வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 27 ஜூலை, 2021

22 இலட்சம் பக்கப் பார்வைகள்..

வேர்களைத்தேடி
தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

வேர்களைதேடி என்ற இந்த இணையதளத்தில் இதுவரை, 

1566 இடுகைகள், 

869 பின்தொடர்வோர், 

16788  மறுமொழிகள்

22,08329 பக்கப் பார்வைகள்

இந்தியா, இலங்கை, அமெரிக்கா, ஹாங்காங், மலேசியா, இந்தோனேசியா, இரஷ்யா, சிங்கப்பூர், ஜெர்மனி, ஐக்கிய அரபு நாடுகள்,ஐக்கிய இராச்சியம், சீனா, பிரான்சு, நெதர்லாந்து, சுவீடன், சவுதி அரேபியா, கனடா, உக்ரேன், உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து தொடர்ந்து வருகைதரும் தமிழ் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திங்கள், 25 மே, 2020

கூகுளுக்கு என்னை அறிமுகப்படுத்திய வலைப்பதிவு



தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
வேர்களைத்தேடி என்ற இந்த வலைப்பதிவை நான் தொடங்கி 12 ஆண்டுகளாகிவிட்டன. செவ்வாய் கிழமை 22 தேதி, ஏப்ரல், 2008 அன்று நான் இந்த வலைப்பதிவில் மடலின் படிநிலைகள் என்ற முதல் பதிவை எழுதினேன். இன்று எனது 1352 வது பதிவை வெளியிடுகிறேன். இந்தப் பதிவு கூகுளின் அட்சென்சு ஒப்புதலுடன் வருகிறது என்ற மகிழ்சியையும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். 

       2008 ல் நான் பதிவு எழுதத் தொடங்கிய காலத்தில் எனது தமிழ் ஆய்வுக்கட்டுரைகளை மட்டும் வெளியிட்டேன். அதற்குக் கிடைத்த மறுமொழிகளால் தொடர்ந்து சங்க இலக்கியம் சார்ந்தும், கணினி நுட்பங்கள் சார்ந்தும் எழுதினேன். என்னை அறியாமல் எனது பதிவுளுக்கு நான் வழங்கிய தலைப்புகளும், குறிச்சொற்களும் என்னை கூகுளுக்கு அறிமுகப்படுத்தின. இன்று முனைவர் இரா.குணசீலன், வேர்களைத்தேடி, https://www.gunathamizh.com/, https://www.gunathamizh.blogspot.in/ என எப்படித் தேடினாலும் என்னை கூகுள் அடையாளம் காட்டும்.

