வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 11 பிப்ரவரி, 2013

மாணவர்கள் வரைந்த ஓவியங்கள்


கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மூன்றாமாண்டு பயிலும் மாணவி 

சௌ.பிரியதர்சினி 

அவர்கள் டாக்டர் 
இராதாகிருட்டிணன் அவர்களின் ஓவியத்தை அழகாக வரைந்து வந்தார் உற்று நோக்கியபோது அதிகாரத்துக்கு ஒரு குறள் என 133 குறட்பாக்களால் அந்த ஓவியம் வரையப்பட்டிருந்தது பாராட்டத்தக்கதாக இருந்தது. 



23.01.2013 அன்று கோவையில் பிஎஸ்ஜி (PSG CAS) கலை அறிவியல் கல்லூரியில் 

“இயன்றவரை இனிய தமிழில்“ 

என்ற தலைப்பில் 

உரையாற்றினேன். அப்போது 

நினைவுப்பரிசாக இந்த ஓவியத்தை வழங்கினார்கள். இந்த 

ஓவியத்தை இயற்பியல் துறை 

மூன்றாமாண்டைச் சார்ந்த 

மாணவர் ஆனந்த் அவர்கள் 

வரைந்தளித்தார். அவரது படைப்பாக்கத் 

திறன் கண்டு வியந்துபோனேன்.



(நீங்கள் வரைந்த ஓவியத்தையோ, உங்களுக்குத் தெரிந்த இளம் படைப்பாளிகளின் ஓவியத்தையோ இந்த வலையில் வெளியிட வேண்டுமா ஓவியத்தை gunathamizh@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புக)




ஞாயிறு, 22 ஜனவரி, 2012

இது அது மாதிரிதானே இருக்கு..




தலைகால் புரியலை..
கையும் ஓடல, காலும் ஓடல..
கண்ணு மண்ணு தெரியல..
நடப்பது கனவா! நினைவா!

என பல நேரங்களில் நாம் எதிர்பாராத சூழல்களால் திகைத்துப் போவதுண்டு. இச்சூழல்களில் நாம் என்ன செய்கிறோம்? எதற்குச் செய்கிறோம் என்றே தெரியாமல் ஏதாவது செய்துவிடுவோம்.
அப்படியொரு காட்சி...

புலவர் ஒருவர் அரசனைப் பாடிப் பரிசில் பெற்று வருகிறார்.
அவரது வறுமை நிறைந்த சுற்றம் அதை எப்படி எதிர்கொள்கிறது என்பதைப் புலவர் நகைச்சுவையோடு அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.


தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்து வேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்,
நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
புதுப்பிறை யன்ன சுதை செய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று, என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல
மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அது கண்டு.
இலம்பொடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்,
விரல்செறி மரபின செவித் தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின் விரற்செறிக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப் பொழிந்தாந்தாஅங்கு,
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே.


புறநானூறின் 378ம் பாடல்

ஊன்பொதி பசுங்குடையார்
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியைப் பாடி எழுதிய இந்த அரிய பாடலின் சாரம் வருமாறு:

தென்நாட்டுப் பரதவரின் வலிமை அடங்க,
வடநாட்டு வடுகரின் வாளால் ஏற்பட்ட கேடுகள் நீங்க,
அவர்களை ஒடுக்கி மேம்பட்டவன் இவன்!
இச் சோழனின் நெடு நகரிலே,
வெண்சுதை மாடத்தின் முற்றத்திலே நின்று..
என் கிணையை இயக்கி, எஞ்சா மரபினை உடைய சோழனின் சிறப்பைப் போற்றிப் பாடினேன்.
எமக்கென இயற்றப்படாத அரசர்க்கே உரித்தான நல்ல அணிகலன்கள் பலவற்றையும் அவன் எமக்கு நிறைய சுமக்கமுடியாத அளவுக்குத் தந்தான்.
அதனைக் கொண்டு என் சுற்றத்தாரிடம் சென்று கொடுத்தேன்.
அவர்கள் கண்டு திகைத்தனர்!

