வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஜனவரி, 2013

அரும்பாகி மொட்டாகிப் பூவாகி..



காலை அரும்பி பகலெல்லாம் போதாகி 
மாலை மலரும் இந்நோய்


திருக்குறள் -  1227

என்ற குறளைச் சொல்லிக்கொடுத்துவிட்டு தேர்வில் கேள்விகேட்டால் 

இன்றைய மாணவர்கள், போதாகி என்ற சொல்லைப் போதையாகி என்று எழுதுகிறார்கள். 

காரணம், போது என்ற சொல் இவர்களுக்குத் தெரியவில்லை.

எவ்வளவு இனிமையான குறள் இது. இதனை மனப்பாடம் செய்வதால் இன்றைய தலைமுறையினருக்கு மதிப்பெண் மட்டுமே கிடைக்கிறது.


காதல் என்பது காலையில் அரும்பாகி, பகல் முழுதும் முதிர்ச்சியடைந்து, மாலையில் மலரும் ஒரு நோயாகும்.

என்ற இந்தக் குறள் பல திரைப்படப் பாடல்களுக்குக் கருவாக இருந்தது என்பது பலருக்குத் தெரியாது..

1.அரும்பாகி மொட்டாகிப் பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி

தொடுத்த மாலை எடுத்து வாரேன்
கழுத்தைக் காட்டு..
கையிரண்டு சேர்த்து...


என்றொரு பாடல் எங்க ஊருக் காவக்காரன் என்ற படத்தில் இடம்பெற்ற பாடல்.

2. காலை அரும்பி பகலெல்லாம் போதாகி 
மாலை மலரும் இந்நோய்
மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் 
இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பென்டுலம் ஆடும்
மூளை திருகும் மூச்சுக்குள் அடுப்பெரிக்கும் 
இடப்பக்கம் வலப்பக்கம் இதயம் பென்டுலம் ஆடும்
ஆடும்... ஆடும்.. ஆடும்....
வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் 
வாய் மட்டும் பேசாது உடம்பெல்லாம் பேசும் 
இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய்
இது மோசமான நோய் ரொம்ப பாசமான நோய்

கனாக் கண்டேன் திரைப்படத்தில் பாடலாசிரியர் வைரமுத்து எழுதிய கவிதை இது..


இவ்வாறு பல திரையிசைப்பாடல்களுக்கு தமிழ் இலக்கியங்கள் அடிப்படைகளாக இருந்திருக்கின்றன.

தொடர்புடைய இடுகை

ஊதைக் காற்று

மாலைப் பொழுதின் மயக்கத்திலே

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

போனா வருவீரோ...?

போனா வருவீரோ
வந்தா இருப்பீரோ..
சண்டலா உன் நெனவாவே
நான் சரிகா உருகுறேனே...

என்றொரு பாடல் வீராப்பு என்ற தமிழ்த்திரைப்படத்தில் இடம்பெற்றது. இந்தப் பாடலைக் கேட்டபோது என் நினைவுக்கு வந்த சங்கப்பாடல் இது..

                      தலைவன் இரவுநேரத்தில் வந்து தோழியின் துணையோடு தலைவியைச் சந்தித்துக் காதலித்து மகிழ்கிறான். அவன் வரும் வழியோ அச்சத்திற்குரியது. யானை,புலி,பாம்பு,இடி,காட்டாறு என பல இடர்கள். அத்தனையும் கடந்து அவன் வந்து  தலைவியைப் பார்த்துச் செல்கிறான். இவர்களின் சந்திப்பு ஊராருக்குத் தெரிந்தால் அலர் தூற்ற ஆரம்பித்துவிடுவார்களே என்ற அச்சம் வேறு தோழிக்கு இருக்கிறது.

தலைவன் வந்து தலைவியைக் காணாவிட்டாலோ ஆற்றாமையால் தலைவி உடல்மெலிவுற்றுப் போவாள்...