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

உங்கள் பெயரின் பொருள் ? – பதிவு 2

2011 ஆம் ஆண்டு என் வலையில், உங்கள் பெயரின் பொருள்?? என்றொரு பதிவை வெளியிட்டேன். அந்தப் பதிவு 70 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்தப் பதிவின் நோக்கம், அவரவர் தாய்மொழியில் குழந்தைகளுக்கான பெயர்கள் இடவேண்டும். தமிழர்கள் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர்வைக்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பதே ஆகும். அந்தப் பதிவின் வழி பலரும் என்னைத் தொடர்புகொண்டு தம் குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்களைக் கேட்டனர். நானும் பரிந்துரை செய்தேன். பலர் தம் பெயர் என்ன மொழி சார்ந்தது, அதன் பொருள் என்ன என்றும் அறிந்துகொண்டனர்.     
இன்றும் பலர் தம் பெயர்கள் என்ன மொழி சார்ந்தது என்றும்,அதன் பொருள் என்ன என்றும் அறிந்துகொள்ளாதவர்களாகவே உள்ளனர். அதனால், இன்றைய சூழலிலும் 
தமிழ் மொழியில் பெயர் வைக்கவேண்டும்!!
                   தமிழில் கையொப்பமிடவேண்டும்!!    
                          தமிழில் பேசவேண்டும்!!
இணையத்தில் தமிழில் உலவவேண்டும்!!
என்ற சிந்தனைகளை நாம் மீண்டும் மீண்டும் எடுத்துச்சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
18.04.2017 இன்று காலை தமிழ் இந்து நாளிதழில் படித்து வியந்த செய்தி,
(நன்றி தமிழ் இந்து)
ராஜஸ்தானில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ‘குடியரசுத் தலைவர் ஆடு மேய்க்க சென்றுள்ளார்’ என்றோ பிரதமர் பலசரக்கு வாங்க நகரத்துக்கு சென்றுள்ளார் என்றோ யாராவது சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம். ஆம். அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு பதவி, பிரபல பிராண்ட்களின் பெயரைச் சூட்டுவது வழக்கமாக உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் புந்தி மாவட்டத்தில் ராம்நகர் கிராமம் உள்ளது. சுமார் 500 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் கஞ்சார் சமுதாயத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் படிப் பறிவில்லாதவர்கள். ஆனாலும், இங்கு குழந்தைகளுக்கு அரசு உயர் பதவி மற்றும் உயர் அலுவலகங்களின் பெயர்களைச் சூட்டுவது வழக்கமாக உள்ளது.
ஒருமுறை மிடுக்கான தோற்றத்துடன் தனது கிராமத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியரைப் (கலெக்டர்) பார்த்து அசந்துபோன ஒரு பெண், தனது பேரனுக்கு கலெக்டர் என பெயரிட்டுள்ளார். அவருக்கு இப்போது 50 வயதாகிறது. அவர் பள்ளிக்குச் சென்றதே இல்லை.
இதுகுறித்து ராம்நகர் கிராம அரசு பள்ளி ஆசிரியர் கூறும்போது, “சூழ்நிலை காரணமாக காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் சென்ற கிராம மக்கள், அங்கு அதிகாரிகளுக்கு கிடைக்கும் மரியாதையைக் கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதையடுத்து, தங்கள் குழந்தைகளுக்கு ஐஜி, எஸ்பி, ஹவில்தார், மாஜிஸ்திரேட் என பெயரிடத் தொடங்கினர்” என்றார்.
இதுபோல மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஹை கோர்ட் என பெயரிட்டுள்ளனர். இவர் பிறந்தபோது, குற்ற வழக்கில் சிக்கிய இவரது தாத்தாவுக்கு ஹை கோர்ட் ஜாமீன் வழங்கியதால் இந்த பெயர் வைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் ஸ்மார்ட்போன் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், புந்தி மாவட்டம் நைன்வா தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களில் செல்போன் பிராண்ட்கள், சாப்ட்வேர் மற்றும் அதன் உதிரி பாகங்களின் பெயரையும் சூட்டத் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து, நைன்வா தாலுகா சுகாதார மையத்தில் பெயர் பதிவு அதிகாரியாக பணியாற்றும் ரமேஷ் சந்த் ரத்தோர் கூறும்போது, “பர்கானி, அர்னியா, ஹனுமந்தபுரா, சுவாலியா உள்ளிட்ட கிராம மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு சாம்சங், நோக்கியா, ஜியோனி, ஆண்ட்ராய்டு, ஸ்மார்ட்போன், சிம் கார்டு, சிப், மிஸ்டு கால் உள்ளிட்ட பெயர்களைச் சூட்டுகின்றனர்” என்றார். 

வியாழன், 6 ஏப்ரல், 2017

ஒரே நாளில் 100 தமிழ்ப் பதிவுகள்!


எனது பிறந்தநாளில் நான் விரும்பும் மிகப் பெரிய பரிசை
எனக்குத் தரவேண்டும் என்று 

எங்கள் கே.எஸ்.ஆா் மகளிர்கல்லூரியின் மாணவிகள் 

எங்கள் கல்லூரி வலைப்பதிவில் ஒரே நாளில் 100 இடுகைகளைத் தமிழில் பதிவிட்டுள்ளனர். 

