரண்டும் போய்விட்டன.
இடையில் வந்தவை இடையில் போயின.
இதில் வருத்தப்படுவதற்கு என்ன இருக்கிறது?''


தொடர்புடைய இடுகை..

வெள்ளி, 12 அக்டோபர், 2012

தன்மானம் மிக்கவர்..



நாள்தோறும் இதுபோன்ற ஆயிரம் காட்சிகளை நாம் காண்பதுண்டு. ஆனாலும் நேற்று கண்ட இந்தக் காட்சி என் மனதில் ஆயிரம் கேள்விகளை எழுப்பிச் சென்றது..

கொம்பு இல்ல..
வாலு இல்ல..
நாலு காலும் இல்ல..
என்ன இது இரண்டு கால்தான் இருக்கு..?

அடடா!
இவர் மனிதர்தான்..

இது ஒன்றும் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த படமல்ல..
நேற்றுதான் இப்படியொரு காட்சியைக் கண்டேன்.

இது ஒன்றும் அரிய காட்சியல்ல..

இந்த உலகில் நாம் காணும் ஒவ்வொரு காட்சியும் நமக்குப் பாடம் என்றொரு பொன்மொழி உண்டு. இந்தக் காட்சி எனக்கு உணர்த்திச் சென்ற பாடத்தையே இங்கு பதிவு செய்கிறேன்..

இவர்...

திருடவில்லை, பொய்சொல்லவில்லை, பிச்சையெடுக்கவில்லை,
யாரையும் ஏமாற்றவில்லை..

நாள்தோறும் நாளிதழ் படிக்கும்போதும், தொலைக்காட்சி செய்திகள் பார்க்கும்போதும் மனதில் கேள்விகள் எழும்...

மனிதர்களில் இத்தனை வகைகளா? இப்படியும் இருப்பார்களா? என்பதுதான்..

வாழ்க்கை ஒரு விற்பனை நிலையம்
இங்கு
தன்னைப் புரிந்துகொண்டவர்கள் விற்பனையாளனாகிறார்கள்
தன்னைப் புரிந்துகொள்ளாதவர்கள் விற்பனைப் பொருளாகிறார்கள்

என்றொரு பொன்மொழி உண்டு.

இந்த மனிதர் (பொய்சொல்லும்) விற்பனையாளனாகவில்லை
(ஏமாந்த) நுகர்வோராகக் கூட ஆகவில்லை..
விற்பனைப் பொருளாகிவி்ட்டாரே.. என்று தான் தோன்றியது.

 இன்றைய அரசியல்வாதிகளை, நடிகர்களை, ஆன்மீகவாதிகளையெல்லாம் விட ஆயிரம் மடங்கு மேலானவராகவே இவர் தெரிகிறார்.


குளிர்சாதன அறையிலிருந்து கொண்டு குப்பைமேட்டிலிருப்பவர்களின் சுருக்குப்பையிலிருக்கும் பணத்தை எப்படி பறிப்பது என்று திட்டம் தீட்டும் ஆயிரம் ஆயிரம் படித்த முட்டாள்களைவிட படிக்காத இந்த முட்டாள் ஆயிரம் மடங்கு மேலானவர் என்பது என் கருத்து.

இவரிடமிருக்கும் தன்மானம், உழைப்பு நான் இவரிடம் கற்றுக்கொண்ட பாடம்.

தொடர்புடைய இடுகைகள்

திங்கள், 16 ஜூலை, 2012

காவல்துறை நம் நண்பன் (ஈரோடு)


ஈரோடு போக்குவரத்துக் காவல்துறையினால், ஈரோடு பேருந்துநிலையம் அருகே வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வுப் பலகையைத் தான் மேலே காண்கிறீர்கள்.

இந்தப் புள்ளிவிவரங்களைக் காணும்போது அதிர்ச்சியாக இருந்தாலும், வாகனங்களை மிகவும் கவனமாக ஓட்டவேண்டும் என்ற சிந்தனை காண்போர் ஒவ்வொருவருக்கும் தோன்றுகிறது.

