வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பட்டினப்பாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பட்டினப்பாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 8 பிப்ரவரி, 2012

குழந்தை நடை - அன்றும் இன்றும்


தம் ஒவ்வொரு அசைவுகளாலும் நம்மை அவர்களின் உலகத்துக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல்வாய்ந்தவர்கள் குழந்தைகள் ஆவர்.
தமிழ் இலக்கியங்களுள் “பிள்ளைத் தமிழ் என்றொரு இலக்கியம் குழந்தைகளின் ஒவ்வொரு பருவங்களையும் அழகுபட மொழிவதாகும்.

குழந்தைகளின் வளர்ச்சியில் நடைபயிலும் பருவம் குறிப்பிடத்தக்கதாகும்.
அந்தக் காலத்தில் குழந்தைகள் நடைவண்டியைப் பயன்படுத்தினர். இதனை..





  • சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டில் பட்டினப்பாலையில் சங்க கால மகளிர் புள்ளோப்புதல் பற்றிய செய்தியைச் சொல்லவந்த புலவர்,



 சங்க காலமகளிர் தானியங்களைக் காவல் காத்துக் கொண்டிருக்கும் போது தங்கள் காவலையும் மீறி அங்கு தங்கிவிடும் புள்ளினங்களை தம் காதில் அணிந்திருந்த பொன்னாலான அணிகலன்களைக் கொண்டு விரட்டினர். 
என்று குறிப்பிட்டுள்ளார்.


அவ்வாறு புள்ளினங்களை விரட்டுவதற்காக எறிந்த பொன்னாலான அணிகலன்கள் வீதிகளெங்கும் சிதறிக்கிடந்தன. அவ்வாறு சிதறிக் கிடந்தமையால் சிறுவர்கள் உருட்டும் சிறுதோ்கள் (முக்கற்சிறுதேர்- சிறு வண்டி) செல்வதற்குத் தடை ஏற்பட்டது. என்று சங்ககால செல்வநிலையும் பழக்கவழக்கத்தையும் குறிப்பிட்டுச் செல்கிறார். இச்செய்தியை,




'நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும்
கோழி எறிந்த கொடுங் கால் கனங் குழை,

பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும்,
முக் கால் சிறு தேர் முன் வழி விலக்கும் '


(பட்டினப் பாலை 20-25)

என்னும் பாடலடிகள் விளக்கும்.

  • மேலும் தச்சர்களின் கலைத் திறனை..


தச்சச் சிறார் நச்சப் புனைந்த
ஊரா நல்தேர் உருட்டிய புதல்வர்

பெரும்பாணாற்றுப்படை -248-249
என்ற பாடலடிகள் எடுத்தியம்புகின்றன. தச்சர்களின் பிள்ளைகளும் விரும்பும்படியாக செய்யப்பட்ட நல்ல சிறுதேர்களை உருட்டித் திரிந்தனர் பிள்ளைகள் என்ற அக்கால வழக்கம் சுட்டப்படுகிறது இவ்வடிகளால் நுவலப்படுகிது.


இவ்விரு பாடல் குறிப்புகளின் வழி அறியலாகும் கருத்துக்கள்

  • மரத்தால் செய்யப்பட்ட நடைவண்டியை சங்ககாலத்தில் குழந்தைகள் நடைபயில பயன்படுத்தினர்.
  • குழந்தைகளின் நடைவண்டியை உருட்ட மகளிர் தூக்கி எறிந்த தங்கத்தாலான அணிகலன்களே தடையாக இருந்தன என்ற கருத்து அக்கால செல்வநிலையை உணர்த்துகிறது.
  •  தனக்குக் கிடைக்காத அரிய பொருளின் மீதுதான் ஒரு குழந்தைக்கு இயல்பாக ஈடுபாடு எழும்.  தச்சர்களின் குழந்தைகளுக்கு தச்சுப்பொருள்களின் மீது அந்த அளவுக்கு ஈடுபாடு இருக்காது. ஆனால் தச்சர்களின் குழந்தைகளே விரும்பும் அளவுக்கு சிறுநடைவண்டிகளை அக்காலத் தச்சர்கள் செய்தார்கள் என்ற குறிப்பின் வழி அக்கால தச்சுக்கலையின் சிறப்பு உணர்த்தப்படுகிறது.

புறப்பாடல் ஒன்று...

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்

     உடைப்பெரும் செல்வர் ஆயினும், இடைப்படக்

     குறுகுறு நடந்து, சிறு கை நீட்டி,
     இட்டும் தொட்டும், கவ்வியும் துழந்தும்
     நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
     மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
     பயக்குறை இல்லைத் தாம் வாழும்நாளே
  (புறம் : 188)
குழந்தையின் நடையை அழகாக “குறுகுறு” என்னும் சொல்லாட்சிகளால் விளக்கிச் செல்கிறது.