இந்தப் பரிசை என் வாழ்நாளின் மறக்கமுடியாத பரிசாகக் கருதுகிறேன்.
சமூகத்தளங்களில் என்னோடு உரையாடுபவர்கள் தமிழில் பேசினாலோ, தமிழில் தட்டச்சு செய்தாலோ கூட 
மகிழ்ச்சி கொள்வேன். இன்று எங்கள் மாணவிகளின் முயற்சி என்னை இன்னும் நம்பிக்கையுடன், ஊக்கத்துடன் செயல்படத் துணைநிற்கிறது.

இந்த முயற்சிக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட கணித்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் செ.வைசாலி அவர்களுக்கும், அ.கோகிலா, சா.சரண்யா,ஜெ.ஜனனி, சுகன்யா, சாலினி, சாந்தினி,டி. சுதா, மோகனபிரியா, நா.ராஜலட்சுமி, பர்சானா உள்ளிட்ட ஒவ்வொரு மாணவிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

100 = 1000


அன்பான தமிழ் உறவுகளே வணக்கம்.

1000 இடுகைகள் எழுதியவுடன் எனக்குள் ஒரு இலக்குவைத்துக்கொண்டேன். சமூகத்தளங்களில் ஆங்கிலத்தில் எழுதும் பலரையும் தமிழில் எழுதவைக்கவேண்டும் என்பதுதான் அது. அதனால் பல கல்லூரிகளுக்கும் சென்று தமிழ்த்தட்டச்சு பற்றியும், தமிழில் வலைப்பதிவு எழுதுதல், விக்கிப்பீடியாவில் எழுதுதல் குறித்தும் உரையாற்றி வருகிறேன். தமிழ் இணையப்பல்கலைகழகத்தின் அறிவுறுத்தலுக்கிணங்கி எங்கள் கல்லூரியில் கணித்தமிழ்ப் பேரவை ஒன்றை ஆரம்பித்துள்ளோம். அதில் எங்கள் மாணவிகளுக்கு,

தமிழ்தட்டச்சுப் பயிற்சி, வலைப்பதிவில் தமிழ் எழுதுதல், விக்கிப்பீடியாவில் எழுதுதல், குறுஞ்செயலி உருவாக்கம், உள்ளிட்ட பயிற்சிகளை அளித்துவருகிறேன். கணித்தமிழ்ப் பேரவையின் உறுப்பினர்களாக விண்ணப்பித்திருந்த 100 மாணவிகளுள் முதல்கட்டமாக 50 மாணவிகளுக்கு மட்டும் இந்தப் பயிற்சி வழங்கிவருகிறேன். இந்த 50 மாணவிகளும் எங்கள் கல்லூரியின் வலைப்பதிவில் எழுதிவருகிறார்கள். இவா்கள் கடந்த 3 மாதங்களில் 100 இடுகைகள் எழுதியிருக்கிறார்கள். நான் எழுதிய 1000 இடுகைகளைவிட மதிப்புடையனவாக இந்த 100 இடுகைகளைக் கருதுகிறேன். ஏனென்றால் இந்த மாணவிகள் வெவ்வேறு துறை சார்ந்தவா்கள், சமூகத்தளங்களில் பெண் படைப்பாளிகள் ஆண்களுடன் ஒப்பிடும் அளவுக்கு இல்லாத இந்த நிலையில் இப்படி பெண் படைப்பாளிகளாக இம்மாணவிகள் தமிழ் எழுதுவது பெரிதென்று கருதுகிறேன். வலைப்பதிவில் நன்கு எழுதும் பயிற்சி பெற்ற இவா்கள் புதிய மாணவிகளுக்குப் பயிற்சி அளிப்பதுடன் தற்போது விக்கிப்பீடியாவில் எழுதும் பயிற்சி பெற்று வருகிறார்கள். கல்லூரியின் வலைப்பதிவில் சிறப்பாக எழுதிய மாணவிகளை கல்லூரி வலைப்பதிவின் ஆசிரியராக்குவதுடன் எனது வலையில் சிறப்பு விருந்தினராக தமது வலையை அறிமுகம் செய்யும் வாய்ப்பையும் வழங்கவுள்ளேன்.

