வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஐங்குறுநூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐங்குறுநூறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 ஜூன், 2014

யாழிசை போன்றது….


அன்பின் முகவரிகள் இன்று மாறிவிட்டன. இன்றைய மக்கள் தம் தகுதிக்கேற்ப பல்வேறு அறைகளோடு வீடுகளைக் கட்டுகின்றனர். தமக்கு ஒரு அறை தம் குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அறை எனத் தந்து தம் அன்பை வெளிப்படுத்துகின்றனர்.
இன்றைய குழந்தைகளுக்கு விலையுயர்ந்த யாவும் எளிதாகவே கிடைத்துவிடுகின்றன.
இன்றைய பெற்றோர்களால் தம் குழந்தைகளுடன் நேரத்தை ஒதுக்கி அன்பை காட்டமுடியவில்லை என்பதுதான் நிகழ்கால உண்மை.
தொலைக்காட்சி, இணைய சமூகத் தளங்களைக் கடந்து பிள்ளைகள் பெற்றோரிடமும், பெற்றோர் பிள்ளைகளிடமும் பேசுவதற்குக் கூட இன்று நேரம் கிடைப்பதில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.


பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் இருக்கும் சுதந்திரம் நமக்கு இருக்கிறதா? என்றால் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அவை காடுகளில் வாழ்ந்தாலும் சுதந்திரமாக வாழ்கின்றன. நாம் வீடுகள் என்ற பெயரில் நான்கு சுவர்களுக்குள் நம்மை சிறைப்படுத்திக்கொள்கிறோம். இதுபோதாதென்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சமூகத் தளங்களிலும் நம்முடைய நேரத்தைத் தொலைத்துவிட்டு நம்மை நாமே தேடிக்கொண்டிருக்கிறோம். நம் வீடுகளில் நான்குபோ் இருந்தாலும் அவர்களிடம் பேசுவதைவிட உலகின் ஏதோ ஒரு நாட்டில் வாழும் முகம் தெரியாத நட்புடன் உரையாடுவதிலேயே பெருமிதம் கொள்கிறோம். 
தொலைக்காட்சிகளும், வானொலிகளும் எழுப்பும் விளம்பரக் கூச்சல்களையும் கடந்து இன்னும் சில வீடுகளில் மெல்லிய இனிய யாழிசை கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஆம் அந்த வீடுகளில் இந்த தொழில்நுட்பங்களின் ஆதிக்கம் குறைவாகத்தான் உள்ளது.


சங்கஇலக்கியத்தில் அன்பு நிறைந்த ஒரு காட்சி..

தாயாகிய தலைவி, தன்னுடைய புதல்வனை அணைத்தபடி படுத்திருக்கிறாள்..அவளை அணைத்தபடி பின்புறம் அவளின் முதுகை வருடியவாறு தலைவன்படுத்திருக்கிறான். இந்தக் காட்சியானது, பாணர்கள் இசைக்கும் யாழ்நரம்பினிடையே எழும் இசையைபோல இனிமையானது. அதோடு, நல்லபண்புடையதுமாம்.

புதல்வற் கவைஇய தாய்புறம் முயங்கி
நசையினன் வதிந்த கிடக்கை பாணர்
நரம்புளர் முரற்கை போல
இனிதால் அம்ம பண்புமார் உடைத்தே

(ஐங்குறுநூறு-முல்லை:402)

-
பேயனார்.
பாடலின் வழியே...
இன்றைய இயந்திர வாழ்க்கையில் இவை போன்ற சங்க இலக்கியப் பதிவுகள், தென்றலைப் போல நம் மனதை வருடிச் செல்கின்றன..
அன்பு நிறைந்த வாழ்க்கை யாழிசையைப் போல இனிமையானது என்ற உண்மை புலப்படுத்தப்படுகிறது.


ஞாயிறு, 16 மார்ச், 2014

தமிழர் பரம்பரை


அம்மா மம்மியாகவும், அப்பா டாடியாகவும் மாறிவிட்டதால் இன்று பல குழந்தைகளுக்கான பெயர்களும் தமிழ் அடையாளங்களை இழந்துவிட்டன. பல குழந்தைகளுக்குத் தன் பெயர் என்னமொழியில் உள்ளது? அதற்கான பொருள் என்ன? என்பது கூட தெரிவதில்லை.