ஈரோடு போக்குவரத்துக் காவல்துறையினருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

வெள்ளி, 6 ஜூலை, 2012

வருமுன் காப்போம்.



வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்
                                                                              திருக்குறள்-435

சாலையைக் கடக்கும்பொழுதுகளில் எவ்வளவோ காட்சிகளைக் காண்கிறோம். அவையெல்லாம் நம் மனதில் பதிவதில்லை.

மனதில் பதிந்த சாலைப்பாதுகாப்பு குறித்த சில விழிப்புணர்வளிக்கும் சிந்தனைகள்...


ஓட்டுநரின் தூக்கம்
ஒட்டுமொத்த மக்களின் துக்கம்


பார்த்துசென்றுவா ரோட்டில்
உன் மனைவி காத்திருப்பாள் வீட்டில்

சாலையில் தடுமாற்றம்
வாழ்க்கையில் ஏமாற்றம்


போதையில் சென்று வாழ்க்கைப்
பாதையில் மாறிவிடாதே

குறைவான வேகம்
நிறைவான பயணம்

உலகிலேயே விலைமதிப்புமிக்கது “ உயிர்“

சாலையைப் பார்த்தால் பயணம்
சேலையைப் பார்த்தால் மரணம்

சிவப்பு விளக்கை மதித்தால்
இரத்தம் சிந்துதலைத் தவிர்க்கலாம்


செவ்வாய், 5 ஜூன், 2012

108ஐ அழைக்காதே......!


    இன்று மாலை சாலை வழியே நடந்து வந்துகொண்டிருந்தேன். என்னைக் கடந்து ஒரு ஆட்டோ சென்றது.
    வழக்கமாக ஆட்டோக்களின் பின்னால் எழுதப்பட்ட வாக்கிங்களைப் படிப்பது என் பழக்கம். இன்றும் இந்த ஆட்டோவில் என்ன எழுதியிருக்கிறார்கள் படிக்கலாம் என்று பார்த்தேன்..

    ........................108 ஐ அழைக்காதே..

    என்ற செய்தி தான் முதலில் என் கண்களுக்குப் பட்டது.

    வியப்புடன் ஏன் இப்படி எழுதியிருக்கிறார்கள்? 108 அவரசரகால மருத்துவஉதவி வாகனமல்லவா? அதை அழைக்காதே என்று ஏன் சொல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் முதலில் எழுதப்பட்ட செய்தியைப் பரபரப்பாகத் தேடின என் கண்கள்.

    100ல் போகாதே 108ஐ அழைக்காதே என்பதுதான் அதில் எழுதப்பட்டிருந்த முழுமையான வாக்கியம்.

    படித்து முடித்தவுடன் நல்லவொரு சாலை விழிப்புணர்வுதரும் செய்தியைப் படித்த மனநிறைவு ஏற்பட்டது.

    விரைவாகச் செல்லுதல் தானே நடைபெறும் சாலைவிபத்துகளில் குறிப்பித்தக்கதாகவுள்ளது..!

    என சிந்தித்துக்கொண்டே நடந்து வரும் போது உள்மனம் சொன்னது...
    இந்த விழிப்புணர்வுதரும் செய்தியை எழுதிவைத்திருந்த அந்த ஆட்டோ, இவ்வளவு விரைவாகச் சென்று கண்ணில் மறைந்துவிட்டதே என்று..

    அறிவுரைகள் அடுத்தவருக்குத்தான் என்பதே வாழ்வியல் உண்மை!
    அதனால் இந்த இடுகை உங்களுக்கு நான் சொல்லும் அறிவுரையல்ல.

    என் வாழ்வில் நான் ஏற்கும் உறுதிமொழி.(முடிந்தால் நீங்களும்...)

  1. 100ல் போகாதே 108ஐ அழைக்காதே என்ற  விழிப்புணர்வு வாக்கியத்தை வாகனம் ஓட்டும் போதெல்லாம் நான் நினைவில் கொள்வேன். 

      

புதன், 2 மே, 2012

சிறப்பான பயணம்.

நம்மால் முடியும்..