எங்கள் வலையில் எழுதும் மாணவிகளின் படைப்புகளை பலரும் மறுமொழிகளால் ஊக்குவித்து வருகின்றனா். குறிப்பாக எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழாவுக்கு சிறப்பு சொற்பொழிவாளராக வந்த கவிஞர் முத்துநிலவன் ஐயா அவா்கள் எங்கள் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிவரும் செ.வைசாலி என்ற வணிகவியல் முதலாமாண்டு மாணவியைப் பாராட்டி நூல் வழங்கி சிறப்பித்தார். எங்கள் கல்லூரியின் ஆண்டுவிழாவில் கணித்தமிழ்ப் பேரவையின் சிறந்த செயல்பாட்டுக்காகப் பாராட்டி இம்மாணவிக்கு கணித்தமிழ்ப் பேரவையின் சிறந்த மாணவி என்ற விருதும் வழங்கி எங்கள் முதல்வர் ஊக்குவித்தார்.


தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிக் கெல்லாம் இனிது. (68)

எவ்வளவு சரியாகச் சொல்லியிருக்கிறார் வள்ளுவர். நான் பெற்ற  வெற்றிகளைவிட நான் அடைந்த உயரங்களைவிட என் மாணவிகள் அடையும் உயரங்களால் என்மனம் எவ்வளவு மகிழ்வடைகிறது.

இந்த 100 இடுகைகள் என் மனதில் நம்பிக்கையை விதைத்திருக்கிறன. இந்த மாணவிகளுக்கு நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் நீங்கள் கற்றுக்கொண்டதை 10 பேருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கற்றுக்கொடுங்கள் என்பதுதான்.


இணையத்தில் தமிழ் எழுதுவோம். தமிழின் பெருமையை உலகத்துக்கு எடுத்துச் சொல்வோம்.

எங்கள் கல்லூரியின் வலைப்பதிவு

http://ksrcasw.blogspot.com/

புதன், 6 ஆகஸ்ட், 2014

வீட்டுக்கொரு பிச்சைப் பாத்திரம்!

உலகமயமாக்கல் என்ற புயலில் சிக்கி நம் நாடு சிதைவுக்குள்ளாகியுள்ளது.
மக்கள் தாய்மொழி உணர்வை இழந்துவிட்டனர்!
ஆங்கிலம் மட்டுமே மொழி என்று பலரும் நம்புகின்றனர்!
ஆட்டு மந்தைகளாகத்தான் வாழ்கின்றனர்!
குழந்தைகளின் பெயரில் தாய்மொழி அடையாளமே இல்லை!
மண் உயிரற்றதாகிவிட்டது!
தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்கும் நிலைவந்துவிட்டது!
நம் ஆடை மரபுகளை மறந்துவிட்டோம்!
பழந்தமிழர் விளையாட்டுகளை, கலைகளை யாரும் மதிப்பதில்லை! 
தமிழர் இசை என்னவென்றே தெரியவில்லை!
இந்தக் கல்வி முறை,
 வேலை வாங்குவதே பெரிய இலக்கு என்று மூளைச் சலவை செய்கிறது!
நாட்டைப் பற்றி இவ்வாறு எண்ணிக்கொண்டே ஈரோடு புத்தகத் திருவிழாவுக்குச் சென்றேன். அங்கு சுகிசிவம் அவர்கள் பேசும்போது தான் படித்த, ஒரு சிந்தனையை முன்வைத்தார்.
“இன்று நம் எல்லோர் வீடுகளிலும் ஒரு அலுமினியப் பிச்சைப் பாத்திரம் உள்ளது! அது வேறெங்கும் இல்லை நம் வீட்டின் மாடியில் உள்ள டிடிஎச் ஆண்டனா தான்! அதில் தான் நாம் உலகெங்கிலுமிருந்து கலாச்சாரக் குப்பைகளை இரவல் பெறுகிறோம் என்றார்.
எனக்கும் உண்மை என்றுதான் தோன்றியது. வசதியானவர்கள் தனியாக வைத்திருக்கிறார்கள். இயலாதவர்கள் கேபிள் டிவி என அதையும் இரவல் வாங்குகிறார்கள்.