தந்தையின் பெயரை மகனுக்கும், தாயின் பெயரை மகளுக்கும் இடுவது தொன்மையான தமிழ் மரபாகும். இதனாலேயே பெயரன், பெயர்த்தி என்னும் உறவுச் சொற்கள் வழக்கமாயின. இதனை எடுத்தியம்பும் ஐங்குறுநூற்றுப் பாடலைக் காண்போம்.
(தலைவனின் வீடுசென்று திரும்பிய செவிலித்தாயின் கூற்றாக இப்பாடல் அமைந்துள்ளது.)

புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும்
அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே
அகன் பெரும் சிறப்பின் தந்தை பெயரன்
முறுவலின் இன்நகை பயிற்றி
சிறுதேர் உருட்டும் தளர்நடை கண்டே
                      -ஐங்குறுநூறு -403
பலராலும் அறியப்பட்ட பெருஞ்சிறப்பினை உடைய தன் தந்தையின் பெயர் தாங்கிய தன் மகன், இனிய புன்முறுவலுடன் சிறுதேர் உருட்டித் தளர்நடை பயிலுதலைக் கண்டு, தலைமகனுக்குத் தன் காதலியின்பால் இருந்த அன்பைப் போல் மகன் மீது கொண்ட அன்பும் பெரியது என்பது இந்தப் பாடலின் பொருளாகும்.

இந்தப் பாடலின் வழியாக,

தந்தையின் பெயரை மகனுக்கு இடும் தமிழர் மரபு உணர்த்தப்படுகிறது.        

ஆண்குழந்தைகள் சிறுதேர் உருட்டி விளையாடும் வழக்கம் சுட்டப்பட்டது.

தன் தலைவி மீது தலைவன் கொண்ட அன்பைப் போல தன் மகன் மீதும் கொண்ட அன்பும் பெரியது என்பது உணர்த்தப்படுகிறது.

குழந்தைகளின் அழகிய சிரிப்பும், தத்தி தத்தி நடக்கும் அழகும் தளர்நடையாகக் கண்முன் நிறுத்தப்படுகிறது.

இதுதான் தமிழர் பரம்பரை


வியாழன், 21 ஜூன், 2012

நாளைய குடிநீர்











    என் சிறுவயதில் எங்க ஊரில், பல இடங்களிலும் “குடிநீர் குளங்கள்” என்று பல இருந்தன. இன்று அந்த இடங்களெல்லாம் கட்டிடங்கள் வந்துவிட்டன.சில குளங்களில், சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று குடிநீரை விலைகொடுத்துத்தான் வாங்கிக்கொண்டிருக்கிறோம்.

    எதிர்காலத்தை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. இதன் அடுத்தநிலை என்ன?
    எதிர்காலத்தில் குடிநீருக்கு என்னசெய்யப்போகிறோம்..? என்று.


    சங்ககாலப் பாடல் ஒன்று நாளைய குடிநீர் இப்படிக்கூட இருக்கலாமோ என்ற அச்சத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

    தலைவனுடன் உடன்போக்கு சென்று மீண்ட தலைவியிடம்,
    நீ சென்ற தலைவனின் நாட்டுக் குடிநீர் நன்றாக இருக்காது என்று சொல்கிறாள் தோழி.
    இல்லை, இல்லை அது இனிமையான நீர் என்று
    பதில் சொல்கிறாள் தலைவி.
    இது தலைவி, தலைவன் மீது கொண்ட அன்பை
    வெளிக் கொணரத் தோழி கையாளும் உத்திகளுள் ஒன்றாகக் காணமுடிகிறது.

    பாடல் இதோ..

    அன்னாய் வாழிவேண் டன்னைநம் படப்பை
    தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு
    உவலைக் கூவல் கீழ
    மான்உண்டு எஞ்சிய கலுழி நீரே
    ஐங்குறுநூறு -203


    என் தலைவன் நாட்டில் கிடைக்கும் நீர் “மான் உண்டு எஞ்சிய அழுகிய சிறிதளவு நீர்தான்” என்றாலும் அதன் சுவை, நம்முடைய வீட்டில் தோட்டத்தில் கிடைக்கும் இனிய தேனோடு கலந்த பசுவின் பாலைவிட இனிமையானது,  என்கிறாள் தலைவி.


     பாடல் வழியே..

  1. பிறந்தவீட்டுப் பெருமையைப் போலவே புகுந்தவீட்டுப் பெருமையையும் காக்கவேண்டியது பெண்களின் கடமை என்ற பண்பாட்டை நினைவுபடுத்துவதாக இப்பாடல் அமைகிறது. என்னதான் தலைவனின் நாட்டில் கிடைக்கும் நீர் சுத்தமற்றதாக, சுவையற்றதாக இருந்தாலும் அதைவிட்டுக்கொடுக்காமல் பேசும் தலைவியின் பண்பு அவள் தலைவன் மீது கொண்ட காதலை அறிவுறுத்துவதாக உள்ளது.