விரலில் அணியவேண்டிய மோதிரத்தைக் காதிலும்,
காதில் அணியவேண்டிய குழையை விரலிலும்,
இடையில் அணியவேண்டியவற்றைக்  கழுத்திலும்,
கழுத்திற்கு உரியன இடையிலுமாக மாறி மாறி அவர்கள் அணிந்தனர்!

இது..
அன்று..

இராமன் சீதையுடன் காட்டிற்குச் சென்றபோது வலிமையுடைய இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான். விண் வழியே கொண்டு செல்லும்போது அவள் அணிந்து இருந்த மதிப்புமிக்க நகைகளை ஒவ்வொன்றாய்க் கீழே போட்டுக்கொண்டே சென்றாள். அவளைத் தேடிச் சென்றபோது, குரங்குகள் இவற்றைக் கண்டு எடுத்தன. எந்த நகையை எந்த உறுப்பில் அணிந்து கொள்வது என்னும் அறிவு அவற்றுக்கு இல்லை. அதனால் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக்கொண்டன.

இதைப்போல்,
இளஞ்சேட் சென்னி என்ற வள்ளலிடம் இசைக் கலைஞன் பரிசாகப் பெற்ற விலை மதிக்க முடியாத பொன் நகைகளை, அவனது வறுமை மிக்க உறவினரும் சுற்றத்தாரும் அணிந்து கொள்ளும் முறை தெரியாமல் உடம்பில் மாற்றி மாற்றி அணிந்து அழகு பார்த்துக் கொண்டனர். இது வறுமைத் துன்பத்தையே கண்டு வந்த கலைஞனுக்கு நினைக்க நினைக்கச் சிரிப்பைத் தந்தது என்று அவன் கூறுவதாக ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர் பாடியுள்ளார்.

என்ன நண்பர்களே..

இது (புறநானூறு)
அது (இராமயணம்) மாதிரித் தானே இருக்கு..

பாடல் வழியே..
  • சீதையின் அணிகலன்களை குரங்கினங்கள் அணிந்ததுபோல என்ற உவமை வாயிலாக இராமயணம் குறித்த தொன்மக் கருத்துக்கள் சங்ககாலத்திலேயே இருந்தன என்பதை அறியமுடிகிறது.
  • காணாததைக் கண்ட சுற்றத்தாரின் செயல்களை நினைத்து நினைத்து சிரிக்கும்விதமாகப் புலவர் காட்சிப்படுத்திய பாங்கு விரும்பத்தக்கதாகவுள்ளது.
  • தமிழ்நாட்டுக்குப் பகையாக இருந்த பரதவர், வடுகர்களைச் சோழன் வெற்றிகொண்டான் என்னும் வரலாற்றுக்குறிப்பையும் இப்பாடல் பதிவு செய்துள்ளது.
  • புதுப்பிறை யன்ன சுதை செய் மாடம் என்னும் தொடர் புதிய நிலவுபோன்ற வெண்மையான சாந்தால் கட்டப்பட்ட அக்காலக் கட்டிடக் கலை மரபையும் புலப்படுத்தவதாகவுள்ளது.

திங்கள், 27 ஜூன், 2011

கடமையை மறத்தல்.


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
என்பர் வள்ளுவப் பெருந்தகை.

(வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.)

நாடு கொடுக்கும் வள்ளல்களைக் கொண்டிருப்பது சிறப்புதான்!
அதைவிட..
இரவலர் இல்லாத நாடாக அந்நாடு இருத்தல் மிகவும் சிறந்தது!

நாடு மக்களைத் தொழிலாளிகளாக மாற்றலாம்!
சோம்பேறிகளாக மாற்றக் கூடாது!


கொடை (இலவசம்) அளவு கடந்து போனால் மக்கள் தம் கடமை மறந்து போவார்கள்!

இதோ ஒரு கொடை வள்ளலும்.
கடமை மறந்தவர்களும்...


நள்ளி! வாழியோ நள்ளி! நள்ளென்
மாலை மருதம் பண்ணி காலை
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி
வரவு எமர் மறந்தனர் – அது நீ
புரவுக் கடன் பூண்ட வண்மையானே

புறநானூறு -149

திணை – பாடாண்
துறை – இயன்மொழி

கண்டீரக் கோப்பெருநள்ளியை வன்பரணர் பாடியது.

