வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 டிசம்பர், 2025

இன்னா நாற்பது -கூடா நீதி

 இன்னா நாற்பது என்னும் நூல் கபிலர் என்னும் புலவரால் இயற்றப்பட்டது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற்றொகுதியுள் அடங்குவது. உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். இது கி. பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்த நூலாகும்.

இன்னா என்ற சொல்லுக்கு, துன்பம், தீங்கு, வெறுப்பு, இகழ்ச்சி, அல்லது விரும்பத்தகாதவை 

 

விழுமியம் – கூடா நீதி

 

கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;

நெடுநீர் புணை இன்றி நீந்துதல் இன்னா;

கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,

தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. 3

 

கொடுங்கோல் மன்னன் ஆட்சியில் வாழ்தல் இன்னாதது.

நீண்ட தொலைவு நீரை மிதவை இல்லாமல் நீந்துதல் துன்பம்.

’கடுகடு’வெனப் பேசுபவர் தொடர்பு துன்பம்.

தட்டுத் தடுமாறிக்கொண்டு வாழும் உயிருக்குத் துன்பம்.

 

புதன், 10 டிசம்பர், 2025

நாலடியார் - நல்லினம் சேர்தல்

 

நாலடியார் (Nalatiyar) பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு.இந்நூலைத் தொகுத்தவர் பதுமனார் என்ற புலவர் ஆவார். ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழியில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும்.

 



விழுமியம் – நல்லோர் நட்பு

 



வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமைகளாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இந்நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார்.

அறியாப் பருவத் தடங்காரோ டொன்றி

நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த

நற்சார்வு சாரக் கெடுமே வெயின்முறுகப்

புற்பனிப் பற்றுவிட் டாங்கு.  171

 

வெயில் காயக் காயப் புல்லில் இருக்கும் பனி மறைந்துவிடும். அதுபோல, ஒருவன் தன்  அறியாப் பருவத்தில் அடக்கம் இல்லாதவரோடு சேர்ந்து பழகி, நன்னெறி அல்லாதனவற்றைச் செய்த பிழைகள் எல்லாம் நல்லவர்களோடு சேர்ந்து பழகும்போது போய்விடும்.

திங்கள், 8 டிசம்பர், 2025

பழமொழி நானூறு – வாழ்வியல் அறம்

 


பழமொழி நானூறு அதன் சிறப்புப் பாயிரத்தையும், கடவுள் வணக்கத்தையும் சேர்த்து நாலடியால் அமைந்த நானூற்றொரு (401) பாடல்களைக் கொண்ட நீதிநூலாகும். சங்கம் மருவிய காலத் தமிழ் நூல் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான இது முன்றுறையர் அல்லது முன்றுறை அரையனார் என்னும் சமண முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒரு பழமொழி சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது. இந்த நூலின் காலம் கி.பி 4 ஆம் நூற்றாண்டு என்று கருதப்படுகிறது.

தன்னை அறியும் தலைவன்

பொற்பவும் பொல்லாதனவும் புனைந்(து) இருந்தார்

சொற்பெய்(து) உணர்த்துதல் வேண்டுமோ? - விற்கீழ்

அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! அறியும்

பெரி(து)ஆள் பவனே பெரிது.   82

 பொன் போல் நன்மை பயப்பனவற்றையும், பொல்லாதனவற்றையும்..

வியாழன், 12 ஜனவரி, 2023

திரிகடுகம் - நல்லாதனார்

 


பதினெண் கீழ்க்கணக்கு கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. 101 வெண்பாக்களால் பாடப்பட்டது. சுக்கு, மிளகு, திப்பிலி எனும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தருவதுபோல ஒவ்வொரு பாடலிலும் மூன்று நற்கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

 

விழுமியம் - சான்றாண்மை

பிறர் தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்

திறன் வேறு கூறின் பொறையும், அற வினையைக்

கார் ஆண்மை போல ஒழுகலும், - இம் மூன்றும்

ஊராண்மை என்னும் செருக்கு.   6

 

பிறர் தன்னை உயர்த்திப் பேசும்போது நாணுதலும்,

தன்னை விரும்பாதவர் இகழ்ந்து பேசும்போது பொறுத்துக் கொள்ளுதலும்,

பிறர்க்கு கைம்மாறு கருதாமல் உதவி செய்வதும் சிறந்த செல்வமாகும்.

 

செவ்வாய், 10 ஜனவரி, 2023

இனியவை நாற்பது


இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார் இயற்றியது. 40 வெண்பாக்களைக் கொண்டது. இனியது என்பது இனிமையானது. வாழ்க்கையில் செய்யத்தக்க நற்பண்புகளை இனியது என ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார். இவர் கூறும் நற்பண்புகளை வாழ்க்கையில் கடைபிடித்தல் இனிது.

 

பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகஇனிதே

நற்சலையில் கைக்கொடுத்தல் சாலவும் முன்னினிதே

முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே

தெற்றவும் மேலாயார்ச் சேர்வு. - 1

 

பிச்சையெடுத்தாவது கற்பது இனிது.

