வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 பிப்ரவரி, 2017

அன்றே சொன்னார் வள்ளுவர்!

இன்றைய சூழலில் தமிழக அரசியலில் ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தமக்கு எது வசதியானது என்பதில் காட்டும் ஆர்வத்தில் எது சரியானது என்பதை மறந்துவிடுகிறார்கள். இந்த அரசியல்வாதிகளின் இயல்பை வள்ளுவர் ஏதாவது குறளில் குறிப்பிட்டிருக்கிறாரா? என்று தேடினேன்..
கயமை அதிகாரத்தில் அவர் கூறிய தகுதிகள் இன்றைய அரசியல்வாதிகளுக்கு மிகவும் பொருத்தமாகவே உள்ளன.
கயவர் என்பார், தமக்கு ஒரு துன்பம் வரும்போது அதிலிருந்து தப்பித்துக் கொள்ள, தம்மையே பிறரிடம் விரைவில் விற்றுவிடுவார்கள். தாம் அவர்களுக்கு அடிமையாவதற்காகத் தயங்காதவர்கள்!
இதற்கு அன்றி வேறு எந்தத் தொழிலுக்கு இவர் உரியவராவார் ஆவர்? என்று நம்மிடமே கேள்வி கேட்கிறார் வள்ளுவர்.
இதனை,
எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால் 
விற்றற்கு உரியர் விரைந்து - குறள் 1080:

என்ற குறள் வழி அறியலாம். 

வியாழன், 17 நவம்பர், 2016

புதன், 5 டிசம்பர், 2012

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும்?

இலஞ்சம் கொடுப்பதோ, வாங்குவதோ குற்றம்!

ஆனால் இன்றைய சூழலில்,

கொடுக்கத்தெரிந்தவன் புத்திசாலி!
வாங்கத்தெரிந்தவன் பிழைக்கத்தெரிந்தவன்!
இயலாதவர்கள் இருந்தாலென்ன? இறந்தாலென்ன?

என்ற மனநிலைதான் எங்கும் காணப்படுகிறது.

இலஞ்சம் வாங்காதே பிச்சையெடு என்று கொடுத்தவர்கள் கோபப்படுகிறார்கள்!

சும்மாவா கிடைச்சது இந்த வேலை? பிச்சையெடுத்துத்தான்டா இந்த வேலையே வாங்கினேன் என்று வாங்குபவர்கள் சொல்கிறார்கள்.

கொடுப்பவர்களையும், வாங்குபவர்களையும் போலவே சராசரி வாழ்க்கை வாழப் பழகிக்கொண்டார்கள்  மக்கள்.

என்ன விதை போடுகிறோமோ அதைத்தானே அறுவடை செய்யமுடியும்.நம் முன்னோர் விதைத்துச் சென்ற இலஞ்சம் என்னும் விதையைத்தான் நாம் இப்போது அறுவடைசெய்கிறோம்.

நாமும் நம் குழந்தைகளுக்கு இலஞ்சம் என்னும் விதையை விதைத்தால் அவர்கள்
இலஞ்சம் என்னும் பயிரைத்தானே அறுவடை செய்வார்கள்.

குழந்தைகளிடம் இறைவனை வழிபடும் முறைபற்றிச்சொல்லும்போது..

இறைவனிடம் வேண்டினால் அவர் தருவார் என்றுதானே சொல்கிறோம்..

கொஞ்சம் சிந்திப்போம் இறைவனிடம் வேண்டினால் மட்டும் எல்லாம் கிடைத்துவிடாது.

உழைப்புதன் மெய்வருத்தக் கூலிதரும்.

ஆயிரம் கடவுள்களை வேண்டினாலும் 
உன் மீது நீ நம்பிக்கை வைக்காவிட்டால்
நீ தான் பெரிய நாத்திகவாதி என்ற சிந்தனைகள 
மனதில் வைத்து,

நாம் வாழும் உலகம் தான் இலஞ்சம் நிறைந்ததாக இருக்கிறது. இளம் தலைமுறையினரிடமாவது சொல்வோம்.