இந்தச் சிக்கலுக்குத் சரியான தீர்வு தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்வதே. இதனைத் தோழி மிக அழகாகத் தலைவனுக்கு உணர்த்துகிறாள்.

தலைவியைக் காணவந்த தலைவன் அருகாமையில் மறைந்திருக்க அவன் காதுபட இவ்வாறு பேசுகிறாள்..

இரவில் வந்து உன்னைச் சந்தித்துச் செல்கின்ற தலைவனிடம்..

செல்கிறீர்களா?
என்று கேட்க முடியாதவர்களாக நாம் இருக்கிறோம். செல்லுக என்றால் அவரின் பிரிவுக்கு நாம் உடன்பட்டோம் என்று பொருளாகிவிடும்.

சென்றால் வருவீரோ?
என்று நாம் அவரிடம் கேட்டால் அவர் வரும்வரை பிரிவாற்றியிருக்க நாம் துணிந்ததாகப் பொருள்படும். இவ்விரண்டினுள் ஒன்றும் தலைவனிடம் கூறஇயலாதவராக நாம் இருக்கிறோம். அவரோ நம் நிலையை உணர்ந்து திருமணம் செய்துகொள்ளும் எண்ணமும் இல்லாதவராக இருக்கிறார் என்கிறாள் தோழி.

(மறைந்திருந்து இதனைக் கேட்கும் தலைவன் விரைவில் தலைவியைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வருவான்.)
பாடல் இதுதான்.


சேறி ரோவெனச் செப்பலு மாற்றாம்  
    
வருவி ரோவென வினவலும் வினவாம் 
    
யாங்குச்செய் வாங்கொ றோழி பாம்பின் 
    
பையுடை யிருந்தலை துமிக்கு மேற்றொடு 
நடுநா ளென்னார் வந்து 
    
நெடுமென் பணைத்தோ ளடைந்திசி னோரே. 
குறுந்தொகை-268









கருவூர்ச் சேரமான் சாத்தன்
 தோழி , பாம்புகளின் படத்தை உடைய பெரிய தலையை, துணிக்கும், இடியொடு கூடிய, பாதியிரவு, என்று எண்ணாதவராகி, வந்து நெடிய மெல்லிய மூங்கிலைப் போன்ற நின் தோள்களை, அடைந்த தலைவர் பால்,
செல்கின்றீரோ என்று, செப்புதற்கும் வன்மை இல்லே மாயினேம்;
சென்றால் மீண்டும் வருவிரோ என்று, கேட்டலையும் செய்யோம்
எவ்வாறு செய்வேம்!
  


பாடல் வழியே..


  •          தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே தோழி படும் பாடு மிக அழகாகப் புலப்படுத்தப்பட்டுள்ளது.
  •          தலைமக்கள் இரவில் சந்தித்துக் காதல் கொள்வார்கள். அதற்கு இரவுக்குறி என்று பெயர் என்ற அக்கால அகவாழ்வியல் சுட்டப்படுகிறது.
  •           இன்றும் நம் அகவாழ்வியலோடு ஒப்புநோக்கத்தக்க அகச்சூழலாகவே இக்காட்சி நம் கண்முன் விரிகிறது.


செவ்வாய், 6 மார்ச், 2012

வலி்ச்சாலும் பிடிச்சிருக்கு!

மீன் கொடித் தேரில் மன்மத ராசன் ஊர்வலம் போகின்றான் என்றொரு திரைப்படப் பாடல் கேட்டிருப்பீர்கள்..

மன்மதன் கரும்பை வளைத்து வில்லாக வைத்திருப்பானாம்
அவனுடைய தோள்களில் தொங்கும் அம்பறாத்துணியில் மலர்கள் நிரம்பி வழியுமாம்
அந்த மலர்களை அம்புகளாக (கணைகளாக)  ஆண்களின் மீதும் பெண்களின் மீதும் எய்துகொண்டிருப்பானாம்.
அப்படி எய்யப்படும் மலர்(க்கணைகள்) அம்புகள் எவர் மீது விழுகின்றனவோ, அவர்களுக்குக் காதல் அரும்புமாம். இது பழந்தமிழர் நம்பிக்கை.