இன்றைய தலைமுறையினரின் குழந்தை வளர்ப்பு முறைக்கு சிறு எடுத்துக்காட்டு இடதுபக்கமுள்ள படம்..







(மாறிப்போன நம் மரபுகளை எடுத்துக்காட்டவே இவ்விடுகை.)

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

பொய்யே முதலீடு


கையில பை!
கழுத்துல டை!
வாயில பொய்!
இதுவே விற்பனையாளனின் முதலீடு என்ற எண்ணம் கொண்டு வாழும் இன்றைய சூழலில் மனிதர்களுக்கு சுயநலவுணர்வு மேலோங்கியதால் மனிதநலம் பற்றிய கவலை இல்லாமல்ப் போனது.

“பொய், கலப்படம்“ இரண்டும் வணிகத்தின் இரு கண்கள் என்னும் எண்ணம் மேலோங்கியதால் பாதிக்கப்படுவது என்னவோ நுகர்வோர் தான்!

இந்தக்காலத்துல போய் பொய்யெல்லாம் சொல்லாம வியாபரம் செய்யமுடியுமா?
கலப்படம் செய்யமாப் பொழப்பு நடத்தமுடியுமா?

(என்ற வணிகர்களின் புலம்பல் கேட்கிறது.)

“நியாயவிலைக் கடைக்காரருக்குக்
குழந்தை பிறந்தது
எடை குறைவாக“

என்ற கவிதை தான் நினைவுக்கு வருகிறது.

நாமும் ஏமாற்றப்படுவோம் அதனால் நாமாவது யாரையும் ஏமாற்றக்கூடாது!
என்ற சிந்தனை வந்தால் மட்டுமே மனிதநலம் பற்றிய சிந்தனை ஒவ்வொரு மனிதர்களுக்கும் வரும்.

மனித நலம் பாதிக்கப்படும் அளவுக்கு என்ன நடந்தது என்று ஒன்றும் அறியாதது போல கேட்கும் வியாபாரிகளே!

எதில் இல்லை கலப்படம்?
உண்ணும் உணவிலிருந்து,
நோய் நீக்கும் என்று நம்பி உண்ணும் மருந்துப் பொருள்களைக் கூட நீங்கள் விட்டுவைக்கவில்லையே!

o உண்மை பேசி, கலப்படமின்றி நேர்மையாக வணிகம் செய்யவே முடியாதா? அப்படி வணிகம் செய்வோர் உலகில் எங்குமே இல்லையா?

எனக்குத் தெரிந்தவரை நூற்றுக்குப் பத்துப்பேர் நேர்மையாவர்களாகவே இருக்கிறார்கள். நல்லார் அவர் பொருட்டே எல்லோருக்கும் மழை பொழிகிறது என்ற நம்புகிறேன்.

இச்சூழலில், சங்ககால வணிகமுறையில் தமிழர்தம் உயர்ந்த கொள்கை நாம் பெருமிதம் கொள்ளத்தக்தாகவுள்ளது. பத்துப்பாட்டில்,

“நடுவு நின்ற நல் நெஞ்சினோர்
வடு அஞ்சி வாய் மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடி
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்“

(பட்டினப்பாலை – 207-211)

இவ்வடிகள் இடம்பெருகின்றன. வணிகர்கள், நடு நிலையுடையவர்களாக நல்ல உள்ளத்துடன் இருந்தனர். பொய் சொன்னால் தம் குடிக்கு பழி வரும் என்று அஞ்சி உண்மையே பேசக்கூடியவர்களாக இருந்தனர்.

இவர்கள் தம் பண்டங்களையும், பிறருடைய பண்டங்களையும் வேறுபடுத்திப்பார்க்காமல் ஒப்ப நோக்கி ஆராய்ந்து கண்டனர்.

தாம் கொள்ளும் பொருள்களைத் தாம் கொடுக்கும் பொருளுக்கு மிகுதியாகக் கொள்வதில்லை.
தாம் கொடுக்கும் பொருள்களையும் வாங்கும் பொருள்களுக்குக் குறைவாகக் கொடுப்பதில்லை.

தங்களுக்க வரும் இலாபத்தை நுகர்வோரிடம் வெளிப்படையகப் பேசியே வணிகம் செய்தனர். அதனால் அவர்கள் வணிகத்திலும் சிறந்து செல்வத்திலும் சிறந்தவர்களாக விளங்கினர் என்பதையே இவ்வடிகள் புலப்படுத்துகின்றன.