சாலை விழிப்புணர்வு
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

திருக்குறள் -435 

குற்றம் நேர்வதற்கு முன்னரே வராமல் காத்துக்கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன்னர் நின்ற வைக்கோல் போர் போல அழிந்துவிடும்.

சனி, 21 ஏப்ரல், 2012

சாலையைக் கடக்கும்போது...


சாலையைக் கடக்கும்போது இது போல எத்தனை எத்தனை விழிப்புணர்வளிக்கும் செய்திகளைப் பார்க்கிறோம்..
கொஞ்சம் சிந்திக்கலாமே...

வியாழன், 22 மார்ச், 2012

வயிற்றுக்காக வாழ்கிறோம்..


இன்று காலை 7.30 மணிக்கு பணிக்குச் சென்றுகொண்டிருந்தேன்.
பேருந்தைப் பிடிக்க விரைவாக நடந்து சென்றபோது சாலையின் மறுபுறம் சிலமணித்துளிகள் கண்ட காட்சி சிலமணி நேரங்களை விழுங்கிவிட்டது..

ஒரு உணவுவிடுதி அதன் வாயிலில்...

ஒரு மனநோயாளி குளித்து சில ஆண்டுகளாகியிருக்கும்
அவர் உறங்கி சில வாரங்கள் ஆகியிருக்கும்
அவர் உணவுஉண்டு சில நாட்கள் ஆகியிருக்கும்

அவரை அந்தக் கடையின் உரிமையாளர் விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தார்.

இந்த மனநோயாளிக்கு உணவைத்தவிர வேறு எதுவுமே தெரியவில்லை.

சற்று உற்றுப்பார்த்தேன் உரிமையாளரின் கையில் பாத்திரத்தில் சுடுதண்ணீர்உள்ளது..

மரியாதையா போயிடு.. இல்ல.. உன் மேலேயே ஊத்திடுவேன்..
என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்..

இப்போதும்....
இந்த மனநோயாளிக்கு உணவைத்தவிர வேறு எதுவுமே தெரியவில்லை.

எதிர்பாராத நேரத்தில் உரிமையாளர் அந்த மனநோயாளியின் மீது சுடுதண்ணீரை ஊற்றியே விட்டார்...

இந்த மனநோயாளி தட்டுத்தடுமாறி அந்த உரிமையாளரைத் தாக்கமுயற்சிக்கிறார்...

உள்ளே சென்ற உரிமையாளர் நீளமான கம்போடு வந்து அந்த முதியரை இரண்டு அடிஅடித்து விரட்டிவிட்டார்..

அவ்வளவுதான்...

அந்த மனநோயாளி அந்தக் கடையைவிட்டுச் சென்றுவிட்டார்.
அந்த உரிமையாளர் வியாபாரம் பார்க்கச் சென்றுவிட்டார்.
நான் என் வேலைக்கு வந்துவிட்டேன்..

எது சரி? எது தவறு? என்று தெரியாத அந்த மனநோயாளி..


எல்லாம் தெரிந்தும்..
உயிருள்ள இந்த மனித உயிருக்குக்
கொடுக்கவிரும்பாத உணவை
இறைவனுக்குப் படைத்து
வியாபாரம் தொடங்கும் அந்தக் கடை உரிமையாளர்..


இதைப் பார்த்தும் என் வேலைக்காக 
அவ்விடத்தைவிட்டுக் கடந்த நான்..

என நாம் எல்லோருமே வாழ்கிறோம்..
நம் வயிற்றுக்காக.

இருந்தாலும் மனது சொன்னது..
என்ன இருந்தாலும் நீ போய் அந்தக் கடையில் ஒரு சாப்பாடாவது வாங்கி அந்த நோயாளிக்குக் கொடுத்திருக்கலாமே என்று..

அறிவு சொன்னது...
நீ அப்படிச் செய்தால்.. அந்தக் கடைக்காரன் கேட்பான்..
ஏம்பா இன்றைக்கு நீங்க வாங்கித்தருவீங்க.. இவன் நாளைக்கும் இதே நேரத்தில் இங்கு வந்துநின்றால் நான் எப்படி வியாபாரம் பார்ப்பேன் என்று.. நீ உன் வேலையைப் பார்த்துவிட்டுப் போ என்று...