இது சரியா? தவறா? என்று ஆய்வு செய்யும் முன்னர்...


ஆண் மீது பெண்ணுக்கும் - பெண் மீது ஆணுக்கும் ஏற்படும் ஈர்ப்புக்கு இன்றைய அறிவியல் கூறும் வேதியியல் (ஆர்மோன்) விளக்கத்தோடு ஒப்புநோக்கத்தக்கதாக இச்சிந்தனை விளங்குகிறது. இச்சிந்தனை அக்கால மக்களின் அறிவுக்கு எட்டிய வேதியியல் சிந்தனையாகவே எனக்குத் தோன்றுகிறது. 




கால காமாகவே பெண்கள் ஆண்களைத்தாக்கப் பயன்படுத்தி வரும்
ஆயுதம் - கண்கள்!

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்டவடு (குறள் 120)

என்பார் வள்ளுவர்...

தீயினால் சுட்டபுண்
நாவினால் சுட்டவடு

இவ்விரண்டோடும் ஒப்பு நோக்கத்தக்கதே இந்த வலியும்..

இதோ அடிபட்ட ஒரு ஆணின் புலம்பல்..



கண்களுக்கு மைபோடும் பெண்ணைப் பார்த்து சொல்லப்பட்ட கவிதை..

என்னைக் கொல்வதற்கு 
உன் விழிகளே போதுமே 
எதற்கு அதில் விசம் தடவுகிறாய்


கவிஞர் மீரா அவர்கள் எழுதிய மறக்கமுடியாத கவிதை


நீ முதல் முறை என்னை

தலைசாய்த்துக்

கடைக்கண்ணால் பார்த்தபோது

என் உள்ளத்தில்

முள் பாய்ந்தது
அதை இன்னும் எடுக்கவில்லை
முள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்
எங்கே
இன்னொருமுறை பார்.. 


சீனக் கவிதை ஒன்று..



“கியாட்டோ பட்டு வியாபாரிக்கு இருமகள்கள்

முத்தவள் இருபது, இளையவள் பதினெட்டு

வீரன் கத்தியால் கொல்லுவான்

ஆனால் இப்பெண்கள் கண்களால்”


என்ன நண்பர்களே இந்தக் கவிதைகளுக்கெல்லாம் ஒரு ஒற்றுமை தெரிகிறதா?
இது போன்ற கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவது நம்ம வள்ளுவரின் குறள் தான்.


இருநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து. 
                                                                                 (குறள்110)

வள்ளுவரின் இந்தக் குறளைப் படிக்கும் போதெல்லம் நினைவுக்கு வருவது..
இந்தக் குறுந்தொகைப் பாடல் தான்.

பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து
எல்லோரும் அறிய நோய் செய்தனவே
தேமொழித் திரண்ட மென்தோள் மாமலைப் 
பரிஇ வித்திய ஏனல்
குரிஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே!

                                              குறுந்தொகை -72
                                                         மள்ளனார்

தலைவியின் நினைவாலேயே வாடும் தலைவனின் உடலில் நிறைய மாற்றங்கள் அதனைக் கண்டு என்ன ஏது? என்று வினவுகிறான் பாங்கன். அதற்குத் தலைவன் சொல்கிறான்..


இனிய மொழியினையும், பருத்த மெல்லிய தோள்களையும் உடைய பெண்ணொருத்திதான் எனது இந்த நிலைக்குக் காரணம. 

அவள் பெரிய மலைப் பகுதியில் குருவிகளை ஓட்டுபவள்..
குளிர்ச்சியைத் தருகின்ற பெரிய கண்களைக் கொண்டவள்..

அவளை நான் காண்கின்றபோது அவள் கண்கள் அழகான தாமரை மலர் போலக் காட்சியளிக்கும்!