அவர் சொன்தும் என் நினைவுக்கு வந்தது 
கவிஞர் மு.மேத்தா அவர்களின் கவிதைதான். 

தேசப்பிதாவிற்கு தெருப்பாடகனின் அஞ்சலி
உன்னுடைய படங்கள்
ஊர்வலம் போகின்றன
நீயேன்
தலைகுனிந்தபடி
நடுத்தெருவில்
நிற்கிறாய்?
வெளுத்துப் போய்விட்ட
தேசப்படத்துக்குப்
புதுச்சாயம் பூசும்
புண்ணிய தினத்தில்
புத்திர தேசத்துக்காக நீ
புலம்புவது
என் காதில் விழுகிறது!

எங்கள் தேசசப் பிதாவே!
அமைதி கொலுவிருக்கும்
உன் சிலைகளைப்
பார்க்கும் போதெல்லாம்
நான்
அழுதுவிடுகிறேன்!

கண்ணீரின்
வெப்பத்தால்
என் கவிதை
முழுமை பெறாமலே
முடிந்து விடுகிறது...

தேசப் படத்திலுள்ள
கோடுகள்
விடுதலைக்குப் போராடிய
வீரத் தியாகிகளின்
விலா எலும்புக் கூடுகள்!

அழிக்கமுடியாத
கல்லெறிபடாத
அந்த நினைவுச்சின்னத்தின்
மூலமே
அவர்களுக்கு நாங்கள்
அஞ்சலி செலுத்திவிடுகிறோம்!

கண்ணீர்க் கடலில்
கலங்கள் மூழ்கியபிறகு
அடைக்கலம் தேடிய 
ஆபுத்திரனே!

அமுதசுரபியைத்தான்
நீ தந்து சென்றாய்
இப்போது
எங்கள் கைகளில் இருப்பதோ
பிச்சைப் பாத்திரம் !
இந்த மாற்றத்தை
நிகழ்த்திய
மந்திரவாதிகள் யார்?
நிழலுக்குள் மறைந்திருக்கும்
நிழலை
யார் அம்பலப்படுத்துவது?

சரித்திர மாளிகையில்
அகிம்சைப் பேரொளியில்
பகத்சிங்குகள்
மறைக்கப்பட்டதால் தானா
சுதந்திர மாளிகையை
எலிகள்
சுரண்டுகின்றன?

மயிலுக்கு போர்வை தந்தவனின்
மரபிலே வந்தவர்கள்
எங்கள் மேனியில் கிடக்கும்
கந்தல் சட்டைகளையும்
கழற்றிக் கொண்டு போகிறார்கள்
ஆடுகளை
உனக்காக வளர்த்தோம்
நாளடைவில் நாங்களே
மந்தை ஆடுகளாய்
மாறிப் போனோம் !
எங்கள்
வயிற்றைப் புறக்கணித்துவிட்டு
காம்புகளை நேசிக்கிறார்கள் !
எங்களுக்குத்
தீவனம் கிடைக்காவிட்டாலும்
மேய்ப்பவர்களுக்கு மட்டும்
எப்படியோ
இனாம் கிடைத்து விடுகிறது !