உழைக்காமல் எதுவும் கிடைக்காது! அப்படிக் கிடைத்தால் அது நிலைக்காது!
உழைக்காவிட்டால் சாமி எதுவும் கொடுக்காது!
உழைத்துக் கிடைத்த ஊதியம்தான் உடலில் ஒட்டும்.

உழைப்புக்கு ஊதியம் பெறு, கொடு என்ற பண்பை நம் குழந்தைகளுக்காவது சொல்லித்தருவோம்.


பணத்தை முட்டாள் கூட சம்பாதித்துவிடமுடியும்
அதை ஒரு அறிவாளியால் தான் பாதுகாக்கமுடியும்.

என்பதையும், இலஞ்சம் கொடுப்பதும், பெறுவதும் பாவம் என்பதையும் நம் குழந்தைகளுக்குச் சொல்லித்தருவோம்.




தொடர்புடைய இடுகை

தேடிவந்த உணவு

நீங்க தீவிரவாதியா?

வெள்ளி, 30 நவம்பர், 2012

மின்வெட்டை சமாளிக்க எளிய வழிகள்.

தமிழகத்தில் அதிகரித்துவரும் மின்வெட்டால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அணுஉலை, அணுமின்நிலையம், காற்றாலை, சூரியமின்உற்பத்தி என அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.இன்னும் 6மாதங்களில் மின்மிகை மாநிலமாக தமிழகம் விளங்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் மின்வெட்டு அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. மக்கள் மனநிலையை எடுத்தியம்பும் படங்கள் சில.. 



கதை ஒன்று..
முல்லா ஒரு கழுதை வைத்திருந்தார். அதில் தான் அவர் செல்வார். அந்தக் கழுதை எப்போதும் அவர் பேச்சைக் கேட்பதே இல்லை. கிழக்கே போகச் சொன்னால் மேற்கே போகும். மேற்கே போகச்சொன்னால் வடக்கே போகும்.
     ஒருநாள் முல்லாவின் நண்பர், முல்லாவைப் பார்த்து, “என்ன முல்லா நேற்று நீங்கள் கழுதைமீது அமர்ந்து விரைவாகச் செல்லும்போது நான் நிற்கச்சொன்னேன். நீங்க நிற்காமலே போய்விட்டீர்களே? என்று கேட்டார்.
அதற்கு முல்லா, “நானா நிற்கமாட்டேன் என்று சொன்னேன். தாங்கள் சொல்வதை என் கழுதையிடம் சொல்லுங்கள். அதுதான் நிற்கமாட்டேன் என்கிறது. நான் சொல்வதை அது என்றுமே கேட்டதில்லை.“
அதனால் அதற்கு ஏற்றவாறு நானும் என்னை மாற்றிக்கொண்டேன்.
கழுதை எங்கெல்லாம் செல்கிறதோ அங்கு என்ன வேலை உண்டோ அதைப் பார்க்கப் பழகிக்கொண்டேன் என்றார்.

(மின்சாரம் நாம் நினைக்கும்போதெல்லாம் வந்துவிடாது. 
அது வரும்போது நாம் மின்சாரம் சார்ந்த வேலைகளை முடித்துக்கொள்ளவேண்டும்)

இந்தக் கதையில் முல்லாவும் – கழுதையும்
நிகழ்காலத்தில் தமிழக மக்களும் – மின்சாரமும்.
 ஒப்புநோக்கி சிரித்து மகிழ்க. (இடுக்கண் வருங்கால் நகுக)

இந்நிலையில்,மின்வெட்டை சாமாளிக்க சில வழிமுறைகளைக் காண்போம்.
  •  எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் அதனால் மின்சாரம் என்ற ஒன்று இருப்பதையே (இருந்ததையே) மறந்துவிடுங்கள்.
  •  இணையம், தொலைக்காட்சி, கணினி எல்லாவற்றையும் மறந்து (நினைத்தாலும் பயன்படுத்தமுடியாது) குடும்பஉறவுகளிடமும், நண்பர்களிடமும் பேச மின்வெட்டு நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

  • ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல், திருகை, விசிறி ஆகிய பொருள்களை வாங்கிப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளலாம்.
  • மின்விசிறி இல்லாததால் வீட்டில் மரங்களை வளர்த்துக்கொள்ளலாம்.