அதே நேரம் அவள் என்னைக் காண்கின்ற போது அவள்கண்கள் கொடிய அம்பைப் போலவே என்னைத் தாக்கி வருத்தும்.

 அதனால் மலர் போன்ற கண்களால் அம்பு தைத்தது போன்ற நோயினை அவள் எனக்குத்தந்தாள் அதுதான் என் உடலில் இவ்வளவு மாற்றம் என்கிறான் தலைவன்.

இதோ இந்தச் சாயல் கொண்ட திரையிசைப்பாடல்..



நேற்று வரை நீ யாரோ நான் யாரோ


இன்று முதல் நீ வேறோ நான் வேறோ



காணும் வரை நீ எங்கே நான் எங்கே



கண்டவுடன் நீ இங்கே நான் அங்கே

(நேற்று வரை)

உன்னை நான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே

நேரிலே பார்த்தால் என்ன 

நிலவென்ன தேய்ந்தா போகும்

புன்னகை புரிந்தால் என்ன 

பூமுகம் சிவந்தா போகும்

(நேற்று வரை)

பாவை உன் முகத்தைக் கண்டேன்

தாமரை மலரைக் கண்டேன்

கோவை போல் இதழைக் கண்டேன்

குங்குமச் சிமிழைக் கண்டேன்

வந்ததே கனவோ என்று

வாடினேன் தனியே நின்று

வண்டு போல் வந்தாய் இன்று

மயங்கினேன் உன்னைக் கண்டு

(நேற்று வரை)


படம் : வாழ்க்கைப்படகு
இசை : எம். எஸ்.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர் : பிபி சீனிவாஸ்

தொடர்புடைய இடுகைகள்

திங்கள், 20 பிப்ரவரி, 2012

உன் மாட்டை கொஞ்சம் பார்த்துக்கடா..



வண்ணக்கிளி என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைப் பலருக் கேட்டிருப்பீர்கள்.
 இயற்றியவர்: கவிஞர் மருதகாசி அவர்கள் ஆவார்.இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் நினைவுக்கு வரும் இன்னொரு பாடலை அடையாளம் காட்டவே இவ்விடுகை.













 


காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க 
ஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க 
காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க 
ஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா
கோட்டைச் சுவர் போல வேலியிருக்கு 

குத்துங்கருவேல முள்ளுமிருக்கு 
கோட்டைச் சுவர் போல வேலியிருக்கு 
குத்துங்கருவேல முள்ளுமிருக்கு 
தோட்டக்காரன் கையில் கம்புமிருக்கு 
தோட்டக்காரன் கையில் கம்புமிருக்கு 
சுத்தி சுழற்றவே தெம்புமிருக்கு
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா

மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க ஆட்டம் போட்டி மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா
போகாத பாதையிலே போகக்கூடாது - சும்மா

புத்திகெட்டு அங்கும் இங்கும் சுத்தக்கூடாது போகாத பாதையிலே போகக்கூடாது - சும்மா புத்திகெட்டு அங்கும் இங்கும் சுத்தக்கூடாது மாடாகவே.... மாடாகவே மனுஷன் மாறக்கூடாது மத்தவங்க பொருளு மேல ஆசை வைக்கக்கூடாது
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா
 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
காட்டு மல்லி பூத்திருக்க காவல்காரன் பாத்திருக்க 
ஆட்டம் போட்டு மயிலக்காள தோட்டம் மேயப் பாக்குதடா 
மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 
 மாட்டுக்கார வேலா ஒன் மாட்டேக் கொஞ்சம் பாத்துக்கடா 

ஒப்பீட்டு நோக்கவேண்டிய பாடல்... 


பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே
பசுமாடுகளை வளர்ப்போர் அந்த மாடுகளை முறைப்படி பாதுகாக்கவேண்டும்.
அவ்வாறு பாதுகாக்காவிட்டால் என்னவாகும்?
அந்த  மாடுகளின் பால் அதன் உரிமையாளருக்குப் பயன்படாமல் போய்விடும்அந்தப் பசுக்களை முறையானபடி கட்டி மேய்த்து அவற்றின் வெறியையும் அடக்கினால் அந்தப் பசுக்களினால் கிடைக்கும் பயன் முழுவதையும் உரிமையாளர் பெறலாம்..

