வேர்களைத்தேடி தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறேன்... இத்தளத்தில் சங்க இலக்கியம், கணினித்தமிழ் சார்ந்து எனது அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறேன். 13 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட பதிவுகளை வழங்கியுள்ளேன். தற்போது இந்தியக் குடிமைப் பணித்தேர்வுக்கான விருப்பப் பாடம் தமிழுக்குரிய விளக்கங்களைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன். தங்கள் மேலான வருகைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒரு நொடி சிந்திக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒரு நொடி சிந்திக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 மார்ச், 2017

நேரம் கிடைத்திருந்தால்..

புத்தகம் என்ற சொல்லுக்கு, புத்தி அகம் என்று பொருள் கொள்வது நலம்.
புத்தகம் எழுதுவது என்பது பலருக்கும் கனவு!
அந்தக் கனவு பலருக்கும் கனவாகவே போய்விடும்!
ஏனென்றால் அவர்களுக்குக் கனவுகாண நேரம் கிடைக்கும்!
அதை செயல்படுத்த நேரம் கிடைக்காது!
சிலர் புத்தகம் எழுதுவதற்கென நேரம் ஒதுக்கி எழுதுவதும் உண்டு. சிலர் எண்ணிலடங்கா பக்கங்களை எழுதிக் குவித்துவிடுவதும் உண்டு.
அதனால்தான் நம் முன்னோர்கள் சொன்னார்கள் போலும்..
“ கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான் ” என்று.
கண்டதை என்றால் கண்ணில் படும் எதையும் என்று பொருள் கொள்வதைவிட பயனற்ற பல நூல்களைக் கண்டு அதில் சிறந்த நூலைக் கண்டு அதைக் கற்றவன் பண்டிதனாவான் எனப் பொருள் கொள்வதே சரியானதாக இருக்கும்.
நேரம் கிடைத்திருந்தால்…
நான் அதைச் செய்திருப்பேன், இதைச் செய்திருப்பேன் என நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு சூழலில் சொல்லியிருப்போம்..
பிரிட்டன் பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அந்தப் புத்தகம் 40 பக்கங்களை மட்டுமே கொண்டது. அதைப் படித்த ஒருவர், “ தாங்கள் இந்தப் புத்தகத்தை இன்னும் அதிக பக்கங்களில் எழுதியிருக்கலாமே… நேரம் கிடைக்கவில்லையா?” என்று கேட்டார்.
அதற்கு சர்ச்சில் அவர்கள், “எனக்கு இன்னும் நேரம் கிடைத்திருந்தால் இதையே நான் ஐந்து பக்கங்களில் சுருக்கி எழுதியிருப்பேன்” என்றார்.

இந்த எதிர்பாராத பதில் புத்தகம் எழுத விரும்பும் ஒவ்வொருவருக்கும் தேவையான அறிவுரையாகவே அமைகிறது.
நல்ல பேச்சு என்பது…
சிறந்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துப் பேசுவது மட்டுமல்ல!
எந்த வார்த்தை பேசக்கூடாது என்று உணர்ந்து பேசுவதே!
அதுபோல நல்ல நூல் என்பது..
சிறந்த கருத்தை தேர்ந்தெடுத்துச் சொல்வது மட்டுமல்ல!
தேவையில்லாத கருத்துக்களை எழுதாமல் இருப்பதும் தான்!


எனக்கு மட்டும் நேரம் இருந்திருந்தால் இதை ஐந்தே வரிகளில் சொல்லியிருப்பேன்..!

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

பேசும் கலை



மூன்று வயதில் பேசக் கற்றுக்கொள்கிறோம்! 

ஆனால் வாழ்நாள் முழுக்க எப்படிப் பேசுவது 

என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை! 

பிற மொழிகளில் மட்டுமல்ல! 

தாய்மொழியிலும் தான் !

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

மன்னிப்புக்கு சமமான சொல்லா சாரி?