அப்படி கற்ற கல்வி நல்ல சபையில் உதவுவது மிக இனிது.

முத்தையொக்கும் மகளிரது வாய்ச்சொல் இனிது.

அதுபோல பெரியோர்களைத் துணையாகக் கொள்ளுதல் இனிது.

செவ்வாய், 2 டிசம்பர், 2014

திங்கள், 17 நவம்பர், 2014

வியாழன், 30 ஜனவரி, 2014

செந்தமிழும் நாப்பழக்கம்


நிறைய படித்தவராக இருந்தாலும் பெரிய பதவியில் இருப்பவராக இருந்தாலும் மேடையில் பேசுவது என்றால் சிலருக்கு தயக்கம் ஏற்படுவது இயல்பாகவே இருக்கிறது. கல்வியில்லாதவனும், ஒருவருடைய குறிப்பை அறியாதவனும், ஆறறிவுடைய மனிதராகப் பிறந்தாராயினும் ஓரறிவுடைய மரங்களாகவே கருதப்படுவர் என்ற கருத்தை, கீழ்க்கண்ட பாடல் எடுத்துரைக்கிறது.

   கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
   
அவையல்ல நல்ல மரங்கள்-சவைநடுவே
    
நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
    
மாட்டா தவன்நல் மரம். (13)  
                                                                             மூதுரை -ஔவையார்
கிளைகளை உடையனவாகியும், கொம்புகளை உடையனவாகியும்,  காட்டினுள்ளே நிற்கின்ற,  அந்த மரங்கள், நல்ல மரங்கள் அல்ல  கற்றோர் சபையின் நடுவே ஒருவர் நீட்டிய ஓலையை,  படிக்கமாட்டாமல் நின்றவனும்,  பிறர் குறிப்பை அறியமாட்டாதவனுமே,  நல்ல மரங்களாம் என்பது இந்தப் பாடலின் பொருளாகும்.

முயற்சியும், பயிற்சியும் இருந்தால் மேடையில் பேசுவது தன்னியல்பாக வந்துவிடும் என்பதை,

வரைய வரையச் சித்திரமும் கைப்பழக்கம் ஆகிவிடும். பேசப் பேசச் செந்தமிழும் பழக்கமாகிவிடும். திரும்பத் திரும்ப நினைத்தால் கற்றது மனத்தில் பதிந்துவிடும். நல்லொழுக்கத்தைத் திரும்பத் திரும்பக் கடைப்பிடித்தால் அதுவும் பழக்கமாகிவிடும். ஆனால், நல்லவர் நட்பு, இரக்கக் குணம், கொடைப் பண்பு ஆகியவை பிறவியிலேயே பதிந்திருந்தால்தான் வரும் என்ற கருத்தை,

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்
என உரைப்பார் ஔவையார்.





ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

உலக எழுத்தறிவு நாள்


எண்ணெழுத்து இகழேல் (கணிதத்தையும், அறநூல்களையும் இகழ்ந்து கற்காமல் விட்டுவிடாதே!

ஓதுவது ஒழியேல் (நல்ல நூல்களைக் கற்பதை ஒருபோதும் விட்டுவிடாதே)
என்று அன்றே ஔவையார் எழுத்தறிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்.

இன்று உலக எழுத்தறிவு நாள்.  (செப்டம்பர் 8)
இந்நாளை யுனெஸ்கோ நிறுவனம் நவம்பர் 17, 1965 இல் உலக எழுத்தறிவு நாளாகப் பிரகடனம் செய்தது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும், சமூகத்துக்கும், அமைப்புக்களுக்கும் அறியவைப்பது இதன் முக்கிய நோக்கம் ஆகும்..
உலகில் சுமார் 781 மில்லியன் வயது வந்தோர் அடிப்படை எழுத்தறிவு அற்றவர்களாக இருக்கிறார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் ஆவர். அத்துடன், சுமார் 103 மில்லியன் சிறார்கள் பாடசாலை வசதிகள் அற்ற நிலையில் உள்ளார்கள். இதனால் இவர்கள் அடிப்படைக் கல்வியான எழுத, வாசிக்க, எண்ணத் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.
எந்த மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.
கற்கை நன்றே; கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
என்பார் அதிவீரராமபாண்டியர்.
காலம் போகிற போக்கைப் பார்த்தால் பிச்சையெடுத்துத்தான் குழந்தைகளைக் கல்விச்சாலைகளில் சேர்க்கமுடியும் போல இருக்கிறது. இந்த நிலைக்குக் காரணம் நாம்தான். ஆம் நாம் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளின் திறமின்மையே இன்றைய கல்வி தனியாரிடம் சிக்கி வியாபாரப் பொருளாகிவிட்டதற்கு முழுமுதற் காரணமாகும். 