இங்கு இந்த ஐந்து பசுக்களைப் போலத்தான் நம் ஐந்து புலன்களும்.
                                                இதனை நாம் உணர்வதில்லை!
அதனால் இப்புலன்களின் பயனையும் 
நாம் முழுமையாக உணரவில்லை..
எதை எதையோ..
யார் யாரையோ..
எதற்காகவோ..
பார்த்துக்கொண்டிருக்கிறோம்..

இனி நம் புலன்களையும் கொஞ்சம் பார்த்துக்கொள்வோமா...

செவ்வாய், 24 நவம்பர், 2009

பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன..



காதலித்துப் பார்
நிமிசங்கள் வருசமென்பாய்
வருசங்கள் நிமிசமென்பாய்!


என்பார் வைரமுத்து.

நிமிசங்கள் ஒவ்வொன்றும் வருசங்களாகும்
நீயென்னை நீங்கிச்சென்றாலே..!

வருசங்கள் ஒவ்வொன்றும் நிமிசங்களாகும்
நீயென்தன் பக்கம் நின்றாலே…!

என்று காதல் தேசம் என்னும் படத்தில் அன்பே அன்பே என்றபாடலில் வரிகள் இடம்பெறும்.

இந்த சிந்தனையை இன்றைய பல திரைப்படப்பாடல்களிலும் பலவாறு கேட்கமுடிகிறது.இந்த சிந்தனைக்கு அடிப்படையாக அமைந்த குறுந்தொகைப்பாடல் இதோ...

“பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு
உடன் உயிர் போகுதில்ல - கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே“

குறுந்தொகை-57 சிறைக்குடி ஆந்தையார்

“காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது“

(தலைவியின் காதலை அவள்தம் பெற்றோர் அறிந்ததால் இற்செறித்தனர். அந்த காவல் மிகுதியில் தலைவனைச் சந்திக்க இயலாத ஆற்றாமையில் வருந்திய தலைவி தன் துன்பத்தைத் தோழியிடம் இவ்வாறு தெரிவிக்கிறாள்.)

நீர்வாழ்ப்பறவை அன்றில். ஆணும் பெண்ணுமாக ஒன்றையொன்று பிரியாமல் வாழ்வன. 
தமக்கிடையே பூ ஒன்று இடைப்பட்டு தடையை ஏற்படுத்தினாலும் அந்தப் பிரிவை ஓர் ஆண்டு காலஅளவிலான பிரிவாக எண்ணி வருந்தும் தன்மையன. அந்தப் பறவைகள் போல ஓருயிர் இரு உடல்களாக நானும் தலைவனும் வாழ்கிறோம். 
தலைவன் பிரிந்த போது ஓருயிர் ஓருடலில் வாழும் இழிவு ஏற்படும். 
அதற்குத் தலைவன் பிரிந்தவுடன் என்னுயிரும் போய்விடுவது மேலானது என்கிறாள் தலைவி.




இப்பாடல் வழி அன்றில் என்னும் பறவைகள் தம்முள் அன்பு நிறைந்த வாழ்க்கை வாழ்வன என்றும் அவை தம்முள் பூஇடைப்படினும் அந்தப் பிரிவை ஓர் ஆண்டு காலப் பிரிவாகக் கருதி வருந்தும் என்னும் செய்தி குறிப்பிடப்படுகிறது.

அன்றில்ப் பறவைகள் போல தலைவனின் பிரிவைத் தன்னால் தாங்க முடியாது. அதற்கு அவன் பிரிந்தவுடனேயெ என் உயிர் போய்விடுவது மேலானது என எண்ணுகிறாள் தலைவி..