இன்றும் நாம் அதிகமாகப் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று சாரி! மிக இயல்பாக சாரி என்று சொல்லிவிடுகிறோம். உதடுகள் ஒட்டாமல் வருவதாலே என்னவோ அந்த சாரி என்ற வார்த்தைகளுடன் உள்ளங்களும் ஒட்டுவதில்லை! ஆனால் மன்னிப்பு என்ற வார்த்தையைச் சொல்லும்போது அப்படி இயல்பாகச் சொல்லிவிடமுடிவதில்லை. அதுதான் தாய்மொழியின் தனித்தன்மை!

யானோ அரசன் யானே கள்வன் 
மன்பதை காக்குந் தென்புலங் காவல் 
என்முதற் பிழைத்தது கெடுகவென் னாயுளென 
மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்
ஒரு தவறு செய்தால், அதை அறியாமல் செய்தாலும் அது அரசனே என்றாலும் அதற்காக மன்னிப்புக் கேட்பதைவிட உயிர்விடுவதே மேலானது என்ற உயரிய கோட்பாட்டை மொழிந்தன நம் தமிழ் இலக்கியங்கள் நாமோ இன்று தயங்காமல் சாரி கேட்கிறோம்..
சாரி கேட்பதால் நாம் ஒன்றும் ஆங்கில மேதைகள் என்று யாரும் எண்ணிக்கொள்ள மாட்டார்கள். மன்னிப்புக் கேட்பதால் நாம் ஒன்றும் ஆங்கிலம் தெரியதவர்களாகிவிட மாட்டோம். ஒரு முறை அறிஞர் அண்ணா அவர்கள் தொடர்வண்டியில் பயணம் செய்தார், அவரின் அருகில் வெளிநாட்டினர் இருவர் அமர்ந்திருந்தனர். அண்ணாவின் 
தோற்றத்தைப் பார்த்த வெளிநாட்டவரில் ஒருவர், அண்ணாவின் காலை வேண்டுமென்றே மிதித்துவிட்டு சாரி என்றார். அமைதியாக இருந்தார் அண்ணா. மீண்டும் காலினை மிதித்துவிட்டு சாரி என்றதும், 
அயாம் நாட் எ லாரி கேரி யுவர் சாரி  
  (I am not a lorry carry your sorry)   என ஆங்கிலத்தில் அடுக்குமொழி பேசி அவர்களை அதிர வைத்தார் அண்ணா. 
தவறு என்பது தவறி செய்வது!
தப்பு என்பது அறிந்தே செய்வது!
நாம் செய்த தவறுக்காக
ஏன் தெரிந்தே தப்பு செய்யவேண்டும்!

ஒன்றை மட்டும் உணர்ந்துகொள்வோம்
மன்னிப்பு என்ற வார்தைக்கு சாரி என்ற வார்த்தை என்றும் சமமனாதல்ல!

திங்கள், 20 பிப்ரவரி, 2017

நேரில் கண்ட சாட்சி வேண்டுமா ?


கண்டவர் இல் என உலகத்துள் உணராதார்
தங்காது தகைவின்றித் தாம்செய்யும் வினைகளுள்
நெஞ்சறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர்
நெஞ்சத்துக் குறுகிய கரியில்லை – கலித்தொகை – 125

தாங்கள் செய்யும் தீச்செயல்களை நேரடியாகப் பார்த்தவர்கள் இல்லை என்று நெஞ்சறியச் செய்த கொடிய செயல்களை மற்றவர்களிடமிருந்து மறைத்துவைத்தாலும், செய்த அவர்கள் மனம் அதை நன்கறியுமாதலால் அதனைக் காட்டிலும் வேறு சான்று தேவையில்லை!

புதன், 4 பிப்ரவரி, 2015

புதன், 24 செப்டம்பர், 2014

அரிதினும் அரிது கேள்...