காலையில் மருதப்பண்ணும்
மாலையில் செவ்வழிப்பண்ணும் பாடுதல் பாணர் வாழ்வியலாகும்.

பாணருக்கு வறுமை தோன்றாத வண்ணம் “நள்ளி“ கொடை கொடுத்தலால் அவர்கள் தம் கடமையை மறந்து...

மாலையில் மருதப்பண்ணும்
காலையில் செவ்வழிப்பண்ணும் வாசித்தனர். இசைநூல் முறைமையை மறந்தனர்.

பாணர்கள் இவ்வாறு தம் கடமையை மறந்ததற்குக் காரணம் நீதான் எனப் புலவர் நள்ளியைச் சுட்டுகிறார்.

நேரடியாகப் பார்த்தல் நள்ளியைக் குறை கூறுவது போல இருந்தாலும், நள்ளியின் கொடைத் தன்மையின் சிறப்பைப் போற்றுவதாகவே உள்ளது.


பாடல் வழியே


 சங்ககாலத்தில் பாணர்கள் காலையில் மருதப்பண்ணும்
மாலையில் செவ்வழிப்பண்ணும் பாடுவர் என்ற மரபு புலனாகிறது.
 மக்களின் உடல் உழைப்பை மன்னன் கொடை என்ற பெயரால் மறக்கச் செய்தான் என்ற கருத்தும் உற்றுநோக்கி அறியமுடிகிறது.

செவ்வாய், 27 ஜூலை, 2010

பொருளில்லாருக்கு...




அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை பொருள் இல்லாருக்கு
இவ்வுலகம் இல்லை (குறள் - 247)


என்பார் வள்ளுவர். அருள் இல்லாருக்கு அவ்வுலகம் இல்லை என்றவுடன் அவ்வுலகம் என்பது சொர்க்கம் தானே!!
என்றெல்லாம் கற்பனை செய்துகொள்ளவேண்டாம்..

அவ்வுலகம் என்பது எங்கோ இல்லை. நாம் வாழும் மகிழ்ச்சியான வாழ்க்கையே!

மகிழ்ச்சி என்பது நம் மகிழ்ச்சி மட்டுமல்ல நம்மைச் சார்ந்தவர்களும், சுற்றியுள்ளவர்களும் சேர்ந்த மகிழ்ச்சி!!

நம்மைச் சுற்றியிருப்போர் வருந்த நாம் மட்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்தால்
நாம் வாழும் இடம் நரகம்!

பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை என்ற கருத்து எக்காலத்துக்கும் ஏற்புடையது.

பொருள் சேர்ப்பது பெரிய செயல் அல்ல…
பொருளை நேர்வழியில் சேர்ப்பது மிகப்பெரிய செயல்!!

பொருளை சேமிப்பது அரிய செயல் அல்ல…
சேமித்த பொருளை நல்ல வழியில் செலவுசெய்வது அரிய செயல்!

பொருளின் மதிப்பைவிட..
அந்தப் பொருள்வழி மதிப்புமிக்க உறவுகளைச் சேமிப்பதுதான் மதிப்பு!!


சரி சங்ககாலத்தில் பொருள் குறித்த சிந்தனையைப் பார்ப்போம்…



ஒரு தலைவியின் புலம்பல்….

பொருள் தேடச் சென்றான் தலைவன். அதனால் உடல்வேறுபாடு கொண்டு வருந்தினாள் தலைவி. அவளைத் தேற்றினாள் தோழி. அப்போது தோழியிடம் இவ்வாறு சொல்கிறாள் தலைவி...

அழகிய அணிகன்களை அணிந்தவளே!

எக்காலத்தும் தவறான வழியில் செல்லாத வாழ்க்கை,
பிறர் வீட்டு வாசலில் சென்று நின்று வேண்டாத சிறப்பு,

இவ்விரண்டும் பொருளால் கிடைக்கும் என்று நமது இருளை ஒத்த கூந்தலைத் தடவியவாறு நம் தலைவர் கூறினார்….