இந்த குறுந்தொகைப் பாடலே பல திரைப்படப்பாடல்களின் பிறப்பிடமாக அமைந்தது என்றால் அது மிகையாகாது.

சொற்பொருள் விளக்கம்

இருவேம் - இருவரும் சேர்ந்தே தோன்றுவோம்
காமம் - மெய்யுறு புணர்ச்சி, அன்பின் மிகுதி
தண்டாக்காமம் - அடங்காத காமம்

ஞாயிறு, 1 நவம்பர், 2009

தீண்டாய் மெய் தீண்டாய்





ஏ.ஆர்.ரகுமான் இசையில் என்சுவாசக் காற்றே என்று ஒரு படம் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. அதில் தீண்டாய் மெய் தீண்டாய் என்று ஒரு பாடல் இடம் பெற்றது. அந்தப்பாடலின் தொடக்கத்தில்……….

“கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல்ஆன் தீ்ம்பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

(குறுந்தொகை-27)

பிரிவிடை ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

(தலைவனின் பிரிவைத் தலைவி தாங்கமாட்டாள் என்று வருந்திய தோழிக்குத் தலைவி உரைத்தது)

என்று ஒரு பாடல் இடம் பெற்றது. அந்தப்பாடல் சங்கஇலக்கியத்தில் இடம்பெற்ற குறுந்தொகை என்பது பலருக்குத் தெரியாது.

இந்தப்பாடலின் பொருள்…

தலைவனின் பிரிவைத் தலைவி ஆற்றாள் என்று வருந்தினாள் தோழி. தலைவியோ நான் ஆற்றியிருந்தாலும் என் அழகு எனக்கும் உதவாது என் தலைவனுக்கும் உதவாது பசலையால் அழிந்து போகிறதே என்று வருந்துகிறாள்.

“ நல்ல பசுவின் இனிய பால், அப்பசுவின் கன்றும் உண்ணாது, பசுவுக்குச் உரிமையாளர்களுக்கும் பயன்பாடாமல் மண்ணில் சிந்தி அழிந்தது போல, என் அழகு எனக்கும் பயன்படாது என் தலைவக்கும் பயன்படாது பசலையால் விரும்பி உண்ணப்படுகிறதே என்று வருந்துகிறாள் தலைவி.“


இதுவே பாடலின் பொருள்..

இவ்வினிய பாடலே ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருமாறியது.

தமிழ்த்திரைப்படப் பாடல்களில் சங்க இலக்கியத்தின் தாக்கம் நீண்ட நெடிய நாட்களாகவே இருக்கிறது. கண்ணதாசன், வைரமுத்து, தொடங்கி இன்றைய கவிஞர்கள் வரை இதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று…..

வேர் எது?
விழுது எது?

என்ற தெளிவு
!

திருக்குறளை எழுதியவர் சாலமன் பாப்பையா..
என்று கூறுமளவுக்கு ஒரு தலைமுறை உருவாகியுள்ளது..
அவர்களுக்கு வேர் எது விழுது எது என்ற மயக்கத்தைப் போக்கி…..

வேர் சங்க இலக்கியம்
விழுது இன்றைய கவிதைகள்


என்பதைப் புலப்படுத்த வேண்டிய கடமை நமக்குள்ளது…

புதன், 9 செப்டம்பர், 2009

தூங்காத விழிகள் ரெண்டு




• துக்கத்தில் கூட வாழ்ந்துவிடலாம் தூக்கமின்றி வாழமுடியாது.
• நிறைவேறாத ஆசைகளை கனவாக நிறைவு செய்கிறது தூக்கம்.
• தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் மீதி இது தான் வாழ்க்கை.
• தூக்கம் உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊக்கசக்தி.


“உறங்குவதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு“ – குறள் 339
என்பர் வள்ளுவர்.
ஒவ்வொரு உறக்கமும் ஒரு இறப்பு
ஒவ்வொரு விழிப்பும் ஒரு பிறப்பு என்பதே இதன் பொருள்.