பெரிதினும் பெரிது கேள் என்ற பாரதியின் புதிய ஆத்திச்சூடியைப் படிக்கும்போதும் ஔவையின்,

அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையின்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்ததாயினும்
வானவர் நாடி வழி பிறந்திடுமே!

என்ற பாடலைப் படிக்கும்போதும்,

 அரிதினும் அரிது எது? என்ற கேள்வி மனதில் தோன்றியது.
தமிழ்மொழிக்கு மணிமகுடமாகத் திகழும் திருக்குறளில் வள்ளுவர், தமிழ் என்ற சொல்லை ஒரு முறை கூடப் பயன்படுத்தவில்லை. இருந்தாலும் சில சொற்களைப் பலமுறை பயன்படுத்தியிருக்கிறார். 

அரிது என்ற சொல்லை எத்தனை முறை பயன்படுத்தியிருக்கிறார் என்று பார்த்தேன். 29 முறை வெவ்வேறு விளக்கங்களுக்காகப் பயன்படுத்தியுள்ளார்.

அரிது என்ற சொல்லை இவர் ஏன் இத்தனை குறள்களில் பயன்படுத்தியிருக்கிறார்? என்ற கேள்வியோடு ஒவ்வொரு குறள்களையும் வாசிக்கும் போது, வள்ளுவர் சொல்லும் ஒவ்வொரு சிந்தனைகளும் நம் வாழ்க்கைக்கு எவ்வளவு மதிப்புமிக்கன என்பது புரிகிறது.

மறக்கவேண்டியவற்றை நினைவுகொள்வதும்
நினைக்கவேண்டியவற்றை மறந்துவிடுவதும் தானே மனித இயல்பு!

மனித சமூகம் தெரிந்தும் சில மரபுகளைப் பின்பற்றத் தவறுகிறது என்பதை உணர்ந்தே வள்ளுவப் பெருந்தகை அரிது என்ற சொல்லை இத்தனை முறை பயன்படுத்தியிருக்கிறார் என்று தோன்றியது.

குறள்களைக் காண்போம்...












வியாழன், 7 ஆகஸ்ட், 2014

நம் குழந்தைகள் நம்பமாட்டார்கள்!







இத்தனை நீர்நிலைகள் நம்மிடம் இருந்தன என்று சொன்னால் எதிர்காலத்தில் 

நம் குழந்தைகள் நம்பமாட்டார்கள்!

தொடர்புடைய இடுகை





வியாழன், 17 ஜூலை, 2014

தேசப் பிதாவுக்கு ஒரு திருக்கோயில்!

காந்தி நாட்டுக்காக உழைத்தார்
நாம் காந்தி நோட்டுக்கா உழைக்கிறோம் என்பதுதான் உண்மை.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பதற்குத் தக்க சான்று மகாத்மா காந்தியடிகள் ஆவார். இவருக்கு ஒரு ஊரில் கோயில் உள்ளது என்பது பலருக்குத் தெரியாது. 

காந்தியடிகள் பற்றிப் பாடம் எடுத்தபோது காந்திடிகளுக்குக் கோயில் ஒரு ஊரில் உள்ளது எந்த ஊர் தெரியுமா? என்று  என் மாணவர்களிடம் கேட்டேன் மறுநாள், வணிகவியல் முதலாமாண்டு பயிலும் ச.நித்யா தேவி என்ற மாணவி தேசபிதாவுக்காக் கட்டப்பட்ட திருக்கோயில் தொடர்பான பல்வேறு சான்றுகளை தொகுத்து எடுத்து வந்தார். அவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு. அந்த சான்றுகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.











புதன், 16 ஜூலை, 2014

நான் மனிதன்



கண்களால் காண வேண்டியது?
செவிகளால் கேட்கவேண்டியது?
வாயால் பேச வேண்டியது?