கண்ணீரின் வெப்பத்தால்
 என் கவிதை
முழுமைபெறாமலேயே
முடிந்துவிடுகிறது!

சட்டக்கட்டிடங்களில்
ஓட்டைகள் விழுந்துவிட்டன
வயதாகிப் போனதால்
தர்ம தூபிகள்
தள்ளாடுகின்றன

எங்கள் வாழ்க்கை
இருட்டோடு
இல்லறம் நடத்துகிறது!
பாவத்தைத்
தனித்தனியே செய்துவிட்டு
மொத்தமாகத் தீ்ர்த்துக்கொள்ளப்
போதுமான அளவு
புண்ணிய தலங்கள் இருப்பதால்
எங்கள்
பாரத புத்திரர்கள்
தூசுபடாமல்
தூய்மையாகவே இருக்கிறார்கள்!

இராசதானியில்
மலர்கிரீடங்கள்
சூட்டப்படுகின்றபோது
சேரிக் குழந்தைகளின்
சின்ன விழிச்செடியில்
உப்பு மலர்கள்
உதிர்ந்து விழுகின்றன...

நீ கண்டுபிடித்த
சுதேசி ஆயுதமாம்
கைராட்டையை சுற்றிய சிலர்
தங்கநூல் நூற்கிறார்களாம் !
எங்களுக்கோ
வெள்ளியும் தங்கமும்
விழாக்களின் பெயர்களில்தான்
வருகின்றன
ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்
இந்த நாட்டுமக்கள்
உன்னை
அப்படியே பின்பற்றுகிறார்கள்
அரைகுறையாகத்தான்
உடுத்துகிறார்கள்.

தேசம் போகிற
போக்கைப் பார்த்தால்
பிறந்தநாள் உடையே
எங்கள்
தேசிய உடையாகிவிடும் போல்
இருக்கிறது.

எங்கள் தலைவர்கள்
வறுமையை எப்படியாவது
வெளியேற்றிவிட வேண்டுமென்று தான்
மேடையில் மைக்கின் முன்னால்
பேச்சுத்தவம் செய்கிறார்கள்!

இருபத்தைந் தாண்டுகளில்
தேசத்தில் 
மாற்றமே  நிகழவில்லையென்று
யார் சொன்னது?

கண்ணீர்க்கடலில்
கலங்கள் மூழ்கிய பிறகு
அடைக்கலம் தேடிய
ஆபுத்திரனே!

அமுதசுரபியைத்தான்
நீ தந்து சென்றாய்
இப்போது
எங்கள் கைகளில் இருப்பதோ
பிச்சைப் பாத்திரம் !

அணைக்கட்டுகளில்
திறக்கப்படும் தண்ணீர்
பள்ளங்களை ஏமாற்றிவிட்டு
மேட்டை நோக்கியே
பாய்கிறது.

சேரிகளில் மட்டுமே நீ
யாத்திரை செய்வாய்
என்பதைத்
தெரிந்துகொண்டதால்
உன்னை நேசித்தவர்கள்
தேசத்தையே
சேரியாக மாற்றிவிட்டார்கள்!

இந்த மாற்றங்களை நிகழ்த்திய
மந்திரவாதிகளின் கழுத்துக்கு
நாங்கள்
மாலை சூட்டுகிறோம்!

உன்னுடை படங்கள்
ஊர்வலம் போகின்றன...
நீயேன்
தலைகுனிந்தபடி
நடுத்தெருவில் நிற்கிறாய்?

புத்திர தேசத்துக்காக நீ 
புலம்புவது
என் காதில் விழுகிறது.

அமைதி கொலுவிருக்கும்
உன் சிலைகளைப்
பார்க்கும்போதெல்லாம்
நான் அழுதுவிடுகிறேன்!

கண்ணீரின் வெப்பத்தால்
என் கவிதை
முழுமைபெறாமலே
முடிந்துவிடுகிறது..... 
- மு. மேத்தா