வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
புதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதிர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

அரசனுக்கு விளங்காத பொருள்

முன்னொரு காலத்தில் அரசன் ஒருவன் மாறுவேடத்தில் வயல்வெளியே சென்றுகொண்டிருந்தான்.

அங்கிருந்த வயலில் உழவு வேலை நடந்துகொண்டிருந்தது. அவ்வழியே மூன்று பெண்கள் வந்தனர்.

அவர்களில் ஒருத்தி “இந்த நிலம் முகத்துக்கு ஆகும் என்றாள்”

அடுத்தவள் “ இல்லை வாய்க்கு தான் ஆகும்” என்றாள்.

இருவரையும் மறுத்த மூன்றாமவள் “இது முகத்துக்கும் ஆகாது வாய்க்கும் ஆகாது பிள்ளைக்குத்தான் ஆகும் என்றாள்.

அரசன் எவ்வளவோ சிந்தித்தும் அவர்கள் பேசியதன் பொருள் அவனுக்கு விளங்கவே இல்லை.

தன் மாறுவேடத்தைக் கலைத்த அவன் அவர்கள் மூவரையும் அழைத்தான்.

நீங்கள் குறிப்பாகப் பேசியதன் பொருள் என்ன? விளக்கமாகச் சொல்லுங்கள் என்று கேட்டான்.

அவர்கள் தந்த விளக்கம்..


இந்த நிலம் முகத்துக்கு ஆகும் என்றது மஞ்சள் பயிரிடச் சிறந்த நிலம்



வாய்க்கு ஆகும் என்றது வெற்றிலை பயிரிடச் சிறந்த நிலம்
பிள்ளைக்கு ஆகும் என்றது தென்னை பயிரிடச் சிறந்த நிலம் என்ற விளக்கம் தந்தார்களாம்.

சனி, 3 செப்டம்பர், 2011

பெரிய பொய்!




ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான் அவனுக்குக் கதைகள் கேட்பதில் ஆர்வம் மிகுதி.

ஒரு சமயம் அவன் அமைச்சர்களுடன் பேசிக்கொண்டிருந்தான்.

“நம் நாட்டில் யார் பெரிய பொய் சொல்வார்கள்?“ என்று கேட்டான்.

“பெரும்பாலோர் பொய் பேசுபவர்கள் தாம். யாரால் பெரிய பொய் சொல்ல முடியும் என்று தெரியவில்லை“ என்றார்கள் அமைச்சர்கள்.

முரசு அடிப்பவனை அழைத்த அரசன் “ நாளை அரண்மனையில் அரசர் முன்னிலையில் போட்டி நிகழும். யார் பெரிய பொய் சொல்கின்றார்களோ அவர்களுக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசளிக்கப்படும் என்று தெரிவி“ என்றான்

அப்படியே நாடெங்கும் முரசு அடித்துத் தெரிவித்தான் அவன்.

பொய் சொல்லிப் பரிசு பெற நான்கு பேர் அரண்மனைக்கு வந்தனர்.

அரசன் அரியணையில் அமர்ந்திருந்தான்.

1.முதலாமவன் தன் பொய் மூட்டையை அவிழ்த்தான். “அரசே! விநோதமான சோள விதை என்னிடம் கிடைத்தது அதை வயலில் நட்டுவிட்டுத் திரும்பினேன். கணநேரத்தில் பெரிய சோளச் செடியாக வளர்ந்திருந்தது அது.
சோளக் கதிர்களை பறிக்க அதில் ஏறினேன்.
சோளச் செடி நொடிக்கு நொடி வளர்ந்து கொண்டே இருந்ததால் என்னால் இறங்க முடியவில்லை.
சிறிது நேரத்தில் கண்ணுக்கு எட்டாத உயரம் சென்றுவிட்டேன்.
பசி தாங்கமுடியாத நான் சோளச் செடியில் அமரவந்த பருந்து ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டேன்.
பயந்துபோன பருந்து என்னைத் தரையில் இறக்கிவிட்டது“

என்று பொய் சொன்னான்.

இதைக் கேட்ட எல்லோரும் “இது பெரிய பொய்தான்“ என்றார்கள்.