      ·  பொழுதுபோக்குவதற்காக நல்ல நூல்களைப் படிக்கலாம்.
  • அதிகரித்து வந்த மின்பயன்பாட்டால் மனிதஉடல் உழைப்புகள் குறைந்து வந்தன. அதனால் நோய்களும் பல உருவாகிவந்தன. இப்போது நோயின்றி வாழ சிறந்த வழி இந்த மின்வெட்டு என எண்ணி்க்கொள்வோம்.
மின்வெட்டை சாமாளிக்க நான் கடைபிடிக்கும் வழிமுறைகளை இதில் தெரிவித்திருக்கிறேன்.

அன்பு நண்பர்களே நீங்களும் மின்வெட்டை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என்று சொன்னால் பெரிதும் மகிழ்வேன்.

சனி, 20 அக்டோபர், 2012

50 ஆண்டுகளில் கல்வியில் ஏற்பட்ட மாற்றங்கள்(?)







எதிர்காலத்தை வடிவமைக்கும் பெரும் பணி ஆசிரியர்களிடம் இருக்கிறது.  ஆனால் இன்றைய ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் பல.

இன்றைய மாணவர்கள்
பெற்றோர்கள்
கல்வி நிறுவன்ங்கள் யாவும் எதிர்பார்ப்பது அதிகமதிப்பெண் மற்றும்
100 விழுக்காடு தேர்ச்சி.

மதிப்பெண் எடுத்தால் போதுமா?
வாழ்க்கையை மாணவர்கள் புரிந்துகொள்ளவேண்டாமா?

இன்றைய மாணவர்களிடமெல்லாம் நிறையவே மதிப்பெண்கள் இருக்கின்றன.

ஆனால்..
 புரிந்துகொள்ளும் திறன், படைப்பாக்கத்திறன், தகவல் தொடர்புத்திறன் ஆகியன எந்த அளவுக்கு இருக்கின்றன என்பது பெரிய கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது (?)


தொடர்புடைய இடுகைகள்

1. கல்விச்சாலை = சிறைச்சாலை

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

இந்தக்குழந்தைகள் சொல்வது கேட்கிறதா?



  • சுவர்  பெரிதாக இருப்பதால் கல்வி தன்னைவிட்டு மிகத்தொலைவில் இருப்பதாக இந்தக் குழந்தை எண்ணி்க்கொள்ளவில்லை. தான் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற உறுதியுடைய மனம் இந்தக் குழந்தையிடம் உள்ளது அதனால் வெளியே இருந்துகூட இந்தக் குழந்தையால் கற்றுக்கொள்ளமுடிகிறது..



சில குழந்தைகள் பள்ளியின் உள்ளே இருந்தும் கற்றுக்கொள்ளாமல் இருப்பதையும் நம்மால் காணமுடிகிறது.

கற்றுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மட்டும் 
இருந்தால் போதும் எதுவும் தடையல்ல 
என்ற உயர்ந்த சிந்தனையை இந்தக் காட்சி நமக்குப் புலப்படுத்துகிறது.



  •  அந்தக் காலத்தில் குழந்தைகள் தான் புத்தகங்களைக் கிழிப்பார்கள். இன்றெல்லாம் வன்முறை உணர்வைத் தூண்டித் தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் புத்தகங்கள் குழந்தைகளைக் கிழித்துவிடுகின்றன. இந்த உண்மையை அழுத்தமாகச் சொல்லும் நிழற்படம் இது.



  • கல்வி - பணம் இரண்டில் எது மதிப்பு மிகுந்தது?
   பணத்தைக் கொடுத்து கல்வியை வாங்குகிறோம்
  கல்வியை விற்றுப் பணமாக்குகிறோம்
இலவசமாகக் கிடைக்கும் எதற்கும் மதிப்பிருக்காது என்பது உண்மைதான்
அதற்காக அதிகவிலைகொடுத்து இந்தக்கல்வியை வாங்கும்போது
அதைப் பெறும் மாணவர்களுக்கு மனிதாபிமானம் இருக்காது என்ற கருத்தையும் நாம் சிந்திக்கவேண்டும்.


கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
திருக்குறள் -391
தொடர்புடைய இடுகை


ஞாயிறு, 23 செப்டம்பர், 2012

உலகத்தரம்வாய்ந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல்(2011-2012)

உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களின் 2011-2012 ஆம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை இந்த இணைப்பில் காணலாம்.



என்ன இந்தியாவின் பெயரைக் காணோமே என்று தேடறீங்களா?
உங்க நாட்டுப் பற்றுக்கு அளவே இல்லையா?

உங்களுக்குப் பேராசைதான்...


இந்த இடமாவது கிடைத்ததே....


கனவு காணுங்கள்...

என்று சொன்னதை நாம் சரியாத்தானே புரிந்து கொண்டிருக்கிறோமா?

உணவு
உடை
உறைவிடம்
கல்வி
ஒலிம்பிக் பதக்கப்பட்டியல்
தொழில்நுட்பம்

என பல்வேறு நிலைகளில் நாம் பின் தங்கியிருந்தாலும்

மக்கள் தொகை
இலஞ்சம்
ஊழல்
மது

என இந்த இடங்களில் யாராலும் நம்மை நெருங்கவே முடியாது என்பதை எண்ணி, வாக்களிக்கும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பெருமிதம் கொள்வோமாக..


தொடர்புடைய இடுகைகள்

சனி, 1 செப்டம்பர், 2012

மக்கு மனுசன்.


மக்கு மனுசன்
பயன்படுத்துவதெல்லாம் மக்காப் பொருள்கள்
அதனால் மண்ணே மக்கா போச்சு
மக்கா யோசிங்க...
நாமெல்லாம் மக்கிப் போகலாம்
இந்த மண்ணு மக்காமப் போகலாமா..?

சொல்லும் பொருளும்

மக்கு மனுசன் - முட்டாள் மனிதன்
மக்கா பொருள்கள் - மக்காத பொருள்கள்
மண்ணே மக்காப் போச்சு - மண் மலடாப் போச்சு
மக்கிப் போகலாம் - மறைந்து மண்ணில் கலந்துபோகலாம்
மக்காமப் போகலாமா - மக்கித்தான் போகனும்

தொடர்புடைய இடுகைகள்

                                                                                   அதனால் மரங்களை வெட்டாதீர்கள்
                                                                                நாளைய குடிநீர்

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

தெரியுமா செய்தி..?


    உண்மை உலகை ஒரு முறை சுற்றிவருவதற்குள்
    பொய் உலகை மூன்று முறை சுற்றிவந்துவிடும் என்றொரு பொன்மொழி உண்டு.

  1. பிள்ளையார் பால் குடித்தார் என்றதும் நம்பி கையில் பாலோடு சென்றது ஒரு கூட்டம்.

  2. அனுமார் சிலையில் தண்ணீரை ஊற்றினால் பால் வடிகிறது என்றதும் கையில் தண்ணீர் பாட்டில்களைத் தூக்கிச் சென்றது ஒரு கூட்டம்.

  3. ரம்ஜானுக்கு முதல்நாள், கைகளில் மெகந்தி வைத்தவர்களுக்கு மரணம் வரும் என்றதும் மருத்துவமனை நோக்கி படையெடுத்தது ஒரு கூட்டம்.

  4. உடன்பிறந்த பெண்களுக்கு பச்சை, நீலம், மஞ்சள் நிறத்தில் சேலை எடுத்துக்கொடுக்கவேண்டும் என்றதும் துணிக்டையைநோக்கிப் படையெடுதத்து ஒரு கூட்டம்.