  2. என்னதான் தலைவி கலங்கிய நீரை தேனோடும் பாலோடும் கலந்த நீர் என்று சொன்னாலும், மான்உண்டு எஞ்சிக் கலங்கிய நீர் என்ற சிந்தனை நாளை நாம் குடிக்கும் நீருக்கும் இந்த நிலை வருமோ? என்ற கருத்தை முன்வைப்பதாக அமைகிறது.

தொடர்புடைய இடுகை

திங்கள், 18 ஜூன், 2012

இதுவல்லவா தாயுள்ளம்



  • கடவுள் எல்லோரிடமும் நேரிடையாக வரமுடியவில்ல என்பதால்தான் அம்மா என்ற கடவுளை நமக்குத் தந்தான் என்று கவிதைகள் சொல்வதுண்டு.


  • தலைகூட நிற்காமல் ஆடிக்கொண்டிருந்த வயதில் பார்த்துப்பார்த்து

வளர்த்த பெற்றோருக்குத் தெரியாதா?

தன் பிள்ளை வயதுக்கு வந்தபிறகு நல்ல துணையாகப் பார்த்துத்
திருமணம் செய்துவைக்கவேண்டுமென்று?

அவசரம்! அவசரம்!

எல்லாவற்றிலும் அவசரம்..

காதல் என்ற பெயரில், 
பார்த்துப் பார்த்து வளர்த்த பெற்றோரை மறந்து யாரோ ஒருவரோடு..

இருபது வயது வரை
என்பெற்றோரின் வசமிருந்தேன்
இருபது நிமிடத்திலே
நான் உன் வசமாகிவிட்டேன்

என்று பாடிக்கொண்டே சென்றுவிடுகின்றனர் பிள்ளைகள்.

இது நன்றி மறத்தல் அல்லவா?
இதற்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

இங்கு ஒரு தாய் தன்னைமதிக்காமல் தன்மகள், அவள் காதலனுடன் ஓடிச்சென்றமைக்குத் தண்டனை கொடுக்கிறாள். 
என்ன தண்டனை கொடுக்கிறாள் என்று பாருங்கள்.


முதியோர் இல்லங்களும், தனிக்குடும்பங்களும் நிறையவே தோன்றிவரும் இக்காலத்தில் தாய்சேய் உறவுநிலை குறித்த புரிதலுக்காக இப்பாடலைத் தங்கள் முன்வைக்கிறேன்.


காதலனுடன் சென்று தன் கற்பைக் காத்துக்கொள்வதே 
அறநெறி என்று உணர்ந்த,
 பிறைபோலும் நெற்றியைக் கொண்ட எனதருமை மகள், 
அவள் காதலித்தவனோடு சென்றுவிட்டாள். 
அவள் சென்ற பாலை வழியோ, 
மள்ளர் தம் பறையை முழக்கினால் அதன் ஒலிக்கேற்ப மயில்கள் எழுந்து ஆடி மகிழும் உயர்ச்சியும், நெடுமையும் கொண்ட மலையில் ஆரவாரமிக்க மேகங்கள் மழை பொழிய அவள் சென்ற நிலம் குளிர்ச்சியையுடையனவாகுக என வேண்டிக்கொள்கிறாள் தலைவியைப் பெற்ற நற்றாய்.


மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர் நெடுங்குன்றம் படு மழை தலைஇச்
சுரம் நனி இனிய ஆகுகதில்ல
“அறநெறி இது“ எனத தெளிந்த என்
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே
ஐங்குறுநூறு -371

நகைச்சுவை

பாலை நிலத்தில் வாழும் மறவர்களான மள்ளர்கள் முழக்கிய பறையோசையை இடியோசை எனத் தவறாக உணர்ந்து, மயில்கள் நடனமாடும் என்ற கருத்து மயில்களின் அறியாமை காரணமாக நகையை ஏற்படுத்துவதாக உள்ளது.


தாயுள்ளம்.

தன்னை மதிக்காது தலைவனுடன் சென்றாள் தலைவி. என்றாலும், கொடிய வெப்பம் வீசக்கூடிய பாலைநிலம் மழை பொழிந்து இனிது குளிச்சியுடையனவாகவேண்டும் என்று எண்ணும் தாயின் உள்ளம் தாயுள்ளத்தின் தன்னிகரற்ற தன்மையை உணர்த்துவதாகவுள்ளது.