இப்படி தூக்கம் மனித வாழ்வுக்கு அடிப்படைத் தேவையாக விளங்குகிறது.
“மெத்தைய வாங்கினேன்
தூக்கத்தை வாங்கல“
என்று புலம்புவோர் பலரையும் இன்று காணமுடிகிறது. பணத்துக்காக இரவுப்பணி செய்து தூக்கத்தைத் தொலைத்தவர்கள். பணம் வந்தபின்பு உறக்கமின்றித் தவிப்பதைப் பார்க்க முடிகிறது.
கும்பகர்ணனைப் பற்றிச் சொல்லும்போது,
தவம் செய்து “ நித்யத்தவம்“ வாங்கச் சென்றவன், நாரதரின் செயலால் “ நித்ரத்தவம்“ வாங்கி வந்தான். அதனால் தொடர்ந்து ஆறுமாதம் தூங்கினான் என்பார்கள்.

நன்றாகத் தூங்குபவர்களை, இவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள் என்று பார்ப்போர் சொல்வதுண்டு.
தூக்கம் வருதல் வரம் என்று சொல்லப்படும் அதே சூழலில்,
தூக்கமின்மை சாபம் என்றும் சொல்லப்படுகிறது.

• “தூங்காத விழிகள் ரெண்டு
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று
செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும்
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது
“
•
அக்கினி நட்சத்திரம் என்னும் திரைப்படத்தில் இடம்பெறும் இப்பாடலை யாவரும் கேட்டிருப்பீர்கள்..

சங்கப் பாடல்களின் தாக்கம் பல திரைப்படப்பாடல்களிலும் காணமுடிகிறது. இத்திரைப்படப் பாடலில்,
இந்தப் பெண்ணுக்கு தூக்கம் வரவில்லை. காரணம் தன் தலைவனின் நினைவு,
மலர் மஞ்சம் விரித்தாலும், அதில் பன்னீரைத் தெளித்தாலும் உறக்கம் வரவில்லை என்கிறாள்.

இதே உணர்வினை எடுத்தியம்பும் சங்கப் பாடல்கள் பல,
சான்றாக, குறுந்தொகையில் உறக்கம் வராத தலைவி ஒருத்தியின் புலம்பல்.

சான்று-1

மூட்டு வேன்கொல் தாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு
ஆஅ ஒல்லெனக் கூவு வேன்கொல்
அலமரல் அசைவளி அலைப்பவென்
உயவுநோ யறியாது துஞ்சும் ஊர்க்கே.
28. பாலை - தலைவி கூற்று
-

ஔவையார்.
(வரைவிடை ஆற்றாளாய்க் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.)
எல்லோரும் நன்றாகத் தூங்குகிறார்கள் இந்த தலைவிக்கு மட்டும் தலைவனின் நினைவால் உறக்கம் வரவி்ல்லை. இச்சூழலில் நன்றாகத் தூங்குபவர்களைப் பார்க்கிறாள் தலைவி “ தான் மட்டும் தலைவனின் நினைவால் உறக்கமின்றித் தவிக்க இவர்கள் எல்லாம் எந்தக் கவலையும் இன்றித் தூங்குகிறார்களே. இவர்களுக்கு என் நிலையை எப்படித் தெரிவிப்பேன்.
மூட்டுவேனா?
தாக்குவேனா?
ஆஅ ஒல்லெனக் கூவுவேனா?
என்கிறாள்.
தலைவியின் மனநிலையைப் புலவர் எவ்வளவு அழகாகப் புலப்படுத்தியிருக்கிறார்..
நமக்குத் தூக்கம் வராத சூழலில் யாராவது நன்றாகக் குறட்டைவிட்டுத் தூங்கிக்கொண்டிருந்தால் நமக்கு என்ன தோன்றும்.
சிலர்...
உறங்குபவர்களைப் பார்த்து “ இவர்கள் கொடுத்துவைத்தவர்கள்”
என்று பெருமூச்சு விடுவார்கள்.
சிலர்....
உறங்குவோரின் உறக்கத்தை கலைக்க வேண்டுமே...
ஓங்கி மிதிக்கலாமா....?
ஆஆஆஆஓஓஒஒ என்று ஏதாவது கத்தி எழுப்பலாமா..?
என்றெல்லாம் தோன்றும்.
இன்றும் நமக்குத் தோன்றும் இந்த உணர்வை அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார் புலவர்.