  5. ஒரு நாள் கடல்நீர் இனிக்கிறது என்று பெருங்கூட்டம் கூடியது. ஆளாளுக்கு தண்ணீரைப் பிடித்துக் குடித்தது போதாதென்று பாட்டில்களில் நிரப்பிக்கொண்டுவேறு சென்றார்கள். ஆய்வாளர்கள் வந்து ஆராய்ச்சி செய்துவிட்டு சொன்னார்கள். பிறகுதான் தெரிந்தது, கடலின் அருகே இருந்த தொழிற்சாலைக் கழிவுகள் கலந்ததால் அந்தப் பகுதி தண்ணீர் இனிக்க ஆரம்பித்தது என்று. அடுத்து என்ன நடந்திருக்கும் என்று நான் சொல்லவா வேண்டும்.

  6. திருப்பூரில் பிறந்த குழந்தை பேசியது. தான் அரைமணிநேரம் தான் உயிரோடு இருப்பேன் பிறகு இறந்துவிடுவேன். 4000 குழந்தைகளாவது இறந்துபோவார்கள். அதற்கு தேங்காய் உடைத்து நேத்திக்கடன் செய்யவேண்டும் என்று ஒரு வதந்தி... அதனால் தமிழகத்தில் பல ஊர்களிலும் தேங்காய் விலை உயர்ந்தது.

  7. என்ன சொன்னாலும் நம்புறாங்கப்பா..

    கேப்பையில நெய் வடியுதுன்னா
    கேப்பாருக்கு புத்தி எங்கே போகுது..?

    என்பார்கள் மூத்தவர்கள்.

    படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. எல்லோருமே இந்த வதந்திகளை நம்புகிறார்கள்..!

    அந்தக் காலத்திலெல்லாம் 25பைசா அஞ்சல் அட்டையில் ஏதாவது சாமி பெயரோடு கடிதம் வரும் 10 நாட்களுக்குள் இதை 10 பேருக்காவது கடிதவழியே அனுப்பவேண்டும் இல்லாவிட்டார் 10 நாட்களில் நீங்கள் இரத்தம் கக்கி செத்துப்போவீர்கள் என்று வரும். வேறு வழியில்லாமல் பலரும் அந்தக் காலத்தில் அஞ்சல் அலுவலகங்களுக்குப் படையெடுத்தார்கள்.

    இன்று இந்த வதந்தி அதிகமாக அலைபேசிகளில் குறுந்தகவல் வழியே பரவுகிறது.


  • அதனால் வதந்திகளை நம்பாதீர்கள்!
  • குறுந்தகவல் இலவசம் தானே என்று எல்லாவற்றையும் எல்லோருக்கும் முன்னனுப்பாதீர்கள்.


               காலம் மாறிப்போச்சு பாருங்க..


    அன்று
    இன்று..



    தொடர்புடைய இடுகைகள்


    பக்கம் பார்த்துப் பேசு
    பெரிய பொய்

    அதனால் தெரியுமா செய்தி..? என்று யாரும் கேட்டால் அவர்களிடம் நீங்கள் கேளுங்கள்..








    நீங்கள் சொல்லும் செய்தி உண்மைதானா என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேளுங்கள்

சனி, 18 ஆகஸ்ட், 2012

அதனால் மரங்களை வெட்டாதீர்கள்!


நிலத்தின் பச்சை இதயங்கள் மரங்கள்!
இரும்பு இதயம் கொண்டவன் நான்!

மரங்கள் இன்றும் சலசல எனத் தன்
தாய்மொழிதான் பேசுகின்றன!
நான் தாய்மொழி பேசினால் கலகல
எனச் சிரிக்கின்றன வளர்ந்த குழந்தைகள்!!

கரியமில வாயுவை உண்டாலும்
உயிர்காற்றைத் தருகின்றன மரங்கள்!
நான் மரங்களை வெட்டினாலும்
கட்டிடங்கள் வளர்த்துத் தருகிறேன்!

வெயிலில் நின்றாலும் மரங்கள்
குளிர்க்காற்றைத் தருகின்றன!
குளிர்சாதன அறைக்குள் இருந்துகொண்டு
புவி வெப்பத்தை அள்ளி வழங்குகிறேன் நான்!

