வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

நிழலானவன்!!


மண் பயனுற வாழ்வதே வாழ்க்கை.
நிலச் சுமையென வாழ்தல் வாழ்க்கையா?

நாம் இல்லாத சூழலில் நம்மைப் பற்றி எண்ணிப்பார்க்க நாம் எத்தனை பேரை சம்பாதித்திருக்கிறோம் என்பதே உண்மையில் நம்வாழ்வில் நாம் சேர்த்த மதிப்புமிக்க செல்வமாகும்.

இதோ மண் பயனுற்ற வாழ்க்கைச் சான்று ஒன்று..

கார்பெயல் தலைஇய காண்பு இன் காலை
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப
செம் புற்று ஈயலின் இன் அளைப் புளித்து
மென் தினை யாணர்த்து நந்தும் கொல்லோ
நிழல் இல் நீள் இடைத் தனிமரம் போல
பனை கெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!


புறநானூறு – 119
திணை – பொதுவியல்
துறை – கையறுநிலை

வேள்பாரியைக் கபிலர் பாடியது.

நிழல் இல்லாத நீண்ட வழியில் நின்ற தனிமரம் போல முரசுடை வேந்தரைக் காட்டிலும் மிகுதியாக இரவலர்க்கு வழங்கும் வன்மையுடையவன் வேள்பாரி.

அவனது நாடு, கார்காலத்தில மழை பெய்ததால் காட்சிக்கு இனிய காலமாயிற்று.

தெருழ் மலர்

யானை முகத்தில் உள்ள புள்ளி போலத் தெறுழ் மலர் மலர்ந்தது.

புளிங்கறி

செம்புற்றின் ஈயலை, இனிய மோருடன் கூட்டிச் சமைத்த புளிங்கறியை உடையது பாரிநாடு. மேலும் சிறு தினையாகிய புது வருவாயும் முன்பு உடையதாயிருந்தது.

கையறுநிலை

இனி அது கெட்டொழிந்தது. பாரி இறந்த பிறகு நாடும் கெட்டொழிந்தது. கொடுப்பவரும் இல்லை எனக் கபிலர் கையற்றுப் புலம்புவதாக இப்பாடல் அமைகிறது.

பாடல் வழியே..

1. கையறுநிலை என்றால் கையற்றுப் புலம்புதல் என்ற புறத்துறை விளக்கப்பட்டுள்ளது.
2. நிழல் தரும் தனிமரத்தைப் போன்றவன் பாரி என்ற உவமை மிகவும் இயைபுடையதாகவுள்ளது.
3. யானையின் முகத்தில் உள்ள புள்ளி போலத் தெருழ் மலர் மலர்ந்தது என்ற உவமை புதுமையானதாகக் காட்சியளிக்கிறது.
4. ஈயலை மோருடன் கலந்து புளிங்கறி சமைத்து உண்டனர் என்ற செய்தி சங்ககால மக்களின் உணவுவழக்கத்தை அறிந்துகொள்ளத் துணைநிற்பதாகவுள்ளது.
5. இத்தகைய சிறப்புடைய கொடையாளியான பாரி மறைந்தனன் என்ற கையற்ற புலம்பல் பாரி, மண் பயனுற வாழ்ந்தமைக்குத் தக்க சான்றாக விளங்குகிறது.

“வாழ்ந்தா இப்படியொரு வாழ்க்கை வாழனும்!!!“

15 கருத்துகள்:

 1. அழகிய பாடல். சிறப்பான விளக்கம்.
  ஆம், மண் பயனுற வாழ்வதே வாழ்க்கை.
  நன்றி பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
 2. முனைவரின் ஒவ்வொரு பதிவிலும் படிப்பினைகள்
  அருமை பாராட்டுக்கள் தோழரே

  பதிலளிநீக்கு
 3. நீங்கள் பதிவிடும் வேகம் பிரமிக்க வைக்கிறது முனைவரே....

  நல்ல பகிர்வு....

  பதிலளிநீக்கு
 4. “வாழ்ந்தா இப்படியொரு வாழ்க்கை வாழனும்!!!“//
  முற்றிலும் உண்மை சகோ...

  பதிலளிநீக்கு
 5. உங்களை நான் சம்பாதித்து இருந்தால் அது எனது பயன்..... அருமை நண்பா...!

  பதிலளிநீக்கு
 6. நிழலில்லா வழியில் நிற்கும் தனிமரமும் இல்லாது போனால்....? நினைக்கவே வேதனை தரும் ஒரு நிகழ்வினை உவமையாகச் சொல்லித் தம் கையறு நிலையைக் குறிப்பிட்டப் புலவரின் புலமையை என்னவென்பது?வாழ்க்கையென்றால் என்னவென்பதை வகையாய்ப் பறைசாற்றும் பதிவு. நன்றி முனைவரே.

  பதிலளிநீக்கு
 7. பாரி ஆண்ட பிரான்மலை காரைக்குடிக்கு அருகில்தான் உள்ளது.

  பதிலளிநீக்கு
 8. அருமையான பாடலுக்குச் சிறப்பான விளக்கம்!

  பதிலளிநீக்கு
 9. மனித வாழ்க்கை பயனுள்ளதாக அமைத்துக்கொள்ள தூண்டுதல் ஏற்ப்படுத்தும் பதிவு..

  வாழ்த்துகள்.... நண்பரே..

  பதிலளிநீக்கு
 10. வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி இராம்வி
  வருகைக்கு நன்றி சூர்யா
  மகிழ்ச்சி செய்தாலி
  நன்றி வெங்கட் நேரம் கிடைக்கும்போது எழுதிக்கொள்வேன் அவ்வளவுதான்..

  பதிலளிநீக்கு
 11. வருகைக்கு நன்றி இராஜா
  புரிதலுக்கு நன்றி கருன்
  உங்களை சம்பாதி்த்தது நான் செய்த பயன் நிரோஷ்
  நன்றி சத்ரியன்
  நன்றி கீதா

  பதிலளிநீக்கு
 12. குறிப்புக்கு நன்றி தேவன் மாயன்
  கருத்துரைக்கு நன்றி சென்னைப் பித்தன்
  புரிதலுக்கு மகிழ்ச்சி இராஜா எம்விஎஸ்
  நன்றி நண்டு

  பதிலளிநீக்கு