சான்று-2


• ‘நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக’
கோபுர வாசலிலே என்னும் திரைப்படப் பாடலில் இடம்பெறுகிறது இப்பாடல்.
இதே உணர்வைப் பிரதிபலிக்கும் சங்கப் பாடல்...
இதோ....

கேட்டிசின் வாழி தோழி அல்கற்
பொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய
வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட ஏற்றெழுந்து
அமளி தைவந் தனனே குவளை
வண்டுபடு மலரிற் சாஅய்த்
தமியேன் மன்ற அளியேன் யானே.

30. பாலை - தலைவி கூற்று
-கச்சிப்பேட்டு நன்னாகையார்.
(தலைவன் வரைவிடைவைத்துப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவியின் ஆற்றாமை கண்ட தோழி ஏன் என்று வினவுகிறாள். அதற்குத் தலைவி “ யான் ஆற்றியிருப்பினும் தலைவன் கனவில் வந்து தொல்லை செய்கிறான் என்று கூறுகிறாள்)
நள்ளிரவில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன் ஒரு கனவு!
அதில் என் தலைவன்!
நடந்தது உண்மை என்றே எண்ணினேன்....
பொய்யை மெய்போலக் கூறுவதில் வல்லவனான என் தலைவன் என்னிடம் இன்பம் நுகருவதற்காக இராக்காலத்தில் வந்து என்னைக் கட்டித்தழுவினான். அது கனவு என்பதை அறியாத நான் எழுந்து என் அருகே அவன் இருக்கிறானா..?
என்று தடவிப்பார்த்தேன்..
வண்டுகளால் உழக்கப்பட்ட குவளை மலர் போல நிலை குலைந்த நான் தனித்து வருந்தி நின்றேன்.. உறுதியாக நான் இரங்கத்தக்கவள் தான். என்று தோழியிடம் புலம்புகிறாள் ஒரு தலைவி.

சான்று-3

• இன்னொரு தலைவி..
“நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்
தினிதடங் கினரே மாக்கள் முனிவின்று
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே. “
6.
நெய்தல் - தலைவி கூற்று
-பதுமனார்.

தலைவனின் நினைவால் உறங்காமல்த் தவிக்கும் தலைவி
நள்ளிரவில் தன் துயரை அறியாது யாவரும் இனிது உறங்குகின்றனர். தன்னை எந்நேரமும் வைதுகொண்டிருக்கும் தாயரும் தூங்கினர். அவர்கள் தன்னைத் திட்டுவதால் மாக்கள் என்றாள்(விலங்கு) வசை மொழி கூறாது உறங்குவதால் இனிது அடங்கினர் என்றாள்.ஓர்யான் மன்றத் துஞ்சாதோளே என்றதால் தன் உயிர்த்தோழியும் தூங்கிவிட்டாள் என்பது புலனாயது. நனந்தலை உலகமும் துஞ்சும் என்றதால் உலகில் உள்ள யாவரும் இனிது உறங்கினர் என்று அறியமுடிகிறது.
இவ்வாறு பகை, நட்பு, நொதுமல் என்று யாவரும் உறங்கத் தான் மட்டும் உறங்காமல்த்தவிக்கிறேனே! என்ற ஏக்கம் இந்தப் பாடலில் தெரிகிறது.

இவ்வாறு இன்றைய திரைப்படப்பாடல்கள் பலவற்றிலும் சங்கப் பாடல்களின் தாக்கத்தைக் காணமுடிகிறது.