மரங்கள்..
மலர், காய், கனி, நிழல் தந்தாலும்
தன்னை விளம்பரம் செய்துகொள்வதில்லை!
அடையாளப்படுத்திக் கொள்ளாமல்
என்னால் வாழமுடிவதில்லை!

மரங்கள் எங்கும் சென்று கல்வி பயில்வதில்லை!
இருந்தாலும் இன்றும்
பறவைகளின் பல்கலைக்கழகமாக
மரங்களே திகழ்கின்றன!
கட்டிடக் கல்விச் சாலைக்குச் சென்றாலும்
எனக்கு அறிவு முதிர்ச்சியடைவில்லை!

நானும் மரமும் என்று
சொல்லிக்கொள்ளும் அளவுக்கு
நான் இன்னும் வளரவில்லை!
அதனால்தான் மரமும் நானும்
என்று சொல்லிக்கொள்கிறேன்..

அதனால் மரங்களை வெட்டாதீர்கள்..

கவிஞர் காசியானந்தன்.


தொடர்புடைய இடுகைகள்



வியாழன், 16 ஆகஸ்ட், 2012

யாருக்கும் வெட்கமில்லை!



  1. உனக்கு அந்த நாள் நினைவிருக்கா..?

  2. ஆகஸ்ட் 15 நாம இரண்டுபேரும் தேசியக் கொடி வாங்குவதற்காகக் கடைக்குப் போனோம்..

    கடைக்காரன் கொடி தந்தபோது நீ அவனைப் பார்த்துக் கேட்ட பாரு ஒரு கேள்வி..

    “வேற கலர் இருக்கா?“ என்று..

    நினைவிருக்கா?

    வெட்கமா இல்லை... சிரிக்காத..

    சுதந்திரத்திருநாள் வாழ்த்துக்கள்.

    என்றொரு குறுந்தகவல் உலவி வருகிறது.


  3. ஒரு காலத்தில் அரசாங்கம் சொன்னது...

  4. குடிமக்களே வீட்டுக்கு வீடு மரம் வளருங்கள் என்று..

    மக்கள் அரசிடம் கேட்டார்கள்...

    மரம் வளர்க்கிறோம் வீடு தாருங்கள் என்று..


  5. இன்று அரசு சொல்கிறது வட்டியில்லாக் கடன் ஐந்து இலட்சம் ரூபாய் தருகிறோம் வீடு கட்டிக் கொள்ளுங்கள் என்று...

  6. இன்றும் மக்கள் அரசிடம் கேட்கிறார்கள்...

    நீங்கள் தரும் பணம் வீடு கட்டிக்கொள்வதற்கே சரியாக இருக்கும் நிலத்தை யார் தருவார்கள்...? 
    இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன மரங்களிலா வீடு கட்டிக் கொள்வோம் என்று...


  7. அரசும் கொடுப்பதை நிறுத்தப்போவதில்லை
  8. இந்த மக்களும் வாங்குவதை நிறுத்தப் போவதில்லை

  9. ஏனென்றால் யாருக்கும் வெட்கமில்லை.

    நல்ல கல்வியைத் தவிர வேறு எதையும் அரசு மக்களுக்குக் கொடுக்கவேண்டியதில்லை.
    அப்படிக் கொடுத்தால் அரசு அதற்குப் பதிலாக வேறு ஏதோ எதிர்பார்க்கிறது என்று தானே பொருள்...!

    கொஞ்சநேரம் இருங்க மக்கள் கூட்டமா எங்கேயோ ஓடுறாங்க.. எங்கே என்று  கேட்டுட்டு திரும்பி வருகிறேன்..


    ஏம்பா.......
    எங்கே எல்லோரும் கூட்டமா ஓடுறீங்க...

    என்னது....
    அரசாங்கம் இலவசமா.... அலைபேசி (செல்போன்) கொடுக்கறாங்களா...???

    தொடர்புடைய இடுகை



ஞாயிறு, 8 ஜூலை, 2012

ஓடஓடஓட தூரம் குறையல...