பெரும்பாலும் மனதை அறிவு வென்றுவிடுகிறது..

இருந்தாலும் மனதுக்குள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது...


“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் 
சகத்தினை அழித்திடுவோம் ”
 பாரதி
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்”

திருக்குறள் 1062


தொடர்புடைய இடுகை

பசிப்பிணி மருத்துவன்






புதன், 21 மார்ச், 2012

உயிரைப்பற்றிக் கவலையே இல்லையா?

கண்ணில் பட்டதும்
மனதைச் சுட்டதும்..



தொடர்புடைய இடுகை


செவ்வாய், 13 மார்ச், 2012

சாலை ஆத்திச்சூடி

இந்தியாவில் மட்டும் ஒரே ஆண்டில் 1.30 இலட்சம் பேர் சாலைவிபத்தில் பலியாகியிருக்கின்றனராம்.

சாலையைக் கடக்கும்போது கண்ணில்பட்ட விழிப்புணர்வளிக்கும் ஆத்திச்சூடி ஒன்றை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

படிப்போம் கொஞ்சம் பின்பற்ற முயற்சிப்போம்...

வெள்ளி, 16 டிசம்பர், 2011

பண வீக்கம்..?


முதல் மாணவன் - ஏன்டா பண வீ க்கம், பணவீ க்கம் என்று பேசிக்கிறாங்களே.. அப்படின்னா என்ன்னடா?

இரண்டாம் மாணவன் - அது என்னமோ தெரியலடா.. நம்ம புத்தகப் பையைவிட வீ க்கமா இருக்கும்னு நினைக்கிறேன்..
முதல் மாணவன் - !!!!


மாணவர்களின் உடலசைவு மொழிகள் என்ற எனது இடுகை இன்று 

இளமை விகடனில் குட்ப்ளாக் பகுதியில் வெளியாகியுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்..

திங்கள், 31 அக்டோபர், 2011

மனிதன் படைத்த விதி!


பிறப்பும், இறப்பும்..
விழிப்பதும், தூங்குவதும் போல இயல்பானது என்பர் வள்ளுவர்..

பிறப்பைப் போல இறப்புக்கும் மதிப்பு உண்டு..
விலை மதிப்பில்லாத உயிரை சாலைவிபத்துக்களில் இழப்பது கொடுமையிலும் கொடுமை..

உலகம் முழுவதும் சாலைவிபத்துக்களில் ஆண்டொன்றுக்கு 13 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சாலையோரங்களில் எழுதப்பட்டுள்ள விழிப்புணர்வு தரும் சொற்களையும், சாலைவிதிகளையும் யார் மதிக்கிறார்களோ அவர்கள் தம் உயிருக்கும், உடலுக்கும் மதிப்பளிக்கிறார்கள் என்று பொருள்.

இதோ..

இன்று..
இளங்கவிஞர் கேசவன் அவர்களின் விழிப்புணர்வு தரும் கவிதை ஒன்று..

வகுக்கப்பட்ட சாலை விதியே நம்
தலையில்
எழுதப்பட்டதலைவிதி!

கண்ணறியா விதியாம் நம் தலைவிதி
அதை மதியாமல் திரிந்தாலும் தவறில்லை!
நாம் நன்கறிந்த விதியாம்
நம் சாலைவிதி - அதனை
மதியாமல் நடப்பது சரியா..?

பொருளறியா இறை மந்திரங்கள் 
எத்தனையோ ஓதுவதால் 
வாழ்வு செம்மையுறும் என்று நம்பும் நீ
நன்கு பொருளறிந்த சாலையோர 
விழிப்பளிக்கும் சொற்களைமதியாமல் நடப்பது சரியா..?