அறநெறி

தலைவனைக் காதலித்த தலைவி, தம் காதலைப் பெற்றோர் எதிர்த்தால் அஞ்சாது தலைவனுடன் உடன்போக்கிலாவது சென்று தம் கற்பைக் காத்துக்கொள்ளவேண்டும் அதுவே அறநெறி என்ற சங்ககாலக் கருத்து இப்பாடல் வழி சுட்டப்படுகிறது.

ஞாயிறு, 1 மே, 2011

களவும் கற்று மற.. - UPSC EXAM TAMIL - குறுந்தொகை - 25

குறுந்தொகை 25

பறவைகள், விலங்கினங்கள் எல்லாம் எங்குபோய் திருமணம் செய்துகொண்டு வாழ்கின்றன. அவற்றுக்கு திருமண முறிவு என்றால் எங்கு நடக்கும்..? 

மனிதனும் ஒரு காலத்தில் அப்படித்தான் வாழ்ந்து வந்தான். ஒருவன் பலரோடு வாழ்ந்த காலமும் உண்டு. களவுக்கும் கற்புக்கும் (காதலும், திருமணமும்) இடையேதான் தமிழர் மரபு இன்று வரை ஊசலாடிக் கொண்டிருக்கிறது. 

கற்பு என்றால் என்ன? கற்பு என்பது ஏதோ பெண்களுக்கு மட்டும் இருக்கவேண்டிய ஒன்று என்ற சிந்தனை என்று தோன்றியதோ அன்றே திருமணத்துக்கான தேவையும் தோன்றிவிட்டது. ஆம் கற்பு என்பது ஒழுக்கம். அது ஆண்,பெண் இருபாலருக்குமே பொதுவானது. ஆனால் சில ஆண்கள் பெண்களைக் காதலி்த்துவிட்டு ஏமாற்றிய சூழலில் தான் இவர்களைக் கட்டுப்படுத்த திருமணம் என்ற சடங்கு பெரியோர்களால் உருவாக்கப்பட்டது. 

செவ்வாய், 23 மார்ச், 2010

உங்களை எங்கேயோ பார்த்துபோல இருக்குதே?



உங்களை எங்கேயோ பார்த்தது போல இருக்குதே….?

இதே கேள்வியை நாம் ஒவ்வொருவரும் யாரையாவது பார்த்து, எப்போதாவது கேட்டிருப்போம்.

ஒன்று அவர்களை நாம் முன்பே எங்காவது பார்த்து மறந்திருப்போம்..
இல்லையென்றால் நாம் பழகிய ஒருவரின் முகச்சாயலை அவர்ககொண்டிருப்பார்..!!

நாம் பழகிய ஒருவரின் முகம் நம் மனதில் ஆழப்பதிந்துவிடும். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காது.

என்னுடன் இளங்கலை படித்த நண்பர் ஒருவர் படித்துப் பிரிந்து 10 ஆண்டுகள் கழித்து ஒரு முறை அலைபேசியில் தொடர்பு கொண்டார். ஹலோ என்று சொன்னவுடனேயே அவரின் பெயரை அழைத்து நீங்கள் தானே என்றேன். வியந்து போய்விட்டார்.

வியந்துபோனது அவர் மட்டுமல்ல!
நானும் தான் எப்படி என்னால் முடிந்தது?

நன்கு பழகிய அவரின் குரலை என்மனம் எங்கோ ஆழப்பதிந்து வைத்திருக்கிறது என்பதை அப்போது நான் உணர்ந்து கொண்டேன்.

இப்படி நம் ஆழ்மனப்பதிவுகள் ஆயிரம் ஆயிரம் வியப்புகளை உள்ளடக்கிக்கொண்டு அமைதியாக இருக்கின்றன.


ஒருகதை,



பூனைகள் சேர்ந்து மாநாடு நடத்தின. பல நாடுகளிலும் இருந்து நிறைய பூனைகள் வந்திருந்தன. கூட்டம் தொடங்கியது.

தலைமை தாங்கிய பூனை மேடையில் தோன்றி பேசியது.

நாமெல்லாம் முழு நம்பிக்கையோடு இறைவனை வேண்டினால் நிச்சயமாக “எலிகள் மழையாகப் பொழியும்“ என்றது.

அவ்வளவு தான் எல்லா பூனைகளும் சேர்ந்து கைதட்டி ஆரவாரம் செய்தன.