    ஒரு ஊரில் செல்வந்தர் ஒருவர் இருந்தார். அவர் தம் வண்டிக்காரனை அழைத்து,

    நாளை காலை நாம் பக்கத்து ஊருக்கு ஒரு திருமணத்துக்குச் செல்லவேண்டும்.  திருமணம் காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனால் இரவு 3 மணிக்குக் கிளம்பினால் தான் போகமுடியும். நீ இரவு தூங்கிவிடாமல் எழுந்து வண்டியில் மாட்டைக் கட்டிவிட்டு என்னை எழுப்பிவிடு என்று சொன்னார்.

    வண்டிக்காரனும் சரி என்றான்.

    பின் அந்த செல்வந்தர் அந்த வண்டிக்காரனிடம். ஆமாம் எந்த மாடுகளை வண்டியில் பூட்ட இருக்கிறாய்? என்றார்.

    நேற்று அந்த செக்குக்காரரிடம் வாங்கினோமே இருமாடுகள். அவற்றைத்தான் ஐயா என்றான் அந்த வேலைக்காரன்.

    இவரும் சரிப்பா மறந்துடாதே.. தூங்கிவிடாதே என்று எச்சரித்துவிட்டுத் தூங்கச் சென்றுவிட்டார்.

    இவனும் சரியான நேரத்துக்கு எழுந்து மாடுகளைப் பூட்டிவிட்டு மெத்தைகளெல்லாம் போட்டுவிட்டு செல்வந்தரை சரியாக 2.45 மணிக்கு எழுப்பினான்.

    நல்ல தூக்கத்திலிருந்த அவரும் பாதிக்கண்களைத் திறந்துகொண்டு வந்து மீதித் தூக்கத்தை மாட்டுவண்டியிலேயே தொடர்ந்தார்.

    வண்டிக்காரனுக்கும் தூக்கம் கண்களைத் தழுவியது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டே வந்தான். மாட்டுவண்டி இவர்கள் செல்லவுள்ள முதன்மைச் சாலைக்கு வந்ததும் இவனும் இந்தச்சாலை நேராக அந்த ஊருக்குத் தானே செல்கிறது. நாம் ஏன் விழித்துக்கொண்டே வரவேண்டும். மாடுகள் ஓடும் மணியோசை காதுகளில் கேட்டுக்கொண்டே தானே வருகிறது. மாடுகளின் மணியோசை நின்றால் மட்டும் நாம் விழித்துப்பார்த்தால் போதாதா? என்று தோன்றியது. அதனால் மாட்டுக்காரனும் வண்டியில் அமர்ந்த நிலையிலேயே நன்றாகத் தூங்கிவிட்டான்.

    சிறிதுதூரம் சரியான வழியில் சென்ற மாடுகள், முன்பு தாம் இருந்த செக்குக்காரர்  வீட்டுக்குச் செல்லும் வழிகளைக் கண்டதும் வளைந்து அங்கே சென்றுவிட்டன. சென்ற மாடுகள் இத்தனை ஆண்டுகாலமாகத் தாம் சுற்றிக்கொண்டிருந்த செக்குகளைப் பார்த்ததும். பழைய நினைவுவந்து அந்த செக்கையே விடியவிடிய சுற்றிக்கொண்டிருந்தன.

  1. மாடுகளுக்கு நினைவு நாம் செக்கைத்தான் சுற்றிக்கொண்டிருக்கிறோம் என்று,

  2. வண்டிக்காரனுக்கு நினைவு நம் மாடுகள் விரைவாகவும், சரியான பாதையிலும்தான் சென்றுகொண்டிருக்கின்றன என்று,

  3. செல்வந்தருக்கு நினைவு நாம் திருமணத்துக்கு உரிய நேரத்தில் சென்றுவிடுவோம் என்று..

  4. பொழுதும் விடிந்தது...

    வண்டிக்காரனும், செல்வந்தரும் இன்னும் தூங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்..

    வண்டிமாடுகளும் செக்கைச் சுற்றிக்கொண்டேதான் இருக்கின்றன.
    மணியோசையும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.