இந்த மூன்றும் அறியாமல்தான் நாம் வாழ்ந்துவருகிறோம். கவிஞர் மீரா அவர்களின் “ நான் மனிதன் ” என்ற கவிதை இந்த உண்மையை அழகுபட மொழிகிறது. இந்தக் கவிதையைப் படித்தவுடன் நானும் கண், செவி, வாய் என்னும் புலன்களின் இன்பம் பெற ஆவலாக உள்ளேன். அதற்குத் தக்க வாய்ப்பாக ஈரோடு புத்தகத் திருவிழா 2014 அடுத்த மாதம் முதல் நடைபெற உள்ளது.

நல்ல புத்தகங்களைக் கண்களால் பார்த்து
நல்ல சொற்பொழிவுகளைச் செவிகளால் கேட்டு
நல்ல அறிஞர்களுடன் நல்ல கருத்துக்களைப் பகிர்ந்து

புலன்களின் பயன்களை முழுமையாக அடைய ஆவலாக உள்ளேன்.


நான் மனிதன்!

வான்திரியும் தண்ணிலவைப் பார்த்த துண்டா?
வசந்தத்தைக் கண்டதுண்டா? துள்ளி ஓடும்
மான்கூட்டம் மயில்ஆட்டம் மலரின் தோட்டம்
மங்கைமுகம் இவையனைத்தும் கண்ட துண்டா?
தேன்கவிதைத் தமிழ்மொழியின் எழுத்தைக் கண்ணால்
தின்றதுண்டா? சுவைத்ததுண்டா? இல்லை! அந்தோ!
நான்குருடன் நான் குருடன்! உலகை நோக்கும்
நல்லநிலை எனக்கில்லை; என்ன வாழ்க்கை?

கான்ஓடும் ஆறுகளின் சத்தம் என்றன்
காதுகளைத் தொட்டதுண்டா? குயிலின் பாட்டைத்
தான்கொஞ்சம் கேட்டதுண்டா? குழலும் யாழும்
தரும்மதுரத் தனிச்சுவையில் பித்துக் கொண்டே
நான்மயங்கிக் கிடந்ததுண்டா? அறிஞர் பேச்சில்
நனைந்ததுண்டா என்நெஞ்சம்? இல்லை! அந்தோ
நான்செவிடன்! நான்செவிடன்! குரலைக் கேட்கும்
நல்லநிலை எனக்கில்லை; என்ன வாழ்க்கை?
ஊண்வேண்டும் நீர்வேண்டும் என்றே வாயால்
உரைத்ததுண்டா ஓயாமல்? துன்பத் தூண்டில்
மீன்போலத் துடிக்கின்ற கொடுமைக் காக
மிகவருந்தி ஒப்பாரி வைத்த துண்டா?
மேன்மையுள்ள மனக்கருத்தை யாருக் கேனும்
மெதுவாகச் சொன்னதுண்டா? இல்லை! அந்தோ
நான் ஊமை! நான் ஊமை! வார்த்தை யாடும்
நல்லநிலை எனக்கில்லை; என்ன வாழ்க்கை?

நான் உலகைப் பார்த்ததில்லை! ஓசை யாவும்
நான்கேட்ட தேயில்லை! இனிதாய்ப் பேசத்
தான்என்றும் முடியவில்லை! ஆமாம்! உண்மை!
தணல்சூழ்ந்த குடிசைக்குள் கிடப்ப தேபோல்
ஏன் இன்னும் இருக்கின்றேன் என்றே நாளும்
எண்ணுகிறேன்; விம்முகிறேன்; என்ன செய்வேன்?
நான்மனிதன்! நான்மனிதன்! அதனால் சாக
நடுங்குகிறேன்! நடத்துகிறேன் ஆசை வாழ்க்கை!

                                          -கவிஞர் மீரா

இந்தக் கவிதை நான் இதுவரை சராசரி மனிதனாகத்தான் இருந்திருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தியது. உங்களுக்கும் உணர்த்தியிருக்கும் என நம்புகிறேன்.