எந்தப் பணியாக இருந்தாலும் அதற்குத் தேவையான கல்வித்தகுதி, அனுபவம், வயதுவரம்பு இதெல்லாம் பார்ப்போம் ஆனால் அரசியலுக்கு மட்டும் இப்படி எதுவுமே பார்ப்பதில்லை. துறைசார்ந்த அடிப்படை அறிவுகூட இல்லாத ஒருவர் அமைச்சராகமுடியும் என்ற அவலம் இருக்கும் வரை கல்வியில் ஒரு சமூகம் தன்னிறைவடைவது என்பது வெறும் கனவுதான்.

இனிமேலாவது இலவசங்களை மறுத்து நல்ல படித்த அரசியல்வாதிகளைத் தேர்ந்தேடுப்போம். இலவசமாக அரசிடமிருந்து நாம் எதுவும் வாங்குவதாக இருந்தால் அது கல்வியாக 
மட்டுமே இருக்கட்டும். 

வியாழன், 1 நவம்பர், 2012

உங்களுக்கு எத்தனை கண்கள்?


“கண்ணுடையர் என்பவர்  கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லாதவர்” (திருக்குறள் 393)

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்”,

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு”

“உதடுகள் பொய்சொல்லும்.. கண்களுக்குப் பொய்சொல்லத்தெரியாது“

என்றெல்லாம் கண்கள் குறித்து சான்றோர்கள் சொல்லிச்சென்றுள்ளனர்.

“சாலையின் நடுவே கிடக்கும் கல்லைக் கண்தெரிந்தவர்கள் கண்டும் காணமல் செல்லும்போது..
கண்தெரியாத ஒருவர் தட்டித்தடுமாறி அந்தக் கல்லை தடவி எடுத்து ஓரமாகப் போட்டுச்செல்வதைக் காணும்போதும்..

சாலையில் அடிபட்டுக்கிடப்பவரைக் கண்டும்காணமல் நாம் செல்லும்போதும்..
குற்றம்செய்தவர் இவர்தான் என்று தெரிந்தும் வாய்திறக்காமல் இருக்கும்போதும்.

மனது கேட்கிறது உனக்கெல்லாம் கண்ணிருந்தால் என்ன?
இல்லாவிட்டால் என்ன? என்று..

கண்கள் குறித்த அனுபவமொழிகளுள் நீதி வெண்பாவில் சொல்லப்பட்ட செய்திகள் புதுமையானதாக இருந்தன. அதைப் எடுத்தியம்புவதே இவ்விடுகையின் நோக்கம்..

“எல்லோருக்கும் இருப்பன இரண்டுகண்கள்!
படித்த அறிவாளிக்கு இருப்பன மூன்றுகண்கள்!
உதவிசெய்யும் கொடையாளிக்கு இருப்பன ஏழுகண்கள்!
தவத்தால் அருள் அறிவைப் பெற்ற சான்றோருக்கு இருக்கும் கண்கள் பல!“

இவைதான் அந்தப் பாடல் தரும் கருத்து.

எல்லோருக்கும் இருப்பன இரண்டுகண்கள் தான்..

அவை சிலருக்குத் தெரிகின்றன!
சிலருக்குத் தெரிவதில்லை!

அறிவாளிகளுக்கு ஞானக்கண் என்ற
மூன்றாவது கண் இருப்பதை உணரமுடிகிறது!

உதவி செய்யும் வள்ளல்களுக்கு
ஏழுகண்கள் என்ற கருத்து அவர்கள் உயிர்களின்மீது
கொண்ட அன்புடைமையைக் காட்டுவனவாக உள்ளன!

தவத்தால் அருள் அறிவைப் பெற்றோருக்கு பலகண்கள்! உண்டென்கிறது இந்தப் பாடல்.

அன்று முனிவர்கள் காடுகளிலும், மலைகளிலும் சென்று தவம்செய்தார்களாம்.அதனால் வரம்கிடைததாம்.

இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும், அலுவலகங்களிலும், கடைகளிலும்..

இன்னும்.. இன்னும்...

எங்கெங்கோ தவம் இருக்கிறோம்..
பணம் என்னும் வரத்துக்காக.

அதனால் நமக்கு இருக்கும் கண்கள் எத்தனை என்பதும், எதற்கு என்பதும் நமக்குத் தெரிவதில்லை.

இன்றைய சூழலில் நிறையவே கண்மருத்துவமனைகள் வந்துவிட்டன.

அவையெல்லாம் நமது கண்களின் உட்பிரிவுகளை ஆராய்ந்து பார்வைத்திறனைச் சரிசெய்கின்றன. ஆனால்..

இந்த இலக்கியங்கள் சுட்டுவதுபோல..

நமக்கு எத்தனை கண்கள் இருக்கின்றன..?
அவை எதற்குப் பயன்படுகின்றன?
அகஇருளைப் போக்கும் ஆற்றல் கண்களின் எந்தப்பகுதியில் உள்ளது?
என்பதெல்லாம் இன்றைய கண்மருத்துவர்கள் அறியாத புதிராகவே உள்ளது.

அதனால் இப்போதெல்லாம்..

எண்ணிக்கொண்டிருக்கிறேன் எனக்கு எத்தனை கண்கள்? என்று
எண்ணிக்கொண்டிருக்கிறேன் நாம் ஏன் கண்தானம் செய்யக்கூடாது? என்று