இதனைப் பார்த்துக்கொண்டே அந்த வழியில் சென்ற நாய் ஒன்று சிரித்துக்கொண்டே சென்றது..

என்ன இது முட்டாள்த்தனம்?

என்றாவது எலிமழை பொழிந்திருக்கிறதா?

இவ்வளவு முட்டாள்தனம் நிறந்தவையாகப் பூனைகள் இருகும் என நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை!

நம்பிக்கையோடு வேண்டினால் ஒருவேளை “எலும்பு மழை“ வேண்டுமானால் பொழியலாம்!

என்று மனதில் எண்ணியவாறு சென்றது நாய்.

என்றோ எங்கோ படித்த இந்தக் கதையை பலசூழல்களில் நான் அடிக்கடி நினைத்துக்கொள்வதுண்டு.

ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு சிந்தனைகள், நம்பிக்கைகள் அவரவர்களும் அதனை முழுவதும் நம்புகிறார்கள்.

மனதில் என்ன உள்ளதோ அதுதான் கனவில் மட்டுமல்ல, நினைவிலும் வரும்!

பசியோடு இருக்கும் ஒருவனுக்கு காணும் பொருளெல்லாம் உணவாகத் தெரியும். காரணம் அவன் மனமெங்கும் பசி நிறைந்திருக்கிறது.

பூனைகளின் நினைவில் எப்போதும் எலிகள் தான்!
நாய்களின் மனதில் எப்போதும் எலும்பு தான்!

அதுபோல ஒவ்வொருவர் மனதிலும் ஏதோ ஒன்று நிறைந்திருக்கிறது.




இங்கு ஐங்குறுநூறு என்னும் அகப்பாடலில் தலைவன் மனம் முழுக்க தலைவி மட்டுமே நிறைந்திருக்கிறாள்.


மயில்,முல்லை, மான் என இயற்கைக் கூறுகள் எதைப் பார்த்தாலும் தலைவியைப் பார்த்தது போலவே தோன்றுகிறது.


போர்க்கடமை மேற்கொண்டு சென்ற தலைவன், வினை முடிந்து மீண்டுவந்தபோது தன் காதலியிடம் இவ்வாறு சொல்லி மகிழ்கிறான்.

அழகிய நெற்றியையுடைய பெண்ணே!

சாயலில் அப்படியே உன்னைப் போலவே இருந்த மயில் ஆடக்கண்டேன்!

உன் அழகிய நெற்றியைப் போலவே மனம் வீசும் முல்லை மலரக் கண்டேன்!

உன்னைப் போலவே மருண்டு நோக்கும் மான்களைக் கண்டேன்!

இந்த இயற்கைக் கூறுகள் யாவும் உன்னையே எனக்கு நினைவுபடுத்தின. அதனால், உன்னையன்றி வேறொன்றையும் எண்ணாது, விரைந்தோடும் கார்மேகத்தைவிட விரைவாக வந்தேன்!

(கார்மேகத்தைவிட விரைவாக வந்தேன் என்பதால் தலைவன், தான் குறித்துச்சென்ற கார்காலத்திற்கு முன்பே வந்தான் என்பதும் உணர்த்தப்படுகிறது)

தலைவனின் உள்ளத்தில் தலைவியின் நினைவே நிறைந்திருந்ததால், காணும் காட்சிகள் யாவிலும் தலைவியே தெரிந்தாள்.

மயில், முல்லை, மான் ஆகிய இயற்கைக் கூறுகள் தலைவன் தலைவியின் நினைவின்றி வேறு நினைவு கொள்ளாதவனாக இருக்கத் துணைநின்றன.

பாடல் இதோ,

நின்னே போலும் மஞ்ஞை ஆலநின்
நன்னுதல் நாறும் முல்லை மலர
நின்னே போல மாமருண்டு நோக்க
நின்னே உள்ளி வந்தனென்
நன்னுதல் அரிவை காரினும் விரைந்தே.

ஐங்குறுநூறு -492

இப்பாடல் வழி அறியலாகும் செய்திகள்.


◊ நினைவுகளின் வெளிப்பாடே நாம் காணும் காட்சி என்னும் உளவியல் கூறு உணர்த்தப்படுகிறது.
◊ நம் மனதில் நிறைந்த ஏதோ ஒன்று நாம் காணும் பொருள்களிலெல்லாம் வெளிப்படும் என்ற கருத்து உணர்த்தப்படுகிறது.

(பெண்களின் ஏழு பருவங்கள்

பேதை, பெதும்பை,மங்கை, மடந்தை, அரிவை,தெரிவை, பேரிளம்பெண்)