2. இரண்டாவதாக வந்தவன் “ அரசே! நான் தெரியாமல் இந்தக் கூட்டத்தில் சேர்ந்துவிட்டேன். எனக்குப் பொய்யே பேசத்தெரியாது. என்னை விட்டுவிடுங்கள்“ என்றான்.
“சரி! உன்னை மன்னித்தேன். இனி இப்படி உனக்குத் தெரியாத துறையில் இறங்காதே“ என்றான் அரசன்.

3. மூன்றாமவன் “ அரசே! என்தாய்க்கும் என்தந்தைக்கும் திருமணம் நடந்தது. அந்தத் திருமண வேலைகளையெல்லாம் என் பொறுப்பி்ல் தான் விட்டிருந்தனர்“ என்று தொடங்கினான்.

அவையோர் “இவன் பொய்க்கு அளவே இல்லை“ என்று சிரிக்கத் தொடங்கினர். “இதுவும் நல்லபொய்தான்“ என்றான் அரசன்.

4. நான்காவதாக வந்தவன், “அரசே! என்தாயின் வயிற்றில் நான் இரண்டுமாதக் குழந்தையாக இருந்தேன். அப்போது என் தாய் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தாள். அவளை விழுங்க பெரிய திமிங்கிலம் ஒன்று வந்தது. என்தாய்க்கு நேர இருந்த ஆபத்தைக் கண்டு அவள் வயிற்றிலிருந்து வெளியே வந்தேன். அந்தத் திமிங்கிலத்தோடு கடுமையாகச் சண்டை செய்து அதைக் கொன்றேன். பிறகு திரும்ப என் தாயின் வயிற்றுக்குள் சேர்ந்துவிட்டேன்.“ என்று பொய் சொன்னான்.

அவர்களில் ஒருவனுக்கு அரசன் பரிசளித்தான்.
அரசன் யாருக்குப் பரிசளித்திருப்பான்.????


என்ன நண்பர்களே..
நம்ம அரசியல்வாதிகளையும், வழக்குரைஞர்களையும் விட்டால் இதைவிடப் பெரிய பொய்யே சொல்வார்கள் என்று தோன்றுகிறதா..

மேற்கண்ட புதிருக்கான பதிலைக் கருத்துரையில் தெரிவியுங்கள் பார்க்கலாம். சரியான பதிலளித்தால் தங்கள் மூளை நல்ல நிலையில் இயங்குகிறது என்று நீங்களே உங்களுக்கு ஒரு பாராட்டுத் தெரிவித்துக்கொள்ளலாம்.

மாலை 6 மணிக்கு இதற்கான சரியான பதிலை இப்பதிவிலேயே வெளியிடுகிறேன் அன்பர்களே.


புதிருக்கான சரியான பதில்..


அன்பின் நண்பர்களே காலையில் கேட்ட புதிருக்கு நிறைய பேர் சரியான பதிலளித்திருந்தீர்கள்.

மிக்க மகிழ்ச்சி.

நீங்கள் சொன்னது போல..

2. இரண்டாவதாக வந்தவன் “ அரசே! நான் தெரியாமல் இந்தக் கூட்டத்தில் சேர்ந்துவிட்டேன். எனக்குப் பொய்யே பேசத்தெரியாது. என்னை விட்டுவிடுங்கள்“ என்றான்.
இதுதான் சரியான பதில்.

இப்படித்தான் வகுப்பில் ஒருமுறை பொய் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது...

நாம் எல்லோருமே பொய் சொல்பவர்கள்தான்.
நாம் சொல்லக்கூடிய பொய் ஒன்றுக்கு ஒருபல் விழுவதாக இருந்தால்
உலகத்தில் யாருக்குமே பல் இருக்காது என்றேன்...


அதற்கு ஒரு மாணவர் பல் மட்டுமல்ல யாருக்கும் வாயே இருக்காது ஐயா என்றார்.

அன்பின் உறவுகளே சரியான பதிலளித்த ஒவ்வொருவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தவறான, வேறுபட்ட, எதிர்பாராத,நகைச்சுவையுணர்வுடன் பதிலளித்த அன்பர்களுக்கும் நன்றிகளையும் முயற்சித்தமைக்குப் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே இந்தப் புதிரைவிட நீங்கள் தந்த கருத்துரைகள் மிகவும் விரும்பத்தக்கதாக அமைந்தன.

நன்றி!