பாற்பசுக்கள் நிறைந்த பாழ்பட்ட நாட்டின் பலவிடங்களிலும், அப்பசுக்கள் நீர் உண்ணும் பொருட்டு நீண்ட சீழ்க்கை ஒலி எழுப்பும் கோவலர், தாம் தோண்டிய கிணற்றினின்றும் வளைந்த வாயினையுடைய பத்தலால் இறைத்த நீர், ஒழுகிச் சென்று சிறுகுழியில் நிரம்பியது. கதிரவன் காய்ந்தமையால் அந்நீரும் வற்றிக் குழியும் காய்ந்தது.


நீருண்ண வந்த பெரிய யானை நீ்ர் இல்லாது சிறிது ஈரத்துடன் காணப்பட்ட குழியைக் கண்டு வருத்தமுற்றுத் தன் நீர் வேட்கையைத் தணித்துக்கொள்வதற்கு வேறுஇடம் காணப்பெறாது அக்குழியினை மிதித்துக்கடந்து சென்றது.

பின் அங்கு சென்ற பெரிய புலி, யானையின் அடிச்சுவட்டில் கால்வைத்து நடந்து சென்றது. யானையின் அடிச்சுவட்டில் பதிந்த புலியின் கால்சுவடு குற்றமற்ற நாவினையுடைய கூத்தர், தம் தோளின் பின்புறத்தே காட்டிய மார்ச்சனை பூசிய மத்தளத்தின் கண்ணிடத்தே விரல் பதிந்த வடுப்போலக் காணப்படும். அத்தகைய கானகத்தே மரலும் வாடுகின்ற இடங்களையுடைய மாலையைக் கடந்து நம் காதலர் சென்றுள்ளார்.



அவரது பிரிவால் நாம் நோயுற்று வருந்துவோமாயினும்,
அவர் தமது பொருளீட்டும் வினையியை முடித்தபின் வருவாராக.


தாம் வருந்துவதால் தலைவனின் பொருளீட்டும் முயற்சி தடைபடுமோ என்று கருதிய தலைவி தாம் நோயுற்றாலும் தலைவன் செய்வினை முடிக்கவேண்டும் என்று வாழ்த்தினாள்.



பாடல் இதோ…

அறன்கடைப் படாஅ வாழ்க்கையும், என்றும்
பிறன்கடைச் செலாஅச் செல்வமும், இரண்டும்
பொருளின் ஆகும், புனையிழை!' என்று, நம்
இருள் ஏர் ஐம்பால் நீவியோரே
5 நோய் நாம் உழக்குவம்ஆயினும், தாம் தம்
செய் வினை முடிக்க; தோழி! பல்வயின்
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்
நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி,
10 நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது
பெருங் களிறு மிதித்த அடியகத்து, இரும் புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி,
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை
மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த
15 விரல் ஊன்று வடுவின் தோன்றும்
மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே.

அகநானூறு 155. பாலை
பாலை பாடிய பெருங்கடுங்கோ

தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட தலைமகள் சொல்லியது.

பொருளீட்ட வேண்டித் தலைவன் தலைவியைப் பிரிந்தான். அப்பிரிவினை ஆற்றாத உடல் வேறுபட்ட தலைவியைத் தோழி தெளிவுறுத்த அப்போது தோழியை நோக்கித் தலைவி கூறியது.

பாடல் வழி அறியலாகும் கருத்துக்கள்.

○ எக்காலத்தும் தவறான வழியில் செல்லாத வாழ்க்கை,
பிறர் வீட்டு வாசலில் சென்று நின்று வேண்டாத சிறப்பு,
இவ்விரண்டும் பொருளால் கிடைக்கும் என்ற கருத்து,

சங்ககால மக்களின் மாண்பை அறிவுறுத்துவதாகவுள்ளது.