எத்தனையோ காலங்கள் 
எப்படியெல்லாமோ வீணடித்தாய் நீ!
சாலையைக் கடக்கும் 
அந்த ஒரு மணித்துளியில்
என்னதான் சாதித்திடுவாய்..?
உன் உயிரை அடகு வைத்து
 ஒருநொடி! இருநொடி!
பொறுமை இழந்த நீ
அடுத்த நொடி இழப்பது ஏதென்று அறிவாயோ..?

நொறுக்கப்பட்ட வாகனம்!
 நசுக்கப்பட்ட உடல்கள்!
தெறிக்கப்பட்ட இரத்தங்கள்!
இழக்கப்பட்ட உயிர்கள்!
இவையாவிலும் மேலாக..
உன்னால் துடித்த! 
உனக்காகத் துடித்த 
உறவுகளும் தானடா!

தூய்மையான மழைத்துளி 
சாக்கடையில் விழுவதைப் போல்
ஒப்பில்லா இரத்தத்துளி
தார்ச் சாலையில் விழலாமா..?

எத்தனையோ வார்த்தைகள்!
எண்ணற்ற ஊர்வலங்கள்!
இருந்தென்ன பயனடா..?
வார்த்தை எழுதியவருக்கும்
ஊர்வலம் நடத்தியவருக்கும் 
தானா..
விழிப்புணர்வு..?

உன் உயிர் காப்பவன் இறைவன் என்றால்
நீ மதித்தால்..
சாலைவிதியும் இறைவன் அன்றோ..!!

உன் உயிர் பறிப்போன் எமன் என்றால்
நீ மதிக்காவிட்டால்..
சாலைவிதியும் எமன் அன்றோ!

தாயின் விதி நலம் தரும்!
 பாடசாலை விதி ஒழுக்கம் தரும்!
சாலை விதி வாழ்க்கைதருமடா..!

சாலைவிதிகளை மதிக்காவிட்டாலும்
காலில் போட்டு மிதிக்கலாமா..?

எத்தனையோ விபத்துக்கள்..
அத்தனைக்கும் காரணம்..
மிதிக்கப்பட்ட சாலைவிதிகள்..!

உன் உயிருக்கு மதிப்புக் கொடு!
சாலைவிதிகளை மதித்தொழுகு!
இயற்கையான மரணம் எய்து..!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றால்..
விபத்தற்ற வாழ்வு மதிப்பற்ற செல்வமல்லவா!!!

படைப்பாக்கம்

ச. கேசவன்
இயற்பியல் இரண்டாமாண்டு
கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு.
நாமக்கல் மாவட்டம்
தொடர்புடைய இடுகைகள்

செவ்வாய், 4 அக்டோபர், 2011

சாலையைக் கடக்கும் பொழுதுகளில்..

ஒவ்வொரு நாளும் நாம் சாலையைக் கடக்கும்போது எத்தனை எத்தனை காட்சிகளைப் பார்க்கிறோம்..


சில மணித்துளிகளே ஆனாலும் பல மணி நேர சிந்தனையைத் தூண்டுவனவாக இந்தக் காட்சிகள் அமைவதுண்டு..


என் மனதில் கேள்வி எழுப்பிய..
என்னைச் சிந்திக்கச் செய்த..


சில காட்சிகள் இங்கே..

முதுகெலும்பு
மூட்டை தூக்கி வாழ்ந்தாலும்
முதுகெலும்போடு
வாழ்கிறேன்!

--000--



மனசு
 குப்பையை
சுத்தம் செய்தாலும்
மனசு அழுக்காய்ப்
போவதில்லை!
எமனின் அழைப்பு..
கடவுளின் குரல்!
பேருந்தின் உள்ளே கடவுள்
நடத்துனர் வடிவில் வந்து..
உள்ளே வா! உள்ளே வா!
என்று அழைக்கிறார்..

வெளியே எமன்
அலைபேசி வடிவில் வந்து..
என்னோடு வா! என்னோடு வா!
என்ற அழைக்கிறார்..

பேருந்தின் உள்ளே ஓடும்
பாடலின் பேரோசையில்

கடவுளின் குரல் கேட்பதில்லை!!

தொடர்புடைய இடுகைகள்