    அந்தச் செக்குக்காரர் வந்து இந்தக் காட்சியைப் பார்த்து சிரியோ சிரியென்று சிரித்தார். பின் அருகே சென்று அந்த வண்டிமாடுகளை நிறுத்திவிட்டு அந்த செல்வந்தரை எழுப்பி என்னங்க நேற்று ஏதோ திருமணத்துக்குப் பக்கத்து ஊருக்குப் போறேன் என்று சொன்னீங்க. இங்கு வந்து சுற்றிக்கொண்டிருக்கிறீங்க? என்று கேட்டார்.

    நொந்துபோன செல்வந்தார் அந்தவண்டிக்காரனை வேலையைவிட்டு நீக்கிவிட்டார்.

    என்றொரு கிராமியக் கதை உண்டு

    இந்தக் கதையை அப்படியே இன்றைய கல்விநிலையோடு ஒப்பிட்டுப் பாருங்களேன்..


    செல்வந்தர் - பெற்றோர்
    வண்டிக்காரன்- கல்விநிறுவனங்கள், ஆசிரியர்கள்
    மாடு - மாணவர்கள்


    இன்றைய பெற்றோர்கள், தம் பிள்ளைகளை நல்ல கல்வி நிறுவனங்களில் சேர்ப்பதோடு தம்கடமை முடிந்துவிட்டது என நினைக்கிறார்கள்..

    கல்விநிறுவனங்கள் இம்மாணவர்களுக்கு அதிக மதிப்பெண்களோடு பட்டச்சான்றிதழ் கொடுத்தால் போதும் என நினைக்கிறார்கள்

    மாணவர்கள், எல்லோரையும் போல நாமும் தேர்ச்சியடைந்து வேலைகிடைத்தால் போதும் என நினைக்கிறார்கள்...

    அந்த செல்வந்தரோ, வண்டிக்காரனோ, மாடுகளோ தாம் செல்லும் வழி சரிதானா என இடையில் ஒருமுறையாவது விழித்துப்பார்த்திருந்தால் அவர்கள் சரியான நேரத்துக்குத் சரியான இடத்துக்குச் சென்றிருப்பார்கள்.

    அதுபோல..

    இன்றைய மாணவர்கள்....
    கல்விச்சாலை செல்கிறார்கள்..
    படிக்கிறார்கள்..
    பட்டம் பெறுகிறார்கள்..
    வேலைக்குச் செல்கிறார்கள்...

    இவையெல்லாம இவர்கள் விரும்பித்தான் செய்கிறார்களா?
    என எத்தனை பெற்றோர்கள் தம் பிள்ளைகளிடம் கேட்கிறார்கள்?


    மதிப்பெண்ணுக்கு மேல் ஒரு மாணவனை எப்படி மதிப்புக்குரிய மனிதனாக உருவாக்கவேண்டும் என எத்தனை கல்விநிறுவனங்கள் சிந்திக்கின்றன?

    பெற்றோர் படிக்கவைக்கிறார்கள், கல்வி நிறுவனங்கள் சொல்லித்தருகிறார்கள் நம் கடமை படிப்பது என்று மட்டுமே சிந்திக்கும் மாணவர்களில் எத்தனை பேரின் உழைப்பு அவர்களின் குடும்பத்தைக் கடந்து சமூகத்துக்குப் பயன்படுகிறது?

    என இந்தக் கதையோடு இன்றைய கல்வியின் பல்வேறு முகங்களையும் ஒப்பிட்டு நோக்கமுடிகிறது.


    செக்குமாடும் உழைக்கிறது.. ஆனால் அதன் உழைப்பு பயன்படுகிறதா?

    மாணவர்களும் நன்றாகத்தான் படிக்கிறார்கள்! ஆனால்.. அவர்களின் உழைப்பு அவர்களின் குடும்பத்தைக் கடந்து சமூகத்துக்குப் பயன்படுகிறதா?

                                  
    என்பதுதான் இந்த இடுகை வாயிலாக நான் தங்கள் முன்வைக்கும் வினா.


தொடர்புடைய வினா.


மறைபொருள் தெரிகிறதா