○ அங்கு சென்ற பெரிய புலி, யானையின் அடிச்சுவட்டில் கால்வைத்து நடந்து சென்றது. யானையின் அடிச்சுவட்டில் பதிந்த புலியின் கால்சுவடு குற்றமற்ற நாவினையுடைய கூத்தர், தம் தோளின் பின்புறத்தே காட்டிய மார்ச்சனை பூசிய மத்தளத்தின் கண்ணிடத்தே விரல் பதிந்த வடுப்போலக் காணப்படும் என்ற செய்தி அழகிய ஓவியம் போல நிழற்படம் போல கண்முன் தோன்றுகிறது.

இக்காட்சியை இவ்வளவு அழகுறச் சொல்லிய புலவரின் ஆற்றல் வியப்பிற்குரியதாகவுள்ளது.

வெள்ளி, 8 ஜனவரி, 2010

கொட்டம்பலவனார்.



கண்ணுக்குத் தெரியாத மனம் மனிதனைப் படுத்தும் பாடு கொஞ்சமல்ல.
மனம் இருப்பதாலேயே மனிதன் ஆனான் ஆனால் சுயநலம் கொண்ட சில மனிதர்களைப் பார்க்கும் போது இவர்களுக்கெல்லாம் மனம் என்றவொன்று இருக்கிறதா?
என்ற எண்ணம் தோன்றுகிறது.
மனம் இல்லாத இவர்கள் எப்படி மனிதராவர்கள்?
என்றும் தோன்றுகிறது.

மனதைப் பறிகொடுத்துவிட்டேன்!!

என பல சூழல்களில் நாம் சொல்வதுண்டு.

மனது எப்போது பறிபோகக் கூடும் என்பது யாருக்குத் தெரியும்?

பறிபோன மனதைத் திரும்பப் பெறுவது எப்படி?


மழலையின் சிரிப்பிலோ!
மழையின் சாரலிலோ!
காற்றின் உரசலிலே!
மலரின் வாசத்திலோ!
மேகத்தின் வடிவத்திலோ!
காகத்தின் கரைதலிலோ!
மயிலின் ஆடலிலோ!
குயிலின் கூவலிலோ!

இன்னும் இயற்கையின் பற்பல விந்தைகளில் ஏதோ ஒன்றிலோ மனதைப் பறிகொடுத்தால் சில நிமிடங்களில் பறிகொடுத்த மனதைப் பறிமுதல் செய்து கொள்ளலாம். ஆனால் இங்கு ஒரு தலைவன் தன் மனதைப் பறிகொடுத்துவிட்டுத் திரும்பப் பெற இயலாது தவிக்கிறான்.பாடல் இதோ,


“கழைபாடு இரங்கப் பல்லியங் கறங்க
ஆடுமகள் நடந்த கொடும்புரி நோன்கயிற்று
அதவத் தீங்கனி அன்ன செம்முகத்
துய்த்தலை மந்தி வன்பறழ் தூங்கக்
5 1கழைக்கண் இரும்பொறை ஏறி விசைத்தெழுந்து
குறக்குறு மாக்கள் தாளங் கொட்டுமக்
குன்றகத் ததுவே 2 கொழுமிளைச் சீறூர்
சீறூ ரோளே நாறுமயிர்¢க் கொடிச்சி
கொடிச்சி கையத் ததுவேபிறர்
10 விடுத்தற் காகாது பிணித்தவென் நெஞ்சே.

நற்றிணை - 95.

கொட்டம்பலவனார்
திணை : குறிஞ்சி.
துறை : இது, தலைமகன் பாங்கற்கு இவ்விடத்து இத்தன்மைத்தென உரைத்தது.



நறுமணம் கமழும் கூந்தலைக் கொண்ட எம் தலைவியிடம் சிக்குண்டது என் மனது. அவளன்றி யாராலும் என் மனதை விடுவிக்க இயலாது என்று தலைவன் தன் நண்பனிடம் கூறுகிறான்.


பக்கத்திலே குழல் ஒலிக்க, பல இசைக்கருவிகள் முழங்க கயிற்றின் மீது கழைக்கூத்தி நடந்தாள். அந்தக் கயிற்றின் மேல் அத்திப்பழம் போல் சிவந்த முகத்தையும், பஞ்சு போன்ற தலையையும் கொண்ட குரங்கு ஆடியது. அதனைக் கண்டு குறவர்குல சிறுவர்கள் பெரிய பாறையின் மீது மூங்கிலின் மீது ஏறி நின்று தாளம் கொட்டுவர்.

அந்தக்குன்றகத்தில் வளம் நிறைந்த காவற்காடு ஒன்று உள்ளது. அங்கு நறுமணம் கமழும் கூந்தலைக் கொண்ட கொடிச்சி (குறிஞ்சி நிலப்பெண்) ஒருத்தி உள்ளாள். அவளிடம் சிக்குண்டது எனது நெஞ்சம். அவளிடம் சிக்கிய எனது நெஞ்சை அவளே மனம் வந்து விடுவித்தால் தான் உண்டு. அன்றி வேறு யாரும் விடுவிக்க இயலாதவாறு சிக்கிக்கொண்டது.

இப்பாடலைப் பாடிய புலவரின் பெயர் தெரியாத சூழலில்,

இப்பாடலில்
“தாளங்கொட்டுமென்ற சொல் சிறப்பினாலேயே இவ்வாசிரியர் கொட்டம்பலவனாரெனப் பெயர் பெற்றார்.

உட்பொருள்


ஆடுகள மகளான கூத்தி நடந்த கயிற்றின் மேல் மந்தியின் குட்டி ஏறி ஆடியது என்பது நேர்வழியில் வாழ்ந்துவரும் எனது நெஞ்சத்தில் கொடிச்சி (தலைவி) சென்று தங்குவதனை அறிந்த நீ கைகொட்டிச் சிரிக்கிறாய் (நகை) என்று பாங்கனை (நண்பனை) பார்த்து தலைவன் உரைப்பது உட்பொருளாகவுள்ளது.

மெய்ப்பாடு
- வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - பாங்கனிடத்துரைத்தல்.

இப்பாடலின் வழியாக,

கொட்டம்பலவனார்
என்னும் புலவரின் பெயருக்கான காரணத்தையும், வருத்தம் பற்றி வந்த இளிவரல் என்னும் மெய்பாட்டையும் அறிந்துகொள்ள முடிகிறது.

மேலும் கயிற்றின் மேல் நின்றாடும் கழைக்கூத்தர்கள் இன்றும் தமிழகத்தின் பல ஊர்களில் இருக்கிறார்கள் என்பதை ஒப்பு நோக்கமுடிகிறது..

அவர்கள் பொழுதுபோக்காக கயிற்றில் ஆடவில்லை!
தம் வயிற்றுப்பாட்டுக்காகத் தான் கயிற்றில் ஆடுகிறார்கள்!

என்ற உண்மையையும் மறுக்கமுடியாது.

வியாழன், 25 ஜூன், 2009

குன்று குயின்றன்ன ஓங்குநிலை வாயில்....




வென்று எழு கொடியொடு வேழம் சென்று புக
குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில்.

நெடு 87-88.

இவ்வடிகள் சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் நெடுநல்வாடையில் இடம்பெற்றுள்ளன. இவ்வடிகள் வாயிலாக சங்கத்தமிழர்தம் கட்டிடக்கலை மாட்சி விளங்குகிறது.

கோபுர வாயிலானது வெற்றிபெற்ற வீரன் யானையோடு நுழையும் போதும் உயரம், அகலம் போதுமானதாக இருந்தது. அதாவது,

வெற்றிபெற்ற வீரர்கள் மகிழ்வுடன் யானை மீது வருவர். யானையின் உயரம், அமர்ந்திருக்கும் வீரர்களின் உயரம்,கையில் தாங்கிய கொடியின் உயரம் என யாவும் வாயிலில் இடிக்காதவாறு வாயிலானது நல்ல உயரமாகவும் அகலமாகவும் கட்டப்பட்டிருந்தது. அந்த வாயிலைக் காணும் போது மலையைக் குடைந்து கட்டப்பட்டிருந்தது போல இருந்தது.

வாயிலின் சிறப்பே இங்ஙனம் இருந்திருந்தால் மாட மாளிகை, கூட கோபுரங்கள் என எவ்வளவு சிறப்பாக சங்கத்தமிழர் வாழ்ந்திருப்பர் என்று எண்ணத்தோன்றுகிறது.